Published:Updated:

ஷேர்லக் : இலக்கு விலையை அதிகரித்த தரகு நிறுவனங்கள்..! - எந்தெந்த பங்குகள்..?

SHARE LUCK

பிரீமியம் ஸ்டோரி
ரியாக மாலை 4.00 மணிக்கு நம் அலுவலகம் வந்து சேர்ந்தார் ஷேர்லக். எப்போது வேண்டு மானாலும் மழை வரலாம் என்பதால், கையில் குடை, மழை கோட் சகிதம் வந்திருந்தார். அவருக்கு சூடான ஏலக்காய் டீ தந்தோம். கொஞ்சம் குடித்து கதகதப்பானவர், நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

பர்கர் கிங் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது?

“இந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ) மூலம் சுமார் 13.5 கோடி பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது. பங்கு ஒன்றுக்கு வெளியீட்டு விலையாக 59-60 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.810 கோடி திரட்டுகிறது. பங்கு வெளியீடு தொடங்கிய முதல் நாளில், முதல் இரண்டு மணிக்குள்ளாகவே விற்பனைக்கு உள்ள பங்குகளை விடவும் அதிகமான பங்குகளைக் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப் பித்தார்கள். இரண்டாம் நாள் முடிவில் 9.4 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தன. சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 38 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தன. நாளை ஒரு நாள் இந்தப் பங்கைப் பெற விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 14-ம் தேதி அன்று இந்தப் பங்கு, சந்தையில் வர்த்தகமாகத் தொடங்கும். முதல் நாளிலேயே பங்கு விலை கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது. பார்ப்போம், என்ன நடக்கிறதென்று.”

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“இந்த நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 21% அதிகரித்து 49,650 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 41,124 வாகனங்களாக இருந்தது. விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்தததை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்து வர்த்தகமாகிறது.”

சில பங்குகளுக்கு தரகு நிறுவனங்கள் இலக்கு விலையை அதிகரித்திருக்கின்றனவே?

“கடந்த வாரத்தில் வெளியான ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்கள், எதிர்பார்த்ததைவிட மோசமாக இல்லை. பல நிறுவனங்களின் நவம்பர் மாத விற்பனை நல்லமுறையில் இருந்தது. இதனால், பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமானது. இதைத் தொடர்ந்து சில நிறுவனப் பங்குகள் இரட்டை இலக்கத்தில் வருமானத்தைக் கொடுக்கும் என பங்குத் தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. அந்தப் பங்குகளுக்கான இலக்கு விலையையும் அதிகரித்துள்ளன.அந்த வகையில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி நிறுவனப் பங்கின் இலக்கு விலையை 430 ரூபாயா கவும், கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் பங்கு இலக்கு விலையை 406 ரூபாயாகவும், இண்டஸ்இண்ட் பேங்க் பங்கு இலக்கு விலையை 1,000 ரூபாயாகவும், ஹெ.சி.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் பங்கு இலக்கு விலையை 770 ரூபாயாகவும், இன்ஃபோசிஸ் பங்கு இலக்கு விலையை 1,350 ரூபாயாகவும், இந்தியன் ஹோட்டல் கம்பெனி பங்கு இலக்கு விலையை 155 ரூபா யாகவும், டி.சி.ஐ எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையை 1,054 ரூபாயாகவும் ஷேர்கான் தரகு நிறுவனம் அதிகரித்துள்ளது.

லாரஸ் லேப்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை 400 ரூபாயாக டெலாய்ட் கேப்பிடல் தரகு நிறுவனமும், முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கின் இலக்கு விலையை 1,364 ரூபாயாக பிரபுதாஸ் லீலாதர் தரகு நிறுவனம் அதிகரித்துள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனப் பங்கின் இலக்கு விலையை 1,040 ரூபாயாக ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் நிர்ணயித்துள்ளது.’’

ஆன்லைன் சேவையில் நேர்ந்த சில குளறுபடிகளால், இனி புதிதாக கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது!

விரைவில் வேகமாக வளர்ச்சி காணும் துறைகள் எவையாக இருக்கும்?

“கடந்த இரு காலாண்டுகளாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி கணிசமாக வீழ்ச்சி கண்டது. 2020 ஜூன் காலாண்டில் ஜி.டி.பி 23.9% வீழ்ச்சி கண்டது. செப்டம்பரில் இந்த வீழ்ச்சி 7.5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இதனால் நமது பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மேம்பட ஆரம்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நுகர்வோர் பொருள்கள், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், உலோகங்கள், உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருள்கள், ரியல் எஸ்டேட், வாகனம், மூலதனத் தளவாடங்கள், உற்பத்தி ஆகிய 10 துறைகள் வேகமான வளர்ச்சி பெறும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.’’

ஷேர்லக்
ஷேர்லக்

முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு பல பங்குகள் நல்ல ஆதாயத்தை அளித்திருக்கின்றனவே?

“கோவிட் பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோ அதிக இறக்கத்தைக் கண்டது. இப்போது அதன் மதிப்பு அதிகரித்து ரூ.14,000 கோடியைத் தாண்டியுள்ளது. டைட்டன், ராலிஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ், கிரிசில், ஜூபிளியன்ட் லைஃப், லூபின் ஆகிய பங்குகளை அவற்றின் கவர்ச்சிகரமான மதிப்பீட்டால் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்திருந்தார். இந்த ஆறு பங்குகளில் மட்டும் அவர் ரூ.10,000 கோடிக்குமேல் முதலீடு செய்திருந்தார். கடந்த ஓராண்டு காலத்தில் எஸ்கார்ட்ஸ் பங்கு விலை சுமார் 120 சதவிகிதத் துக்குமேல் ஏற்றம் கண்டிருக்கிறது. அடுத்த இடங்களில் ராலிஸ் இந்தியா (65%), ஜூபிளியன்ட் லைஃப் சயின்ஸ் (30%), லூபின் (16%), டைட்டன் (15%), கிரிசில் (5%) ஆகியவை உள்ளன.’’

மூன்று வர்த்தக தினங்களில் டாடா கெமிக்கல்ஸ் பங்கு விலை 20% அதிகரிக்க என்ன காரணம்?

“டாடா குழுமத்தின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. மொத்தமாக 188 லட்சம் பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து டாடா கெமிக்கல்ஸ் பங்கு விலை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் சுமார் 20% விலை ஏறியிருக்கிறது.’’

பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்கு விலை ஏன் திடீரென உயர்ந்தது?

“பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த டிசம்பர் 2-ம் தேதி 5.45% அதிகரித்து, 221.45 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஏனெனில், அன்றைய தினத்தில் சராசரியாக பங்கு ஒன்றும் 215 ரூபாய் என 1,647 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.6 கோடி பங்குகள் (பங்கு மூலதனத்தில் 4.12%) மொத்தமாக வாங்கப் பட்டிருக்கிறது. இதை அடுத்து இதன் பங்கு விலை ஏற்றமடைந்தது.”

பர்கர் கிங் ஐ.பி.ஓ-வுக்கு இரண்டாம் நாள் முடிவில் 9.4 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தன. சிறு முலீட்டாளர்கள் பிரிவில் 38 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தன!

அதானி போர்ட்ஸ் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த டிசம்பர் 2-ம் தேதி அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நவம்பர் மாத செயல்பாடு குறித்து அறிவிப்புகள் வெளி யானது. இதில் நிறுவனத்தின் சரக்கு போக்கு வளர்ச்சி வருடாந்தர அடிப்படையில் 10% அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்டி ருக்கிறது. அது மட்டுமல்லாமல் செப்டம்பர் மாத காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 31.57% அதிகரித்து, 1,393.69 கோடி ரூபாயாக இருப்பதையும் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் பங்கு விலை 2.12% வரை அதிகரித்து, 432.75 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைய தினத்தில் 52 வார அதிகபட்ச விலையான 435.10 ரூபாயையும் தொட்டிருக்கிறது.

ஃபைசர் நிறுவனத்தின் பங்கு விலை ஏன் உயர்ந்தது?

“ஃபைசர்-பயோ என்டெக் கோவிட் -19 தடுப்பூசியை இங்கிலாந்து அரசாங்கம் அங்கீகரித்ததாக தகவல்கள் வெளிவந்த பின்னர், டிசம்பர் 2-ம் தேதி மும்பை பங்குச் சந்தையில் இன்ட்ராடே வர்த்தகத்தில் 5 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்தது.’’

டைட்டன், ராலிஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ், கிரிசில், ஜூபிளியன்ட் லைஃப், லூபின் ஆகிய ஆறு பங்குகளில் மட்டும் அவர் ரூ.10,000 கோடிக்குமேல் முதலீடு செய்திருந்தார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை இன்று மட்டுமே 2.13% குறைந்ததற்கு என்ன காரணம்?

‘‘இந்த வங்கியின் ஆன்லைன் சேவையில் நேர்ந்த சில குளறுபடிகள் தொடர்பாக புகார் எழுந்ததால், இனி புதிதாக கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி இந்த வங்கிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

ஆன்லைன் மூலம் இந்த வங்கியின் வருமானத்தை அதிகரிக்க உருவாக்கப்பட்ட டிஜிட்டல் 2.0 திட்டத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்கும்படியும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவல் மீடியாக்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த வங்கியின் பங்கு விலை இன்று 2.13% குறைந்தது. வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்பை இன்னும் பலப்படுத்தப்போவதாக இந்த வங்கியின் புதிய சி.இ.ஓ சசிதர் ஜகதீசன் தெரிவித்திருக்கிறார்’’ என்றவரிடம், 16-ம் ஆண்டு சிறப்பிதழின் அட்டையைக் காட்டினோம்.

‘‘மக்கள் பார்த்துப் பல மாதங்களாகிவிட்ட 2,000 ரூபாயை வைத்து நீர் செய்திருக்கும் அட்டை அமர்க்களம். இந்த இதழுக்காக வாசகர்கள் மட்டுமல்ல, நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’’ என்றவர், வெளியே மழை பெய்யத் தொடங்கியதைக் கவனித்து, மழைக் கோட்டை மாட்டிக்கொண்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

கோடிகளில் வருமானம்... நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்!

நாணயம் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து வழங்கும் ஏற்றுமதி - இறக்குமதி தொழில்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி ‘கோடிகளில் வருமானம்... நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்!’

இந்தப் பயிற்சியை வழங்குபவர்கள் கிஷோர் - இன்பா தம்பதி. டிசம்பர் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 முதல் 6 மணி வரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.300. இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் பதிவு செய்யவும்: https://bit.ly/2Japhbr

ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்!

ஷேர்லக் : இலக்கு விலையை அதிகரித்த தரகு நிறுவனங்கள்..! - எந்தெந்த பங்குகள்..?

நாணயம் விகடன், ‘ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது. ஆயுள் அதிகரிப்பு, மருத்துவச் செலவுகள் உயர்வு, தனிக் குடித்தனங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவை ஓய்வுக்கால செலவுகளைக் கணிசமாக அதிகரித்துள்ளன. ஓய்வுக்கால செலவுகளுக்கு என ஒரு தொகுப்பு நிதியை உருவாக்குவது அவசியமாக உள்ளது. அதற்கு வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் ‘ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்.’ நிதி ஆலோசகரும் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ் (Holisticinvestment.in) நிறுவனத்தின் இணை நிறுவனருமான கே.ராமலிங்கம் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சி டிசம்பர் 12, காலை10.30 - 12 மணி வரை. கட்டணம் ரூ.350. முன்பதிவு செய்ய https://events.vikatan.com/164-a-to-z-retirement-plan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு