Published:Updated:

ஷேர்லக் : பார்மா பங்குகள்... முதலீடு செய்யலாமா..?

இது சரியான தருணமா?

பிரீமியம் ஸ்டோரி
லகமே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயந்து, வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க, ஜூம்ஆப்பில் (Zoom App) நாம் ஷேர்லக்குடன் வீடியோகாலில் பேசினோம். அப்போது நாம் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் சொன்ன பதில்களும் இங்கே...
ஷேர்லக்
ஷேர்லக்

ஊரடங்கு காலத்திலேயே நிதியாண்டு 2019–20 நிறைவு அடைந்திருக்கிறதே... கடந்த நிதியாண்டில் இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படியிருந்தது?

“மிக மிக மோசமாக இருந்தது என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும்... முடிந்த நிதியாண்டில் சென்செக்ஸ் 9390 புள்ளிகள் வீழ்ச்சிகண்டிருக்கிறது. சதவிகிதக் கணக்கில் சென்செக்ஸ் குறியீடு 24%, நிஃப்டி 26% இறங்கியிருக்கிறது. மெட்டல் 50%, ஆட்டோ 43%, பி.எஸ்.யூ பேங்க் 42%, மூலதனப் பொருள்கள் 41%, ரியல் எஸ்டேட் 35% வீழ்ச்சிகண்டிருக்கின்றன.’’

நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் பங்குகள் எதுவும் முடிந்திருக்கும் கடந்த நிதியாண்டில் லாபம் தரவில்லையா?

“நெஸ்லே (+48%), பார்தி ஏர்டெல் (+44%), ஹெச்.யூ.எல் (+35%), டாக்டர் ரெட்டீஸ் (+12%) மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் (+12%) ஆகிய பங்குகள் மட்டுமே வருமானம் தந்தன. இண்டஸ்இண்ட் பேங்க் (-80%), ஜீ என்டர்டெயின்மென்ட் (-72%), வேதாந்தா (-65%), டாடா மோட்டார்ஸ் (-59%) மற்றும் எம் அண்ட் எம் (-58%) ஆகிய பங்குகள் அதிகமாக விலை இறங்கியுள்ளன. ஆனால், பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட காலத்தில் லாபம் தருவதாக இருக்கிறது. கடந்த 17 நிதியாண்டுகளில் நான்கு நிதியாண்டுகளில் மட்டும்தான் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் நெகட்டிவ் வருமானம் தந்திருக்கின்றன.”

ஷேர்லக்
ஷேர்லக்

புது நிதியாண்டின் தொடக்கம் இந்திய பங்குச் சந்தைக்கு எப்படி இருக்கிறது?

“நடப்பு 2020-21 –ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் சென்செக்ஸ் 4% அதாவது, 1203 புள்ளிகள் சரிவடைந்த காரணத்தால், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக அளவில் ஏற்பட்டுள்ள அச்சநிலை காரணமாக கடந்த இரு மாதங்களாகவே பங்குச் சந்தைகளில் இறக்கம் அதிகமாக உள்ளது. கடந்த செவ்வய் அன்று ரூ.113.48 லட்சம் கோடியாக இருந்த சந்தை மூலதன மதிப்பு ஏப்ரல் 1, புதனன்று ரூ.110.28 லட்சம் கோடியாகக் குறைந்தது. சென்செக்ஸைப்போலவே, நிஃப்டியிலும் 4% அதாவது, 344 புள்ளிகள் இறக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் பி.எஸ்.இ-யில் மட்டும் ரூ.33.39 லட்சம் கோடி சந்தை மூலதன இழப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி 38297 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் 8829 புள்ளிகள் சரிந்து, மார்ச் 31-ம் தேதி 29468 புள்ளிகளாகக் குறைந்தது.”

கொரோனா தாக்குதல் அச்சநிலை காரணமாக பங்குச் சந்தைகளில் இறக்கம் அதிகமாக உள்ளது.

அபாட் லெபாரட்டரீஸ் பங்கு விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளதே... என்ன விஷயம்?

“இந்த நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பை ஐந்து நிமிடத்திலேயே கண்டுபிடிப்பதற்கான சோதனை முறை ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக மார்ச் 27-ம் தேதி அறிவித்தது. தற்போது அமெரிக்க எஃப்.டி.ஏ அமைப்பு அதைப் பயன்படுத்துவதற்கான அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்தச் செய்தி வெளியானதை அடுத்து கடந்த வாரத்தில் சுமார் 13% பங்கு விலை ஏற்றம் பெற்றிருக்கிறது. கடந்த ஓராண்டுக்காலத்தில் 115.53 சதவிகிதமும், இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து 19.63 சதவிகிதமும் ஏற்றம் பெற்றிருக்கிறது.”

ஷேர்லக் : சந்தை இறக்கம் ஏப்ரலிலும் தொடருமா?

கொரோனா தாக்குதலால் இந்தியப் பொருளாதாரத்துக்குப் இழப்பு ஏற்படுமா?

“ஆமாம். `கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியப் பொருளாதாரத்துக்குத் தோராயமாக 100 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 7.5 லட்சம் கோடி) அளவுக்கு இழப்பு ஏற்படும்’ என அக்குயிட் (Acuite) தரக்குறியீட்டு நிறுவனம் கணித்துள்ளது.மேலும் அந்த நிறுவனம், `ஊரடங்கு உத்தரவால் தோராயமாக ஒவ்வொரு நாளும் 4.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்’ என்றும் கணித்துள்ளது. அதேபோல, `2020-21-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜி.டி.பி வளர்ச்சியில் 5% முதல் 6% வரை குறையக்கூடிய ஆபத்து இருப்பதாகவும், இரண்டாம் காலாண்டில் அது சற்று மீண்டு வருவதால், 2% முதல் 3% வரை வளர்ச்சி குறையக்கூடும்’ என்றும் கணித்திருக்கிறது.

ஷேர்லக்
ஷேர்லக்

`இந்த ஊரடங்கால் ஏற்படும் மொத்த இழப்பில் போக்குவரத்து, ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரன்ட் துறைகள் அதிகமாக 20 சதவிகித்துக்குக்குமேல் பாதிக்கப்படக்கூடும். இந்தத் துறைகளுக்கு முதலாம் காலாண்டில் 50% அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடும். அடுத்ததாக விவசாயத் துறை 15% அளவுக்கு பாதிக்கப்படும்’ என்றும் கணித்துள்ளது. இதற்கிடையே மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம், 2020-ம் ஆண்டுக்கான இந்திய ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை 2.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.”

பார்மா பங்குகளில் முதலீடு செய்யலாமா?

“இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தது. பெரும்பாலான குறியீடுகள் மைனஸில் இருக்க, பார்மா குறியீடு மட்டும் ஏற்றத்தில் இருந்தது. பொதுவாக, `பார்மா பங்குகள் மற்றும் ஃபண்டுகள் பாதுகாப்பானவை’ என்பார்கள். ஆனால், பொருளாதார மந்தநிலையில் பார்மா நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகி யிருக்கின்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் பணிக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் மற்றும் உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளன. இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் காணத் தொடங்கியிருக்கின்றன. `இது போன்ற பங்குகளை அவற்றின் ஃபண்டமென்டல்கள் வலிமையாக இருப்பின், நீண்டகால முதலீட்டுக்காக வாங்கலாம்’ என்கிறார்கள் நிபுணர்கள். `டாக்டர் ரெட்டீஸ், அபாட் இந்தியா, டிவிஸ் லேப்ஸ், ஐ.பி.சி.ஏ அல்கெம் போன்ற பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம்’ என்கிறார்கள் அவர்கள்.’’

கிராபைட் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே..?

“கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான இக்ரா, கிராபைட் இந்தியா நிறுவனத்துக்கு ‘AA+’ ரேட்டிங்கை வழங்கியிருக்கிறது. இதனால் கடந்த நான்கு வர்த்தக தினங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 14% அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை 117.50 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த அறிவிப்புக்குப் பிறகு விலை ஏற்றம் கண்டு 133.60 ரூபாய்க்கு வர்த்தகமானது’’ என்றவர், ‘‘சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே இருக்குமென்பதால், மிகவும் கவனமாக முதலீடு செய்யுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, வீடியோகாலை கட் செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு