Published:Updated:

ஷேர்லக்: கரடியின் பிடியில்... ஸ்மால் & மிட்கேப் பங்குகள்!

ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

வசர வேலையாக மும்பைக்குச் செல்வதாக முதல்நாளே நமக்குத் தகவல் அனுப்பிருந்தார் ஷேர்லக். எனவே, கேள்விகளை மெயிலில் அனுப்பிவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தோம். சரியாக ஐந்து மணிக்கு பதில்களை அனுப்பி வைத்தார் ஷேர்லக்.

ரிசர்வ் வங்கி நான்காவது முறையாக ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைக்க என்ன காரணம்?

“ரிசர்வ் வங்கி கடந்த மூன்றுமுறை 0.25% குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறை ரெப்போ விகிதம் 0.35% குறைக்கப்பட்டிருக் கிறது. இதனால் 5.75 சதவிகிதமாக இருந்த ரெப்போ ரேட் விகிதம் 5.40 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. மேலும், 2019-20-ம் நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு, 7 சதவிகிதத் திலிருந்து 6.9 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த மே மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் வீழ்ச்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், மின்துறை முன்னேற்றம் அடைந்துள்ளதென்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஷேர்லக்: கரடியின் பிடியில்... ஸ்மால் & மிட்கேப் பங்குகள்!

மந்தமான பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஆர்.பி.ஐ, ரெப்போ விகிதத்தைக் குறைத்திருப்பதாகத் தெரிகிறது. ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால், வங்கிகள் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்குக் கடன்கள் வழங்கும் சூழ்நிலை உருவாகும். ஏற்கெனவே வழங்கியிருக்கும் வீடு மற்றும் வாகனக்கடன்கள் மீதான வட்டியையும் வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. டயர் 1 மூலதனத்தை 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்த ஆர்.பி.ஐ முடிவு செய்திருக்கிறது.”

ஸ்பந்தன ஸ்பூர்த்தி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்குப் பெரிய வரவேற்பாமே?

“கிராமப்புறப் பெண்களுக்கு கடனுதவி வழங்குவதை இலக்காகக்கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலைப்பட்டை ரூ.853-856 என நிர்ணயிக்கப்பட்டு, இதன்மூலம் ரூ.1,200 கோடி திரட்ட முடிவு செய்திருந்தது. மொத்தம் 80,74,507 பங்குகள் விற்பனைக்கு உள்ள நிலையில் 1,01,07,486 பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இது 1.02 மடங்கு அதிகமாகும். நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 3.05 மடங்கும் நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 0.55 மடங்கும் பங்குகளுக்கு அதிகமாக விண்ணப்பித்திருந்தனர். சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 0.09 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன.”

கும்மின்ஸ் இந்தியா நிறுவனப் பங்கு விலையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதே?

“இன்ஜின் மற்றும் ஜெனரேட்டர் தயாரிப்பு நிறுவனமான கும்மின்ஸ் இந்தியா, தனது ஏற்றுமதி வளர்ச்சி இலக்கை ஆகஸ்ட் 8-ம் தேதி குறைத்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை சரிவடைந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த விலையை எட்டியது. ஏற்றுமதி இலக்கை 10-15% குறைத்துள்ளது. உள்நாட்டு வளர்ச்சி இலக்கையும் 10-15 சதவிகிதத்தி லிருந்து 8-10 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. அடுத்ததாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை, வர்த்தகத்தின் இடையே 5.24% குறைந்து, ரூ.618.45 ஆக வர்த்தகமானது. இதற்குமுன் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில் ரூ.618.95 என்ற அளவுக்கு விலை குறைந்திருந்தது. உலகப் பொருளாதாரம் சவால் மிகுந்ததாக இருப்பதால், ஏற்றுமதியில் கடந்த சில காலாண்டுகளாக மிதமான வளர்ச்சியே காணப்படுகிறது. நடப்புக் காலாண்டில் சில பங்குச் சந்தைகளில் உலக மின்சக்தி உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்திருப்பதைக் காணமுடிகிறது. அந்தச் சிக்கல் களின் அடிப்படையிலேயே மதிப்பீடு குறைக்கப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

பங்குச் சந்தை உள்ஆள் வர்த்தகத்தின் தவறுகளைக் கண்டறியப் பரிசுத் திட்டத்தை செபி கொண்டுவந்திருப்பதன் பின்னணி என்ன?

“பங்குச் சந்தையில் உள்ஆள் வர்த்தகம் (இன்சைடர் டிரேடிங்), செய்வது குறித்த தகவல் களைப் பகிர்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கும் திட்டத்தைச் செபி உருவாக்கி வருகிறது. இதன்படி, மோசடி குறித்த தகவல்களை ரகசியமாகப் பகிர்வதற்காகத் தனிப்பட்ட சிறப்பு ஹாட்லைன் எண் உருவாக்கப்படும். இதில் தரப்படும் தகவல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, வாய்ப்பிருந்தால் பொது மன்னிப்பு அல்லது அவர்களின் ஒத்துழைப்பைப் பொறுத்து, சிறிய தவறுகளுக்கு செட்டில்மென்ட் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான விரிவான விதிமுறைகளை உருவாக்கும் பணியில் செபி ஈடுபட்டுள்ளது. இந்தப் பரிசளிக்கும் நடைமுறை, சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமேயானது. ஆடிட்டர் போன்ற பணியிலிருப்பவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில், அவர்கள் பொதுவாகவே இத்தகைய முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.”

ஷேர்லக்: கரடியின் பிடியில்... ஸ்மால் & மிட்கேப் பங்குகள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை திடீரென்று இறங்க விசேஷமான காரணம் ஏதும் உண்டா?

“இந்த நிறுவனத்தின் தரக்குறியீட்டை, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தரக்குறியீட்டு நிறுவனமான கிரெடிட் சூஸ் குறைத்ததுதான் இதற்குக் காரணம். ‘ஃபார்ச்சூன் குளோபல் 500’ நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கை, கிரெடிட் சூஸ் ‘நியூட்ரல்’ என்ற ரேட்டிங்கிலிருந்து ‘அன்டர்பெர்ஃபார்ம் (Underperform)’ என்ற நிலைக்குக் குறைத்தது. மேலும், அந்த நிறுவனப் பங்கின் இலக்கு விலையையும் 1,350 ரூபாயிலிருந்து 995 ரூபாயாகக் குறைத்துள்ளது. இதையடுத்து ஒரேநாளில் ரிலையன்ஸ் பங்கு விலை 3.5% சரிவடைந்தது. நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் மந்தமான வளர்ச்சி, ரிலையன்ஸ் ஜியோ மீதான மதிப்பீடு குறைவு, ஜியோ ஃபோன்களுக்கான செயல்பாட்டுக் குத்தகை, மூலப்பொருள்களுக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் ரேட்டிங்கைக் குறைத்திருப்பதாகத் தெரிகிறது. ரிலையன்ஸ் பெட்ரோகெமிக்கல்ஸ் பிசினஸில் அடுத்த நான்கு ஆண்டுகளில் இன்னும் பெரிய அளவிலான விரிவாக்கத்தை எதிர் பார்ப்பதாகவும் தற்போது தேவை குறைவாக இருப்பதால், மிகுந்த கவனத்துடன் செயல்படுவ தாகவும் கூறப்படுகிறது.”

அதேசமயம், இந்தியப் பங்குச் சந்தையின் ரேட்டிங்கை கிரெடிட் சூஸ் உயர்த்தியுள்ளதே?

“இந்தியப் பங்குச் சந்தையை ‘மார்க்கெட் வெயிட்’ என்ற மதிப்பீட்டிலிருந்து ‘ஸ்மால் ஓவர்வெயிட்’ என்ற மதிப்பீட்டுக்கு ரேட்டிங்கை கிரெடிட் சூஸ் உயர்த்தியுள்ளது. ஆசியப் பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், அதிக வட்டி வருமானம், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் பாதிக்கப்படாதது மற்றும் சீனாவின் பண மதிப்பால் பெரிதும் பாதிக்கப்படாதத்தன்மை போன்ற காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தையின் ரேட்டிங்கை உயர்த்தியுள்ளது. பணவீக்கம் குறைவாக இருப்பதால் இன்னும் வட்டி குறைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆசியாவிலுள்ள மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியச் சந்தை சிறப்பாகச் செயல்பட வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறது. எனினும், வங்கிசாரா நிதி நிறுவனங் களின் பணப்புழக்கத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையால், மதிப்பீட்டைச் சிறிதளவு மட்டுமே உயர்த்தி ‘ஸ்மால் ஓவர்வெயிட்’ எனும் ரேட்டிங்கைக் கொடுத்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட் உரை இல்லாததும் இந்தியப் பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஏற்றத்தை இந்தியப் பங்குச் சந்தையால் பெற முடியவில்லை.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த வியாழன், வெள்ளியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கின்றன. ஆனால், சந்தையானது கரடியின் பிடியில் இருப்பதாகச் சொல்கிறார்களே!

“உண்மைதான். இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ஸ்மால் மற்றும் மிட் கேப் நிறுவனப் பங்குகள் 600-க்கும் மேற்பட்ட பங்குகளின் விலை அவற்றின் 52 வாரக் குறைவு விலை மற்றும் அதற்குக்கீழ் இறங்கி வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ. ஸ்மால்கேப் இண்டெக்ஸ் அதன் 52 வார உச்சத்திலிருந்து சுமார் 40% வீழ்ச்சி கண்டிருக்கிறது. மிட்கேப் பங்கு இண்டெக்ஸ் அதன் 52 வார உச்சத்திலிருந்து 20% வரை இறக்கம் கண்டிருக்கிறது.

மத்திய பட்ஜெட் மற்றும் வெளிநாட்டு முதலீட் டாளர்கள் பங்குகளை விற்றுவருவது, முதலீட் டாளர்களைக் கவராத ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருவது ஆகியவற்றின் காரண மாக இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு கள் அதிகரிக்கக் காரணம், அதில் இடம்பெற்றுள்ள சில புளூசிப் பங்குகளின் விலை ஏற்றம் மட்டுமே.

பி.எஸ்.இ ஸ்மால்கேப் இண்டெக்ஸை எடுத்துக் கொண்டால், மொத்தம் 747 பங்குகள் அதில் இடம்பெற்றுள்ளன. இது சுமார் 650 பங்குகள், அவற்றின் 52 வார உச்சத்திலிருந்து 20 சதவிகிதத்துக்கும்மேல் விலை வீழ்ச்சி கண்டுள்ளன. டி.ஹெச்.எஃப்.எல், புஞ்ச் லாயிட், ரிலையன்ஸ் நேவல், காக்ஸ் & கிங்ஸ் உள்ளிட்டப் பங்குகள் அதிக இறக்கம் கண்டுள்ளன. பி.எஸ்.இ 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள 500 பங்குகளில் சுமார் 350 பங்குகளின் விலை அவற்றின் உச்ச விலையிலிருந்து 20 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டுள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், சங்கரா பில்டிங், ஹெச்.இ.ஜி, ஜெய்பிரகாஷ் அசோசி யேட்ஸ், யெஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ், கிராஃபைட் இந்தியா, கேர் ரேட்டிங்ஸ் ஆகிய பங்குகளைக் குறிப்பிடலாம். கடந்த ஆறு காலாண்டுகளாகவே ஸ்மால் மற்றும் மிட்கேப் நிறுவனங்களின் செயல்பாடு சரியில்லாமல் இருந்து வருகிறது. இன்னும் நான்கு காலாண்டு களுக்கு இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. வருகிற 12-ம் தேதி பக்ரீத், 15-ம் தேதி சுதந்திர தினம் என்பதால் சந்தை விடுமுறை. எனவே, மீதமுள்ள நாள்களில் சந்தை பரபரப்பாக இருக்க வாய்ப்புண்டு. எனவே, உஷார்’’ என்கிற எச்சரிக்கையுடன் முடித்திருந்தார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு