Published:Updated:

ஷேர்லக் : தள்ளுபடி விலையில் ஐ.டி பங்குகள்..! - கொரோனாவுக்குப் பிறகு புதிய வாய்ப்பு!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு மிகவும் உயர்ந்து வருவதால், இந்திய ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சியும் மேம்படும்!

‘‘ரயில் போக்குவரத்து ஆரம்பித்தவுடன், டிக்கெட் ரிசர்வ் செய்து ஊருக்கு வந்து விட்டேன். இன்று மாலை 4 மணிக்கு ஸ்கைப்பில் வந்தால், உங்களுக்கான தகவல்களைச் சொல்லிவிடுகிறேன்’’ என்று காலையிலே நம் வாட்ஸ்அப்க்கு தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். அவர் சொன்னதுபோல, மாலை 4 மணிக்கு அவரை ஸ்கைப்பில் பிடித்தோம். இனி நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

ரூட் மொபைல் பங்கு வெளியீட்டுக்கு அமோக ஆதரவு போலிருக்கிறதே?

‘‘கிளவுட் கம்யூனிகேஷன் சேவை நிறுவனமான ரூட் மொபைல் 600 கோடி ரூபாயைத் திரட்டும் நோக்கில், புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களமிறங்கியது. முதல் நாளிலேயே இந்த நிறுவனப் பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த வெளியீட்டில் மொத்தம் 1.21 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்தன. ஆனால், முதல் நாளிலேயே 1.22 கோடி பங்குகளுக்கு, முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். 1.8 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 46.56% நிறுவன முதலீட்டாளர்கள் 1.21% விண்ணப்பத்திருந்தனர். இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் 240 கோடிக்கு ஐ.பி.ஓ வெளியீடும், 360 கோடி ரூபாய்க்கு ஆஃபர் ஃபார் சேல் வெளியீடும் இருக்கிறது. பங்கு ஒன்றின் விலைப் பட்டை 345-350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இன்னொரு ஐ.பி.ஓ தகவல்... ஹேப்பியஸ்ட் மைண்ட் ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. ரூ.700 கோடி நிதி திரட்ட இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வந்தது. கிட்டத்தட்ட 151 மடங்கு அதிகம் விண்ணப்பங்கள் வந்துசேர்ந்துள்ளன. ரூ.58,000 கோடி அளவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. வரும் 17-ம் தேதி அன்று இந்தப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளது!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எஸ்கார்ட்ஸ் நிறுவனப் பங்கு விலை திடீரென உயர என்ன காரணம்?

‘‘விக்டரி இ.எம் ஸ்மால்கேப் ஃபண்ட் நிறுவனம், எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் 0.65% பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,165.44 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன் காரணமாக எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 7.56% அதிகரித்து, 1,205.80 என்ற விலையில் வர்த்தகமானது. இந்தப் பங்கு பரிவர்த்தனையில் மொத்தம் 8,03,003 பங்குகள் வர்த்தகமாகி யிருக்கின்றன.’’

டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனப் பங்கு வாங்கவும் பட்டிருக்கிறது, விற்கப்பட்டிருக்கிறதே?

‘‘ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 8,64,000 பங்குகளை வாங்கியிருக்கிறது. பங்கு 215 ரூபாய் விலையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஹிமாலயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி நிறுவனம், அதே 215 ரூபாய் விலையில் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனப் 10,45,664 பங்குகளை விற்பனை செய்திருக்கிறது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாரத் டைனமிக் பங்கு விற்பனை எப்படி?

‘‘நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனப் பங்கு வெளியீட்டின் மூலம் 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. அந்த வரிசையில், 770 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில், ராணுவத் துறையைச் சேர்ந்த பாரத் டைனமிக் லிமிடெட், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சலுகை விலையில் 2.74 கோடி பங்குகளை, 330 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. இந்தப் பங்கு விற்பனையில் சிறு முதலீட்டாளர்களும், நிறுவன முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார்கள். செபி அமைப்பின் குறைந்தபட்ச பொதுமக்களின் பங்கு முதலீடு விதிமுறையை நிறைவேற்றும் நோக்கத்துடன் இந்தப் பங்கு விற்பனை நடந்துள்ளது.

ஷேர்லக்
ஷேர்லக்

ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் பங்கு செய்திகளில் அடிபடுகிறதே?

‘‘குளோபல் ஃபைனான்ஷியல் நிறுவனமான சிட்டி, ஜீ என்டெர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கின் இலக்கு விலையை 275 ரூபாயாக அதிகரித்தது. மேலும், முதலீட்டாளர்கள் வாங்குவதற்கான பரிந்துரை யையும் வழங்கியது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த புதன்கிழமை அன்று 4% வரை அதிகரித்து வர்த்தகமானது. வியாழக்கிழமை சந்தை முடியும்போது, இந்தப் பங்கானது ரூ.223.15 என்ற விலையில் வர்த்தகமானது.’’

இந்தியப் பங்குச் சந்தைகளில் எஃ.ப்.ஐ.ஐ-க்களின் முதலீடு அதிகரிக்க என்ன காரணம்?

‘‘அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃ.ப்.ஐ.ஐ-க்கள்), கடந்த நான்கு காலாண்டுகளாகத் தொடர்ச்சியாக அக்ரோ-கெமிக்கல் மற்றும் பார்மா துறை சார்ந்த சுமார் 45 நிறுவனப் பங்குகளில், கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆர்த்தி டிரக்ஸ், பெஸ்ட் அக்ரோலைஃப், கிரானுவெல்ஸ் இந்தியா, பாலாஜி அனிமெஸ், அப்போலோ டிரைகோட், இந்தியாமார்ட் இன்டெர்மெஸ், நவின் ஃப்ளோரைன், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் மற்றும் ஜே.பி கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக் கிறார்கள். இந்தப் பங்குகளின் விலை கடந்த ஓராண்டில் 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.’’

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி கணக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர என்ன காரணம்?

‘‘கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 3.30 கோடி எஸ்.ஐ.பி கணக்குகளை நிர்வகித்து வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 11.16 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ளன. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட இதர முதலீடுகள் மீதான வருமானம் குறைந்திருப்பதால் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் இந்த அதிகரிப்பு நடந்திருக்கிறது என்கிறார்கள்.

ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்ட முதலீடு 7,792 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 7,831 கோடி ரூபாயாக இருந்தது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்டிருக்கும் தொகை ஆகஸ்ட் மாதத்தில் 3.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ரூ.17 லட்சம் அதிகமாகும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈக்விட்டி ஃபண்டுகளிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக முதலீடு வெளியேறியிருக்கிறதே?

‘‘ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் ரூ.14,550 கோடி வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், பல ஈக்விட்டி ஃபண்டுகள் கணிசமான வருமானம் கொடுத்திருப்பது மற்றும் கோவிட் பணத்தேவையாக இருக்கிறது.’’

கோவிட் காலத்திலும் புதிய ஃபண்ட் வெளியீடு ஒன்று சாதனை படைத்திருக்கிறதே?

‘‘அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஃபண்ட் வெளியீடுகளில் (என்.எஃப்.ஓ) ஒன்றான நிப்பான் இந்தியா மல்டி அஸெட் ஃபண்ட் முதலீட்டாளர்களிடமிருந்து 720 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. இந்த முதலீட்டுத் திட்டத்தை, நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு வழிகளிலும் அறிமுகம் செய்தது. 370 நகரங்களிலிருந்து, மொத்தம் 80,000 பேர் முதலீடு செய்திருக் கிறார்கள். இதில் 25,000 பேர் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்கியிருக் கிறார்கள். இந்த ஃபண்டில் உள்நாட்டு நிறுவனப் பங்குகள், வெளிநாட்டு நிறுவனப் பங்குகள், கமாடிட்டிகள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் கலந்து முதலீடு செய்யப்படுவதும், அதிக பேர் முதலீடு செய்திருப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. மேலும், இந்த கோவிட் பாதிப்பு காலத்திலும் புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில், அதிக தொகையை முதலீடு செய்திருப்பது, இந்தியப் பொருளாதார வளர்ச்சி மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை யைக் காட்டுவதாக அமைந்துள்ளது.’’

ஷேர்லக்
ஷேர்லக்

இந்திய ஐ.டி நிறுவனப் பங்குகள் தள்ளுபடி விலையில் விற்பனை ஆவதாகச் சொல்லப்படுகிறதே?

‘‘எடெல்வைஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) நிறுவனப் பங்குகள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச ஐ.டி நிறுவனப் பங்குகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 40%-50% தள்ளுபடி விலையில் இந்திய ஐ.டி நிறுவனப் பங்குகள் வர்த்தகமாகி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த விலை வேறுபாடு சரியாவதற்கு இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் எனவும் அது தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அடுத்த காலாண்டுகளுக்கு இந்திய ஐ.டி நிறுவனப் பங்குகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதக் காலத்தில் நிஃப்டி ஐ.டி குறியீடு 15.5% அதிகரித்துள்ளது. ஆனால், இதே கால கட்டத்தில் நிஃப்டி 50 குறியீடு 5% இறக்கம் கண்டிருக்கிறது.

இந்திய ஐ.டி பங்குகளில் நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் மைண்ட்ட்ரீ பங்குதான் அதிகபட்சமாக 50% விலை அதிகரித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எல் அண்ட் டி இன்ஃபோடெக், இன்ஃபோசிஸ், எம்பசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

2020, மார்ச் இறக்கத்திலிருந்து சுமார் 25 ஐ.டி பங்குகளின் விலை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. மிக அதிகமாக டான்லா சொல்யூஷன்ஸ் பங்கின் விலை 500%-க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு இந்திய ஐ.டி நிறுவனப் பங்கின் விலையும் இறங்கவில்லை.

இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு மிகவும் அதிகமாக உயர்ந்து வருவதால், இந்திய ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சியும் மேம்படும் என எடெல்வைஸ் கணித்திருக்கிறது. அந்த வகையில், அவற்றின் பங்கு விலையும் இடையில் இறக்கம் வந்தாலும் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. கோவிட் பாதிப்பால், நாட்டில் டிஜிட்டல் பயன்பாடு கூடியிருக்கிறது. மேலும், வீட்டிலிருந்து பணிபுரியும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அதனாலும், ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு சரியான பிறகு, 2023-24 முதல் 2026-27 ஆண்டுகளில் இந்திய ஐ.டி நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சியைப் பெறும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்றாண்டு காலத்தில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் லாப வரம்பு 2.5%-3.5% அதிகரிக்கக்கூடும். உலக ஐ.டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் டி.சி.எஸ் நிறுவனப் பங்குகள் மதிப்பீட்டின் அடிப்படையில் சுமார் 50% தள்ளுபடி விலையில் வர்த்தகமாகி வருகின்றன.

இவை தவிர, டெக் மஹிந்திரா, இ-கிளர்க், சையன்ட், பெர்சிஸ்டென்ட், எல் அண்ட் டி இன்ஃபோடெக், மைண்ட்ட்ரீ ஆகிய நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்கிறது அந்த ஆய்வறிக்கை’’ என்றவர், புறப்படுவதற்குமுன் இப்படிச் சொன்னார்.

‘‘உமது நாணயம் விகடன் யூடியூப் (https://bit.ly/35moeh8) சூப்பர். நீர் நாணயம் விகடன் மூலம் செய்த சேவையை இப்போது யூடியூப் மூலம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். எல்லோரும் இதைப் பார்த்து பயனடைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

அடுத்த வாரத்தின் நடுவில் சென்னை திரும்பிவிடுவேன். எனவே, நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேலுவின் பேச்சை நான் ஊரிலிருந்து கேட்கிறேன். செப்டம்பர் 26, 27 தேதிகளில் ஆன்லைன் மூலம் நீங்கள் நடத்தும் பங்குச் சந்தை பயிற்சி வகுப்புகள் முதலீட்டாளர்களுக்குப் பயனுடையதாக இருக்கும்’’ என்று சொல்லிவிட்டு, ஸ்கைப்பிலிருந்து மாயமானார்.

பி.எஃப் வட்டி இரண்டு தவணையாக!

ருங்கால வைப்பு நிதியில் (பிராவிடன்ட் ஃபண்ட் – பி.எஃப்) வழங்கப்படும் வட்டி இந்த ஆண்டு இரண்டு தவணையாக வழங்கப்படும். 2019-2020 நிதி ஆண்டுக்கான வட்டியான 8.5%-ல் 8.15% முதல் தவணயாகவும் மீதமுள்ள 0.35% வரும் டிசம்பர் மாதத்திலும் வழங்கப்படும் என பணியாளர் பி.எஃப் அலுவலகம் தெரிவித்திருக்கிறது!

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு பயிற்சி!

ஷேர்லக் : தள்ளுபடி விலையில் ஐ.டி பங்குகள்..! - கொரோனாவுக்குப் பிறகு புதிய வாய்ப்பு!

நாணயம் விகடன், பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ் பேசிக்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு கட்டணப் பயிற்சி வகுப்பை ஆன்லைனில் நடத்த உள்ளது. தி.ரா.அருள்ராஜன் (முதன்மை செயல் அதிகாரி, Ectra.in) பயிற்சி அளிக்கிறார். பங்குகளை வாங்கவும் விற்கவும் என்னென்ன டெக்னிக்கல் அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் இந்தப் பயிற்சி வகுப்பு செப்டம்பர் 26-ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மற்றும் 27-ம் தேதி மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் பதிவு செய்துகொள்ளவும்.

https://bit.ly/3hTW9l1

குடும்ப பட்ஜெட் போடுவது எப்படி?

ஷேர்லக் : தள்ளுபடி விலையில் ஐ.டி பங்குகள்..! - கொரோனாவுக்குப் பிறகு புதிய வாய்ப்பு!

நாணயம் விகடன் & அவள் விகடன் இணைந்து ‘குடும்ப பட்ஜெட் போடுவது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன. கட்டணமில்லா இந்த நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்கலாம். குடும்ப பட்ஜெட் போடும் சூட்சுமங்களை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன். இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6.30 மணி முதல் to 7.30 மணி வரை நடைபெறும். கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் பதிவு செய்துகொள்ளவும்.

https://bit.ly/2Zfceu0

பிசினஸில் தோல்வி... மீளும் வழிகள்!

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல் சிறப்புரை

ஷேர்லக் : தள்ளுபடி விலையில் ஐ.டி பங்குகள்..! - கொரோனாவுக்குப் பிறகு புதிய வாய்ப்பு!

பிசினஸில் தோல்வி அடைந்துவிட்டால், அதிலிருந்து மீளும் 7 படிநிலைகள் பற்றிய ஆன்லைன் நிகழ்ச்சியை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்குகிறார் நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.குமரவேல். இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் இல்லை. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 14-ம் தேதி மாலை 6.30 மணி முதல் to 7.30 மணி வரை நடைபெறும். கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் பதிவு செய்துகொள்ளவும்.

https://bit.ly/2QY8fxu