நடப்பு
Published:Updated:

ஷேர்லக் : வேகம் எடுக்கும் ஐ.டி துறை பங்குகள்..! - மேம்படும் காலாண்டு நிதிநிலை முடிவுகள்...

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

SHARE LUCK

இன்று அதிகாலையிலேயே ஷேர்லக்கிடமிருந்து “பொங்கல் பண்டிகைக்காக கிராமத்துக்கு வந்து விட்டேன்; பண்ணை வீட்டில் மாட்டுப் பொங்கல் கொண்டாட முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதால், கேள்விகளைக் கொஞ்சம் சீக்கிரமாகவே அனுப்பி வையுங்கள்” என சிக்னலில் நமக்கு செய்தி அனுப்பியிருந்தார் (வாட்ஸ் அப்பில் இருக்கும்போதே சிக்னலுக்கும் சட்டென மாறி விட்டாரே!). நாம் கேள்விகளை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்க, சந்தை முடிந்தவுடன் நமக்கு பதிலை அனுப்பி வைத்தார் ஷேர்லக்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க ஆரம்பித் திருக்கின்றனவே?

“டிசம்பர் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்து கொண்டிருப்பதுதான் முக்கியமான காரணம். 2020 அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான டி.சி.எஸ்–ன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7.17% அதிகரித்து, ரூ.8,727 கோடியாக உள்ளது. இது முந்தைய ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ரூ.7,504 கோடியாக இருந்தது. இதை அடுத்து டி.சி.எஸ் பங்கின் விலை, அதன் காலாண்டு நிதிநிலை முடிவு வெளியான அன்று ஒரே நாளில் 3.5% அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பங்கின் விலை புதிய 52 வார உச்ச விலையை எட்டியிருக்கிறது.

மேலும், டி.சி.எஸ் நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ரூ.12 லட்சம் கோடியை எட்டியது. கடந்த 2020-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 70% அதிகரித்துள்ளது.

இது ஒருபக்கமிருக்க, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவும் வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி மூன்றாம் காலாண்டில் கடந்த ஆண்டில் இதே காலத்தைவிட 6.6% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதேபோல, விப்ரோ நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 20.8% அதிகரித்திருக்கிறது.

அன்றைய தினம் இதர ஐ.டி நிறுவனப் பங்குகளான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ, மைண்ட் ட்ரீ, டெக் மஹிந்திரா ஆகியவையும் 52 வார உச்ச விலையை எட்டியுள்ளன. இதனால் அன்றைய தினம் நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் குறியீடு 2.5% ஏற்றம் கண்டுள்ளது.

பெரும்பாலான ஐ.டி நிறுவனப் பங்குகள் ஓவர்பாட் (overbought) நிலையில் உள்ளன. எனவே, ஏற்கெனவே முதலீடு செய்திருப் பவர்கள் இந்தப் பங்குகளின் விலை இன்னும் ஏற்றம் காணும்போது பிராஃபிட் புக்கிங் அதாவது, லாபத்தை வெளியே எடுக்கலாம் என்பது அனலிஸ்ட்டுகளின் பரிந்துரையாக இருக்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வெகுவாகக் குறைந்திருக் கின்றனவே..!

“கொரோனா ஊரடங்கு காரண மாக இந்தியப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையாலும், பங்குச் சந்தை முதலீட்டின் மீதிருந்த அச்சத்தாலும் 2020-ம் ஆண்டின் முதல் பாதியில், ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் குறைத்துக் கொண்டனர்.

இதன் காரணமாக 2020-ல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் மேற்கொண்ட நிகர முதலீடு 97% குறைந்து, 2,142 கோடி ரூபாயாக இருந்தது.

ஜனவரி 2019-ல் சென்செக்ஸ் 40723 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த சென்செக்ஸ், மார்ச் மாதத்தில் 11225 புள்ளிகள் குறைந்து, 29468 புள்ளிகளாகச் சரிந்தது. இருப்பினும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம், ஊரடங்கு தளர்வு காரணமாகத் தொழில்துறையின் இயக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த ஒன்பது மாதங்களில் 49500 புள்ளிகளாக ஏற்றம் கண்டது. முதலீட்டின் மீது நிச்சயமற்ற தன்மை காணப்பட்டாலும், சென்செக்ஸ் ஏற்றத்தின் காரணமாகக் கடந்த டிசம்பர் மாதத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளின் சொத்து மதிப்பு 14% அதிகரித்து, ரூ.9.06 லட்சம் கோடியாக உள்ளது.’’

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் சில்லறை விற்பனையில் தொடர்ச்சியான உயர்வைக் கண்டுள்ளது. இந்தத் தகவல் வெளியானதும், டாடா மோட்டார்ஸ் பங்கு விலை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகபட்சம் 13.36% வரை ஏற்றம் கண்டது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வசதிகளைப் பயன்படுத்தி, டெஸ்லாவுடன் கூட்டு சேர்ந்து தனது வாகனங்களைத் தயாரிக்கவும் விற்கவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக் கிறது. இதுவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றத்துக்கு காரணமாகும்.

டிசம்பர் காலாண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவரின் சில்லறை விற்பனை 1.28 லட்சம் வாகனங்களாக இருந்தது, முந்தைய காலாண்டில் விற்கப்பட்ட 1.13 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 13.1% வளர்ச்சியாகும்.

இந்த நிறுவனத்தின் ஜனவரி 2020-ல் கொரோனா நோய் பரவலுக்கு முந்தைய பங்கு விலை உயர்வைவிட, தற்போதைய வர்த்தக விலையானது சுமார் 20% அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி காணப்பட்ட பங்கின் குறைந்தபட்ச விலையிலிருந்து தற்போது 270% வரை விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.”

கெயில் நிறுவனம், அதன் பங்குகளைத் திரும்பப் பெற திட்டமிட்டிருக் கிறதாமே?

“பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (இந்தியா) நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் ஜனவரி 15-ம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான (பைபேக்) நடவடிக்கைகள் குறித்தும், 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியானதை யடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பங்கு விலை 6% வரை அதிகரித்து வர்த்தகமானது. பங்குகளைத் திரும்பப் பெறு வதற்கு, நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கினால், விரைவில் பைபேக் ஆஃபரை கெயில் நிறுவனம் வெளியிட வாய்ப்பிருக்கிறது.”

சன்டெக் ரியால்டி பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனங் களில் ஒன்று சன்டெக் ரியால்டி. இதன் பங்கு விலை கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்க வர்த்தகத்தில் அதிகரித்து 52 வார உயர்வு விலையான 451 ரூபாயை எட்டியது. நிறுவனத்தின் வீடு களுக்குத் தேவை அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் முன்பதிவுகளில் 75% வளர்ச்சியைக் கண்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.”

இண்டிகோ பெயின்ட்ஸ் புதிய பங்கு வெளியீடு பற்றி...

“இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனம் புதிய பங்குகளை வெளியிட ஐ.பி.ஓ செபியிடம் ஏற்கெனவே அனுமதி பெற்றது. ஜனவரி 20-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் 1,000 கோடி ரூபாயைத் திரட்ட இண்டிகோ பெயின்ட்ஸ் முடிவு செய்துள்ளது. 300 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளை வெளியிடுகிறது. மேலும், ஆஃபர் ஃபார் சேல் முறையில் பங்குச் சந்தையில் 58.4 லட்சம் பங்குகளை விற்பனை செய்கிறது. பங்கு விலைப் பட்டை 1,480 - 1,500 ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே பங்குதாரர்களாக உள்ள சீக்வோயா கேப்பிடல், எஸ்.சி.ஐ இன்வெஸ்ட் மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும், ஹேமந்த் ஜலான் ஆகியோரும் தங்களுடைய பங்குகளை இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் விற்பனை செய்யவுள்ளனர்.

அதன் அடிப்படையில் சீக்வோயா தற்போது வைத்திருக்கும் 85.34 லட்சம் பங்குகளில் 20 லட்சம் பங்குகளையும், எஸ்.சி.ஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ் தற்போது வைத்திருக்கும் 92.08 லட்சத்திலிருந்து 21.65 லட்சம் பங்குகளையும், ஹேமந்த் ஜலான் தான் வைத்திருக்கும் 1.02 கோடி பங்குகளிலிருந்து 16.7 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளனர்.”

ஐ.ஆர்.எஃப்.சி ஐ.பி.ஓ வெளியிடுவது குறித்து...

“பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எஃப்.சி) நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 4,634 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. 18-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிடுகிறது.

2021-ம் ஆண்டின் முதல் ஐ.பி.ஓ இதுவாகும். பங்கு விண்ணப்பத்துக்கான கடைசித் தேதி ஜனவரி 20. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் வெளியிடப்படும் 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ.25-26. குறைந்தபட்சம் 575 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்சம் அதன் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பங்கு வெளியீட்டில் மொத்தம் 178.20 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 59.43 கோடி பங்குகளும், ஆஃபர் ஃபார் சேல் விற்பனையின் மூலம் 118.80 கோடி பங்குகளும் வெளியிடப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் 50% தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சிறு முதலீட்டாளர்களுக்கும், 15% நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கும் பங்குகள் ஒதுக்கப்படும். 25-ம் தேதி பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகிய சந்தைகளில் ஐ.ஆர்.எஃப்.சி பங்குகள் பட்டியலிடப்படும்.”

பி.எஸ்.இ 500 இண்டெக்ஸ் பங்குகள் அதிக லாபத்தைக் கொடுத்திருக்கின்றனவே..?

“பி.எஸ்.இ 500 இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் 500 பங்குகளில் 97% பங்குகளின் விலை இரண்டு மாதக் காலத்தில் ஏற்றம் கண்டிருக்கின்றன. சுமார் 35 பங்குகளின் விலை 50% முதல் 150% வரை ஏற்றம் கண்டிருக்கின்றன. டாப் 410 பங்குகள் இரட்டை இலக்க வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன. சுஸ்லான் எனர்ஜி, வக்ராங்கி, செயில் பங்கு விலை 100-150% அதிகரித்துள்ளது.”

சத்பவ் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திட மிருந்து ரூ.780 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை சத்பவ் இன்ஜினீயர்ஸ் பெற்றிருக்கிறது. இதனால் கடந்த வாரம் திங்கள் அன்று, இந்தப் பங்கு விலை 3% வரை அதிகரித்து, 63.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்தத் திட்டத்தில் கதர்ஷா நால் முதல் ட்ரீம் சிட்டி வரையிலான 11.6 கி.மீ கட்டுமானம் மற்றும் ட்ரீம் சிட்டிக்கு அருகில் நுழைவுக்கான வளைவு மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 10 நிலையங்களும் அடங்கும்.’’

சென்செக்ஸ் 50,000 புள்ளி களுக்குப் பக்கத்திலும் நிஃப்டியின் மதிப்பும் மிக அதிகமாக இருக்கும் இந்த நிலையில் சந்தையில் முதலீடு செய்யலாமா?

‘‘மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் எனில், அதை நிறுத்தாமல் தொடரலாம். காரணம், சந்தை இறங்க இறங்க பங்குகளின் விலையும் குறையும். இதனால் நாம் வாங்கி வைத்திருக்கும் ஃபண்ட் யூனிட்டு களின் சராசரி என்.ஏ.வி குறையும். சந்தை மீண்டும் உயரும்போது நல்ல லாபம் பார்க்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதாக இருந்தால், கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். கையில் உள்ள மொத்த பணத்தையும் இப்போதே முதலீடு செய்து விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்’’ என்றவர், ‘‘வாசகர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்’’ என்று சொல்லி முடித்திருந்தார்.

என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை!

நாணயம் விகடன் நடத்தும், ‘என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜனவரி 30, 2021 இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை (இந்திய நேரம்) நடக்கிறது. இதில், ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் சிறப்புரையாற்றுகிறார். கட்டணம்: ரூ.900. முன் பதிவுக்கு: https://bit.ly/38rk4EL

கடன் A - Z தொகுப்பு

நம்மில் பலரும் தாராளமாகக் கடன் வாங்குகிறோம். ஆனால், எவ்வளவு வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், வாங்கிய கடனை எப்படித் திரும்பக் கட்ட வேண்டும், அப்படிக் கட்டாவிட்டால் நமக்கு ஏற்படும் பாதகங்கள் என்னென்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் விகடன்.காமில் வணிகம் பகுதியில் ‘லோன் வேணுமா சார்?’ (#LoanVenumaSir) என்கிற கட்டுரைத் தொடர் வெளியாகிறது. சென்னை ஆடிட்டர் வெங்கட்ராமன் தியாகராஜன் எழுதும் இந்தக் கட்டுரைத் தொடர், கடன் பற்றி உங்களுக்குத் தெளிவான புரிதலைத் தரும். கட்டுரைத் தொடரைப் படிக்க: http://bit.ly/2K7a0sg