Published:Updated:

ஷேர்லக்: விற்பனை அதிகரிப்பு எதிரொலி... வேகமெடுக்கும் வாகனப் பங்குகள்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

S H A R E L U C K

சரியாக மாலை 4 மணிக்கு, அலுவலகத்துக்கு வந்த ஷேர்லக், “நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சமீப நாள்களாகப் பல்வேறு தகவல்களுடன்கூடிய புதுப் புது வீடியோக்களைப் பதிவிட ஆரம்பித்திருக்கிறீர்கள். அவை அனைத்தும் மிகவும் அருமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று உற்சாக வார்த்தைகளை உதிர்த்தார். அதன்பிறகு நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்
ஷேர்லக்

கல்யாண் ஜுவல்லர்ஸ் ஐ.பி.ஓ வருவது பற்றி..?

“பிரபல நகைக் கடைகளில் ஒன்றான கல்யாண் ஜுவல்லர்ஸ், புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ) மூலம் 1,175 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதியை செபி வழங்கியிருக்கும் நிலையில், வருகிற மார்ச் 16-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் பங்கெடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் மார்ச் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த வெளியீட்டில் 800 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், 375 கோடி மதிப்பிலான பங்குகள் ஆஃபர் ஃபார் சேல் முறையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பங்கு விலைப்பட்டை 86 - 87 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 172 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்குமேல், தேவைப் படுபவர்கள் அதன் மடங்கில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.’’

அடுத்த ஓர் ஆண்டில் மெட்டல் பங்குகளின் போக்கு எப்படி இருக்கும்?

“பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால், இன்ஃப்ராஸ் ட்ரக்சர், ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறையில் ஸ்டீல் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்டீல் தேவை 6%, பிப்ரவரி மாதத்தில் 7% வரை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, நிஃப்டி50-யில் உள்ள மெட்டல் பங்குகள் 8% வரை வளர்ச்சி கண்டிருக்கின்றன. அதே சமயம், நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ் 15% வரை ஏற்றம் கண்டிருக்கிறது. உள்நாட்டுத் தேவை இன்னும் அதிகரிக்கும்போது, மெட்டல் பங்குகளின் விலை ஏற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தால், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் ஒரு வருடத்தில் 50% வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் இலக்கு விலை 460- 480 ரூபாய். ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 65% வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இதன் இலக்கு விலை 110-120 ரூபாய். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை 50% வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இதன் இலக்கு விலை 1,000 - 1,050 ரூபாய். நேஷனல் அலுமினியம் நிறுவனத்தின் பங்கு விலை 55% வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் இலக்கு விலை 85 - 90 ரூபாய். என்.எம்.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை 65% வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இதன் இலக்கு விலை 200 - 220 ரூபாய். கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 40% வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இதன் இலக்கு விலை 210 ரூபாய். வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் பங்கு விலை 35% வரை அதிகரிக்கும் என கோட்டக் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது.”

இண்டஸ்இண்ட் பேங்க் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த 10-ம் தேதி, இண்டஸ்இண்ட் பேங்க் பங்கு விலை 3% வரை அதிகரித்து வர்த்தகமானது. பங்கு ஆராய்ச்சி நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ, இந்த வங்கியின் பங்குகளை வாங்குமாறு பரிந்துரை செய்திருப் பதும், இதன் இலக்கு விலையை 1,100 ரூபாயிலிருந்து 1,325 ரூபாய் வரை உயர்த்தியிருப்பதும் விலை ஏற்றத்துக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப் படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் புரோக்கிங் நிறுவனமும் இந்த வங்கியின் இலக்கு விலையை 1,270 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது. தொடர்ந்து வாங்கச் சொல்லியும் பரிந்துரை செய்திருக்கிறது. இதன் காரணமாக அன்று இந்தப் பங்கு விலை 3% வரை விலை அதிகரித்து 1,052.80 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

வாகனப் பங்குகளின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறதே..?

“கடந்த பிப்ரவரி மாதம், மக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, வாகனப் பங்குகளின் விலை கடந்த வாரம் ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த மார்ச் 10-ம் தேதி, ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன், கடந்த பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 11% அதிகரித்திருப்பதாகச் சொல்லி யிருந்தது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் நிஃப்டி ஆட்டோ குறியீடு ஏற்றம் அடைந்தது. குறிப்பாக, எய்ஷர் மோட்டார்ஸ், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்டு மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2% - 3% வரை ஏற்றமடைந்திருக் கின்றன.

ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோ மொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வாகனங்களின் விற்பனை கடந்த ஜனவரியில் 4.4% சரிவைச் சந்தித்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 11% அதிகரித்து, 2,54,058 வாகனங்கள் விற்பனை அதிகரித் துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் வாகனங்களின் விற்பனை 2,29,734-ஆக இருந்தது.

இருப்பினும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை, நடப்பு ஆண்டின் இரண்டாவது மாதத் திலும் சரிந்தே காணப்படுகிறது. மொப்பட், ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் விற்பனை 16% சரிந்து 1.09 மில்லியனாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1.3 மில்லியன் ஆக இருந்தது.

பங்கு ஆராய்ச்சி நிறுவனமான ஜெஃப்பெரிஸ், இரு சக்கர வாகனங்களின் விற்பனை குறித்த அறிக்கையில், நகர்ப்புறத்தை மையமாகக்கொண்ட மாநிலங் களில், இரு சக்கர வாகனங் களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், அங்கு ஸ்கூட்டர் விற்பனை வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது ஆட்டோமொபைல் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.”

அலையன்ஸ் இன்டர்மீடியரிஸ் நிறுவனத்தின் பங்குத் தரகு வணிகத்தை செபி ஏன் ரத்து செய்தது?

“பங்கு முதலீட்டாளர்களிட மிருந்து ரொக்கப் பணம் வாங்கிக் கொண்டு போலியான மற்றும் மோசடியான கான்ட்ராக்ட் வழங்கியதாக இந்த நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத்தில் வரி ஏய்ப்பு செய்தாகவும் இந்த நிறுவனம் மீது செபி அமைப்பு சந்தேகம் கொண்டது. இதை அடுத்து விசாரணையில் இறங்கியது. இதில், இந்த சப் புரோக்கர் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டது. இதை அடுத்து அதன் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக செபி தெரிவித்துள்ளது.”

மேக்மா ஃபின்கார்ப் பங்கு விலை 52 வார உச்சத்தை அடைய என்ன காரணம்?

“வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்று இந்த நிறுவனம் அடார் பூனவல்லா மற்றும் இருவருக்கு சொந்தமான ரைசிங் சன் ஹோல்டிங்ஸுக்கு முன்னுரிமைப் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுகிறது. மேக்மா ஃபின்கார்ப் நிறுவனத்தின் 60% பங்குகள், ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் வசம் செல்வதால், நிறுவனத்தின் புரமோட்டராக பூனவல்லா மாறுகிறார். இதன் அடிப்படை யில், மேக்மா ஃபின்கார்ப் நிறுவனத்தின் பெயர் ஒழுங்கு முறை ஆணையமான செபியின் ஒப்புதலுக்குப்பிறகு ‘பூனவல்லா ஃபின்கார்ப்’ என மாற்றப்படும்.

முதலீட்டாளர்களின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் மேக்மா ஃபின்கார்ப் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர்கள், 3,456 கோடி ரூபாய் பூனவல்லா ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். இதன் மூலம், 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட 49,37,14,286 பங்குகள் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், அதன் மற்ற இரு புரொமோட்டர்களான சஞ்சய் சம்ரியா மற்றும் மாயங்க் போடார் ஆகியோருக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு ஒன்றின் விலை 70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அடுத்து மேக்மா ஃபின்கார்ப் பங்கின் விலை 5%, அதன் 52 வார உச்சவிலையாக அதிகரித்திருக்கிறது.”

ஈஸி டிரிப் பிளானர்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெற்றியடைந்ததா?

“கடந்த மார்ச் 8-ம் தேதி ஆரம்பிக்கப் பட்ட ஈஸி டிரிப் பிளானர்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ, வெளியீடு மார்ச் 10-ம் தேதி முடிவடைந்தது. கடைசி நாளான மார்ச் 10-ம் தேதி, பங்கு வெளியீட்டு அளவை விட, 159.33 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வந்திருக்கின்றன. இந்தப் பங்கு வருகிற 19-ம் தேதி அன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகத் தொடங்கும்.’’

அனுபம் ரசாயன் பங்கு நிறுவனமும் ஐ.பி.ஒ வருகிறதா?

‘‘ஆம். மார்ச் 12-ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று ஐ.பி.ஓ வரும் இந்த ஐ.பி.ஓ-வுக்கு 16-ம் தேதி செவ்வாய்க் கிழமை வரை பங்குகளை வேண்டி விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கு விலை ரூ.553 - ரூ.555 வரை நிர்ணயம் ஆகியுள்ளது’’ என்றவருக்கு போன் வரவே, ‘‘அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

தி.ரா.அருள்ராஜன்
தி.ரா.அருள்ராஜன்

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு

நாணயம் விகடன் ஃபண்ட மென்டல் அனாலிசிஸ் – பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு என்ற ஆன்லைன் கட்டண பயிற்சி வகுப்பை நடத்துகிறது. Ectra.in நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். மார்ச் 20-ம் தேதி 9.30 am to 6.30 pm வரை வகுப்பு நடக்கிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.4,000 முன்பதிவுக்கு: https://bit.ly/3k1fwu0