Published:Updated:

ஷேர்லக்: புதிய சலுகைகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

Shareluck
பிரீமியம் ஸ்டோரி
News
Shareluck

ஷேர்லக்

லையங்கத்துக்கான விஷயங்கள் குறித்து ஆழ்ந்த யோசனையில் இருந்த நேரத்தில், சத்தமில்லாமல் வந்துநின்றார் ஷேர்லக். “மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் வரவேண்டிய தீபாவளியை இன்றே கொண்டுவந்துவிட்டன. சென்செக்ஸ் இன்று வர்த்தகத்துக்கு இடையே 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருப்பதைப் பார்த்தாலே, ஒட்டுமொத்த இந்தியாவும் குதூகலமாக இருப்பது தெரியுமே!’’ என்றவர், மொறுமொறு பக்கோடா ஒரு துண்டை எடுத்துச் சாப்பிட்டார். ‘‘சூப்பர், கேள்விகளைக் கேளும்’’ என்றவரிடம் நம் முதல் கேள்வியைக் கேட்டோம்.

செயில் நிறுவனத்தின் லாபம் வரும் காலாண்டுகளில் அதிகரிக்கும் போலிருக்கிறதே?

“பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில், உற்பத்தி செய்யும் இரும்புத்தாதுகளில், 25% இரும்புத் தாதுகளை விற்க இந்திய சுரங்க ஒழுங்கு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நிலையில், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கம் என இருபதுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இரும்பு உற்பத்தியில் இயங்கிவருகின்றன. 25% என்பது இந்த நிறுவனத்தின் மொத்த இருப்புத்தாது உற்பத்தியில் 7 மில்லியன் டன்களாகும். வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் முந்தைய வருவாய் (எபிட்டா) ஒரு டன்னுக்குத் தோராயமாக 20 டாலர் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,000 கோடி அதிகரிக்கும். நடப்பு செம்டம்பர் காலாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் ரூ.525 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் இந்தப் பங்கின் விலை 6% அதிகரித்துள்ளது.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எம்.எம்.டி.சி, எஸ்.டி.சி, பி.இ.சி நிறுவனங்களை மூடப்போவதாக பியூஷ் கோயல் சொல்லி அதிர்ச்சி தந்திருப்பது சரியா?

“சரியா, தவறா என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்.டி.சி,), புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (பி.இ.சி), மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் (எம்.எம்.டி.சி) ஆகிய மூன்று அரசு நிறுவனங்களை மூட அல்லது இணைக்கும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அரசுக்குச் சொந்தமான இந்த மூன்று நிறுவனங் களின் பங்குகளில் 90% பங்குகள் மத்திய அரசிடம் இருக்கின்றன. 2018 - 2019-ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் எஸ்.டி.சி-யின் மொத்தக் கடன் ரூ.2,181 கோடி. இது கடந்த மார்ச் மாதத்தில் ரூ.625 கோடியாக இருந்தது. கடனுக்காக சிண்டிகேட் வங்கிமீது இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத் தக்கது. இதனால் அந்த நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. மார்ச் 2019 நிலவரப்படி, எம்.எம்.டி.சி-யின் கடன் சுமார் ரூ.961.5 கோடியாக இருக்கிறது.”

ஷேர்லக்: புதிய சலுகைகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

நால்கோ சாதனை அளவாக 115% டிவிடெண்ட் வழங்கியிருக்கிறதே!

“அலுமினிய நிறுவனமான நால்கோ, 2018- 19-க்கு 115% டிவிடெண்ட் அறிவித்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.1,072.73 கோடி. இந்த நிறுவனத்தின் 38-வது வருடாந்தரப் பொதுக்கூட்டத்தின்போது (ஏ.ஜி.எம்) இந்த அறிவிப்பை வெளியாகியிருக்கிறது. 1981-ம் ஆண்டில் நிறுவனம் தொடங்கப்பட்ட திலிருந்து இது மிக உயர்ந்த டிவிடெண்ட் அறிவிப்பாகும். அதன் அடிப்படையில் ஒரு பங்குக்கு 5.75 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப் படுகிறது. 2018-19-ம் நிதி ஆண்டு இந்த நிறுவனத்திற்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தி ருக்கிறது. உற்பத்தி, லாபம், உற்பத்தித்திறன் காரணிகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்தாமல், இயற்கைவளங்கள் மீதும் எதிர்கால திட்டங்களின் மீதும் இந்த நிறுவனம் அதிக கவனத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் உற்பத்தியானது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.40 லட்சம் டன்னாக அதிகரித்துக் காணப்பட்டது. அதே சமயம், 1.52 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் களின் உற்பத்தியும் அதிரித்தி ருக்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டு வரை, வரிகள், கட்டணங்கள், ராயல்டி மற்றும் டிவிடெண்ட் என அரசுக்கு ரூ.32,886 கோடியை இந்த நிறுவனம் வழங்கியிருக்கிறது. இந்தத் தொகை யில் ரூ.25,917 கோடி மத்திய அரசுக்கும் ரூ.6,969 கோடி மாநில அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்தப் பங்கின் விலை சுமார் 4% அதிகரித்துக் காணப்பட்டது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மற்ற நிறுவனங்களின் ஃபண்ட் வருமானம் குறைந்துள்ள நிலையில், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் புளூசிப், மல்டிகேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளின் ரொக்க கையிருப்புத் தொகையை 20% அளவுக்கு அதிகமாக வைத்திருந்தது. ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி, ஆக்ஸிஸ் புளூசிப் 20%, மிட்கேப் 19.3% மற்றும் மல்டிகேப் 20.13% என ரொக்கக் கையிருப்பு வைத்திருந்தது. ஈக்விட்டி ஃபண்டுகளில் 5-7% ரொக்கக் கையிருப்பு வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால், ஆக்ஸிஸ் கையாண்ட இந்த உத்தி, பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்தபோது, இதற்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. ஆக்ஸிஸ் புளூசிப், மிட்கேப் ஃபண்ட் மற்றும் மல்டிகேப் ஃபண்டுகள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு முறையே ரூ.7,005 கோடி, ரூ.2,819 கோடி மற்றும் ரூ.4,091 கோடியாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் சென்செக்ஸ் 3.2% இறக்கம் கண்டுள்ள நிலையில், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் 5 சதவிகித வருமானத்தையே கொடுத்திருக்கிறது. பி.எஸ்.இ மிட்கேப் பெஞ்ச்மார்க் வருமானம் 15.74% குறைந்தி ருக்கும் நிலையில் இந்த ஃபண்டின் மிட்கேப் ஃபண்ட் 2.19% வருமானம் தந்துள்ளது. பி.எஸ்.இ 500 பெஞ்ச்மார்க் வருமானம் 6.81 சதவிகிதமாகக் குறைந்திருக்கும்போது, இந்த ஃபண்டின் மல்டிகேப் ஃபண்ட் 4.8% வருமானம் கொடுத்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.”

ஷேர்லக்: புதிய சலுகைகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

இன்று (வெள்ளிக்கிழமை) சென்செக்ஸ் 1921 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. சந்தையின் ஏற்றம் அடுத்த வாரத்திலும் தொடருமா?

“வியாழக்கிழமை சென்செக்ஸ் 471.41 புள்ளிகள் இறக்கம் கண்டது. இ-சிகரெட்களுக்கு தடை விதிப்பது, அமெரிக்காவில் 0.25% வட்டி குறைப்பு, ஜப்பானில் வட்டி உயர்வு நிறுத்தி வைப்பு போன்றவை காரணங்களாகக் கூறப்பட்டன. இந்த நிலையில், பங்குச் சந்தை முடிந்தபிறகு மாலையில் அறிவிப்புகளை வெளியிடும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலையிலேயே பத்திரிகையாளர் களைச் சந்தித்து, நிறுவனங் களுக்கான வருமான வரிச் சலுகைகள் போன்ற அறிவிப்புகளை வெளியிட, சந்தை எகிறியிருக்கிறது. இந்த அறிவிப்புகளின் பலன்கள் என்ன, இதனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு செல்லுமா என்பதைப் பொறுத்தே பங்குச் சந்தையின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும். அந்த நகர்வு தொடர் ஏற்றமாக இருக்கலாம். அதேநேரத்தில், முன்போல் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் சந்தையின் பயணம் இனி இருக்கும் என்கிறார்கள், மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் வட்டி குறைக்கப்படும் என ஆர்.பி.ஐ கவர்னர் சொல்லியிருக்கிறாரே?

“அடுத்த 12 மாதங்களில் நாட்டில் பணவீக்க விகிதம் 4 சதவிகிதத்துக்கு கீழே இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம். மேலும், பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதால், இன்னும் வட்டி குறைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக ஆர்.பி.ஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார்.”

முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகஸ்டில் செய்துள்ள பங்கு முதலீடுகள் விவரம் சொல்ல முடியுமா?

“முன்னணி 10 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் விவரம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பரவலாக அனைத்து வகைத் திட்டங்களிலும் ரூ.9,000 கோடி அளவுக்கு முதலீடுகள் குவிந்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் அதிக முதலீடு செய்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளில் மட்டும் முன்னணி 10 ஃபண்ட் நிறுவனங்களும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.4,970 கோடி முதலீடு செய்துள்ளன.

ஜியோ ஹைஸ்பீடு பிராட்பேண்ட் மற்றும் ஜியோ ஃபைபர் திட்டங்களை நாட்டின் 1,600 நகரங்களுக்குக் கொண்டுவந்துள்ளது பெரிதும் கவர்ந்துள்ளது. அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் நிறுவனத்தில் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் அதிக முதலீட்டைச் செய்துள்ளது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கில் டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் அதிக முதலீடு செய்துள்ளது. லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் பங்குகளில், ஃப்ராங்க்ளின் டெம்ப்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதிக முதலீடு செய்துள்ளது.”

யெஸ் பேங்கின் பங்கு மதிப்பு திடீரென உயர்ந்துள்ளதே, என்ன காரணம்?

‘‘யெஸ் பேங்க் நிறுவனரான ரானா கபூர் தனக்குச் சொந்தமான யெஸ் பேங்க் பங்கில் 2.3 சதவிகிதத்தை விற்றிருக்கிறார். மார்க்ன கிரெடிட்ஸ் என்கிற நிறுவனத்திலிருந்து இந்தப் பங்குகள் விற்கப் பட்டிருக்கிறது. இதனால் இந்தப் பங்கின் விலை இன்று மட்டும் 2.40% உயர்ந்தது. ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்காகப் பெறப்பட்ட மார்கன் கிரெடிட்ஸ் நிறுவனத்தின் மாற்றவியலா கடன் பத்திரங்களுக்காகக் கணிசமான பகுதியை முன்கூட்டியே செலுத்துவதற்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் யெஸ் பேங்க் புரமோட்டர்களுக்கு இருக்கும் 18% பங்குகள் 15.7% பங்குகளாகக் குறைந்துள்ளது’’ என்றவர், ‘‘தொழில் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டிருப்பதால், என் பிசினஸ் நண்பர்கள் ரேஸ் க்ளப்பில் ஒரு பார்ட்டியை வைத்திருக்கிறார்கள். நான் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஷேர்லக்.

ஒரே நாளில் உயர்ந்த ரூ.7 லட்சம் கோடி!

தொழில் நிறுவனங்களின் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வந்ததுமே பங்குச் சந்தை கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. இன்று மட்டும் பி.எஸ்.இ, என்.எஸ்.இ பங்குச் சந்தைகளின் வர்த்தகமான பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் 1921 புள்ளிகள் அதிகரித்து, 38014 புள்ளிகளை எட்டியது. நிஃப்டியானது 569 புள்ளிகள் உயர்ந்து, 11,274 புள்ளிகளை எட்டியது. இன்றைக்கு எஃப்.ஐ.ஐ-க்கள் நிகரமாக ரூ.38 கோடிக்குப் பங்குகளை வாங்கினார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளோ ரூ.3,000 கோடிக்கு மேலே வாங்கியிருக்கின்றன.