சரியாக மாலை 4:00 மணிக்கு ஷேர்லக் வீடியோ காலில் பேசினார். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நாம் கேள்விகளைக் கேட்க, அவர் பதிலளித்தார்.
உரிமைப் பங்கு வெளியீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய சாதனை படைத்திருக்கிறதே..?
“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கடனில்லா நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் அதன் சேர்மன் முகேஷ் அம்பானி. அந்த வகையில் இந்த நிறுவனம் மே 20-ம் தேதி முதல் உரிமைப் பங்கு வெளியிட ஆரம்பித்திருக்கிறது. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் ரூ.53,125 கோடி நிதியைத் திரட்டத் திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 3-ம் தேதி முதலீட்டாளர்களிடமிருந்து உரிமைப் பங்கு வேண்டி 1.59 மடங்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. அதாவது, 84,000 கோடிப் பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இந்த உரிமைப் பங்கு வெளியீட்டை வாங்க இருப்பவர்கள் 25% பணத்தை (ரூ.314.25) முதலில் செலுத்த வேண்டும். அடுத்து மே, 2021-ல் இன்னொரு 25% (ரூ.314.25) பணத்தையும், அதன் பிறகு நவம்பர் 2021-ல் மீதி 50% பணத்தையும் (ரூ.628.5) செலுத்தலாம்.”
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரபிந்தோ பார்மா பங்கு விலை 52 வார அதிகபட்ச விலையைத் தொட என்ன காரணம்?
“அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெளிவந்திருக்கின்றன. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு 52 வார அதிகபட்ச விலையான 780 ரூபாயைத் தொட்டிருக்கிறது. நிறுவனத்தின் நிகர லாபம் 45.2% அதிகரித்து ரூ.849.8 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.585.4 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருமானம் 16.4% அதிகரித்து ரூ.6,158.4 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,292.2 கோடியாக இருந்தது.”
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகிராமப்புறம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகியிருக்கிறதே..?
“கோவிட் 19 வைரஸ் பரவல் பாதிப்பில் இந்திய கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்படாமல் இருக்கின்றன. இந்தியாவின் ஜி.டி.பி-யில் கிராமப்புறங்களின் பங்களிப்பு 53 சதவிகிதமாக இருக்கிறது. தற்போது காரிப் பருவச் சாகுபடி ஆரம்பித் துள்ளது. பொதுவாக, காரிப் பருவத்தில் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி மற்றும் கரும்புச் சாகுபடி செய்யப்படும். அதற்கு உதவும்விதமாக ஜூன் 1-ம் தேதி பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியிருக்கிறது. `இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவு பெய்யும்’ என கணிக்கப்பட்டிருக்கிறது.

இது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சிக்கலான நேரத்தில் விவசாயிகள் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. மேலும், மத்திய அரசும் 14 வகையான காரிப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2020-21-ம் ஆண்டுக்கு 2% முதல் 13% வரை அதிகரித்துள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக விவசாயக் கடன் வழங்கத் திட்டமிட்டி ருக்கின்றன. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.40,000 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்கான ஒரு நாள் ஊதியம் ரூ.180-லிருந்து ரூ.202-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனாலும் கிராமப்புறங்களில் நுகர்வு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கிராமப்புறம் வளர்ச்சிகாணும் போது டிராக்டர், இரு சக்கர வாகனங்கள், வாகனக் கடன் உதவி, வேளாண் ரசாயனங்கள் போன்றவை சார்ந்த நிறுவனங்கள் அதிக லாபம் காணும். அந்த வகையில், `எஸ்கார்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஷியல், ஹீரோ மோட்டோகார்ப்., கொரமண்டல் இன்டர்நேஷனல் போன்ற நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு கவனிக்கத்தக்கவை’ என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள்.”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முடக்கப்பட்ட ஃப்ராங்க்ளின் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்?
“கோவிட்-19 பாதிப்பால் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகித்துவந்த கடன் சார்ந்த ஆறு ஃபண்டுகளை முடக்கியது. இவற்றில், ஃப்ராங்க்ளின் அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் டைனமிக் அக்ரூவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு சிறிய தொகை ஜூலை மாதத்தில் கிடைக்கும் எனத் தெரியவந்திருக்கிறது. ஃபண்ட் முதலீட்டாளர்கள் இ-வோட்டிங் மூலம் பணத்தை அளிக்கும் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்த பிறகு இது நடைமுறைக்கு வரும். ஃபண்ட் முதலீட்டாளர்களின் இ-வோட்டிங் நடைமுறை ஜூன் 9 முதல் 11 வரை நடக்கிறது. இந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் இந்த இ-வோட்டிங்குக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை எப்போது நீங்குமோ...’’
பி.பி.சி.எல் பங்கு விலை வியாழக்கிழமை 3% குறைய என்ன காரணம்?
“பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (பி.பி.சி.எல்), கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.1,819.60 கோடியாக இருந்தது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.2,051.40 கோடி நிகர லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.’’
ஜே.எஸ்.பி.எல் நிறுவப் பங்கின் விலை திடீரென அதிகரித்தது ஏன்?
“ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென 2% உயர்ந்து வர்த்தகமானது. கடந்த மாதத்தில் இந்த நிறுவனத்தின் இரும்புப் பொருள்களின் உள்நாட்டுத் தேவை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பங்கின் விலை 52% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடு நன்றாக இருப்பதால், மார்கன் ஸ்டான்லி இந்த நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையை 140 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. எடெல்வைஸ் செக்யூரிட்டீஸ் ஏற்கெனவே சொல்லியிருந்த ரூ.135 இலக்கு விலையைக் கொஞ்சம் அதிகரித்து, 155 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.”
பங்குத் தரகு நிறுவனங்கள் இண்டிகோ பங்கு இலக்கு விலையைக் குறைத்துள்ளனவே..?
“இண்டிகோ விமான நிறுவனத்தை இயக்கும் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் கடந்த ஜூன் 2-ம் தேதி நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில், கொரோனா லாக்டௌன் காரணமாகப் பெரும் இழப்பைச் சந்தித்திருப்பதாகவும், கடந்த மார்ச் காலாண்டு முடிவில், ரூ.870.80 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக பங்குத் தரகு நிறுவனங்கள் இண்டிகோ நிறுவனப் பங்கின் இலக்கு விலையைக் குறைந்தபட்சம் 3 சதவிகிதத்திலிருந்து அதிகபட்சம் 17% வரை குறைத்தி ருக்கின்றன. மோதிலால் ஆஸ்வால், 1,300 ரூபாயாக இருந்த இலக்கு விலையை 1,080 ரூபாயாகக் குறைத்தி ருக்கிறது. ஆம்பிட், 1,750 ரூபாயாக இருந்த இலக்கு விலையை 1,660 ரூபாயாகக் குறைத்ததிருக்கிறது” என்றவர், ‘‘ `சந்தை 10,000 புள்ளிகளுக்கு மேல் சென்ற பிறகும் நாம் வாங்கிய பங்குகளின் விலை உயரவில்லையே...’ என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்குக் காரணம், நம்மவர்கள் பலரும் மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளை அதிகம் வாங்கிவைத்திருப்பதே. இனியாவது எல்லாப் பணத்தையும் மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளில் போடாமல், எல்லா வகை பங்குகளையும் வாங்க வேண்டும்’’ என்றபடி டாட்டா காட்டினார் ஷேர்லக்.
கடைசிச் செய்தி: ஏர்டெல் நிறுவனத்தில் அமேஸான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்போகிறது..!
என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை! நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வருமான வரி முதலீடு / வருமான வரிக் கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும்விதமாக நாணயம் விகடன் ‘என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை’ என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன். பயிற்சி வகுப்பு ஜூன் 19, இரவு 7 மணி முதல் 9 மணி வரை (இந்திய நேரப்படி) இரண்டு மணி நேரம் நடக்கிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கக் கட்டணம் ரூ.900. முன்பதிவு செய்ய https://bit.ly/373dCmq கூடுதல் விவரங்களுக்கு: 9940415222
கடன் ஃபண்ட் முதலீடு: கவனிக்க வேண்டியவை! சிறப்புப் பயிற்சி வகுப்பு!
கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருகின்றன. இந்த நிலையில் கடன் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த ஆன்லைன் வகுப்பு, நாணயம் விகடன் சார்பில் ஜூன் 13, 2020, காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறவிருக்கிறது.
இந்தப் பயிற்சி வகுப்பை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித்துறையில் அனுபவமுள்ள சொக்கலிங்கம் பழனியப்பன் (இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.) நடத்துகிறார்.கட்டணம்: ரூ.250. பதிவு செய்ய: https://bit.ly/2XA0SiE கூடுதல் விவரங்களுக்கு: 9940415222

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/3061LST