Published:Updated:

ஷேர்லக்: சந்தை இறக்கம் முடிவுக்கு வந்திருக்கிறதா?

Shareluck
பிரீமியம் ஸ்டோரி
News
Shareluck

ஷேர்லக்

காலையிலேயே ஷேர்லக் மும்பையில் இருப்பதாக எஸ்.எம்.எஸ் அனுப்பினார். நாம் கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். சரியாக மாலை நான்கு மணிக்கு நம் மெயிலுக்குப் பதில்களை அனுப்பினார் அவர். இனி நம் கேள்விகளும் அவரது பதில்களும்...

அந்நிய முதலீடு வெளியேறுவது நின்று, புதிதாக முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது ஏன்?

“வெளிநாட்டினர் நடப்பு செப்டம்பர் 3 முதல் 9-ம் தேதி வரை பங்குகளிலிருந்து சுமார் ரூ.5,450 கோடியை வெளியே எடுத்தி ருக்கிறார்கள். இதே காலத்தில் கடன் சந்தையில் சுமார் ரூ.4,000 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். அதே சமயம், செப்டம்பர் 11 மற்றும் 12–ம் தேதிகளில் வெளிநாட்டினர் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த இரு தினங்களில் சுமார் ரூ.875 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் அந்நிய முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் இந்திய மூலதனச் சந்தையில் ரூ.16,093 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். மே மாதத்தில் அது ரூ.9,031 கோடியாகச் சரிவடைந்தது. ஜூனில் ரூ.10,385 கோடியாக அதிகரித்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5,920 கோடியை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. அதற்குக் காரணம், சந்தை இறங்கி னாலும் அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் தொய்வில்லாமல் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு, குறிப்பாக சிறு முதலீட்டாளர் களிடமிருந்து முதலீடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.’’

ஷேர்லக்: சந்தை இறக்கம் முடிவுக்கு வந்திருக்கிறதா?

ஐ.பி.ஓ முதலீடு லாபகரமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனவே?

“செப்டம்பர் மாதம் 6-ம் தேதி நிலவரப்படி, எம்.எஸ்.டி.சி, ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார், செல்ப்மாக் டிசைன் அண்டு டெக் ஆகிய நிறுவங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள் ளன. ஆனால், இந்தியா மார்ட் இன்டர்மெஷ், நியோஜென் கெமிக்கல்ஸ், மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர், ரயில் விகாஸ் நிகாம், பாலிகேப் இந்தியா, ஆஃபிள் இந்தியா, ஸ்பாந்தனா ஸ்பூர்தி ஃபைனான்ஷியல், சாலெட் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளன. இதில் அதிகபட்சமாக இந்தியா மார்ட் இன்டர்மெஷ் நிறுவனப் பங்கின் விலை, அதன் வெளியீட்டு விலையுடன் ஒப்பிடும்போது, 48 சதவிகிதத்திற்குமேல் உயர்ந்துள்ளது. மெட்ரோபொலிஸ் பங்கு விலை 36 சதவிகிதமும் ரயில் விகாஸ் நிகாம் பங்கு விலை 28 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளன. பாலிகேப் இந்தியா, ஆஃபிள் இந்தியா, சாலெட் ஹோட்டல்ஸ் மற்றும் ஸ்பாந்தனா ஸ்பூர்தி ஃபைனான்ஷியல் பங்குகளின் விலை முறையே 13%, 12%, 5% மற்றும் 7% அதிகரித்துள்ளன.”

பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சந்தைக்குச் சாதகமாக இருக்கின்றனவா?

“வந்துள்ள பொருளாதாரம் சார்ந்த புள்ளி விவரங்கள் கலவையாக இருக்கின்றன. தொழில் உற்பத்தி வளர்ச்சி (ஐ.ஐ.பி) ஜூலையில் 4.3% அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 1.2 சதவிகிதமாக இருந்தது. அதே நேரத்தில், 2018 ஜூலையில் தொழில் உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருந்தது. சில்லறைப் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் மிக அதிகமாகும். அதேநேரத்தில், ஆர்.பி.ஐ-யின் இலக்கான 4 சதவிகிதத்தைவிடக் குறைவாகும்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. முதலீடு செய்ய இது சரியான நேரம்’ என ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தெரிவித்திருக்கிறாரே?

“ ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கொடுக்கப்பட்டுள்ள காலத்துக்குள் நாட்டை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தி சாதனை படைப்பார். இந்தியப் பங்குச் சந்தையின் இறக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. குறிப்பாக, மிட்கேப் பங்குகள் இறக்கம் முடிவுக்கு வந்து ஏற்றம் காண ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாகும். மேலும், நடப்பு ஆண்டில் நல்ல பருவ மழை பெய்திருக்கிறது. வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது. வங்கிகள் கடன் வழங்குவது 15% அதிகரிக்கும்’ என ஜுன்ஜுன்வாலா நம்பிக்கை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்க விஷயம்.’’

ஷேர்லக்: சந்தை இறக்கம் முடிவுக்கு வந்திருக்கிறதா?

