Published:Updated:

பெட்ரோகெமிக்கல்ஸ்... முதலீட்டுக்கு வாய்ப்புள்ள பங்குகள்! - நிபுணரின் விரிவான அலசல்

கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
News
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோ கெமிக்கல்கள் மீது நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளது!

ச்சா எண்ணெய் விலைச்சரிவுக்குப் பிறகு, வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து, பல கேள்விகள் எழுந்துள்ளன.

கோவிட்19-க்குப் பிறகு, நிலைமை உடனடியாகச் சீரடைவதற்கு வாய்ப்புகள் இல்லையென்பதால், முக்கிய நிறுவனங்கள் மற்ற நாடுகளுடன் கைகோத்து புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்புக்காட்டத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெயின் தேவையானது அடுத்த 10 வருடங்களில் உலகத் தேவையானது முன்பு கணித்ததைவிடக் குறைவாக இருக்கக்கூடும் என்ற செய்திகளின் அடிப்படையில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் ஏற்றுமதியை மட்டும் நம்பியிருக்காமல், அதுசார்ந்த மற்ற பொருள்களின் வர்த்தகத்தின்மீது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன.  

பெட்ரோகெமிக்கல்ஸ்... முதலீட்டுக்கு வாய்ப்புள்ள பங்குகள்! -  நிபுணரின் விரிவான அலசல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுவரை, கச்சா எண்ணெயிலிருந்து பிரிக்கப்படும் எரிவாயு மற்றும் டீசல் போன்றவை முதல்நிலை வர்த்தகமாக இருந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் இரண்டாம் நிலை வர்த்தகமாகக் கருதப்படுகிற பெட்ரோகெமிக்கல்ஸ் மீது தனது விரிவாக்க முயற்சிகளில் முனைப்புக் காட்டி வருகின்றன.

பெட்ரோகெமிக்கல்ஸ் துறை

பெட்ரோகெமிக்கல்ஸ் என்பது எண்ணெய் மற்றும் எரிவாயு இவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிற இணைப்பொருள்களைக் குறிக்கிறது. பெட்ரோகெமிக்கல்ஸின் பயன்பாடு நவீன சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய அளவில் தனது பங்கை அளித்து வருகிறது. 

உதாரணமாக, டெக்ஸ்டைல், உரம், துணிவகைகள், பேக்கேஜிங், டிஜிட்டல் கருவிகள், சுகாதாரக் கருவிகள், சோப், டயர் ஆகியவற்றிலும், அலங்காரப் பொருள்கள், பொம்மை போன்ற விளையாட்டுப் பொருள்களிலும் இடம்பெற்றிருக்கிறது. இவை தவிர, சோலார் பேனல், காற்றாலைகள் பேட்டரிகள், கட்டடங்கள், மின்சார வாகனங்களில் வெப்பத் தடுப்பானாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

உலக அளவில், 2019-ம் ஆண்டில்  பெட்ரோகெமிக்கல்ஸ் வர்த்தகம் சுமார் 441 பில்லியன் டாலர்களாகக் காணப்பட்டது. நடப்பு 2020-ம் ஆண்டில் 476 பில்லியன் டாலர்களாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் இதன் வர்த்தகம் 651 பில்லியன் டாலர்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டில், சர்வதேசப் பயன்பாட்டின் மொத்த அளவோடு ஒப்பிடுகையில், ஆசியா-பசிபிக் நாடுகளின் பயன்பாடு 50% என்ற அளவுக்கு காணப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் இதன் நுகர்தல் அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது இந்தத் துறையின் வளர்ச்சியானது, கடைநிலைப் பயன்பாட்டு நிறுவனங்களின் தேவை அதிகரித்து வருவதை யொட்டியும், கெமிக்கல் நிறுவனங்களின் விரிவாக்கத்தையும் சார்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தியாவில் பெட்ரோகெமிக்கல் துறை..!

இந்தியாவைப் பொறுத்தவரை, ரசாயனத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை அளிப்பத்தில் பெட்ரோகெமிக்கல்ஸின் பங்களிப்பு 30 சதவிகிதமாகக் காணப்படுகிறது. 2020-ம் ஆண்டுக்குள் பெட்ரோகெமிக்கல்ஸ் வர்த்தகம் 100 மில்லியன் டாலர்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங் களால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களுடன், சர்வதேச நிறுவனங்கள் கைகோத்து முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகப் பார்க்கப் படுகின்றன. சுமார் 30 பில்லியன் டாலர்கள் அளவுக்குக் கடைநிலை வேதிப் பொருள்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களால் முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

மாற்றங்களைச் சந்தித்துவரும் பெட்ரோ கெமிக்கல்துறை கோவிட்-19-க்குப் பிறகு, உலக அளவில் உற்பத்தியிலும், உற்பத்தி செய்யப்பட்டதை மற்றொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கோவிட்19-ன் தாக்கம் தற்காலிகமானது என்றாலும், மிகுந்த கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தியும், அதேசமயத்தில் நுகர்தலும் பெருமளவு குறைந்துள்ளது.   

சீனாவில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் வேதிப்பொருள்களின் கையிருப்பு குறைவாக இருத்தல் காரணமாக பாலிமர் மற்றும் சிந்தெடிக் ரப்பர் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் தாக்கம், சீனாவின் கச்சா எண்ணெய், பெட்ரோகெமிக்கல்ஸ் ஆகியவற்றின் தேவை குறைய காரணமாக அமைந்துள்ளது.  

சீனாவின் கச்சா எண்ணெய் நுகர்தல் குறைவதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் சர்வதேச விலை உடனடியாக ஏற்றமடைவதற்கு வாய்ப்பில்லை. இதனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள், சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கின்ற இந்தியாவுக்கு, தள்ளுபடி விலையில் விற்க ஒப்பந்தங்களைச் செய்யத் தொடங்கி விட்டன.

உலகமயமாக்கலுக்குப் பிறகு, முழுமை பெற்ற பொருள்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, அந்தந்த நாடுகளிலிலேயே உற்பத்தி செய்யப்படாமல், வேறு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு இடையில்,  அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள் களுக்கு, மூலப்பொருள்கள் தவிர, இடைநிலை மூலப்பொருள்கள் வேறு சில நாடுகளிலிருந்து பெறப்பட்டு முழுமையடைகின்றன. அதன் பிறகு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய நிலையில், பொருள்கள் முழுமையடைவதற்கு முன்பாகப் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றன. அதாவது, மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள், சுற்றுப்புறச் சூழ்நிலைகள் போன்றவற்றால் தாமதப்பட்டு ஏற்றுமதி தடைபடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் கெமிக்கல்துறையில், இந்திய நிறுவனங்களில் அந்நிய முதலீடுகளுக்கு 100 சதவிகிதம் முதலீடுகளைச் செய்ய அனுமதித்திருப்பது துறை வளர்ச்சிக்குக் கூடுதல் பலம் சேர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது. 

பெட்ரோகெமிக்கல்ஸ்... முதலீட்டுக்கு வாய்ப்புள்ள பங்குகள்! -  நிபுணரின் விரிவான அலசல்

பெட்ரோகெமிக்கல்ஸ் உற்பத்தி

உலக எத்தேன் உற்பத்தியில் அமெரிக்கா 40% பங்கு வகிக்கிறது. ஷேல் எண்ணெய் உற்பத்திக்குப் பிறகு, அமெரிக்காவின் உற்பத்திச் செலவு குறைந்து காணப்படுகிறது. இதுவரை சவுதி அரேபியா, இரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமே குறைந்த உற்பத்திச் செலவில் பெட்ரோகெமிக்கல்களை உற்பத்தி செய்து வந்தன. உலக உற்பத்தியில் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு குறைந்த அளவே இருந்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, உலக உற்பத்தியில் 4% மட்டுமே பங்களிப்பாக இருக்கிற நிலையில், தனது உள்நாட்டுத் தேவையை 2035-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்கு மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் எண்ணெய் நிறுவனங்கள் தங்களை இந்திய நிறுவனங் களுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த மதிப்புக் கூட்டிய துறையாக பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையைப் பார்க்கத் தொடங்கியுள்ளன. 

கேசோலின் பயன்பாடு குறைந்து வருவது, கெமிக்கல் பொருள்களுக்குப் பெரிய அளவில் தேவை அதிகரித்திருப்பது, லாப சதவிகிதம் அதிகமாக இருப்பது போன்றவை அனைத்தும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, முதலீடு செய்ய ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. வழக்கமான முறையான கச்சா எண்ணெயி லிருந்து சுத்திகரிப்பு முறையில் பிரித்தெடுப்பது இல்லாமல், (COTC) சி.ஓ.டி.சி முறையைக் கையாளத் தொடங்கியுள்ளன.

சி.ஓ.டி.சி என்றால் என்ன?

குரூட் ஆயில் டு கெமிக்கல் என்பது சுருக்கமாக சி.ஓ.டி.சி என்று அழைக்கப்படுகிறது. கச்சா எண்ணெயிலிருந்து வேதிப் பொருள்களை நவீன முறையில் பிரித்தெடுப்பது. அதாவது, வழக்கமான முறையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயிலிருந்து 10-15% வரை மட்டுமே வேதிப்பொருள்களைப் பிரித்தெடுப்பதில் மாற்றம் செய்து 60-80% வரை வேதிப்பொருள்கள் (பெட்ரொகெமிக்கல்ஸ்) மற்றும் எரிபொருள் அல்லாத பொருள்களை உற்பத்தி செய்வதாகும். இவ்வாறு இதன் திறன் அதிகரித்துக் காணப் படுவதால் எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் அனைவருக்குமே சி.ஓ.டி.சி தொழில்நுட்பம் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது.  

