Published:Updated:

ஷேர்லக்: புதிய உச்சம் தொடும் பங்கு விலைகள்..!

நடப்பு ஜூலை நிலவரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நடப்பு ஜூலை நிலவரம்

நடப்பு ஜூலை நிலவரம்

ஷேர்லக்கிடமிருந்து மாலை 3:00 மணிக்கு போன் வந்தது. ‘‘நான் இன்று வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால், வெளியே போக என் மனைவி அனுமதிக்க மாட்டார். எனவே, 4 மணிக்கு என் வீட்டுக்கு வருகிறீர்களா... வரும்போது ஃபேஸ்மாஸ்க்கை அவசியம் அணிந்து வரவும்’’ என்று ஷேர்லக் சொல்ல, சகல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவருடைய வீட்டின் கதவைத் தட்டினோம். மிஸஸ் ஷேர்லக் கதவைத் திறந்து, உள்ளே செல்ல அனுமதித்தார். உரிய சமூக இடைவெளிவிட்டு, பேச ஆரம்பித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பல நிறுவனப் பங்குகளின் விலை ஜூலை மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றனவே..?

‘‘பொருளாதார மந்தநிலை தொடர்ந்தாலும், இந்தியப் பங்குச் சந்தை எதிர்கால வளர்ச்சியைப் பிரதிபலிக்கும்விதமாக ஏற்றம் கண்டு வருகிறது. இதனால், பல பங்குகளின் விலை நடப்பு ஜூலை மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மார்ச் 24-ம் தேதி நிஃப்டி 7500 புள்ளிகளுக்கு இறங்கியது. இப்போது 11000 புள்ளிகளுக்கு ஏற்றம்கண்டிருக்கிறது. இறக்கத்திலிருந்து சுமார் 40-க்கும் மேல் பல நிஃப்டி பங்குகளின் விலை ஏற்றம்கண்டிருக்கிறது.

ஷேர்லக்: புதிய உச்சம் தொடும் பங்கு விலைகள்..!

பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட பங்குகள் ஜூலை மாதத்தில் 52 வார உச்சத்தை அடைந்திருக்கின்றன. இவற்றில் சுமார் 30 பங்குகளின் விலை 100 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவில் பல பங்குகளின் விலை ஏற்றம்கண்டிருக்கிறது. ஆர்த்தி டிரக்ஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஆப்டோ சர்க்யூட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜே.எம்.டி ஆட்டோ உள்ளிட்ட பங்குகளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. லார்ஜ்கேப் பங்குகளான ரிலையன்ஸ், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், சிப்லா, கொரமண்டல் இன்டர்நேஷனல், பயோகான், பி.ஐ இண்டஸ்ட்ரீஸ், இப்கா லெபாரட்டரீஸ் போன்றவை 52 வார உச்ச விலையை ஜூலையில் அடைந்திருக்கின்றன.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிலையன்ஸ் பங்கு, விலை உயர்வில் சாதனை படைத்திருக்கிறதே?

‘‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை முதன்முறையாக ரூ.2,000-ஐ கடந்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று ரிலையன்ஸ் பங்குகளின் விலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் 2,010 ரூபாயில் நிறைவு பெற்றது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.12.71 லட்சம் கோடியாக இருந்தது. வியாழக்கிழமை பங்கின் விலை ரூ.2,060-க்கு உயர்ந்தது. இதையடுத்து பங்குச் சந்தை மதிப்பு ரூ.13,93,379 கோடியாக உயர்ந்தது. ரிலையன்ஸ் பங்கின் விலையானது கடந்த மார்ச் இறக்கத்திலிருந்து சுமார் 130% அதிகரித்துள்ளது. ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எந்தக் கடனும் இல்லை.இவையெல்லாம் இந்த நிறுவனத்தின் நன்மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையிலிருந்து 5ஜி முன்னோட்டத்துக்கான அனுமதியை விரைவில் வாங்கவுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் ரிலையன்ஸில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தக் காரணத்தால், ஜூலை மாதத்தில் மட்டுமே ரிலையன்ஸ் பங்கு சுமார் 18% ஏற்றம் பெற்றுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ரிலையன்ஸின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு அதிக அளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம்தான் கூகுளுடன் இணைந்து ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் தயாரிக்கும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.’’

யெஸ் பேங்க் பங்கு விலை வியாழக்கிழமை ஒரே நாளில் 20% வீழ்ச்சியடைய என்ன காரணம்?

‘‘நிதிச் சிக்கலில் மாட்டியிருக்கும் தனியார் வங்கியான யெஸ் பேங்க் (Yes Bank), ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors) பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 4,500 கோடி ரூபாய் திரட்டுகிறது. இந்தப் பங்குகளின் விலைப்பட்டை ரூ.12-13 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரு முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதால், பங்கின் விற்பனை விலை ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில், பங்குச் சந்தையில் யெஸ் பேங்க்கின் பங்கு விலை இதைவிட அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருந்தது. இதனால், இந்தப் பங்கின் விலை பங்குச் சந்தையிலும் ரூ.14.60 அளவுக்கு இறக்கம்கொண்டது. அதாவது, வியாழக்கிழமை மட்டுமே பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே 20 சதவிகிதம் வரை இறங்கியது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் பங்கின் விலை ரூ.14.75-ஆக இருந்தது. இந்த வங்கிப் பங்கின் விலை தொடர்ந்து நான்கு வர்த்தக தினங்களாக இறக்கம் கண்டுள்ளது. அதாவது, இந்த நான்கு நாள்களில் பங்கின் விலை சுமார் 35% இறங்கியிருக்கிறது.’’

ஷேர்லக்: புதிய உச்சம் தொடும் பங்கு விலைகள்..!

எய்ஷர் மோட்டார்ஸ் பங்கின் விலை வேகமாக ஏற ஆரம்பித்ததன் பின்னணி என்ன?

‘‘ராயல் என்ஃபீல்டு இரு சக்கர வாகனம் மற்றும் எய்ஷர் கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனமான எய்ஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் இயக்குநர்குழு அதன் பங்கு முக மதிப்பைப் பிரிப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக இந்த நிறுவனப் பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கு மேல் பங்கின் விலை அதிகரித்திருக்கிறது. தற்போது பங்கின் முக மதிப்பு ரூ.10-ஆக உள்ளது. இது ரூ.1 முக மதிப்புகொண்ட 10 பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 10 அன்று நடக்கும் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் (ஏ.ஜி.எம்) இதற்கான முடிவு எடுக்கப்படுகிறது. அப்போது முக மதிப்பை மாற்றுவதற்கான ரெக்கார்ட் தேதி முடிவு செய்யப்படும்.’’

திலீப் பில்டுகான் பங்கு விலை ஒரே நாளில் 9% அதிகரிக்க என்ன காரணம்?

‘‘டி.பி.எல் (DBL) மற்றும் ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியின் கூட்டு புராஜெக்ட் ஆர்டர் ஏலத்தில் திலீப் பில்டுகான் (Dilip Buildcon) நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.4,168 கோடி. இந்த புராஜெக்ட்டை இந்த நிறுவனம் 48 மாதங்களில் நிறைவேற்றிக் கொடுக்கிறது. மேலும், பத்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கிறது. இந்தத் தகவல் வெளியானதும், பங்கின் விலை சுமார் 9% உயர்ந்து வர்த்தகமானது.’’

பட்டியலிடப்பட்ட அன்றே ரோசாரி பயோடெக் பங்கு விலை நன்கு அதிகரித்திருக்கிறதே?

‘‘சிறப்பு வகை ரசாயனம் தயாரிக்கும் ரோசாரி பயோடெக் (Rossari Biotech) நிறுவனப் பங்கு வியாழக்கிழமை பட்டியலிடப்பட்டது. பங்கின் வெளியீட்டு விலை ரூ.425 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பங்கு வியாழக்கிழமை பட்டியலிடப்பட்டபோது பங்கின் விலை 58% உயர்ந்து ரூ.670-க்கு பட்டியலிடப்பட்டது.

வியாழக்கிழமை வர்த்தக நிறைவில் பங்கின் விலை 74.5% அதிகரித்து, ரூ.741.65 என நிலை பெற்றது. தற்போதைய கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் சிறப்பு வகை ரசாயனங்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதனால், இதன் பங்குகளுக்கும் தேவை அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டிலும் புதிய சாதனை படைத்தது.’’

ராலீஸ் இந்தியா பங்கு விலை தொடர்ந்து அதிகரித்திருக்கிறதே..?

‘‘ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தில் நிகர லாபம் 53% அதிகரித்து ரூ.92 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் தகவல் வெளியானதும், வியாழக்கிழமை மட்டும் பங்கின் விலை 6% அதிகரித்துள்ளது. ராலீஸ் இந்தியா பங்கில் அண்மைக் காலத்தில் முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அந்நிய நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்திருக்கின்றனர்.

மார்ச் இறக்கத்திலிருந்து பங்கின் விலை சுமார் 85% ஏற்றம் கண்டிருக்கிறது’’ என்ற ஷேர்லக், நமக்கு விடை தரும் முன்னர் ‘‘நாணயம் விகடன் நடத்தும் கூட்டங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. அவற்றில் எல்லோரும் கலந்துகொள்வது நல்லது’’ என்று சொன்னபடி நம்மை அனுப்பிவைத்தார்!

ஆயுள் காப்பீடு பாலிசியைத் தேர்வு செய்யும் வழிமுறைகள்!

ஆன்லைன் இலவச நிகழ்ச்சி!

‘சரியான ஆயுள் காப்பீடு பாலிசியைத் தேர்வு செய்வது எப்படி?’ என்ற ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாணயம் விகடன் ஜூலை 27 அன்று மாலை 6-7 மணிக்கு நடத்துகிறது. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது குறித்து உங்களுக்கு வழிகாட்டுகிறார் இன்ஷூரன்ஸ் ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரன். அனுமதி இலவசம்! நிகழ்ச்சிக்குப் பதிவு செய்துகொள்ள: https://bit.ly/39qR8wV

ஷேர்லக்: புதிய உச்சம் தொடும் பங்கு விலைகள்..!

பங்குச் சந்தை வாய்ப்புகள்!

ஆன்லைன் கட்டணப் பயிற்சி

‘பங்குச் சந்தை சுழற்சிகளும் வாய்ப்புகளும்..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 6-8 மணி வரை நாணயம் விகடன் நடத்துகிறது. முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டுகிறார் ‘யூனிஃபை கேப்பிட்டல்’ ஜி.மாறன். பயிற்சிக் கட்டணம் ரூ.350. இந்த வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: https://bit.ly/390xcAH

ஷேர்லக்: புதிய உச்சம் தொடும் பங்கு விலைகள்..!