சுந்தரம் ஈக்விட்டி ஃபண்ட் என்.எஃப்.ஓ-வுக்கு ஆதரவு எப்படி?

‘‘சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சுந்தரம் ஈக்விட்டி ஃபண்ட் என்.எஃப்.ஓ மூலமாக ரூ.358 கோடியை சமீபத்தில் திரட்டியுள்ளது. இந்த ஃபண்ட், மல்டிகேப் வகையைச் சேர்ந்ததாகும். திரட்டப்பட்ட நிதியை லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யவுள்ளது. சுந்தரம் ஈக்விட்டி ஃபண்டில் புதிதாக செப்டம்பர் 16 முதல் முதலீடு செய்யலாம். பொருளாதார மந்தநிலை மற்றும் சந்தை ஏற்ற இறக்கச் சூழ்நிலையிலும் 30,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்திருக்கிறார்கள்.’’

இந்தியப் பங்குச் சந்தையின் ரேட்டிங் குறைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?

‘‘இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியப் பங்குச் சந்தையின் ரேட்டிங்கை, உலகளாவிய ரேட்டிங் நிறுவனமான கிரெடிட் சூஸ் குறைத்துள்ளது. இதுவரை ஆறாவது நிலையிலிருந்த இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பை எட்டாவது இடத்துக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலவரம் ஏமாற்றமளிப்பதால், இத்தகைய இறக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது. அதேபோல, இந்தியப் பங்குச் சந்தையின் வலிமைக்கான மதிப்பீட்டை, ‘மார்க்கெட் வெயிட்’ என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பீட்டை ‘மார்க்கெட் வெயிட்’ என்ற நிலையிலிருந்து ‘ஸ்மால் ஓவர்வெயிட்’ என்ற நிலைக்குத் தரம் உயர்த்தியது. தற்போது மீண்டும் ஒருபடி இறக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்துவருவது, ஆசிய பங்குச் சந்தைகளில் இந்தியப் பங்குச் சந்தைக்குச் சாதகமாக இருக்கும் என்று கிரெடிட் சூஸ் கருதுகிறது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீரென ஒரே நாளில் யெஸ் பேங்கின் பங்கு விலை 8.5% உயர்ந்திருக்கிறதே, என்ன காரணம்?

‘‘பே டிஎம் தலைவர் விஜய் சேகரிடம் தனது பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக யெஸ் பேங்க் நிறுவனர் ரானா கபூர் பேசியதாகக் கடந்த புதன்கிழமை செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மும்பைப் பங்குச் சந்தையில் அன்றைய தினம் மட்டும் யெஸ் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை 8.5% உயர்ந்து, 68.50 ரூபாய்க்கு விற்பனை யானது. யெஸ் பேங்க் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகள் மற்றும் தன் குடும்ப உறுப்பினர்களின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக பே டிஎம் தலைவர் விஜய் சேகரைச் சந்தித்தி ருக்கிறார். அந்தப் பங்குகளை ரூ.1,800 - 2,000 கோடி என்ற மதிப்பீட்டில் விற்பனை செய்வ தற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப் படுகிறது. வங்கியின் கணிசமான பங்குகளை உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமொன்றுக்கு விற்கவுள்ளதாக ஏற்கெனவே யெஸ் பேங்கின் சி.இ.ஓ ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சிதான் இந்த நிகழ்ச்சி. ரானா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு யெஸ் பேங்கில் 9.64% பங்குகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.1,550 கோடியாக உள்ளது.’’

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.17,200 கோடி நிதி திரட்டியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறதே!

“பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு 2019-2020-ம் நிதி ஆண்டில் சுமார் ரூ.17,200 கோடி நிதி திரட்டத் திட்ட மிட்டுள்ளது. ரூ.13,000 கோடி பங்குகள் விற்பனை வாயிலாகவும் ரூ.7,200 கோடி கடன் பத்திரங்கள் வாயிலாகவும் இந்த நிதியைத் திரட்டுகிறது. இந்த வங்கி ஜூன் காலாண்டில் 73% வளர்ச்சியுடன் ரூ.225 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.”

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்கு நிறுவனத்தின் விலை இன்று திடீரென ஆறு சதவிகிதத்துக்குமேல் உயர என்ன காரணம்?

‘‘பி.பி.சி.எஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த அளவு பங்கினை வெளிநாட்டு நிறுவனத்துக்கு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்தப் பங்கின் விலை இன்று உயர்ந் திருக்கிறது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3% பங்கு இருக்கிறது. எந்த வெளிநாட்டுக்குப் பங்கினை விற்கப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியும். நாளை சென்னைக்கு வந்துவிடுவேன்; அடுத்த வாரம் நேரில் சந்திக்கலாம்.”

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்!

ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.டி.ஐ லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் என்கிற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு, 80-சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். குறைந்தபட்ச முதலீடு ரூ.500. அக்டோபர் 14-ம் தேதி வரைக்கும் முதலீடு செய்யலாம்!