ஷேர்லக் : புத்தாண்டில் முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள்..! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

SHARE LUCK
கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் நம் அலுவலகத்துக்கு வந்திருந்த ஷேர்லக், ‘‘ஹாப்பி கிறிஸ்துமஸ்’’ என்றபடி நமக்கு மெகா சைஸ் கேக் ஒன்று கொடுக்க, நாமும் பதிலுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லிவிட்டு, அவர் கொண்டு வந்த கேக்கை எடிட்டோரியல் டீம் உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளித்தோம். அவர் கொண்டு வந்த கேக்கை அவருக்கும் ஒரு துண்டு தர, அதைச் சாப்பிட்டபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.
விப்ரோ, பங்குகளைத் திரும்பப் பெறுவது பற்றி...
“விப்ரோ நிறுவனம் 9,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 23.75 கோடி பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப வாங்குகிறது. இந்த பைபேக்குக்கான ஒப்புதலை விப்ரோ நிறுவனத்தின் பங்குதாரர்கள் வழங்கி உள்ளார்கள். டிசம்பர் 29-ம் தேதி முதல் ஜனவரி 11-ம் தேதி வரை பங்குகளை இந்த நிறுவனம் பைபேக் செய்கிறது. பைபேக்ல் திரும்ப வாங்கப்படும் ஒரு பங்கின் விலை 400 ரூபாய். இந்த அறிவிப்புக்குப் பிறகு, விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 3% அதிகரித்து, 375 ரூபாய்க்கு வர்த்தகமானது.”
டி.சி.எஸ் பைபேக் எந்த அளவுக்கு இருக்கிறது?
“டி.சி.எஸ், கடந்த டிசம்பர் 18-ம் தேதி 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ‘பைபேக்’ (buyback) செய்யத் தொடங்கியிருக்கிறது. இந்த பைபேக் திட்டமானது, வருகிற ஜனவரி 1, 2021-ம் தேதி வரை இருக்கும். திரும்ப வாங்கும் பங்கு ஒன்றுக்கு, 3,000 ரூபாய் வழங்க டி.சி.எஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பைபேக் மூலம் மொத்தம் 5.33 கோடி பங்குகளைத் திரும்பப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகளை அதிக அளவில் வைத்திருக்கும் நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் டாடா சன்ஸ். இந்த நிறுவனத்திடம் மட்டுமே டி.சி.எஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 72% பங்குகள் இருக்கின்றன. திரும்பப் பெறும் திட்டத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் பங்குகளைக் கொடுக்க முன்வந்தால், 16,000 கோடி ரூபாயில் 11,500 கோடி ரூபாயை டாடா சன்ஸ் நிறுவனம் பெறும். அது மட்டுமல்லாமல், டி.சி.எஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 12 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாகச் சொல்லியிருப்பதால், அதன் மூலமாகவும் 324 கோடி ரூபாயை டாடா சன்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும். இந்த பை பேக் அறிவிப்புக்குப் பிறகு, டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.”
திலீப் பில்ட்கான் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
“டெல்லி - வதோதரா ஏ.ஹெ.ச்-12 பசுமை வழி சாலைத் திட்டத்தின்கீழ், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உம்மத்புரா கிராமத்துக்கு அருகில் எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இ.பி.சி புராஜெக்ட் ஒப்பந்தத்தை திலிப் பில்ட்கான் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்து வர்த்தகமானது. டிசம்பர் 23-ம் தேதி காலை வர்த்தகத்தில் 12.55 ரூபாய் விலை அதிகரித்து, 372.40 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த இரு ஆண்டுகளாக இந்த நிறுவனப் பங்கில் அந்நிய நிதி நிறுவனங்களின் (எஃப்.ஐ.ஐ-க்கள்) முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.”
டபிள்யூ.பி.ஐ.எல் (WPIL) பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
“30 மாதங்களுக்குள் நிறை வேற்றப்படவுள்ள ரூ.851.31 கோடி மதிப்பிலான இரு திட்டங்களை மத்தியப் பிரதேசத்தின் ஜல் நிஜாமிடமிருந்து டபிள்யூ.பி.ஐ.எல் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தத் தகவலை அந்த நிறுவனம் சமீபத்தில் பங்குச் சந்தைகளுக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 23-ம் தேதி அன்று இதன் பங்கு விலை ஒரே நாளில் 16% அதிகரித்து, ரூ.577-க்கு வர்த்தகமானது. கூடவே வால்யூம் அதிகரித்துள்ளது.”

சில குறிப்பிட்ட பங்குகளின் விலை சரிவுக்கு மிக முக்கிய காரணமாகப் புதிய கொரோனா வைரஸ் பரவலைக் காரணமாகச் சொல்கிறார்களே..?
“இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொரோனா தொற்று காரணமாக திங்கள்கிழமை அன்று, இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. அன்றைய தினத்தில் மட்டும் பி.எஸ்.இ சென்செக்ஸ் 1406.73 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. இதன் காரணமாக முதலீட்டாளர் களின் சொத்து மதிப்பு ரூ.6.59 லட்சம் கோடியாகக் குறைந்தது.
அன்றைய வர்த்தகத்தில் 2,433 நிறுவனங்களின் பங்கு விலை சரிந்து காணப்பட்டது. 592 நிறுவனங்களின் பங்கு விலை ஏற்றத்துடனும், 167 நிறுவனங் களின் பங்கு விலை எந்த மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாகின. டாடா மோட்டார்ஸ், மதர்சன் சுமி, பாரத் ஃபோர்ஜ் மற்றும் எண்டியூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பெருமளவு வீழ்ச்சியைச் சந்தித்தன.
இதற்குக் காரணம், இந்த நிறுவனங்களின் வருமானத்தில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு அதிக அளவில் இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருமானத்தில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தை பங்களிப்பு 47 சதவிகிதமாகவும், மதர்சன் சுமி நிறுவனத்தில் 40 சதவிகிதமாகவும், எண்டியூரன்ஸ் நிறுவனத்தில் 28 சதவிகிதமாகவும் மற்றும் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தில் 15 சத விகிதமாக இருக்கிறது.
இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5% வரையும், மதர்சன் சுமி மற்றும் பாரத் ஃபோர்ஜ் 4% வரையும், எண்டியூரன்ஸ் டெக்னாலஜீஸ் 3% வரையிலும் ஒரே நாளில் இறக்கத்தைச் சந்தித்தன.
கடந்த திங்கள்கிழமை அன்று சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 2000 புள்ளிகள் இறக்கம் கண்டு பிறகு, இறக்கத்தில் இருந்து சுமார் 500 புள்ளிகள் ஏற்றம் கண்டது. இதற்கு ரூ.325 மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்த நிலையில் உள்ளாட்டு நிதி நிறுவனங்கள் (மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்) ரூ.485 கோடி பங்குகளை வாங்கியதாகும்.”
புத்தாண்டில் முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது சொல்லுங்களேன்...
“புத்தாண்டில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் புள்ளிகள் படிப்படியாக அதிகரிக்கும் என ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் கணித்திருக்கிறது. அது 2021–ம் ஆண்டில் முதலீடு செய்யக்கூடிய டாப் பங்குகளைப் பரிந்துரை செய்திருக்கிறது.
எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஹெச்.பி.சி.எல்., கெயில், பிர்லா கார்ப்பரேஷன், பந்தன் பேங்க், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், சன்பார்மா ஆகிய பங்குகளை ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்திருக்கிறது.
தற்போதைய நிலையில், நிஃப்டி குறியீடு கடந்த மார்ச் மாத இறக்கத்தில் இருந்து சுமார்80% ஏற்றம் கண்டுள்ளது. ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, நிறுவனங்களின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தெரியும் முன்னேற்றம் போன்ற பல காரணங்களால் இனி வரும் 2021-ம் ஆண்டில் நிஃப்டியின் இலக்கு 16200 புள்ளிகளாக இருக்கும் என ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
மேலும், எஸ்.பி.ஐ லைஃப், ஐ.சி.ஐ.சி.சி லொம்பார்டு, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், என்.டி.பி.சி, சிப்லா, பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக், இன்ஃபோசிஸ், டாபர், பஜாஜ் ஆட்டோ, ஜி.ஜி.எல், பால்கிருஷ்ணா, அல்கெம், அஸ்ட்ரல் பாலிடெக்னிக், அக்ஜோ நோபல், கிரீன்பேனல், ஹெரிடேஜ் ஃபுட்ஸ், பஜாஜ் கன்ஸ்யூமர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை 2021-ம் ஆண்டில் அதிகரிக்கும் எனவும் கணித்திருக்கிறது.”
புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கு கிறதாமே ஃபிளிப்கார்ட் நிறுவனம்..?
‘‘முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் வரும் 2021-ம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களமிறங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அது மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இந்தக் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மூன்று புதிய இயக்குநர்கள் இணைகிறார்கள். 2021-ல் ஃப்ளிப்கார்ட் ஐ.பி.ஓ வந்தால், மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.’’
கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் இறங்கிய சந்தை, வியாழன் அன்று மீண்டும் ஏற்றம் கண்டதே!
‘‘இங்கிலாந்தில் மீண்டும் தொற்றுநோய் பரவத் தொடங்கிய தால் சந்தை கொஞ்சம் இறங்கியது. இந்த இறக்கம் கடந்த மார்ச்சில் நடந்ததுபோல பெரிய அளவில் இருக்கும் எனப் பலரும் பயந்து பங்குகளை விற்றனர். அவர்களும் பங்குகள் நல்ல லாபத்தில் இருந்த தால்தான் விற்றனர். ஆனால், உலக அளவில் பலவிதமான அச்சுறுத்தல்கள் இருந்தாலும், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச் சந்தை முதலீட்டையே தேர்வு செய்தனர். இதனால் சந்தை மீண்டும் உயர்ந்தது. கடந்த வியாழன் அன்று மட்டும் சென்செக்ஸ் 529 புள்ளிகள் உயர்ந்தது. லார்ஜ்கேப் பங்குகளை விட மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளின் விலை அதிகரித்தன. அடுத்த வாரத்தில் சந்தை மீண்டும் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் என் அனலிஸ்ட் நண்பர்கள். எப்போதும் சந்தையை விட்டு விலகாமல் இருப்பதே சரி’’ என்ற ஷேர்லக், ‘‘புத்தாண்டு வாழ்த்துகள். வரும் 2021-ல் நாணயம் விகடன் வாசகர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்க வேண்டு கிறேன். அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் - கட்டணப் பயிற்சி வகுப்பு!
ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) இரண்டு நாள்கள் ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை 2021, ஜனவரி 16, (சனிக்கிழமை - காலை 9.30 மணி முதல் 1.30 மணி), ஜனவரி 17, 2021, (ஞாயிற்றுக்கிழமை – மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை) நாணயம் விகடன் நடத்துகிறது.
பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் (Ectra.in) முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். இரு தினங்களுக்கும் சேர்த்து பயிற்சிக் கட்டணம்: ரூ.7,000. பதிவு செய்ய: https://bit.ly/3gBEtuC
என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பு..!
நாணயம் விகடன் நடத்தும் ‘என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை...’ என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜனவரி 30, 2021 இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை (இந்திய நேரம்) நடக்கிறது.
இதில், ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் சிறப்புரையாற்றுகிறார். கட்டணம் ரூ.900. முன்பதிவுக்கு: https://bit.ly/38rk4EL
கடன் A - Z தொகுப்பு

நம்மில் பலரும் தாராளமாகக் கடன் வாங்குகிறோம். ஆனால், எவ்வளவு வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், வாங்கிய கடனை எப்படித் திரும்பக் கட்ட வேண்டும், அப்படிக் கட்டா விட்டால் நமக்கு ஏற்படும் பாதகங்கள் என்னென்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் விகடன்.காமில் வணிகம் பகுதியில் ‘லோன் வேணுமா சார்?’ (#LoanVenumaSir) என்கிற கட்டுரைத் தொடர் வெளியாகிறது. சென்னை ஆடிட்டர் வெங்கட்ராமன் தியாகராஜன் எழுதும் இந்தக் கட்டுரைத் தொடர், கடன் பற்றி உங்களுக்குத் தெளிவான புரிதலைத் தரும். கட்டுரைத் தொடரைப் படிக்க: http://bit.ly/2K7a0sg