Published:Updated:

ஷேர்லக் : மீண்டும் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு..! - அதிக லாபத்துக்காக..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

இந்தியப் பங்குச் சந்தை, பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்ற இறக்கத்தில் இருந்துவருகிறது.

ஷேர்லக் : மீண்டும் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு..! - அதிக லாபத்துக்காக..!

இந்தியப் பங்குச் சந்தை, பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்ற இறக்கத்தில் இருந்துவருகிறது.

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
ரியாக மாலை 5:00 மணிக்கு ஷேர்லக்கிடமிருந்து போன். “இன்னும் 10 நிமிடங்களில் உங்கள் அலுவலம் வந்துவிடுவேன். கேள்விகளைத் தயாராக வைத்திருக்கவும்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.சொன்னபடி வந்துசேர்ந்தார். அவரை கேன்டீன் பகுதிக்கு அழைத்துச் சென்று பேசத் தொடங்கினோம்.

பிஐ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 52 வார உச்சத்தைத் தொட்டிருக்கிறதே..?

“ஜூன் காலாண்டில் பிஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 43% அதிகரித்து 145.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல நிறுவனத்தின் வருமானமும் 40% அதிகரித்து 1,060 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வாரம் ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தப் பங்கின் விலை 7% அதிகரித்து 1,966 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை 52 வார அதிகபட்ச விலையைத் தொட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.”

செபி அமைப்பின் சேர்மன் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே!

“இந்திய பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் சேர்மன் அஜய் தியாகியின் பதவிக் காலம் பிப்ரவரி 2020-ல் முடிந்துவிட்டது. கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் இவரின் பதவிக் காலத்தை மத்திய அரசு மேலும் ஆறு மாத காலம் (31 ஆகஸ்ட், 2020 வரை) நீட்டிப்பு செய்திருந்தது. இந்த நீட்டிப்பு காலமும் விரைவில் முடிந்துவிட இருப்பதால், தற்போது மேலும் 18 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அஜய் தியாகி செப்டம்பர் 1-ம் தேதி முதல் 28 பிப்ரவரி, 2022 வரை செபி அமைப்பின் சேர்மனாகத் தொடரவிருக்கிறார். முதன்முறை பதவிக் காலத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு நன்மை தருகிற மாதிரி பல நல்ல காரியங்களைச் செய்தவர், இந்த முறை எல்லோரின் குறைகளையும் தீர்ப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.’’

ஷேர்லக்
ஷேர்லக்

ஆக்ஸிஸ் பேங்கின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“ஆக்ஸிஸ் பேங்க்கின் இயக்குநர்குழு, தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் மூலம் 15,000 கோடி ரூபாயை திரட்டுவதற்கான ஒப்புதலைக் கடந்த ஜூலை மாதம் வழங்கியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, சலுகை விலையாக, பங்கு ஒன்றுக்கு 420 ரூபாய் வீதம் 10,000 கோடி ரூபாய் நிதி திரட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றைய தினம் பங்குச் சந்தையின் வர்த்தக முடிவில் ஆக்ஸிஸ் பேங்க்கின் பங்கு விலை 429 ரூபாயில் முடிந்திருந்தது. வியாழக்கிழமை வரை வெளியீட்டு அளவைவிட, முதலீட்டாளர்கள் வசமிருந்து மூன்று மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இந்த க்யூ.ஐ.பி பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை 1.39% அதிகரித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாடின் கிரெடிட்கேர் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமைப் பங்கு வெளியீடு குறித்துச் சொல்லவும்...

“மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமான சாடின் கிரெடிட்கேர் நெட்வொர்க் (Satin Creditcare Network) உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் 120 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக முதலீட்டாளர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் மொத்தம் 1,99,82,667 பங்குகள் வெளியிடப்படவிருக்கின்றன. பங்கு ஒன்றின் விலை 60 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது, இந்தப் பங்கின் விலை 2.76% குறைந்து 68.50 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஷேர்லக்
ஷேர்லக்

`குறிப்பிட்ட பங்குகளை முதலீட்டுக்கு கவனிக்கலாம்’ எனப் பங்குத் தரகு நிறுவனங்கள் சொல்லியிருக்கின்றனவே?

“இந்தியப் பங்குச் சந்தையானது, கடந்த மார்ச் 23-ம் தேதி வீழ்ச்சியிலிருந்து சுமார் 50% மீண்டுவந்திருக்கிறது. மிக நீண்ட ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. `இனிவரும் நிதியாண்டில் இந்த நிலைமை சரியாகும்’ என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சந்தை பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அடிப்படையில், கொரமண்டல் இன்டர்நேஷனல், மஹாநகர் கேஸ், ஜே.கே.லஷ்மி சிமென்ட், பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ், கேன்ஃபின் ஹோம்ஸ், ஐநாக்ஸ் லீசர், இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், எண்டியூரன்ஸ் டெக்னாலஜீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ், எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், பாட்டா இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை அடுத்த ஓராண்டுக் காலத்தில் நல்ல ஏற்றம் காணக்கூடும் என முன்னணிப் பங்குத் தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.”

இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டுப் பங்குகளில் மீண்டும் முதலீட்டை ஆரம்பித்திருக்கிறார்களே?

“இந்தியப் பங்குச் சந்தை, பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்ற இறக்கத்தில் இருந்துவருகிறது. அதே நேரத்தில், சர்வதேச நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமேஸான் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மார்ச் மாத இறக்கத்திலிருந்து சுமார் 80% அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில், ஆப்பிள் 70%, நெட்ஃப்ளிக்ஸ் 60% மற்றும் ஃபேஸ்புக் 55% வரை பங்கு விலை ஏற்றம் அடைந்திருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றின் பங்கு விலை முறையே சுமார் 55% மற்றும் 60% விலையேற்றம் கண்டிருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களில் டெஸ்லா பங்கின் விலை நான்கு மடங்குக்குமேல் விலை உயர்ந்திருக்கிறது. ஃபேஸ்புக், ஆப்பிள், அமேஸான், மைக்ரோசாஃப்ட், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களில் செய்யப்பட்ட பங்கு முதலீட்டால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் இரண்டு ட்ரில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது. வெளிநாட்டுப் பங்குகளில் ரிஸ்க் எடுக்கக்கூடிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் முதலீட்டை அதிகரித்துவருகிறார்கள். அதே நேரத்தில், சிறு முதலீட்டாளர்கள் அதிக லாபத்தை எதிர்பார்த்து குளோபல் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்திருப்பதாகத் தகவல்.”

பந்தன் பேங்க் பங்கின் விலை உயர்கிறதே?

“எல்லாம் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என்ற எஃப்.ஐ.ஐ-க்களின் முதலீடு இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் செய்யப்பட்டிருப்பதுதான்.

மார்கன் ஸ்டேன்லி சிங்கப்பூர், கேம்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், கலடியம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், காப்ட்ஹால் மொரீஷியஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், சோடியேட் ஜெனரல் மற்றும் கிரெடிட் சூஸே சிங்கப்பூர் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பந்தன் பேங்க் பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றன. இதன் காரணமாக, கடந்த புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 2% வரை அதிகரித்து வர்த்தகமானது. புதன்கிழமை மாலை வர்த்தகம் முடியும்போது, 5.85 ரூபாய் அதிகரித்து, 312.75 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

மாருதி சுஸூகி பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

``மாருதி சுஸூகி நிறுவனம் `எஸ்-கிராஸ் 2020’ என்ற மாடலில் கார் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன் விலை 8.39 லட்சம் ரூபாய். இந்தப் புதிய வெளியீட்டுக்குப் பிறகு புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3.7% அதிகரித்து 6,596 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

இன்ஃபோ எட்ஜ் பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறதே?

‘‘இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு விற்பனை மூலம் ரூ.1,875 கோடி நிதியைத் திரட்ட முடிவு செய்திருந்தது. அதற்கான அறிவிப்பை, கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த நிறுவனம் வெளியிட்டது. இந்த வெளியீட்டுக்கு, பங்கு ஒன்றின் விலை 3,177.18 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் இந்த நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 6.89% அதிகரித்து 3,420 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது இந்த நிறுவனத்தின் உச்சபட்ச விலை.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 21.21% அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 32.54 சதவிகிதமும், கடந்த ஓராண்டில் 56% ஏற்றத்தையும் சந்தித்திருக்கிறது.’’

பல பார்மா பங்குகளின் விலை கணிசமாக விலையேறியிருக்கிறதே?

‘‘மார்ச் 23-ம் தேதி இந்தியப் பங்குச் சந்தை அதிகபட்ச இறக்க நிலையிலிருந்தது. அதன் பிறகு பல பார்மா பங்குகளின் விலை கணிசமாக விலையேறியிருக்கிறது. இதற்குக் காரணம், கொரோனா பாதிப்பால் மருந்துப் பொருள்களின் தேவை அதிகரித்திருப்பதாகும். முக்கிய பார்மா பங்குகள் முதலீட்டாளர்களின் செல்வத்தை இரு மடங்காக உயர்த்தியிருக்கின்றன. மார்ச் 23-க்குப் பிறகு பி.எஸ்.இ ஹெல்த்கேர் இண்டெக்ஸ் 70 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம்கண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 45% ஏற்றம்கண்டிருக்கிறது.

சுமார் 30 ஹெல்த்கேர் பங்குகளின் விலை மார்ச் இறக்கத்திலிருந்து இரு மடங்குக்கு மேல் ஏற்றம்கண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஐ.ஓ.எல் கெமிக்கல் & பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனப் பங்கின் விலை சுமார் 350 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டிருக்கிறது. இது தவிர, மார்க்சன் பார்மா (340% அதிகரிப்பு), ஆர்த்தி டிரக்ஸ் (310%) டிஷ்மன் கார்போஜென் (265%) ஆகிய பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கின்றன. எஸ்.எம்.எஸ் பார்மாசூட்டிக்கல்ஸ், மார்பென் லெபாரட்டரீஸ், லாரஸ் லேப்ஸ், யூனிகெம் லெபாரட்டரீஸ், சுவன் பார்மாசூட்டிக்கல்ஸ் ஆகிய பங்குகளின் விலை 200 சதவிகிதத்துக்கு மேலும் உயர்ந்துள்ளன.’’

வோடாஃபோன் ஐடியாவின் நிகர இழப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறதே?

‘‘வோடாஃபோன் ஐடியா 2019 ஜூன் காலாண்டில் ரூ.4,873.90 கோடியை நிகர இழப்பாகப் பெற்றிருந்தது. இந்த இழப்பு 2020 ஜூன் காலாண்டில் ரூ.25,460.20 கோடியாக அதிகரித்துள்ளது. வருமானம் 5.42% குறைந்து ரூ.10,659.3 கோடியாக இருக்கிறது. இதன் மொத்தக் கடன் ஜூன் காலாண்டில் ரூ.1,15,500 கோடியாகவும் உள்ளது. இது முந்தைய மார்ச் காலாண்டில் ரூ.1,12,520 கோடியாக இருந்தது.

பங்கின் விலை அதன் முகமதிப்பான ரூ.10-க்குக் கீழே நீண்டகாலமாக இருந்துவருகிறது. வியாழக்கிழமை பங்கின் விலை 0.60% குறைந்து ரூ.8.25-ஆக இருந்தது’’ என்றவர், ‘‘இந்த வாரம் மூன்று கூட்டங்களை நடத்துகிறீர்களே! வாசகர்கள் மிஸ் பண்ணக் கூடாது’’ என்றவர், வீட்டுக்குப் புறப்பட்டார்!

நிதிச்சேவை வேலைவாய்ப்புகள்..!

ஷேர்லக் : மீண்டும் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு..! - அதிக லாபத்துக்காக..!

முதலீடு, காப்பீடு, நிதி ஆலோசனையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கூடவே, இது குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் நிதிச் சேவை என்பது நல்ல வேலை மற்றும் தொழில் வாய்ப்பாக அமையும். நிதிச் சேவை சார்ந்த சில படிப்புகளைப் படிப்பது மூலம் தகுதியை உருவாக்கிக்கொள்ள முடியும். சுயதொழில் அல்லது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குச் சேர முடியும். அதற்கு வழிகாட்டும் இலவச நிகழ்ச்சிதான் இது.

ஆகஸ்ட் 10-ம் தேதி மாலை 6-7 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. முதலீட்டு ஆலோசகர் மற்றும் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் நிதிச்சேவை வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பதிவு செய்ய:

https://bit.ly/2Db6LN7

ஷேர்லக் : மீண்டும் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு..! - அதிக லாபத்துக்காக..!

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் போர்ட்ஃபோலியோ!

மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு திட்டங்கள் / ஃபண்டுகள் உள்ளன. அவற்றைக் கொண்டு ஒருவருக்குத் தேவையான முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி என்பது குறித்த விரிவான விளக்கம்தான் இந்த நிகழ்ச்சி. ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 10:30 - 12:30 மணி வரைக்கும் நடக்கும் இந்த ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ரூ.250. நிதி ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்கொண்ட நிதி ஆலோசகர், Acuwealth.com–ன் நிறுவனர். எம்.வெங்கடேஸ்வரன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/3fsul52

ஷேர்லக் : மீண்டும் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு..! - அதிக லாபத்துக்காக..!

பிசினஸில் வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள்!

நாணயம் விகடன், ‘பிசினஸ் வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 6-7 மணிக்கு நடத்துகிறது. `ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் சிறப்புரை வழங்க உள்ளார். திருப்பூரில் ஒரு கிராமத்தில் பிறந்து, இன்றைக்கு ஜவுளி உலகில் முக்கிய நிறுவனமான ராம்ராஜ் காட்டனை மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுத்திருக்கிறார். வேஷ்டி, சட்டை எனப் பட்டையைக் கிளப்பியவர், தற்போது மாஸ்க் தயாரிப்பில் வெற்றி கண்டிருக்கிறார். பிசினஸில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பது பற்றி அவர் பேசுகிறார். அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்ய: https://bit.ly/2PqJxFc