Published:Updated:

ஷேர்லக்: லார்ஜ்கேப் பங்குகளில் முதலீட்டைக் குறைத்த வெளிநாட்டு நிறுவனங்கள்..! என்ன காரணம்..?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

S H A R E L U C K

அவசர வேலையாக மும்பைக்குச் செல்ல இருப்பதாக முதல்நாளே ஷேர்லக் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார். எனவே, நாம் கேள்விகளை அவருக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். சரியாக மாலை 4 மணிக்கு பதில்களை மெயில் அனுப்பி வைத்தார் ஷேர்லக்.

பங்கு முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாமே?

“கடந்த திங்கள்கிழமை, இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 51,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் அறிவித்த நாளிலிருந்து, ஆறு வர்த்தக தினங் களில் சந்தையின் போக்கு ஏற்றத்தில் இருந்தது. இதன் காரணமாக, பி.எஸ்.இ பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் பங்கு முதலீட்டாளர் களின் சொத்து மதிப்பு 16.70 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 2,02,82,798.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2014 நவம்பர் 28-ம் தேதி ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்தது. அது இப்போது ரூ.200 லட்சம் கோடியை தாண்டியிருக்கிறது.”

இந்தியா பெஸ்டிசைடு நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்டுகிறதாமே?

“உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அக்ரோகெமிக்கல் டெக்னிக்கல் நிறுவனமான இந்தியா பெஸ்டிசைடு நிறுவனம், புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மூலம் 800 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக அனுமதி கேட்டு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளது. பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் தொகை மூலதனத் தேவை மற்றும் நிறுவனத்தின் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்பட இருக்கிறது.”

மேக்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்கு விலை ஒரே நாளில் 7.5% அதிகரிக்க என்ன காரணம்?

“மேக்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருமானம், டிசம்பர் காலாண்டில் 54% அதிகரித்து, 227 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல இதன் வருமானமும் 68% அதிகரித்து, 8,990 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை, புதன்கிழமை வர்த்தகத்தில் 7.42% வரை அதிகரித்து, 792.65 ரூபாயாக வர்த்தக மானது. இடையில் 52 வார அதிகபட்ச விலையான 798.95 ரூபாயைத் தொட்டது.

நிதி நிலை மேம்பட்டதை அடுத்து பங்கின் விலை 52 வார உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மோதிலால் ஆஸ்வால் பங்கின் விலை அதிகரிக்கும்; அதில் முதலீடு செய்யலாம். இலக்கு விலை ரூ.860 எனத் தெரிவித்திருக்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல நிறுவனப் பங்குகளில் முதலீட்டை குறைத்திருக்கிறார்களே?

“இந்திய பங்குச் சந்தையில், இந்திய முதலீட்டாளர்களைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கும் முக்கியமாகும். அவர்கள் இந்திய பங்குச் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப, பணத்தை அதிக அளவில் முதலீடு செய்வதும், வெளியில் எடுப்பதுமாக இருப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் காலாண்டில், டி.சி.எஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அவென்யூ சூப்பர் மார்ட்ஸ், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளில், தங்களின் முதலீட்டை குறைத்திருக்கிறார் கள். இவர்கள் இந்தியப் பங்குகளில் கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.1.7 லட்சம் கோடி முதலீடு செய்திருக் கிறார்கள். அதேநேரத்தில் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளின் விலை ஏற்கெனவே மிக அதிகமாக ஏறிவிட்டதால், அவற்றில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டைக் குறைத்திருக் கிறார்கள்.”

புரொமோட்டர் பங்குகளை அடமானம் வைத்திருப்பது பற்றி...

“பி.எஸ்.இ 500 நிறுவனங்களில் புரொமோட்டர்கள் பங்குகளை அடமானம் வைத்திருப்பது, கடந்த டிசம்பர் காலாண்டில் சிறிது அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்களின் மொத்தப் பங்கு மூலதனத்தில் நிறுவனர்களின் பங்கு மூலதனம் செப்டம்பர் காலாண்டில் 2.03% ஆக இருந்தது. இது, டிசம்பர் காலாண்டில் 2.09 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அடமானம் வைக்கப்பட்ட பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.1.8 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த அடமான மதிப்பானது பி.எஸ்.இ 500 இன்டெக்ஸின் மொத்த மார்க்கெட் கேப்பிட்ட லைஷேசனில் 1.04 சதவிகிதமாகும்.

ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் என்கிற ஒரே ஒரு நிறுவனம் மட்டும், புரொமோட்டர் பங்குகளில் 90 சதவிகிதத்துக்கு மேல் அடமானமாக வைத்திருக்கிறது. அதே சமயம் டிஷ் டிவி, லெமன் ட்ரீ ஹோட்டல், டைம் டெக்னோபிளாஸ்ட் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் புரொமோட்டர் பங்கு அடமானம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதானி போர்ட்ஸ் (38.2%), ஏசியன் பெயின்ட்ஸ் (10.7%), ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (22.1%), சன் பார்மா (9%) ஆகிய நிஃப்டி 50 நிறுவனங்களின் புரொ மோட்டர் பங்கு அடமானம் 5 சத விகிதத்துக்கும் மேலாக இருக்கிறது.”

ஐ.ஆர்.பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடன் பத்திர வெளியீட்டின் மூலம், ஏற்கெனவே 4,500 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், தற்போது கூடுதலாக 1,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட நிறுவனம் முடிவு செய்திருக் கிறது. இதன் கராணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த 9-ம் தேதி 2% வரை அதிகரித்து, 11.25 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து, தொடர்ந்து முதலீடு வெளியேற என்ன காரணம்?

“செபி அமைப்பு மல்ட்டிகேப் ஃபண்டு களுக்கான விதிமுறையை மாற்றி அமைத்தது. மல்ட்டிகேப் ஃபண்டுகளில் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்பது இல்லாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான மல்ட்டிகேப் ஃபண்டுகள் அதிக அளவில் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்து வந்தன.

செபி மல்ட்டிகேப் ஃபண்டுகளில் தலா 25% பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப்பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். மீதியுள்ள 25 சதவிகிதத்தை ஃபண்ட் மேனேஜரின் விருப்பப்படி பெரிய, நடுத்தர அல்லது சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் எனக் கொண்டுவந்தது.

இந்த மாற்றத்தின் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தாங்கள் அதிகம் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களை விற்றுவிட்டு அதிக அளவு சிறிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த மாற்றத்தை ஜனவரி மாதத்துக்குள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தி இருந்தது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக, ஃபண்டின் பெயரை ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகள் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இதனால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 9,253 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் விற்கப் பட்டிருக்கின்றன. செபியின் விதிமுறையை பின்பட்ட தொடர்ந்து 7 மாதங்களாகவே ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளை விற்று வருகின்றன.

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் காரணமாக மட்டும் 5,934 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் விற்கப் பட்டிருக்கின்றன. லார்ஜ்கேப் மற்றும் வேல்யூ ஃபண்டுகளில் முறையே 2,853 கோடி ரூபாய் மற்றும் 1,640 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம் மிட்கேப் மற்றும் தீமெட்டிக் ஃபண்டுகளில் முறையே 2,857 கோடி ரூபாய் மற்றும் 2,586 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளில் புதிதாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 35 மல்ட்டிகேப் ஃபண்டுகளில் 16 ஃபண்டுகள் ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளாக ஜனவரி மாதத்தில் பெயர் மாற்றப் பட்டிருக்கிறது.

இர்கான் இன்டர்நேஷனல் பங்கு விலை ஒரே நாளில் 9% உயர என்ன காரணம்?

“போனஸ் பங்குகள் வழங்குதல் மற்றும் இடைக்கால டிவிடெண்ட் வழங்குதல் தொடர்பாக முடிவெடுக்க பிப்ரவரி 15-ம் தேதி, இயக்குநர்கள் குழு கூடுவதாகப் பொதுத்துறை ரயில்வே நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்தது.

இதை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த செவ்வாய்க்கிழமை 9 சதவிகிதம் அதிகரித்து, 94 ரூபாயாக வர்த்தகமானது” என முடித்திருந்தவர், “அடுத்த வாரம் உங்கள் அலுவலகத்தில் நேரில் சந்திப்போம்” என்ற குறிப்போடு நிறைவு செய்திருந்தார்.

சிட் ஃபண்ட்: லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் டி.என்.சி சிட்ஸ் இணைந்து நடத்தும் ‘சிட் ஃபண்ட்: லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி?’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆ.ஆறுமுக நயினார் (வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் கூடுதல் தலைவர், பதிவுத் துறை), ஏ.சிற்றரசு (பொதுச் செயலாளர். அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம்), நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணசாமி (சென்னை பிராந்திய தலைவர், DNC Chits Pvt. Ltd) ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். பிப்ரவரி 21, காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடக்கிறது. கட்டணமில்லா கருத்தரங்கு இது. பதிவுசெய்ய: https://bit.ly/3jGKV54

வேல்யூ இன்வெஸ்ட்டிங் – பேசிக்! ஆன்லைன் கட்டணப் பயிற்சி

நாணயம் விகடன், ‘வேல்யூ இன்வெஸ்ட்டிங் – பேசிக்’ என்கிற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இது மார்ச் 6, 2021, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. 30 வருடங்களுக்கும் மேலான பங்குச் சந்தை அனுபவம் கொண்ட ‘கோயம்புத்தூர் கேப்பிடல்’ டாக்டர் எஸ்.கார்த்திகேயன் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்துகிறார். வேல்யூ இன்வெஸ்ட்டிங் என்றால் என்ன, அதன் அடிப்படையில் முதலீட்டுக்கு பங்கை எப்படி சரியாகத் தேர்வு செய்வது எப்படி என்பது குறித்த விரிவான வகுப்புதான் இது. பயிற்சிக் கட்டணம் ரூ.500 ஆகும். முன்பதிவு செய்துகொள்ள: https://bit.ly/3jE2KRY

ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஐ.பி.ஓ!

யில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஐ.பி.ஓ வருகிற பிப்ரவரி 16-ம் தேதி ஆரம்பித்து, 18-ம் தேதியுடன் முடிகிறது. பங்கு விலைப்பட்டை ரூ.93-94 ஆகும். மொத்தம் 8,71,53,369 பங்குகள் வெளியிடப்பட இருக்கின்றன. இதில் 5 லட்சம் பங்குகள், நிறுவனப் பணியாளர்களுக்காக ஒதுக்கப் படுகிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 155 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு 155 மடங்கில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.