Published:Updated:

ஷேர்லக் : உச்சத்தில் சந்தை... வரிசைகட்டும் ஐ.பி.ஓ-க்கள்..! - முதலீடு செய்யலாமா?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

3 முதல் 5 ஆண்டுகள் காத்திருக்க முடியும் என்பவர்கள் மட்டுமே புதிய ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்ய வேண்டும்!

ஷேர்லக் : உச்சத்தில் சந்தை... வரிசைகட்டும் ஐ.பி.ஓ-க்கள்..! - முதலீடு செய்யலாமா?

3 முதல் 5 ஆண்டுகள் காத்திருக்க முடியும் என்பவர்கள் மட்டுமே புதிய ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்ய வேண்டும்!

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு
ண்ணீர் அருந்துவதற்காக முகக்கவசத்தை நீக்கிவிட்டு வாட்டர் பாட்டிலை எடுக்கவும், ஷேர்லக் உள்ளே வரவும் சரியாக இருந்தது. “பொதுப் போக்குவரத்தெல்லாம் அனுமதிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக கொரோனா முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம்” என்று நமக்கு அறிவுறுத்தவே, நாம் மாஸ்க்கை அணிந்துகொண்டு அவருக்கு வணக்கம் சொன்னோம். தண்ணீர் குடிக்கவே மாஸ்க்கை எடுத்தோம் எனச் சட்டென புரிந்துகொண்டு சிரித்தவர், “கேள்விகளைக் கேளுங்கள்” என்றார்.

ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸ் காலாண்டு முடிவுகள் மோசமாக வந்திருக்கும் நிலையில் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனம் தனது ஜூன் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இதில் ரூ.74.47 கோடியை நிகர இழப்பாக இந்த நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. ஃபாஸ்ட்புட் கடைகளான டோமினட்ஸ் பிஸா மற்றும் டன்கின் டோனட்ஸ் ஆகியவற்றை இந்தியாவில் இயக்கும் இந்த நிறுவனம், கோவிட்-19 தொற்றின் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. கடந்த காலாண்டில் விற்பனை முற்றிலும் தடைபட்டதால் இந்த நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால், வரும் காலாண்டுகளில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு மேம்படும் என்ற கணிப்பில், இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு அதிகரித்திருக்கிறது. இதனால், கடந்த வாரம் புதன்கிழமை அன்று, சந்தை முடியும்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3.87% அதிகரித்து, 2,231.70 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக்
ஷேர்லக்

ஆர்.பி.எல் (RBL) பங்கு விலை குறைந்ததற்கு என்ன காரணம்?

“கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் இந்த வங்கியின் மேலாண்மை இயக்குநர் விஸ்வாவிர் அஹுஜா, தன்வசமிருந்த 18,92,900 பங்குகளை சுமார் 38.52 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, ஆர்.பி.எல் வங்கிப் பங்கானது, 3% வரை விலை குறைந்து வர்த்தக மானது.”

பார்தி ஏர்டெல் பங்கை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்கிறார்களே?

“பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகியவை, கடந்த மார்ச் மற்றும் ஜூன் காலாண்டுகளில் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தன. இதன் விளைவாக, இவ்விரு நிறுவனங்களும் ஒரே காலாண்டில் நிகர இழப்புகளைப் பதிவு செய்தன. இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 10 ஆண்டுகள் வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 10 ஆண்டுக் கட்டண காலக்கெடு ஏப்ரல் 1, 2021 முதல் தொடங்கும்.

இந்த அறிவிப்புக்குப் பின்னர், பார்தி ஏர்டெல் 6.4% உயர்ந்தது. வோடஃபோன் ஐடியா 12.76% சரிந்தது. ஆனால், பங்கு வெளியீடு மற்ற இதர ஆவணங்களின் மூலம் நிதி திரட்டுவதற்கான நடவடிக்கைகளை விவாதிக்க, வாரியம் செப்டம்பர் 4-ம் தேதி கூடுவதாக செப்டம்பர் 2-ம் தேதி அறிவிப்பு வெளியானதால், செப்டம்பர் 2-ம் தேதி வர்த்தகம் தொடங்கும் போதே வோடஃபோன் ஐடியா நிறுவனப் பங்கின் விலை திடீரென 10% வரை அதிகரித்து வர்த்தகமாகியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், மோதிலால் ஆஸ்வால் ஆகிய தரகு நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை தற்போதைய விலையைவிட சுமார் 25% அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பார்தி ஏர்டெல் பங்கின் இலக்கு விலையாக 700 ரூபாயை நிர்ணயித்துள்ளது. மோதிலால் ஆஸ்வால் 650 ரூபாயை இலக்கு விலையாக நிர்ணயித்துள்ளது.”

புதிய பங்கு வெளியீட்டு சீஸன் தொடங்கிவிட்டது போலிருக்கே..?

‘‘இந்தியப் பங்குச் சந்தை இப்போது உச்சத்தில் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மூலம் பெரும்தொகையைத் திரட்டிவிடலாம் எனப் பல நிறுவனங்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன. சுமார் மூன்று டஜன் நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.33,000 கோடி திரட்டத் திட்ட மிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஷேர்லக்
ஷேர்லக்

பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கிவிடும் நிலையில் பொது ஊரடங்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு, இந்தியப் பொருளாதாரம் நாலு கால் பாய்ச்சலில் வளர்ச்சிக்காணும் என்பது பலரின் எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பாக இருக்கிறது. கூடவே பங்குச் சந்தை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் எனலாம்.

நடப்பு 2020–ம் ஆண்டில் செப்டம்பர் 3-ம் தேதி வெறும் மூன்று நிறுவனங்கள் மட்டுமே புதிய வெளியீட்டின் மூலம் நிதி திரட்டி இருக்கிறது. எஸ்.பி.ஐ கார்ட்ஸ் (ரூ. 10,000 கோடி), ரோசாரி பயோடெக் (ரூ.500 கோடி), மைண்ட் ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் ரெய்ட் (ரூ.4,500) கோடி ஆகிய நிறுவனங்கள் 2020-ல் ஐ.பி.ஓ வந்துள்ளன. 2019-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 11 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வந்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரும் நாள்களில் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ், ரூட் மொபைல், கேம்ஸ், யூ.டி.ஐ ஏ.எம்.சி, ஏஞ்சல் புரோக்கிங், ஐ.ஆர்.எஃப்.சி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், என்.எஸ்.இ எனப் பல நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கோவிட் பரவலை அடுத்த ஊரடங்கால் பல நிறுவனங்களால் செயல்பட முடியவில்லை. அவற்றின் கைவசம் இருந்த தொகையும் கணிசமாகச் செலவாகியிருக்கிறது. இந்த நிலையில், நிதித் தேவைக்காகத்தான் பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ வருகின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் சிறப்பாக லாபமீட்ட பல ஆண்டுகள் ஆகலாம். அந்த வகையில் சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் காத்திருக்க முடியும் என்ற நிலையில் மட்டுமே சிறு முதலீட்டாளர்கள் இந்த புதிய ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் நிறுவனங்களின் ஃபண்டமென்டல்களை நன்கு அலசி ஆராய்ந்துதான் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜீஸ் ஐ.பி.ஓ பற்றி..!

‘‘டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஐ.டி கன்சல்டிங் மற்றும் சர்வீசஸ் நிறுவனங்களில் ஒன்றான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜீஸ் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.700 கோடி நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. 3,56,63,585 பங்குகள் விற்பனைக்கு வெளியிடப்படுகின்றன. இதன் பங்கு விலைப் பட்டை 165-166 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த வெளியீடு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி, 9-ம் தேதி நிறைவு பெறுகிறது. குறைந்தபட்சம் 90 பங்குகளுக்கும், 90 பங்குகளின் மடங்குகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.’’

முதலீடு
முதலீடு

இன்னும் ஐ.பி.ஓ செய்தி இருக்கிறதா?

‘‘இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஐ.பி.ஓ வெளியீட்டின்மூலம் ரூ.976 கோடி நிதியைத் திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.800 கோடியும், ஆஃபர் ஃபார் சேல் மூலம் ரூ.176.2 கோடியும் திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பங்கு வெளியீடு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இருக்கும்’’ என்றவர், ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.

‘‘நாணயம் விகடன் தற்போது எல்லா ஊர்களிலும் சனிக்கிழமை காலையிலேயே கிடைக்கிறது. இந்தத் தகவலை ஆன்லைனில் அடிக்கடி வெளியிடுங்கள். அப்போதுதான் இந்தத் தகவல் எல்லோருக்கும் தெரியும். சனிக்கிழமை காலை ஜூனியர் விகடன் வாங்கும்போது இனி நாணயம் விகடனையும் சேர்த்து வாங்கலாம்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

முயற்சிதான் பிசினஸில் முதலீடு!

நாணயம் விகடன், ‘முயற்சிதான் பிசினஸில் முதலீடு!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை செப்டம்பர் 7-ம் தேதி மாலை 6.30 - 7.30 மணிக்கு நடத்த உள்ளது. மதுரா டிராவல்ஸ் நிறுவனர் வி.கே.டி. பாலன் சிறப்புரை வழங்குகிறார். அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய: https://bit.ly/2EL82LO

பங்குச் சந்தை பயிற்சி வகுப்புகள்!

நாணயம் விகடன், டெக்னிக்கல் அனாலிசிஸ் – பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு கட்டணப் பயிற்சி வகுப்பை ஆன்லைனில் நடத்துகிறது. இந்த வகுப்பில் தி.ரா.அருள்ராஜன் பயிற்சியளிக்கிறார். பேசிக்ஸ் செப்டம்பர் 26, 2020, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை. கட்டணம் ரூ.3,500.

அட்வான்ஸ்டு வகுப்பு செப்டம்பர் 27, 2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. கட்டணம் ரூ.3,500.

இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ரூ.6,000. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்ய: https://bit.ly/3hTW9l1

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism