Published:Updated:

ஷேர்லக் : பங்கு மூலதனத்தை அதிகரித்த புரொமோட்டர்கள்..! - என்ன காரணம்..?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

தங்கம் விலை ஏற்றத்தில் இருந்து வருவதால், கோல்டு இ.டி.எஃப் முதலீடு அதிகரித்து வருகிறது!

ஷேர்லக் : பங்கு மூலதனத்தை அதிகரித்த புரொமோட்டர்கள்..! - என்ன காரணம்..?

தங்கம் விலை ஏற்றத்தில் இருந்து வருவதால், கோல்டு இ.டி.எஃப் முதலீடு அதிகரித்து வருகிறது!

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
ரியாக மாலை 4 மணிக்கு மாஸ்க் அணிந்தபடி நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். சமூக இடைவெளியுடன் மீட்டிங் ரூமில் அமர்ந்தோம். “தோனியின் ரிட்டயர்மென்ட் ரகசியங்கள்’ யூடியூப் வீடியோ பார்த்தேன். சூப்பர்... வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள்” என்று பாராட்டியவருக்கு நாம் நன்றி சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனங்களில் அவற்றின் நிறுவனர்கள் பங்கு முதலீட்டை அதிகரித்திருக்கிறார்களே, என்ன காரணம்?

‘‘என்.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில், 2020 ஜூன் 30 நிலவரப்படி, இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு தனியார் நிறுவனங்களில் அவற்றின் நிறுவனர்களின் பங்கு மூலதன அளவு 44.33 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது 2019 ஜூன் 30 நிலவரப்படி, 33.61 சதவிகிதமாக இருந்தது. பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட் 19 பரவல் காரணமாகப் பல தனியார் நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாக விலை வீழ்ச்சி கண்டிருந்தது. இந்த நிலையில், தங்கள் நிறுவனம் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும், பங்கு விலை நிச்சயம் அதிகரிக்கும் என நம்பிக்கை கொண்டிருந்த, அதன் புரொமோட்டர்கள் இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி தங்கள் நிறுவனப் பங்குகளைக் கணிசமாக வாங்கிக் குவித்திருப்பதாகப் புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் : பங்கு மூலதனத்தை அதிகரித்த புரொமோட்டர்கள்..! - என்ன காரணம்..?

கடந்த 11 ஆண்டுக்காலத்தில் தனியார் நிறுவனங்களில் புரமோட்டர்களின் பங்கு மூலதன அதிகரிப்பு, வெளிநாட்டு நிறுவன புரமோட்டர்களின் பங்கு மூலதன அதிகரிப்பைவிட அதிகமாக உள்ளது. வெளிநாட்டு நிறுவன புரமோட்டர்களின் பங்கு மூலதனம் சுமார் 7.15 சதவிகிதமாக உள்ளது. அரசு நிறுவனங்களில் அதன் புரமோட்டர்களின் பங்கு மூலதனம் இதுவரைக்கும் இல்லாத அளவாக ஜூன் 2020-ல் 6.36 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது 2009 ஜூன் மாதத்தில் 22.71 சதவிகிதமாக இருந்தது. இதற்கு மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டமும் ஒரு காரணமாகும்.

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ நிறுவனங்களின் (எஃப்.பி.ஐ) பங்கு முதலீடு 2020 மார்ச் மாதத்தில் 21.17 சதவிகிதமாக இருந்தது. இது 2020 ஜூன் மாதத்தில் 21.05 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

என்.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு கடந்த ஜூன் மாதத்தில் 6.74 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச்சில் 6.54 சதவிகிதமாக இருந்தது. ஜூன் காலாண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்திருக்கிறது.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னிடமிருந்த சி.ஜி பவர் நிறுவனப் பங்குகளை யெஸ் பேங்க் விற்க என்ன காரணம்?

“மின் உபகரணங்கள் மற்றும் பொறியியல் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சி.ஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை யெஸ் பேங்க் விற்றிருக்கிறது. அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில், தன்னிடமிருந்து 10.12% பங்குகளை அதாவது, 6.34 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளது. இந்தப் பங்கு விற்பனையின் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு, தனது வங்கியின் கடன்களை அடைக்க யெஸ் பேங்க் திட்டமிட்டிருக்கிறது. இந்த முடிவின் காரணமாக, கடந்த வாரம் புதன்கிழமை அன்று யெஸ் பேங்க் பங்கு விலை 4.99% அதிகரித்து, 15.78 ரூபாயில் முடிவடைந்தது.”

ஷேர்லக்
ஷேர்லக்

மேன் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“கடந்த வாரம் புதன்கிழமை மேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 4% வரை அதிகரித்து வர்த்தகமானது. ஏனெனில் அன்றைய தினத்தில், இந்த நிறுவனத்துக்கு ரூ.405 கோடி மதிப்புள்ள புதிய ஏற்றுமதி ஆர்டர் கிடைத்திருக்கிறது. இதன்மூலம், இந்த நிறுவனத்தின் மொத்த ஆர்டர் சுமார் ரூ.1,800 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆர்டர்களில் 80% ஏற்றுமதி ஆகும். இந்த ஆர்டர்களை இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்குள் செயல்படுத்தி முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

எய்ச்சர் மோட்டார்ஸ் நிதிநிலை முடிவுகள் மோசமாக வந்திருக்கிறது. ஆனால், பங்கு விலை உயர்ந்திருக்கிறதே!

“எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம், ஜூன் காலாண்டு முடிவில் ரூ.55.2 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர இழப்பைப் பதிவு செய்திருக்கிறது. இது எதிர்பார்த்ததைவிட குறைவான இழப்பு. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.451.8 கோடியை இந்த நிறுவனம் லாபமாக ஈட்டியிருந்தது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 65.6% குறைந்து, ரூ.818.2 கோடியாக இருக்கிறது. கோவிட்-19 தொற்றினால் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்ததே இதற்கு முக்கியக் காரணம். இந்தக் காலாண்டின் ஆரம்பத்தில் விற்பனை வீழ்ச்சியடைந்திருந்தாலும், காலாண்டு முடிவில் தேவை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்து வர்த்தகமாகின.”

கோவிட்-19 பரபரப்பு அடங்கிய பின்னும் அலெம்பிக் பார்மா நிறுவனப் பங்கின் விலை அதிகரித்துள்ளது ஏன்?

“இந்த நிறுவனம், பூஞ்சைக் காளான் மருந்துக்கான தற்காலிக ஒப்புதல் அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து பெற்றிருக்கிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் பங்கு விலை ஏறக்குறைய 3% உயர்ந்தது.”

ஷேர்லக் : பங்கு மூலதனத்தை அதிகரித்த புரொமோட்டர்கள்..! - என்ன காரணம்..?

பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் உரிமைப் பங்கு மூலம் நிதி திரட்டுகிறதாமே?

“ஆமாம், பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1,800 கோடி நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று நடந்த இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5.58% அதிகரித்து, 275.45 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விற்பனை மீண்டும் நடக்கும் போலிருக்கே?

“பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் 3.5% நிதி நெருக்கடியைச் சமாளிக்க, பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை மூலம் சுமார் ரூ.2.1 லட்சம் கோடி அளவிலான நிதியைத் திரட்டத் திட்டமிட்டார். அதற்குப் பிறகு பல பொதுத்துறை நிறுவனங்களின் ஐ.பி.ஓ வெளியீடு இருந்தது. அதில் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் பங்கு வெளியீடும் ஒன்று. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை சலுகை விலையில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விற்பனை ‘ஆஃபர் பார் சேல்’ என்ற முறையில் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.ஆர்.சி.டி.சி-யின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்குப் பிறகு, ஐ.ஆர்.சி.டி.சி-யில் அரசாங்கத்தின் பங்கு 87.40 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.”

மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு செபி அபராதம் விதித்திருக்கிறதே?

“பி.எஸ்.இ பங்குச் சந்தை லிக்விட் ஸ்டாக் ஆப்ஷன்ஸ் பிரிவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக பாலாஜி இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு செபி அமைப்பு கடந்த புதன்கிழமை ரூ.14.10 லட்சம் அபராதம் விதித்தது. ஏப்ரல் 1, 2014 முதல் செப்டம்பர் 30, 2015 வரையிலான காலகட்டத்தில் இந்த வர்த்தகப் பிரிவில் சில நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து செபி அமைப்பு விசாரணை மேற்கொண்டது.

அந்தக் காலகட்டத்தில், செயல்படுத்தப்பட்ட அனைத்து வர்த்தகங்களில் 81.38% வர்த்தகங்கள் (2,91,643 வர்த்தகங்கள்) உண்மையான வர்த்தகங்கள் இல்லை என்பதை செபி கண்டு பிடித்திருக்கிறது. இதில் பாலாஜி இன்ஃப்ரா சொல்யூஷன் நிறுவனமும் ஒன்றாகும்.”

கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு அதிகரித்திருக்கிறதே?

“அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, சீனா மற்றும் அமெரிக்க இடையேயான பொருளாதாரப் போர், கோவிட் பரவல் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவருவதால், கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.921 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு அளவு, இதற்கு முந்தைய மாதத்தைவிட 86% அதிகமாகும். அதாவது, ஜூன் மாதத்தில் கோல்டு இ.டி.எஃப் முதலீட்டு அளவு ரூ.494 கோடியாக இருந்தது. நடப்பு வருடத்தின் முதல் ஏழு மாதத்தில், கோல்டு இ.டி.எஃப்களில் மொத்தம் ரூ.4,452 கோடியாக இருக்கிறது.

கடந்த ஜூலை மாத இறுதியில், கோல்டு இ.டி.எஃப் மூலம் நிர்வகித்து வரும் சொத்துமதிப்பு 19% அதிகரித்து, ரூ.12,941 கோடி ரூபாயாக இருக்கிறது. ஜூன் மாத இறுதியில் இது ரூ.10,857 கோடி ரூபாயாக இருந்தது” என்றவர், ‘‘சந்தை இன்று கொஞ்சம் இறங்கியிருக்கிறது. இதைப் பார்த்து பயமோ, பதற்றமோ வேண்டாம். நிதானமாக யோசித்து முதலீட்டு முடிவை எடுங்கள்’’ என்றவர், வீட்டுக்குப் புறப்பட்டார்.

பங்குச் சந்தை ரசியங்கள்!

ஷேர்லக் : பங்கு மூலதனத்தை அதிகரித்த புரொமோட்டர்கள்..! - என்ன காரணம்..?

‘பங்குச் சந்தை ரசியங்கள் - பால பாடம்’ என்னும் ஆன்லைன் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 6 - 7 மணிக்கு நாணயம் விகடன் நடத்த உள்ளது. பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தக ஆலோசகர் தி.ரா.அருள்ராஜன் (முதன்மை செயல் அதிகாரி, Ectra.in) இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்க உள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/3ap5mhZ

நாணயம் விகடன் யூடியூப் சப்ஸ்க்ரைப் செய்துவிட்டீர்களா?

ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் தொடர்பான விஷயங்களில் நாணயம் விகடன் உங்களுக்கு ஒரு நண்பன் போல வழிகாட்டி வருகிறது. இந்த வழிகாட்டலின் இன்னொரு அத்தியாயமாக நாணயம் விகடன் யூடியூப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சப்ஸ்க்ரைப் செய்ய இந்த லிங்க்கை (https://bit.ly/2CNmIJg) க்ளிக் செய்யுங்கள். நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேலுவின் பேட்டியைப் பார்க்க: https://bit.ly/2E9THYR ; வீட்டுக் கடன் பற்றி சொக்கலிங்கம் பழனியப்பனின் பேச்சைக் கேட்க: https://bit.ly/31deqUa ; மில்க்கிமிஸ்ட் சதீஷ்குமாரின் பேட்டியைப் பார்க்க: https://bit.ly/3l47jFy ; தோனியின் ரிட்டயர்ட்மென்ட் ரகசியங்கள் பற்றி சுரேஷ் பார்த்தசாரதியின் பேச்சைக் கேட்க: https://youtu.be/x25B9xTV7cM என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.