Published:Updated:

ஷேர்லக் : இறக்கத்தைச் சந்திக்கும் பங்குச் சந்தை...

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

ஷேர்லக், நம் அலுவலகத்துக்கு முகக் கவசத்துடன் வந்தார். அவருக்கு சுக்கு காபி ஆர்டர் செய்தபடியே பேச்சுக்கொடுத்தோம்.

வெள்ளிக்கிழமை அன்று இந்தியப் பங்குச் சந்தை அதிக இறக்கத்தைச் சந்திருக்கிறதே?

“வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் ஒருகட்டத்தில் 1450 புள்ளிகளுக்கு மேல் இறக்கம்கண்டது. இதிலிருந்து 565 புள்ளிகள் மீண்டு, சந்தை 894 புள்ளிகள் இறக்கத்தில் நிறைவு பெற்றது. நிஃப்டி புள்ளிகள் 11000-க்கு கீழே இறங்கி முடிந்தது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சர்வதேசப் பொருளாதாரத்தின் போக்கு மிகவும் மந்தநிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, உலக நாடுகளுக்கு இடையேயான பயணமும் வர்த்தகமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இது பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. `இந்த இறக்கம் குறுகியகாலத்துக்குத் தொடரும்’ என்று பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்; தற்போதைய சூழலில் சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து விலகி உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷேர்லக் : இறக்கத்தைச் சந்திக்கும் பங்குச் சந்தை...

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் ரூ.6,554 கோடி முதலீடு செய்திருக்கிறார்களே!

‘‘கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் ரூ.6,554 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். பங்குச் சந்தையில் ரூ.1,820 கோடியும், கடன் சந்தையில் ரூ.4,734 கோடியும் முதலீடு செய்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளின் சந்தைகள் பெரும் இறக்கத்தைச் சந்தித்துவருகின்றன. ஆனால், மற்ற சந்தைகளைவிட குறைவான இறக்கத்தையே இந்தியப் பங்குச் சந்தை சந்தித்திருக்கிறது. மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியக் கடன் சந்தையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.’’

டாடா மோட்டார் பங்கின் விலை சரியக் காரணம் என்ன?

‘‘டாடா மோட்டார் கடந்த பிப்ரவரியில் தனது உற்பத்தியை 34.42% குறைத்திருப்பதாக மார்ச் 4-ம் தேதி அறிவித்தது. இதனால் அன்றைய வர்த்தகத்தில் அதன் பங்கு விலை 4% குறைந்து வர்த்தகமானது. இந்த நிறுவனம் 37,826 வாகனங்களை பிப்ரவரியில் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 56,826 வாகனங்களைத் தயாரித்திருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக வாகன வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையும் 34% குறைந்திருக்கிறது.’’

பி.எஸ்.இ 500 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்திகரமானதாக இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பந்தன் வங்கியின் ரேட்டிங் உயர்த்தப்பட்டதன் பின்னணியைச் சொல்லுங்கள்...

‘‘பந்தன் வங்கியின் பங்குகள் சரிவிலிருந்து மீண்ட பிறகு, நீண்டகால நோக்கில் வருமானம் ஈட்டுவதற்கு ஏற்றதாக இருப்பதாக மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம் கணித்திருக்கிறது. வரும் 2021-22-ம் நிதியாண்டில் அந்த வங்கியின் சொத்து மூலம் கிடைக்கும் வருமானம் / பங்கிலிருந்து கிடைக்கும் வருமானம் 3.7% / 23.4% என்ற விகிதத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் மதிப்பீடும் நல்லநிலையில் உள்ளது. `பந்தன் வங்கியின் வளர்ச்சி வலுவாக இருப்பதால், இதன் பங்குகள் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்’ என்று மோதிலால் ஆஸ்வால் கருதுகிறது. எனவே, இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கை ‘வாங்கலாம்’ என்று நிர்ணயித்திருக்கிறது. இதையடுத்து வர்த்தகத்தின் இடையே இந்த நிறுவனத்தின் பங்கு விலை 6% அதிகரித்து 424.50 ரூபாயை எட்டியுள்ளது.’’

ஷேர்லக் : இறக்கத்தைச் சந்திக்கும் பங்குச் சந்தை...

பி.வி.ஆர்., ஐநாக்ஸ் திரையரங்குகளின் பங்கு விலை இறக்கத்துக்கு என்ன காரணம்?

‘‘கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதி காரணமாக தியேட்டர், மால்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும்படி அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளின் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. பி.வி.ஆர் நிறுவனத்தின் பங்கு விலை அதன் 52 வாரங்களின் உச்சத்திலிருந்து மொத்தம் 19.5% இறக்கம் கண்டுள்ளது. இதேபோல ஐநாக்ஸ் பங்கு விலையும் 21.70% இறக்கம்கண்டுள்ளது.’’ 

பி.எஸ்.இ 500 பங்குகளில் 24 பங்குகள் நிகர இழப்பைச் சந்தித்திருக்கின்றனவே?

‘‘பி.எஸ்.இ 500 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. இந்த நிறுவனங்களின் வருமானம் இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டைவிட, டிசம்பர் காலாண்டில் மோசமான நிலையில் இருக்கிறது. குறிப்பாக, பேங்க் ஆஃப் பரோடா, பி.என்.பி., காயத்ரி புராஜெக்ட், கிராபைட் இந்தியா, ஹிந்துஸ்தான் காப்பர், லூபின் ஆகிய நிறுவனங்கள் நிகர இழப்பைச் சந்தித்ததில் முன்னணியில் இருக்கின்றன. பேங்க் ஆஃப் பரோடாவின் நிகர இழப்பு ரூ.1,406.95 கோடியாகப் பதிவாகியிருக்கிறது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை போன்ற பல காரணங்களால் இந்த நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது.’’

யெஸ் வங்கி அதிர வைத்திருக்கிறதே!

திவாலாகும் நிலைமைக்குச் சென்றுவிட்ட யெஸ் வங்கியின் பங்கு விலை வெள்ளிக்கிழமை மதியம்வாக்கில் 57% சரிந்து, 17.85 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது. வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது 26% அதிகரித்து, ரூ.36.85-ஆக இருந்தது. இந்த நிலையில், இந்த வங்கியை மீட்கும் வகையில் இதன் பங்குகளை வாங்குமாறு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி-யை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. எஸ்.பி.ஐ-யும் எல்.ஐ.சி-யும் இணைந்து 49% பங்குகளை வாங்க முன்வந்திருக்கின்றன. ஆர்.பி.ஐ-யின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் யெஸ் வங்கி சென்றுள்ளது. இந்தப் பங்கில் முதலீடு செய்வது மிக மிக ரிஸ்க் என்பதை சிறு முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு, முகக் கவசம் அணிந்துகொண்டு புறப்பட்டார் ஷேர்லக்!