Published:Updated:

ஷேர்லக் : எஃப்.எம்.சி.ஜி பங்குகளில் முதலீடு செய்யலாமா? - இப்போது சரியான தருணமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஹட்சன் நிறுவனம் 1:3 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது!

திகாலையில் தகவல் அனுப்பியபடி, சரியாக மாலை 4.00 மணிக்கு நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். “ஆயுத பூஜையை முன்னிட்டு இதழை ஒருநாள் முன்னதாக முடிக்கிறீர்கள்போல. வேலைச்சுமை அதிகம் இருக்கும். சீக்கிரம் பேசி முடிப்போம். கேள்விகளைக் கேளுங்கள்” என்று அவர் சொன்னதும் நாம் கேட்க ஆரம்பித்தோம்.

ஹிந்துஸ்தான் யூனிலிவர் காலாண்டு முடிவு எப்படி?

“ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் (ஹெச்.யு.எல்), நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 9% அதிகரித்து1,974 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 1,818 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல, விற்பனையின்மூலம் கிடைத்த வருமானமும் 15.19% அதிகரித்து 11,510 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10,223 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனம் இதன் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக 14 ரூபாய் அறிவித்திருக்கிறது.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷேர்லக்
ஷேர்லக்

எஃப்.எம்.சி.ஜி நிறுவனப் பங்குகளை இப்போது முதலீட்டுக்குக் கவனிக்கலாமா?

“வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் என்ற எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த பொருள்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக தேவை இருந்தது. இப்போதும் அந்தத் தேவை தொடர்கிறது. பண்டிக்கைக் காலம் தொடங்கியிருப்பதால், எஃப்.எம்.சி.ஜி பொருள்களுக்கான தேவை முன்பைவிட அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு விவசாய விளைச்சல் நன்றாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகக் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் டிராக்டர் விற்பனை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இந்த எண்ணிக்கை 2019 டிசம்பரில் சுமார் 45,000 என்ற நிலையில்தான் இருந்தது. இதனால், கிராமங்களில் எஃப்.எம்.சி.ஜி பொருள்களுக்கான தேவை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்களில் நவராத்திரி உள்ளிட்ட திருவிழாக்கள் தொடங்கி யிருப்பதால், ஏற்கெனவே இந்தப் பொருள் களுக்கான தேவை கூடியிருக்கிறது.

அந்த வகையில், ஹெச்.யு.எல், இமாமி, மாரிகோ போன்ற நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து, அவற்றின் லாபம் அதிகரிக்கும். இந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்கிறார்கள் பங்குச் சந்தை ஆய்வாளர்கள்.’’

பொதுத்துறை நிறுவனங்களிலும் பைபேக் இருக்கும் போலிருக்கிறதே?

“டி.சி.எஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடமிருந்து கணிசமான தொகைக்குப் பங்குகளைத் திரும்ப வாங்க (பைபேக்) இருக்கிறது. இந்தப் பட்டியலில் பொதுத்துறை நிறுவனங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 2021-க்குள் குறிப்பிட்ட அளவு பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கும்படி பொதுத்துறை நிறுவனங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. கோல் இந்தியா, என்.டி.பி.சி, என்.எம்.டி.சி மற்றும் இன்ஜினீயர்ஸ் இந்தியா பங்குகள் பைபேக் செய்யப்படலாம் என்கிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்.”

எல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட் கைமாறும் போலிருக்கிறதே?

“லார்சன் அண்ட் டூப்ரோவின் மியூச்சுவல் ஃபண்ட் வணிகத்தை முழுவதுமாக வாங்கும் பேச்சுவார்த்தையில் நியூயார்க்கைச் சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் இறங்கியிருக்கிறது. இது நடந்தால், மியூச்சுவல் ஃபண்ட் அல்லாத வெளிநாட்டு நிறுவனத்தால் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கப்படுவது இதுவே முதல்முறையாக அமையும். செப்டம்பர் காலாண்டு இறுதியில் 39 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுடன் எல் அண்ட் டி ஏ.எம்.சி, ரூ.63,057.2 கோடியை நிர்வகித்து வருகிறது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிக்கலிலிருக்கும் லட்சுமி விலாஸ் பேங்க் நிதி திரட்டுவது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

“தனியார் வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் பேங்க்கின் இயக்குநர் குழு, உரிமைப் பங்கு வெளியிடுவதன் மூலம் 500 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டில், ஏற்கெனவே பங்குதாரர்களாக இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த வங்கிப் பங்குகளில் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் குரோத் ஃபண்ட் லிமிடெட் - பைன்வுட் ஸ்டாடர்ஜி (3.74%), ஏவியேட்டர் எமெர்ஜிங் மார்க்கெட் ஃபண்ட் (2.49%), ஜே.எம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (3.88%), ஸ்ரீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் (3.34%) மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் (4.99%) ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பதால், அவர்களுக்கும் இந்த உரிமைப் பங்கு வெளியீட்டில் பங்கேற்க முடியும்.”

ஈக்விட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஐ.பி.ஓ வெளியீடு எப்படியிருக்கிறது?

“இந்தப் புதிய பங்கு வெளியீட்டின்மூலம் 517.6 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது. பங்கு ஒன்றின் விலை 32 - 33 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20 - 22 வரை நடந்த இந்த விற்பனையில் 7,20,00,000 பங்குகள் வெளியிடப்படுகின்றன. முதல்நாளில் சுமார் 39% பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் நாளன்று இது 53 சதவிகிதமாக உயர்ந்தது.”

ஷேர்லக்
ஷேர்லக்

தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் சில பங்குகள் மட்டும் நன்றாக விலை ஏறியிருக்கின்றனவே?

“கடந்த ஐந்து ஆண்டுகளில் தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் அதானி டிரான்ஸ்மிஷன், அஷாபுரா மைன்கெம் (Ashapura Minechem), காம்லின் ஃபைன் சையின்ஸ், கொரமண்டல் இன்டர்நேஷனல், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி ஆகிய ஐந்து நிறுவனங்களின் பங்குகள் நன்றாக விலை ஏறியிருக்கின்றன.

கடந்த ஐந்தாண்டுகளில் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் முறையே சுமார் 12% - 40% வரை அதிகரித்துள்ளது. ஆஷாபுரா மைன்கெம் நிறுவனத்தின் பங்கு விலை 12% - 30% வரை அதிகரித்துள்ளது.கேம்லின் ஃபைன் சையின்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 13% - 40% வரை அதிகரித்துள்ளது.

கொரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு விலை 15% - 20% வரை அதிகரித்துள்ளது. அதேபோல, டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்கு விலை 10% - 20% வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் தீபாவாளிக்கு முந்தைய ஆண்டு இவற்றின் விலை எப்படி அதிகரிக்கிறது என்று கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வருகிறதே!

“கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 1,750 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதற்கு பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது. புதிய பங்கு வெளியீட்டின்மூலம் 1,000 கோடி ரூபாயும், ஆஃபர் ஃபார் சேல் மூலம் 750 கோடி ரூபாயும் திரட்டப்படும். இந்தப் புதிய பங்கு வெளியீட்டை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் மற்றும் எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.”

பிரிட்டானியா நிறுவனத்தின் லாபம் அதிகரித்தும் பங்கு விலை குறைந்திருப்பதற்கு என்ன காரணம்?

“இந்த நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இதன் ஒருங்கிணைந்த லாபம் 23.2% அதிகரித்து, 498.13 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வருமானம் 12.1% அதிகரித்து, 3,419.11 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல, எபிட்டா வருமானமும் 37.2% அதிகரித்து, 675.39 கோடி ரூபாயாக உள்ளது. இருப்பினும் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை சரிந்து வர்த்தகமானது.”

ஹட்சன் அக்ரோ நிறுவனம் இலவசப் பங்குகளை வழங்குவது மகிழ்ச்சியான விஷயம்தானே..!

“ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழு 1:3 என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை (போனஸ்) வழங்குவதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. தகுதிவாய்ந்த பெரு முதலீட்டாளர்களிடமிருந்து (கியூ.ஐ.பி) நிதி திரட்டுவதற்கும் இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 65.79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், இது 25.24 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல, நிறுவனத்தின் வருமானமும் 3.79% அதிகரித்து 1,327 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,278.55 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவு வெளியானதிலிருந்து இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.850-லிருந்து இன்று (புதன்கிழமை) ரூ.803.65-ஆகக் குறைந்திருக்கிறது’’ என்றவர், புறப்படுவதற்குமுன் குடையை எடுத்தார்.

‘‘கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவை நோக்கிவந்த நேரடி முதலீடு 27 பில்லியன் டாலர். கடந்த ஆண்டை விட இது 3 பில்லியன் டாலர் அதிகம். வெளிநாட்டவர் நம்மீது வைக்கும் நம்பிக்கையை நம் மக்களும் வைத்து முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பார்க்கலாம்’’ என்றபடி, ஆயுத பூஜை வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்!

பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - கட்டணப் பயிற்சி வகுப்பு..!

ஷேர்லக் : எஃப்.எம்.சி.ஜி பங்குகளில் முதலீடு செய்யலாமா? - இப்போது சரியான தருணமா?

‘பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் – பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு’ என்ற இணைய கட்டணப் பயிற்சி வகுப்பை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்தப் பயிற்சி வகுப்பு நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதி நடக்கிறது. இரண்டு நாள் வகுப்பு களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.4,500.

எக்ட்ரா பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார்.

முன் பதிவுக்கு https://bit.ly/2HJNBzS

இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம் வருமான வரி சேமிப்பது எப்படி?

ஷேர்லக் : எஃப்.எம்.சி.ஜி பங்குகளில் முதலீடு செய்யலாமா? - இப்போது சரியான தருணமா?

‘இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம் வருமான வரியைச் சேமிப்பது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்துக் கூட்டுக் குடும்ப (HUF) அமைப்பை உருவாக்குவதன் மூலம் வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். அது எப்படி என்ற விரிவான கருத்தரங்கம்தான் இது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 9 மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடக்கிறது. கட்டணமில்லா கருத்தரங்கமான இதில் ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜு (Kgrca.in) சிறப்புரையாற்றுகிறார்.

முன் பதிவுக்கு: https://events.vikatan.com/151-hindu-undivided-family/