Published:Updated:

ஷேர்லக் : சந்தை சரிவு தொடருமா..?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ஷேர்லக் : சந்தை சரிவு தொடருமா..?

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

மாலை சரியாக 5:30 மணிக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். “என்ன... ஒரே பரபரப்பாக இருக்கிறீர்களே...’’ என்று கேட்டோம். ‘‘இன்று சந்தை எக்கச்சக்கமாக இறங்கி, எல்லோரையும் பீதிக்குள்ளாக்கிவிட்டது. இது தொடர்பாக ஒரு முக்கியஸ்தருடன் 7:00 மணிக்கு மீட்டிங். எனவே, சீக்கிரமாகக் கேள்விகளைக் கேளுங்கள்” என்று அவர் அவசரப்படுத்த, சந்தை இறக்கத்தையே நாம் முதல் கேள்வியாகக் கேட்டோம்.

இந்த வாரத்தில் இரு தினங்களில் சென்செக்ஸ் அதிக இறக்கம் கண்டிருக்கிறதே..?

“இந்த வாரத்தில் பங்குச் சந்தையின் தொடக்கமே சரிவுடன்தான் ஆரம்பித்தது. திங்கள் அன்று மட்டும் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்து, 40,363.23 என்ற நிலையில் வர்த்தகமானது. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி காணாமல் போனது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று, `சீன கொரோனா வைரஸ் பிற உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவக்கூடும்’ என்ற பயத்தால் சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்குமேல் சரிந்து வர்த்தகமானது. சர்வதேசச் சந்தைகளின் சரிவு மற்றும் நாட்டின் பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதிப் பொருள்களுக்கான உற்பத்தி பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் : சந்தை சரிவு தொடருமா..?

பங்குச் சந்தை இறங்கியிருப்பதைப் பார்த்து, அதிகமாக சரிவைச் சந்தித்திருப்பதைக் கண்டு, பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அதிக பதற்றம் அடையத் தேவையில்லை. கொரோனா பயம் நீங்கினால், சந்தை மீண்டும் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த இறக்கத்தையும், இனிவரும் இறக்கத்தையும் புதிய முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதலாம்.

கச்சா எண்ணெய் மற்றும் முக்கிய கமாடிட்டிகளின் விலை குறைந்துவருவது இந்தியாவுக்குச் சாதகமே. நீண்டகால அடிப்படையில், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடரலாம். `இப்போது நிறுத்திவிட்டு, பிற்பாடு தொடரலாம்’ என்ற யோசனையே வேண்டாம். 2008-ம் ஆண்டில் பலரும் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என்பதே பெரும்பாலான அனலிஸ்டுகளின் கருத்தாக இருக்கிறது.’’

பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் டெபாசிட்களுக்கு கிரிசில் நிறுவனம் ரேட்டிங்கைக் குறைத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறதே?

“தரச்சான்றிதழ் நிறுவனமான கிரிசில், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹவுஸிங் ஃபைனான்ஸ் டெப்பாசிட்டுகளுக்கு, ‘AAA’ என்ற ரேட்டிங்கிலிருந்து, ‘AA+’ என்று ரேட்டிங்கைக் குறைத்திருக்கிறது. பலவீனமான சொத்துகள் மற்றும் முந்தைய மாதங்களைவிட நிதி திரட்டும் திட்டங்களின் மதிப்பு குறைந்திருப்பது போன்ற காரணங்களால் ரேட்டிங்கைக் குறைத்திருக்கிறது கிரிசில். நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் 2019 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி 1.75 சதவிகிதமாக இருக்கிறது.”

முடிந்த டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் எப்படி வந்திருக்கின்றன?

“பொருளாதார மந்தநிலை, உற்பத்திப் பொருள்களின் தேவை குறைவு, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது போன்ற பல காரணங்களால் பல நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்திருக்கிறது. இருப்பினும், நிறுவன வரிக் குறைப்பு, வலிமையான நிதி நிலை, பட்ஜெட் சலுகைகள் போன்றவற்றால் பி.எஸ்.இ 500 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், டிசம்பர் காலாண்டில் இரு மடங்கு லாபம் ஈட்டியுள்ளன. யூஃப்ளெக்ஸ், தீபக் ஃபெர்டிலைஸர், ஜே.எம். ஃபைனான்ஷியல், சோழமண்டலம் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ், யூ.பி.எல், ஏ.பி.எல் அப்போலோ, கோத்ரேஜ் பிராபர்டீஸ் மற்றும் ஐ.டி.சி உள்ளிட்ட 53 நிறுவனங்கள் லாபத்தை இரண்டு மடங்காகவும், எட்டு நிறுவனங்கள் 1,000 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபத்தையும் இந்தக் காலாண்டில் பதிவுசெய்திருக்கின்றன.”

வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு நிலுவையிலுள்ள உரிமக் கட்டணத் தொகை மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிப்லா நிறுவனத்தின் பங்கு விலை திடீரென குறைந்திருக்கிறதே... ஏன்?

“கோவாவிலுள்ள சிப்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (USFDA), கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வுக்குப் பிறகு சிப்லா நிறுவனத்துக்கு எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளியானதும், வர்த்தக நாளின் இடையே சிப்லா நிறுவனத்தின் பங்கு விலை 5% இறக்கம் கண்டது. ஆனால், சிப்லா நிறுவனமோ உயர்ந்த தரத்தைப் பராமரித்து வருவதாகவும், புகார்களை நன்கு பரிசீலித்து நிவர்த்தி செய்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த ஆய்வறிக்கையால் அந்த நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கருதுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.’’

ஷேர்லக்
ஷேர்லக்

பயோகான் நிறுவனப் பங்கின் விலையும் குறைந்திருக்கிறதே!

“அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (USFDA), கடந்த பிப்ரவரி 20-26 வரை, பெங்களூருவிலுள்ள பயோகான் நிறுவனத்தின் ஏ.பி.ஐ தயாரிப்புக்கூடத்தில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவில் இரண்டு குறைகளைச் சுட்டிக்காட்டியதாகச் செய்தி வெளியானதும் பயோகான் பங்கு விலையில் 2.07% இறக்கம் ஏற்பட்டது. ‘குறிப்பிட்ட காலத்துக்குள் இவற்றைச் சரிசெய்வோம். உலகத்தரத்துடன் தயாரிப்புக்கூடத்தைச் செயல்படுத்த உறுதியுடன் இருக்கிறோம்’ என்று பயோகான் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.’’

வோடஃபோன் ஐடியா பங்கின் விலை தொடர்ந்து இறங்கிக்கொண்டிருக்கிறதே!

“வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு நிலுவையிலுள்ள உரிமக் கட்டணத் தொகை மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. அண்மையில் கிரிசில், கேர் ரேட்டிங்ஸ், இந்தியா ரேட்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ரேட்டிங்கைக் குறைத்தன. இந்தச் சூழலில், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமக் கட்டண நிலுவையில் ரூ.2,500 கோடி மட்டுமே கடந்த பிப்ரவரி 17-ம் தேதி செலுத்தியிருக்கிறது இந்த நிறுவனம். மீதமுள்ள தொகையைச் செலுத்துவதற்காக 15 ஆண்டுகால அவகாசம் அளிக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும், செலுத்த வேண்டிய ரூ.8,000 கோடி ஜி.எஸ்.டி நிலுவையிலும் சலுகையை எதிர்பார்த்தது. இவ்வளவு பெரிய கால இடைவெளியை அவகாசமாகக் கேட்டதுமே சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது. இந்தப் பங்கின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதால், இந்தப் பங்கைத் தொடர்ந்து வைத்திருக்கத்தான் வேண்டுமா என்று யோசிப்பது அவசியம்.’’

வணிகப் பயன்பாட்டு வாகன நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்திருக்கிறதாமே..?

‘‘மூன்றாவது காலாண்டில் சில நிறுவனங்களின் செயல்பாட்டில் காளையின் போக்கு காணப்பட்டதால் நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அசோக் லேலண்ட், ஸ்ரீசிமென்ட், டாடா ஸ்டீல் மற்றும் கிராம்டன் கிரீவ்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூன்றாவது காலாண்டில் நன்கு செயல்பட்டுள்ளன. இதையடுத்து, இவற்றில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் 1.3% முதல் 2.8% வரை அதிகரித்துள்ளன. இவற்றில் அசோக் லேலண்ட் மற்றும் கிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனங்களில் ஐந்து காலாண்டுகளுக்குப் பின்னர் முதலீடுகளை அந்நிய முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ளனர்.

2019-ம் ஆண்டில் வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 20% அளவுக்கு சரிவடைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாக அமைந்தது. அடுத்த 12 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வருமானம் 55 சதவிகிதமாக உள்ளது. இதுவே வணிகப் பயன்பாட்டு வாகனப் பங்குகள்மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் டாடா குளோபல் பிவரேஜஸ், ரிட்ஸ், ஆவாஸ் ஃபைனான்சியர்ஸ் மற்றும் பந்தன் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரித்துள்ளனர். அதிகபட்சமாக, ரிட்ஸ் நிறுவனத்தில் 6.89 சதவிகிதமும், ஆவாஸ் நிறுவனத்தில் 5.63 சதவிகிதமும் முதலீடு அதிகரித்திருக்கிறது’’ என்ற ஷேர்லக் புறப்படுவதற்கு முன்னர் செல்போனைப் பார்த்தார்.

‘‘ஜி.டி.பி குறித்த டேட்டா வந்திருக்கிறது. கடந்த காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 4.7% என்ற அளவுக்கு முன்னேறியிருக்கிறது. கடந்த செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாக இருந்தது. மூன்றாம் காலாண்டு பண்டிகைக் காலம் என்பதால், பொருள் நுகர்வு கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம். தவிர, மத்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரம் முன்னேறத் தொடங்கியிருக்கலாம். ஆனால், நான்காம் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி கண்டால் மட்டுமே நம் பொருளாதாரம் முன்னேற்றத்தின் போக்கில் இருப்பதாகக்கொள்ளலாம். நம்பிக்கையோடு காத்திருப்போம்’’ என்று சொல்லிவிட்டு நண்பரைச் சந்திக்கப் புறப்பட்டார் ஷேர்லக்!

ஆன்டனி வேஸ்ட் ஹேண்ட்லிங் ஐ.பி.ஓ..!

ஆன்டனி வேஸ்ட் ஹேண்ட்லிங் செல் (Antony Waste Handling Cell) நிறுவனம் புதிய பங்கு வெளிட அனுமதி வேண்டி செபி அமைப்பிடம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தது. இதற்கு செபி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் பங்கு விற்பனை மார்ச் 4-ம் தேதி ஆரம்பிக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டின்மூலம் 300 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 43.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளும், ஆஃபர் ஃபார் சேல் மூலம் 250 கோடி ரூபாய் பங்குகளும் விற்கப்படுகின்றன. இந்த ஐ.பி.ஓ விண்ணப்பிக்கக் கடைசி தேதி மார்ச் 6. திரட்டப்படும் நிதியை நிறுவனத்தின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும், நிறுவன விரிவாக்கத்துக்கும் பயன்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது!