Published:Updated:

ஷேர்லக்: தேவை அதிகரிப்பு எதிரொலி... வேகமெடுக்கும் வாகனத்துறை பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

S H A R E L U C K

சரியாக மாலை 5.30 மணிக்கு அலுவலகத்துக்கு வந்த ஷேர்லக் வழக்கத்தைவிட பரபரத்தார். “நிறைய வேலை இருக்கு. உங்களுக்கு 15 நிமிடம்தான் ஒதுக்க முடியும். சீக்கிரம் கேளுங்கள்” என அவசரப்படுத்த, நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

விப்ரோ பைபேக் திட்டம் முழுமை அடைந்ததா?

“கடந்த டிசம்பர் 22-ம் தேதியில் இருந்து பைபேக் திட்டத்தின்கீழ், பங்கு ஒன்றுக்கு 400 ரூபாய் என்ற அளவில் தனது முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை விப்ரோ நிறுவனம் வாங்க ஆரம்பித்தது. அஜிம் பிரேம்ஜி டிரஸ்ட் 19.87 கோடி பங்குகளையும், ஹஷாம் டிரேடர்ஸ் ஒரு கோடி பங்குகளையும், அஜிம் பிரேம்ஜி பரோபிராபிக் இனிசியேட்டிவ்ஸ் 51.82 லட்சம் பங்குகளையும் திரும்பக் கொடுத்திருக்கின்றன. மற்றொரு பங்குதாரரான அஜிம் ஹஷாம் பிரேம்ஜி 75 லட்சம் பங்குகளையும் பைபேக் மூலம் திரும்ப வழங்கி யிருக்கிறார்.

இந்த பைபேக் நடைமுறைக்குப் பிறகு, புரொமோட்டார்கள் வசம் இருந்த பங்குகளின் அளவு 1% குறைந்து, தற்போது 73.04 சதவிகிதமாக இருக்கிறது. இதர 26.96% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இதர முதலீட்டாளர்கள் வைத்திருக் கிறார்கள். டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபெற்ற இந்த பைபேக் திட்டத்தில் மொத்தம் ரூ.9,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விப்ரோ நிறுவனம் திரும்பப் பெற்றிருக்கிறது. இதில், புரொ மோட்டர்கள் திரும்பக் கொடுத்தப் பங்குகளின் மதிப்பு ரூ.9,156 கோடியாகும்.’’

டோட்டல் நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறதாமே?

“பிரான்ஸ் நாட்டைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டோட்டல் நிறுவனம், கடந்த 2018-ம் ஆண்டில் அதானி கேஸ் நிறுவனத்தில் மொத்தம் 37.4% பங்கு களையும், தம்ரா எல்.என்.ஜி திட்டத்தில் 50% பங்குகளையும் ஏற்கெனவே வாங்கியிருந்தது. அதன் தொடர்சியாகத் தற்போது மீண்டும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 20% பங்குகளை வாங்கியிருக்கிறது. இந்த முதலீட்டின் மூலம் அதானி குழும நிறுவனத்தின் எல்.என்.ஜி டெர்மினல்ஸ், எரிவாயு சார்ந்த தொழில்களில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் டோட்டல் நிறுவனமும் சேர்ந்து செயல்படும் எனத் தெரிகிறது.”

வோக்ஹார்டு பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?

“பிரபல பங்கு முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வோக்ஹார்டு நிறுவனத்தின் 25,00,005 பங்குகளை (நிறுவனத்தின் மொத்த பங்குகளில் இது 2.26%) டிசம்பர் காலாண்டில் வாங்கியிருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பங்கில் புதியவர்கள் அதிகமாக முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாகக் கடந்த 20-ம் தேதி வர்த்தகத்தில், பங்கு விலை 6% வரை அதிகரித்து வர்த்தகமானது.”

ஷேர்லக்
ஷேர்லக்

மாருதி சுஸூகி இந்தியா பங்கு விலை ஏன் அதிகரித்தது?

“மாருதி சுஸூகி இந்தியா பங்கு விலை ஜனவரி 20-ம் தேதி 2 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வர்த்தகமானது. ஏனெனில், இந்த நிறுவனம் இந்தியா விலிருந்து காம்பாக்ட் ஆஃப்-ரோடர் ஜிம்னியை ஏற்றுமதி செய்யத் தொடங்கி யிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் மேம்படுத்தப் பட்ட ஸ்விஃப்ட் ரக வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.”

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளில் எஃப்.பி.ஐ முதலீடு அதிகரித்துள்ளதாமே?

“டிசம்பர் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளில் வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்களின் (எஃப்.பி.ஐ) முதலீடு அதிகரித்துள்ளது. இந்த வங்கியில் செப்டம்பர் காலாண்டில் 45.66 சதவிகிதமாக இருந்த எஃப்.பி.ஐ முதலீடு, டிசம்பர் காலாண்டில் 47.43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தக் காரணத்தால் கடந்த ஜனவரி 20-ம் தேதி இதன் பங்கு விலை 1.43% அதிகரித்து, 554.25 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதே சமயம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு முதலீட்டை 27.07 சதவிகிதத்தில் இருந்து 26.35 சதவிகிதமாகக் குறைத்துக் கொண்டன. எல்.ஐ.சி நிறுவனமும் தனது போர்ட் ஃபோலியோவில் 8.87 சதவிகிதத்திலிருந்து 8.4 சதவிகிதமாக ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளைக் குறைத்திருக்கிறது.”

காயத்ரி புராஜெக்ட்ஸ் பங்கு விலை உயரக் காரணம் என்ன?

“காயத்ரி புராஜெக்ட்ஸ் (Gayatri Projects) நிறுவனத்துக்கு கேர் ரேட்டிங் நிறுவனம் தனது தரச் சான்று குறியீடுகளை அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் நீண்டகால வங்கி வசதிகளுக்கு (long-term bank facilities) ‘கேர் டி’ ரேட்டிங்கில் இருந்து ‘கேர் பி’ ரேட்டிங்குக்கு அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. அதே போல, ‘குறுகியகால வசதி களுக்கு (short-term bank facilities) ‘கேர் டி’ ரேட்டிங்கிலிருந்து ‘கேர் ஏ4’ ரேட்டிங்குக்கு அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 20-ம் தேதி காயத்ரி புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5% வரை அதிகரித்து வர்த்தகமானது.”

ஐ.ஆர்.எஃப்.சி ஐ.பி.ஓ வெளியீடு வெற்றி பெற்றதா?

“இந்தப் புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ) முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 4,633 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில், 124 கோடி பங்குகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால், 435 கோடி பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது 3.49 மடங்கு அதிக ஆதரவாகும். தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 3.78 மடங்கு நிறுவனமல்லாத முதலீட் டாளர்கள் 2.66, சிறு முதலீட் டாளர்கள் 3.53 மடங்கு, ஊழியர்கள் 43.73 மடங்கும் விண்ணப்பம் செய்திருக் கிறார்கள்.”

டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை திடீரென சரிந்திருக்கிறதே..!

“மத்திய அரசாங்கம் நடப்பு நிதி ஆண்டுக்குள் 2.1 லட்சம் கோடியைத் திரட்ட முடிவு செய் திருந்தது. அதனடிப்படையில் டாடா கம்யூனிகேஷன்ஸ் (முந்தைய பெயர் வி.எஸ்.என்.எல்) நிறுவனத்தில் தான் வைத்திருக்கும் 26.12% பங்குகளை விற்கப்போவதாகக் கடந்த 20-ம் தேதி அரசு அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தின வர்த்தகத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 8% இறங்கியது.”

இண்டிகோ பெயின்ட்ஸ் ஐ.பி.ஓ முதல் நாள் வரவேற்பு எப்படியிருந்தது?

“ஜனவரி 20-ம் தேதி வெளி யான இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு, அதன் முதல் நாளிலேயே, முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பை வழங்கியிருக் கிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் பங்குகள் வேண்டி 3.29 மடங்கும், நிறுவனம் சாராத முதலீட் டாளர்கள் 1.10 மடங்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 10% மட்டுமே விண்ணப்பித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டில் 79% பங்குக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.”

சென்செக்ஸ் முதல் முறையாக 50000 புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறதே?

“வியாழக்கிழமை அன்று வர்த்தகத்தில் பி.எஸ்.இயின் சென்செக்ஸ் 50000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. நிஃப்டி புள்ளிகள் 14700-ஐ தாண்டியிருக்கிறது. பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டர்ஸ், யூ.பி.எல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், பிராஃபிட் புக்கிங் நடந்ததால், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 167.36 புள்ளிகள் இறக்கம் கண்டு 49624.76–ல் நிலை பெற்ற பெற்றது.”

வாகனத்துறை பங்குகளின் விலை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறதே?

“வியாழக்கிழமை அன்று ஆட்டோ துறை பங்குகளான டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எய்ஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ, டி.வி.எஸ் மோட்டார், அசோக் லேலாண்ட், மாருதி சுஸூகி, எம் அண்ட் எம் மற்றும் வாகனத்துறை சார்ந்த எம்.ஆர்.எம், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏற்றம் கண்டன, நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் சுமார் 1% உயர்ந்தது. கொரோனா பாதிப்பு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது’’ என்ற ஷேர்லக், அவசரமாக ஏதோ போன் வர சைகை காட்டிவிட்டு மின்னலாகப் பறந்தார்.

கோல்டு இ.டி.எஃப்: 2020-ல் ரூ.6,655 கோடி முதலீடு!

பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் பரவலால் உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் காகிதத் தங்கம் எனப்படுகிற கோல்டு இ.டி.எஃப்பில் செய்யப்பட்ட நிகர முதலீடு வெறும் ரூ.16 கோடியாக இருந்தது. இது 2020–ம் ஆண்டில் ரூ.6,657 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த முதலீடு 14 கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் மேற்கொள்ளப்படுள்ளது. கோல்டு இ.டி.எஃப் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை, 2019 டிசம்பர் மாத இறுதியில் ரூ.5.768 கோடியாக இருந்தது. இது 2020 டிசம்பர் இறுதியில் ரூ.14,174 கோடியாக அதிகரித்துள்ளது. சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்புக் கருதி தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். வளர்ச்சி மேம்படும்போது, கொரோனா பாதிப்பு குறையும்போது தங்கத்தின் இறக்கம் காணும் என்பது அனலிஸ்ட்டுகளின் கருத்தாக இருக்கிறது.

என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை!

நாணயம் விகடன் நடத்தும் ‘என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜனவரி 30, 2021 இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை (இந்திய நேரம்) நடக்கிறது. இதில், ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் சிறப்புரையாற்றுகிறார். கட்டணம் ரூ.900. முன் பதிவுக்கு: https://bit.ly/38rk4EL