Published:Updated:

ஷேர்லக் : முதலீட்டு உத்தியை மாற்றிய ஃபண்ட் நிறுவனங்கள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஏப்ரல் மாதத்தில் 43,431 கோடி ரூபாய் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஷேர்லக் : முதலீட்டு உத்தியை மாற்றிய ஃபண்ட் நிறுவனங்கள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ஏப்ரல் மாதத்தில் 43,431 கோடி ரூபாய் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்
காலையில் சொன்னபடியே மாலை 5:00 மணிக்கு போன் செய்தார் ஷேர்லக். “இப்போதெல்லாம் நாணயம் விகடன் சனிக்கிழமையே கடைகளில் கிடைக்கிறதாமே...

மகிழ்ச்சி” என்றார். “ஆமாம், சனிக்கிழமை அன்று காலை முதல் சென்னையிலும், ஞாயிறு அன்று காலை முதல் பிற நகரங்களிலும் கிடைக்கிறது. ஊரடங்கு முடிந்து ரயில் போக்குவரத்து ஆரம்பித்தவுடன், தமிழகம் முழுக்க ஒரே நாளில் கிடைக்கத் தொடங்கிவிடும்” என்று பதில் சொல்லிவிட்டு, நாம் குறித்துவைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

நாராயண ஹிருதயாலயா மோசமான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டிருந்தாலும், `பங்கை வாங்கலாம்’ எனப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாராயண ஹிருதயாலயா நிறுவனத்தின் வருவாய் நான்காம் காலாண்டில் 3% குறைந்துள்ளது. இது எதிர்பார்ப்பைவிட குறைவுதான். மேலும், இந்த நிறுவனத்தின் கடன் ரூ.30 கோடி அதிகரித்து ரூ.530 கோடியாக உள்ளது. இருந்தாலும், பங்குத் தரகு நிறுவனமான ஜெஃபிரீஸ் (Jefferies) இந்த நிறுவனப் பங்கை வாங்கப் பரிந்துரை செய்திருக்கிறது. இலக்கு விலையை ரூ.330-ஆக நிர்ணயித்துள்ளது.”

ஷேர்லக்
ஷேர்லக்

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மே மாதத்தில் முதலீட்டு உத்தியை மாற்றி அமைத்திருக்கின்றனவே?

“அண்மைக் காலத்தில் கொரோனா பரவல் காரணமாக பார்மா நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்திருந்த இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், சில பார்மா நிறுவனப் பங்குகளை விற்றிருக்கின்றன. இதற்கு இரண்டு காரணங்களை அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். ஒன்று, இந்தப் பங்குகளின் விலை அண்மைக் காலத்தில் கணிசமாக ஏற்றம்கண்டிருப்பது, அடுத்து, இனி பார்மா பங்குகளின் விலையேற்றம் முன்புபோல் அதிகமாக இருக்காது என்பது.

இதையடுத்து, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனப் பங்குகள் மற்றும் அதிக சந்தைப் பங்களிப்பைக்கொண்டிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றன. ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாகனத் துறைப் பங்குகளான பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளின் மதிப்பீடு இப்போது மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால், இந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டுவரும் நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அந்தப் பங்குகளில் பிராஃபிட் புக்கிங் செய்து வருகின்றன. அதேநேரத்தில், பார்தி ஏர்டெல் பங்குகளில் முதலீட்டை அதிகரித்துவருகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், சிப்லா பங்குகளை விற்பனை செய்திருக்கிறது.

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட், பந்தன் பேங்க்கில் முதலீட்டை அதிகரித்தும் ஹெச்.டி,எஃப்.சி., கோட்டக் மஹிந்திரா பங்குகளில் முதலீட்டைக் குறைத்தும் இருக்கிறது. பிரிட்டானியா நிறுவனப் பங்கில் கோட்டக் மியூச்சுவல் ஃபண்டும், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனப் பங்கில் ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் கணிசமாக முதலீடு செய்திருக்கின்றன.”

சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

“சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஒரு மாதத்தில் 28% அதிகரித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று மட்டும் 5% விலை அதிகரித்து வர்த்தகமானது. இதற்கு மிக முக்கியக் காரணம், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்த நிறுவனத்தின் 12.25 லட்சம் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,080 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. இந்தச் செய்தியால்தான் அன்றைய தினத்தில் பங்கின் விலை திடீரென அதிகரித்து வர்த்தகமாகியிருக்கிறது. மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம், சுப்ரீம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2.78% பங்குகள் கைவசம் இருக்கின்றன.”

ஷேர்லக் : முதலீட்டு உத்தியை மாற்றிய ஃபண்ட் நிறுவனங்கள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

முத்தூட் ஃபைனான்ஸ் பங்கு வால்யூம் அதிகரிக்க என்ன காரணம்?

“முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், கடந்த 17-ம் தேதி நான்காம் காலாண்டு முடிவை வெளியிட்டது. முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட, காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்ததால், அன்றைய வர்த்தக தினத்தில் பங்கின் விலை சுமார் 11% அதிகரித்து வர்த்தகமானது. காலாண்டு முடிவு வெளியானதற்குப் பிறகு, 52 வார அதிகபட்ச விலைக்கு அருகில் வர்த்தகமாகிவருகிறது. பங்குகளின் வால்யூம் சுமார் 345% அதிகரித்திருக்கிறது.”

மங்களம் சிமென்ட் பங்கு முதலீட்டாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே?

“மங்களம் சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஜூன் 17-ம் தேதி 8% அதிகரித்து வர்த்தகமானது. அன்றைய தினத்தின் வர்த்தகம் முடியும்போது 7.73% அதிகரித்து, 207.70 ரூபாய்க்கு முடிந்தது. இது கடந்த மார்ச் மாதத்தின் குறைந்தபட்ச விலையிலிருந்து 60% அதிகமாகும். இந்த விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், இதன் நான்காம் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைப்போலவே வெளியானதுதான்.

2019-2020-ம் நிதியாண்டில் இந்த நிறுவனம், 76.90 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய 2018-19-ம் நிதியாண்டில் 9.73 கோடி ரூபாயை நிகர இழப்பாகக் காட்டியிருந்தது. அதேபோல, இந்த நிறுவனத்தின் வருமானமும் 2.4% அதிகரித்துள்ளது.”

கடன் ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

“கடந்த மே மாதத்தில், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அந்த மாதத்தில் மட்டும் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 46% அதிகரித்து 63,665 கோடியாக இருக்கிறது.

லிக்விட் ஃபண்டுகளில் அதிக அளவில் முதலீடு வந்திருக்கிறது. அதேநேரத்தில், மீடியம் டியூரேஷன், ஓவர்நைட், கிரெடிட் ரிஸ்க், டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் போன்றவற்றிலிருந்து முதலீடு வெளியேறியிருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் 43,431 கோடி ரூபாய் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் மாதத்தில், இந்த ஃபண்ட் முதலீட்டிலிருந்து வெளியேறிய தொகையின் மதிப்பு ரூ.1.95 லட்சம் கோடியாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 28,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தார்கள். ஜனவரியில் 1.09 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தார்கள்.’’

ஷேர்லக்
ஷேர்லக்

இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் முன்கூட்டியே கட்டும் வரி கணிசமாகக் குறைந்திருப்பது கவலை தரும் விஷயமாக இருக்கிறதே!

‘‘உண்மைதான். இந்த நிதியாண்டின் சரிபாதி நாள் ஊரடங்கிலேயே முடிந்தது. இதனால் நிறுவனங்கள் விற்பனை எதையும் செய்ய முடியாததால், வருமானம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. இதன் விளைவாக, நிறுவனங்களின் லாபம் கணிசமாகக் குறைந்து, வரியைக் குறைவாகக் கட்டினாலே போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

நிறுவனங்கள் கடந்த ஆண்டு முன்கூட்டியே கட்டிய வரி ரூ.40,488 கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் ரூ.8,572 கோடி மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 79% குறைவு.

நேரடி வரியும் கடந்த ஆண்டைவிட 32% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதிக்குள் ரூ.50,000 கோடி வசூலானது. ஆனால், இந்த ஆண்டு வெறும் ரூ.12,000 கோடி மட்டுமே வசூலாகியிருக்கிறது.

மொத்த வரி வருமானம் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.1.37 லட்சம் கோடியாக இருக்க, இந்த ஆண்டில் ரூ.92,681 கோடியாக மட்டுமே இருக்கிறது. இந்த நிலைமை இரண்டாம் காலாண்டிலும் பெரிய அளவில் மாற வாய்ப்பில்லை. எனவே, இந்த நிதியாண்டில் அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறையும். இதன் விளைவுகள் பல்வேறு துறைகளில் பல்வேறுவிதமாக எதிரொலிக்கும். பங்கு முதலீட்டாளர்கள் வரி வருவாய் விஷயத்தில் ஒரு கண்ணை எப்போதும் வைத்திருப்பது நல்லது’’ என்றவர், பேசிவிட்டு வைப்பதற்கு முன் ‘‘சந்தை ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கிறது. எனவே, ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் மட்டுமே சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்யலாம், மிக மிக ஜாக்கிரதையாக...’’ என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார்.

கடைசிச் செய்தி 1: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 11-வது முதலீட்டாளரான சவுதி அரேபியா பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.11,354 கோடியைப் பெற்றிருக்கிறார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இதுவரை முதலீடான தொகை ரூ.1.10 லட்சம் கோடிக்குமேல் சென்றுவிட்டது.

கடைசிச் செய்தி 2: கிஷோர் பியானிக்குச் சொந்தமான ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த அளவு பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இது தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ஸ்டார்ட்அப் பேசிக் ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

நாணயம் விகடன் ‘ஸ்டார்ட்அப் பேசிக்’ என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எங்கே பதிவு செய்ய வேண்டும், அரசு அனுமதிகளை எப்படிப் பெற வேண்டும், வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்குமா, வென்ச்சர் ஃபண்டிங் கிடைக்குமா... போன்ற சந்தேகங்கள் பலவற்றுக்கும் இந்த வகுப்பில் தெளிவு கிடைக்கும்.

ஷேர்லக் : முதலீட்டு உத்தியை மாற்றிய ஃபண்ட் நிறுவனங்கள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

‘ஸ்டார்ட்அப் - பேசிக்’ பயிற்சி வகுப்பை நடத்தப்போகிறவர் சென்னை ஐ.ஐ.டி-யின் டிபார்ட்மென்ட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் பேராசிரியர் எ.தில்லை ராஜன். YNOS venture engine என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார்.

பயிற்சி வகுப்பு ஜூன் 22-ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. இந்த வகுப்பில் கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ளலாம். https://bit.ly/30r5pqO

சொந்தத் தொழில் தொடங்கப் போகிறீர்களா..? ஆன்லைன் சிறப்புப் பயிற்சி

ஷேர்லக் : முதலீட்டு உத்தியை மாற்றிய ஃபண்ட் நிறுவனங்கள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

சொந்தமாகத் தொழில் தொடங்கப் போகிறீர்களா..? தொழில் தொடங்குவதற்கு முன்பு எங்கெங்கு பதிவு செய்ய வேண்டும், வங்கிகளிலிருந்து கடன் வாங்க முடியுமா, லாபம் சம்பாதிக்கும் சூட்சுமங்கள் என்னென்ன ஆகியவை குறித்த அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கற்றுத் தரவே நாணயம் விகடன் ‘நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் வாங்க..!’ என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இந்தப் பயிற்சி வகுப்பை கே.எஸ்.கமாலூதீன் (இயக்குநர், புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட்.) நடத்துகிறார்.

ஜூலை 4-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ளவும். https://bit.ly/2C5NQT2

ஷேர்லக் : முதலீட்டு உத்தியை மாற்றிய ஃபண்ட் நிறுவனங்கள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/2UQsMGH