Published:Updated:

ஷேர்லக் : அமெரிக்கப் பங்குகளில் அதிகரிக்கும் இந்திய இளைஞர்களின் முதலீடு! - உச்சத்தைத் தொட்ட நிஃப்டி

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

கடந்த எட்டு மாதங்களில் 141 பங்கு விலை 100 - 773% வரையும், 300 பங்குகள் 50% வரையும் ஏற்றம் கண்டுள்ளன!

டந்த வியாழக்கிழமை அன்று காலை நம் செல்போனுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பியிருந்தார் ஷேர்லக். ‘‘நிவர் புயல் நேற்று இரவே கரை கடந்துவிட்டாலும், இன்று வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை. எனவே, உமது கேள்விகளை எனக்கு ஒரு மணிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.

சரியாக 4.30-க்கு போன் செய்யவும். உம் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுகிறேன்’’ என்று சொல்லியிருந்தார். அன்று நாணயம் விகடன் எடிட்டோரியல் டீமும் வீட்டிலிருந்து பணிபுரிந்ததால், பகல் 1 மணிக்கு எல்லாக் கேள்விகளையும் அனுப்பி வைத்து, அவர் சொன்ன நேரத்துக்குப் போன் செய்தோம். இனி நாம் அவரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

இனிவரும் நாள்களில் வங்கித்துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் பெறும் என்கிற தரகு நிறுவனங்களின் கணிப்பு உண்மையா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘கடந்த மார்ச் 23-ம் தேதியின் குறைந்த நிலையிலிருந்து அக்டோபர் மாதம் வரை நிஃப்டி வங்கி குறியீடு வெறும் 41% மட்டுமே உயர்ந்தது. அதே நேரத்தில், நிஃப்டி 50 மற்றும் மெட்டல் தலா 53 சதவிகிதத்தையும், ஐ.டி 87 சதவிகிதத்தையும், பார்மா 75 சதவிகிதத்தையும் வழங்கியது. ஆனால், நடப்பு மாதத்தில் வங்கித்துறை சிறப்பாகச் செயல்பட்டு 30% வரை அதிகரித்திருக்கிறது. இதற்கு இந்தியத் தனியார் வங்கித் துறையைப் பெரிய அளவில் புதுப்பிக்க இந்திய ரிசர்வ் வங்கியின் செயற்குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாள்களில் வங்கித்துறை சார்ந்த பங்குகள் லாபகரமானதாக இருக்கும் என மோதிலால் ஆஸ்வால் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் தரகு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. மேலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகள் சரியான திசையில் இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகளால் வங்கித்துறை சார்ந்த பங்குகள் நீண்டகால அடிப்படையில் ஏற்றத்தில் வர்த்தகமாக கூடும்.

ஷேர்லக்
ஷேர்லக்

அதன் அடிப்படையில், கோட்டக் மஹிந்திரா பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் பேங்க், எம் அண்டு எம் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் எல் அண்டு டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், பந்தன் பேங்க், டி.சி.பி என 12 நிறுவனப் பங்குகள் கவனிக்கத் தகுந்த வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜூன் மாதத்துக்குப் பிறகு, சில பங்குகள் 100%-க்கும் அதிக வருமானத்தைக் கொடுத்து ஆச்சர்யம் அளித்திருக்கிறதே!

‘‘கொரோனா நோய் பரவலைத் தடுக்கவும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவும் அரசாங்கம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளால் சில பங்குகள் கடந்த ஜூன் மாத வருமானத்திலிருந்து 100 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தைத் தந்துள்ளன. குறிப்பாக, பையோஃபில் கெமிக்கல்ஸ் அண்டு பார்மா பங்கின் விலை ஜூன் 30-ம் தேதி 12.95 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது. 1,211 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து தற்போது (நவம்பர் 26) 208.35 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

இதேபோல, சி.ஜி.பவர் அண்டு இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 295 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து 39.90 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. மெக்லியோட் ரஸ்ஸெல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 236% அதிகரித்து 23.75 ரூபாய்க்கும், கெல்டான் டெக் சொல்யூஷன்ஸ் லிமிடெட் பங்கு விலை 218% அதிகரித்து 52.50 ரூபாய்க்கும், சுபெக்ஸ் லிமிடெட் பங்கு விலை 134% அதிகரித்து 18.45 ரூபாய்க்கும், பாரத் இம்முனோலாஜிக்கல்ஸ் அண்டு பையோ லாஜிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 122% விலை அதிகரித்து, 34.20 ரூபாய்க்கும். எவரெஸ்ட் கன்டோ சிலிண்டர் லிமிடெட் பங்கு விலை 112% அதிகரித்து 45.30 ரூபாய்க்கும், காயத்ரி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 110% அதிகரித்து 30.75 ரூபாய்க்கும் மற்றும் விகாஸ் மல்ட்டிகார்ப் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 105% அதிகரித்து 8.90 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது.’’

ஷேர்லக்
ஷேர்லக்

ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா நிறுவனத்தின் பங்கு விலை சரிவுக்கு என்ன காரணம்?

‘‘கடந்த நவம்பர் 24-ம் தேதி ஜி.எம்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை குறைந்து வர்த்தகமானது. இந்த நிறுவனம் செப்கோ எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு புராஜெக்ட் கட்டணம் மற்றும் செலவுகளுக்கான 1,092 கோடி ரூபாயை செலுத்த வேண்டி இருக்கிறது. இதை உடனே கொடுக்கச் சொல்லி கேட்டிருப்பதால், பங்கின் விலை சரிந்திருக்கிறது.’’

நிஃப்டியும் சென்செக்ஸ் உச்சத்தைத் தொட்டிருப்பது மகிழ்ச்சியான செய்திதானே!

‘‘கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு அதாவது, மார்ச் 24-ம் தேதி வீழ்ச்சிக்குப் பிறகு நிஃப்டி 73% வரை ஏற்றம் கண்டிருக்கிறது. சென்செக்ஸ் 44499.62 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதன் காரணமாகக் கடந்த எட்டு மாதத்துக்குள்ளாக 141 பங்கு விலை 100-773% வரை ஏற்றம் கண்டுள்ளன. 300 பங்குகளுக்கு மேலாக 50% வரை ஏற்றம் கண்டுள்ளன.

குறிப்பாக, நிஃப்டி மிட்கேப் குறியீடு 75 சதவிகிதத்துக்கும் மேலாகவும், ஸ்மால் கேப் 87 சதவிகிதத்துக்கு மேலாகவும் ஏற்றம் கண்டுள்ளன. ஐ.டி இண்டெக்ஸ் 97% உயர்வுடன் இருக்கிறது. ஆட்டோ, வங்கி, எரிசக்தி, பார்மா, இன்ஃப்ரா மற்றும் மெட்டல் ஆகிய துறைகள் எட்டு மாதங்களில் 63-90% ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. அதானி கிரீன் எனெர்ஜி, டிக்ஸான் டெக்னாலெஜீஸ், வோடாஃபோன் ஐடியா, அரபிந்தோ பார்மா, அசோக் லேலண்டு, பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து அமெரிக்கப் பங்குகளில் முதலீடு அதிகரித்து வருகிறதே?

‘‘அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் உலக அளவில் பரந்து விரிந்துள்ளன. இதனால், இந்த நிறுவனங்களின் வருமான வளர்ச்சி காலாண்டுக்குக் காலாண்டு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதனால், அவற்றின் நிகர லாபம் கணிசமாக உயர்ந்து வருகின்றன. அந்த வகையில், அந்த நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்து வருவதால், அவற்றில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் அமெரிக்க டெக் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது.

நடப்பு 2020-ம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்படி அமெரிக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய புதிதாக ஒரு லட்சத்துக்கும் அதிகமாக டீமேட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஃபாங்க் (FAANG) என்று அழைக்கப்படும் ஃபேஸ்புக், அமேசான், ஆப்பிள், நெட்ஃபிளிக்ஸ், ஆல்பபெட் (கூகுள்) ஆகிய நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது. இந்தப் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனப் பங்குகளும் உள்ளன. அமெரிக்க பங்குகளில் இந்தியாவிலிருந்தே முதலீடு செய்யும் வசதியை பல முன்னணி பங்கு தரகு நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.’’

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடன் பத்திர வெளியீட்டின் மூலம் நிதி திரட்டுகிறதாமே?

‘‘யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கடன் பத்திர வெளியீட்டின் மூலம் 1,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதன் காரணமாகக் கடந்த நவம்பர் 25-ம் தேதி இதன் பங்கு விலை 5% வரை அதிகரித்து வர்த்தகமானது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிடும் கடன் பத்திரம் ஒன்றின் விலை 10 லட்சம் ரூபாய். இதற்கு வழங்கப்படும் வட்டி 7.18%.’’

ஏ.ஆர்.எஸ்.எஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது எதனால்?

‘‘மேகாலயாவின் என்.ஹெச்.40 நெடுஞ்சாலையின் இரு பிரிவு சாலைகளை அமைப்பதற்கான 210 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை நேஷனல் ஹைவேஸ் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலெப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம், ஏ.ஆர்.எஸ்.எஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது. இதை இந்நிறுவனம் அறிவித்ததை அடுத்து, கடந்த நவம்பர் 25-ம் தேதி பங்கு விலை 9% வரை அதிகரித்து, 15.45 ரூபாய்க்கு வர்த்தகமானது.’’

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு எட்டு லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறதே!

‘‘கடந்த வாரம் புதன்கிழமை அன்று, ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்கு விலை புதிய உச்சத்தைப் பதிவு செய்து 1,464 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதன் காரணமாக இந்த வங்கியின் சந்தை மதிப்பு 8.02 டிரில்லியன் ரூபாயாக அதிகரித் துள்ளது. இந்த வங்கியின் சந்தை மதிப்பு எட்டு டிரில்லியன் ரூபாயைக் கடப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் சந்தை மதிப்பில் எட்டு டிரில்லியன் ரூபாயைக் கடந்திருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.13.17 டிரில்லியன்) மற்றும் டி.சி.எஸ் (ரூ.10.13 டிரில்லியன்) நிறுவனங்களுக்கு அடுத்ததாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் பட்டியலில் இணைந்திருக்கிறது.’’

லக்ஷ்மி விலாஸ் பங்கு விலை குறித்து...

‘‘கடந்த நவமப்ர் 16-ம் தேதி மாலை, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மீது ரிசர்வ் வங்கி வர்த்தக தடை விதித்தது. அதற்கு அடுத்த நாளே இந்த வங்கியின் பங்கு விலை ஒரே நாளில் 20% வரை குறைந்து வர்த்தகமானது. படிப்படியாக குறைந்து கடந்த ஏழு வர்த்தக தினத்தில் 55% இறக்கத்தைச் சந்தித்துள்ளது. நவம்பர் 16-ம் தேதி 15.55 ரூபாயாக இருந்த இதன் பங்கு விலை தற்போது 7.65 ரூபாயாக உள்ளது.’’

பங்குச் சந்தை புதனன்று இறங்க என்ன காரணம்?

‘‘கடந்த புதன்கிழமை திடீரென புதிய உச்சத்துக்குச் சென்ற பங்குச் சந்தை அதன் பிறகு இறங்கக் காரணம், பிராபிட் புக்கிங்தான். சிறு முதலீட்டாளர்கள் தொடங்கி பெரிய முதலீட்டாளர்கள் வரை பலரும் லாபத்தை வெளியே எடுத்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சுமார் 4,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று லாபம் பார்த்துள்ளன. இதுதான் சந்தை இறக்கத்துக்குக் காரணம்’’ என்றவரிடம், ‘‘அடுத்த வாரம் நாணயம் விகடனின் 16-ம் ஆண்டு சிறப்பிதழாக வருகிறது’’ என்றோம். ‘‘சூப்பர், தமிழ் மக்களுக்கு உன் சேவை என்றும் தேவை’’ என்று வாழ்த்தி், போனை வைத்தார்.

ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்

ஷேர்லக் : அமெரிக்கப் பங்குகளில் அதிகரிக்கும் இந்திய இளைஞர்களின் முதலீடு! - உச்சத்தைத் தொட்ட நிஃப்டி

நாணயம் விகடன், ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது. ஆயுள் அதிகரிப்பு, மருத்துவச் செலவுகள் உயர்வு, தனிக் குடித்தனங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற வற்றால் ஓய்வுக்கால செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஓய்வுக்கால செலவுகளுக்கு எனத் தனியே ஒரு தொகுப்பு நிதியை உருவாக்குவது அவசியமாக உள்ளது. அதற்கு வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் - ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்.

நிதி ஆலோசகரும் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் (Holisticinvestment.in), இணை நிறுவனர் கே.ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சி டிசம்பர் 12, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. கட்டணம் ரூ.350 ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய: https://bit.ly/3nhVFHC

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஷேர்லக் : அமெரிக்கப் பங்குகளில் அதிகரிக்கும் இந்திய இளைஞர்களின் முதலீடு! - உச்சத்தைத் தொட்ட நிஃப்டி

நாணயம் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து, ‘தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!’ என்கிற தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது. தங்க நகை வாங்கும் போது பல விஷயங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். பின்னர், அதை அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும்போது சிக்கலை சந்திக்கிறோம். இதைத் தவிர்க்க தங்க நகை வாங்கும்போது பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதை விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

ஈரோட்டிலுள்ள ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டர் (Gjttc.in)–ன் இயக்குநர் கே.சுவாமிநாதன் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். நவம்பர் 30, 2020 திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது ஒரு கட்டணமில்லா கருத்தரங்கு. இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய… https://bit.ly/3pDO48b

எக்காலத்திலும் பலன் தரும் அஸெட் அலோகேஷன்..!

நாணயம் விகடன்,் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, ‘எக்காலத்திலும் பலன் தரும் அஸெட் அலோகேஷன்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன. இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஸ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் – ரீடெய்ல் சேல்ஸ் எம்.கே.பாலாஜி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி டிசம்பர் 6-ம் தேதி காலை 10.30 - 11.30 மணிக்கு நடைபெறும். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

ஸ்ரீகாந்த் மீனாட்சி, பாலாஜி
ஸ்ரீகாந்த் மீனாட்சி, பாலாஜி

சிட் ஃபண்ட் A to Z - முழுமையான வழிகாட்டி

நாணயம் விகடன் & தமிழ்நாடு சிட் ஃபண்ட் கம்பெனீஸ் அசோசியேஷன் நடத்தும் ‘சிட் ஃபண்ட் A to Z - முழுமையான வழிகாட்டி’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன. இதில், நிதி நிபுணர் சோம.வள்ளியப்பன், ஏ.சிற்றரசு (பொதுச் செயலாளர், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம், நிர்வாக இயக்குநர் – குறிஞ்சி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை) மற்றும் எம். கிருஷ்ணபாரதி (பிரசிடென்ட், தமிழ்நாடு சிட் பண்ட் கம்பெனீஸ் அசோசியேஷன், நிர்வாக இயக்குநர் – சிம்மவாஹினி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், பொள்ளாச்சி) ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 - 11.30 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/33fGW8h