Published:Updated:

ஷேர்லக் : ரிலையன்ஸ் வழியில் பார்தி ஏர்டெல்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

இலக்கு: கடன் இல்லா நிறுவனம்!

வேலைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு நாம் காத்திருக்க... கடந்த வாரங்களைப் போலவே வீடியோ காலில் வந்தார் ஷேர்லக். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நாம் கேள்விகளைக் கேட்கத் தயாராக, பதில் சொல்ல ஆரம்பித்தார்.

பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் வழியைப் பின்பற்றும் போலிருக்கே..?

“ரூ.1.25 லட்சம் கோடிக்குமேல் கடன்வைத்திருந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021, மார்ச்சுக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமான ஜியோ மூலம் அது ரூ.78,000 கோடிக்கு மேல் முதலீட்டைத் திரட்டியது. உரிமைப் பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.53,000 கோடி திரட்டுகிறது. `டெலிகாம் துறையின் எதிர்காலம் ஓங்கி ஒலிக்கும், ஒளிரும்...’ என மதிப்பிடப்பட்டிருப்பதால், ஃபேஸ்புக், சில்வர் லைன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்துள்ளன. இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பின்பற்றி சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் கடன் இல்லா நிறுவனமாக மாறத் திட்டமிட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷேர்லக்
ஷேர்லக்

இதன் ஒரு பகுதியாக 2019-ம் ஆண்டு, மார்ச்-ல் உரிமைப் பங்கு வெளியீடு மூலம் இந்த நிறுவனம் ரூ.25,000 கோடியைத் திரட்டிக் கடனைக் குறைத்தது. இதையடுத்து 2020, மார்ச் கடைசியில் பார்தி டெலிகாம் நிறுவனத்தின் கடன் ரூ.8,500 கோடியாகக் குறைந்தது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான பார்தி டெலிகாம், டெல்கோ நிறுவனத்தில் அதற்குள்ள 2.75% பங்குகளை விற்றதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.8,500 கோடி கைமாறியிருக்கிறது. கடந்த வாரத்தில் பிளாக் டீல் (Block Deal) மூலம் நிதி திரட்டியுள்ளது. சந்தை விலையைவிட 6% தள்ளுபடியில் இந்தப் பங்கு விற்பனை நடந்திருக்கிறது.

இந்த முதலீட்டைச் சர்வதேச முதலீட்டாளர்களான ஃபிடிலிட்டி, செகான்டி கேப்பிட்டல் (Segantii Capital), நோர்ஜஸ் பேங்க் மற்றும் இந்திய நிறுவனங்களான ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட், ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பயோகான் நிறுவனப் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, `சைடோசோர்ப்’ (CytoSorb) என்ற கருவியைத் தயாரிப்பதற்கான உரிமத்தை பயோகான் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது. இந்தக் கருவி, கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் கருவி. இதற்கு தற்போதைய நிலையில் தேவை அதிகரித்திருப்பதாலும், பயோகான் நிறுவனம் இந்தக் கருவி உற்பத்தியில் களமிறங்கியிருப்பதாலும், இதன் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் பங்கின் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

இந்தியப் பங்குச் சந்தை சரிவிலிருந்தபோதும், சில பங்குகள் அதிக வருமானத்தைத் தந்திருக்கின்றவே?

“சில மாதங்களாகவே இந்தியப் பங்குச் சந்தை, அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகிவருகிறது. காளையின் பிடியில் வர்த்தகமானதைவிட, கரடியின் பிடியிலேயே அதிக தினம் வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். ஆனால், குறிப்பிட்ட சில பங்குகள் மட்டும் நல்ல ஏற்றத்தைத் தந்திருக்கின்றன. குறிப்பாக, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், சனோஃபி இந்தியா, எல் அண்ட் டி, டாக்டர் லால்’ஸ் பாத்லேப், நவீன் ஃப்ளோரின் இன்டர்நேஷனல், இந்தியா சிமென்ட் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை சுமார் 20% ஏறியிருக்கின்றன.’’

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்குகள் அதிகரித்திருக்கின்றனவே?!

“கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் புதிதாக ஏழு லட்சம் முதலீட்டுக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கை 9.04 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த மார்ச் மாதத்தில் 8.97 கோடியாக இருந்தது. அதேபோல, கடந்த பிப்ரவரியில் மூன்று லட்சம் கணக்குகள், ஜனவரியில் 16 லட்சம், டிசம்பரில் ஆறு லட்சம் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி லிங்க்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டுக் கணக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாத முடிவில் ஆறு லட்சம் கணக்குகள் அதிகரித்து, 6.33 கோடியாக இருக்கிறது. இது கடந்த மார்ச் மாத முடிவில் 6.27 கோடியாக இருந்தது. கடன் சார்ந்த திட்டங்களில் 4.37 லட்சம் கணக்குகள் குறைந்து, 60.91 லட்சம் கணக்குகளாக இருக்கின்றன.”

உஜ்ஜீவன் ஃபைனான்ஷியல் சர்வீஸ் பங்கு விலை திடீரென உயர்ந்துள்ளதே!

“உஜ்ஜீவன் ஃபைனான்ஷியல் சர்வீஸ் நிறுவனம் அண்மையில் மார்ச் மாத காலாண்டு முடிவை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 80% உயர்ந்து, 77.43 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 43.15 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 805.02 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 590.01 கோடி ரூபாயாக இருந்தது. இதனால் கடந்த வியாழக்கிழமை வர்த்தகம் ஆரம்பிக்கும்போது 10% உயர்ந்து வர்த்தகமானது. முடியும்போது 8.21% அதிகரித்து 163.30 ரூபாய் என்ற நிலையில் முடிந்திருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கடனில்லா நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் முகேஷ் அம்பானி. அந்த வகையில் இந்த நிறுவனம் மே 20-ம் தேதி முதல் உரிமைப் பங்கு வெளியீட்டை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்குழுக் கூட்டம், உரிமைப் பங்கு வெளியீட்டை ஜூன் 3 வரை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. இந்த உரிமைப் பங்கு வெளியீடு மூலம், இந்த நிறுவனம் 53,125 கோடி ரூபாய் நிதியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 16% அதிகரித்து வர்த்தகமானது.’’

ஷேர்லக்
ஷேர்லக்

டிக்சான் டெக் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து அதிகரிக்குமா?

“ `எம்.கே குளோபல்’ என்ற தரகு நிறுவனம், டிக்ஸான் டெக் (Dixon Tech) நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, டிக்ஸான் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 2.5% விலை அதிகரித்து வர்த்தகமானது. கடந்த வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது 4,633 ரூபாய்க்கு வர்த்தகமானது. எம்.கே குளோபல் நிறுவனம் இந்தப் பங்குக்கு இலக்கு விலையாக 5,172 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வருமானம் கிடைக்க இருப்பதால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.”

அக்ரோ கெமிக்கல் பங்குகளின் விலை அதிகரித்திருக்கிறதே?!

“வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் வெட்டுக்கிளிகள், இந்தியாவுக்குள் வந்துவிடுமோ என்ற பயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அக்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கான தேவை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, பாயர் கார்ப் சயின்ஸ், யூ.பி.எல்., சுமிடோமோ கெமிக்கல், இன்செக்டிசைட்ஸ், பி.ஏ.எஸ்.எஃப் மற்றும் ராலிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடந்த மூன்று தினங்களில் விலை அதிகரித்து வர்த்தகமாகிவருகின்றன.’’

கோட்டக் மஹிந்திரா பேங்க் நிதி திரட்டுகிறதாமே?!

“கோட்டக் மஹிந்திரா பேங்க், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் 7,500 கோடி ரூபாயைத் திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. இதனால், இந்த வங்கிப் பங்கின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்தப் பங்கின் விலை 6% வரை அதிகரித்து வர்த்தகமானது. வெளியிடப்படும் பங்கு ஒன்றின் விலை 1,147.75 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’’

ஐ.டி.சி பங்கு விலை ஒரே நாளில் 5% அதிகரித்திருக்கிறதே?

‘‘ஐ.டி.சி நிறுவனம், சன்ரைஸ் ஃபுட்ஸ் நிறுவனத்தில் 100% பங்குகளைக் கையகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் கடந்த புதன்கிழமை இந்தப் பங்கின் விலை 5% வரை அதிகரித்து வர்த்தகமானது.’’

டைட்டன் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்க என்ன காரணம்?

“கொரோனா தொற்றின் காரணமாக அனைத்துத் தொழில்களும் பாதிப்படைந்தன. டைட்டன் நிறுவனத்தின் வியாபாரமும் பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்த நிறுவனத்தின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பங்கின் விலையும் கடந்த மூன்று மாதங்களில் 30% வரை குறைந்திருக்கிறது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று 2% வரை விலை குறைந்து வர்த்தகமானது. ஆனால், வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது 1.54% அதிகரித்து, 899.45 ரூபாயில் முடிவடைந்தது” என்றவர், ‘‘ஊரடங்கு வரும் ஞாயிறு தாண்டி தொடர்ந்தால், பொருளாதாரம் இன்னும் மோசமாகும். எனவே, ஜாக்கிரதை’’ என்று சொல்லிவிட்டு, வீடியோவில் டாட்டா காட்டினார்!

மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்!

முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்’ நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் தலைவர் கே.எஸ்.ராவ், ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். 2020, ஜூன் 7 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://bit.ly/2AggWOy

கடன் ஃபண்ட் முதலீடு: கவனிக்க வேண்டியவை!

சிறப்புப் பயிற்சி வகுப்பு

முதலீடு
முதலீடு

கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருகின்றன. இந்த நிலையில் கடன் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த ஆன்லைன் வகுப்பு நாணயம் விகடன் சார்பில் ஜூன் 13, 2020, காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறவிருக்கிறது.

இந்தப் பயிற்சி வகுப்பை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித்துறையில் அனுபவமுள்ள சொக்கலிங்கம் பழனியப்பன் (இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.) நடத்துகிறார்.

கட்டணம்: ரூ.250 https://bit.ly/2XA0SiE கூடுதல் விவரங்களுக்கு 9940415222

எஃப் & ஓ
எஃப் & ஓ

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/2THY7e7