தற்போதைய நடைமுறையில், ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக் கல்ஸ் வாயிலாக கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் நிகரலாபமானது பேரல் ஒன்றுக்கு 8.5 அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், சி.ஓ.டி.சி முறையில் 17 அமெரிக்க டாலர்களாக நிகர லாபம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகப் பார்க்கப்படுகின்றன.

இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் இருக்கும் உலக நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ, இந்தியாவில் தனது சந்தையை விரிவாக்கம் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் சார்ந்த தொழிலில் 20% பங்குகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

சவுதி அரேபியா கடந்த நிதியாண்டில் 40.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான அராம்கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தால், மீண்டும் இந்தியா வுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி அராம்கோ முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும்பட்சத்தில்,அதிகபட்ச வெளிநாட்டு முதலீடு இதுவாகத் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனமாக பி.பி.சி.எல் தனது 52.98% பங்குகளை விற்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய எண்ணெய் (ரஷ்யா)நிறுவனமான ரோஸ்நெஃப்ட் பி.பி.சி.எல்லின் பங்குகளை வாங்க ஆர்வத்தைக் காட்டியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான பி.பி.சி.எல், ஹெச்.பி.சி.எல், ஐ.ஓ.சி மற்றும் கெயில் இந்தியா போன்றவை தங்களின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்க இருக்கின்றன. முடிவடைந்த காலாண்டுகளில் எண்ணெய் நிறுவனங்களின் ஜி.ஆர்.எம் குறைந்து காணப்பட்டாலும், வரும் காலாண்டில் செயல்திறன் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருப்ப தாகக் கருதப்படுகின்றன.

இந்திய நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி

அடுத்த சில ஆண்டுகளுக்கு, கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய ஏற்றத்துக்குச் சாத்தியமில்லை என்பதும், நுகர்வோரின் தேவையில், இந்தத் துறை சார்ந்த மூலப்பொருள்களால் பெருமளவு பூர்த்தி செய்ய வகை செய்வதாலும், இந்திய நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே காணப்படுகிறது.

பெட்ரோகெமிக்கல் துறைசார்ந்த இந்திய நிறுவனங்களில் குறிப்பாக, பி.ஏ.எஸ்.எஃப், கிளாரியன்ட் கெமிக்கல்ஸ், நாசில், எஸ்.ஆர்.எஃப், ஆர்த்தி இண்டஸ்டிரீஸ் போன்றவற்றின் எதிர்கால செயல்பாடுகள் சிறப்பாக அமைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இனி இந்தத் துறை சார்ந்த நல்ல நிறுவனப் பங்குகள் எவை என்று பார்ப்போம். இந்தப் பங்குகள் முதலீடு செய்வதற்காகச் சொல்லப் படும் பரிந்துரைகள் அல்ல. இந்தப் பங்குகளை உன்னிப்பாகக் கவனித்து, முதலீடு செய்யலாமா என்ற முடிவை முதலீட்டாளர்களே சுயமாக முடிவு செய்துகொள்வது நல்லது. பங்குகள் பற்றிய சிறு குறிப்பு இனி...

கவனிக்க வேண்டிய பங்குகள்...

கிளாரியன்ட் கெமிக்கல்ஸ்

நவீனகால நுகர்வு கொண்டுள்ள, தேவை அதிகம் மிகுந்த டெக்ஸ்டைல் மற்றும் தோல் நிறுவனகளுக்குத் தேவையான ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்கள், நிறமிகள், அலங்கார பொருள்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்களைக் குறைந்த உற்பத்திச் செலவில் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ள இந்த நிறுவனத்துக்குக் கடன் இல்லை என்பது முக்கிய செய்தியாகும்.

பி.ஏ.எஸ்.எஃப்

தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வேதியல் தீர்வுகள், தொழில்நுட்பத்தில் வினையூக்கிகளாகவும், ஊட்டச்சத்து வகைகள் மற்றும் விவசாயம் சார்ந்த கெமிக்கல் தயாரிப்புக்கள் ஏற்றுமதியைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தனது மூலப்பொருள்களின் செலவுகளைக் குறைத்துக்கொண்டு வருவது, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

நாசில்

வாகனத்துறை தொய்வைச் சந்தித்திருப்பதால், இதன் தாக்கம், ரப்பர் கெமிக்கல்ஸில் ஈடுபட்டுள்ள நாசில் நிறுவனமும் அதற்கு விதிவிலக்காக இல்லாமால் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இருந்தாபோதிலும், கடன் சுமையிலிருந்து முழுவதுமாக மீண்டுள்ளது, வாகனத்துறை சிறப்பாகச் செயல்படும்போது, இதன் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க சாதகமான மாற்றங்களைக் காண முடியும்.

எஸ்.ஆர்.எஃப்

நிறுவனத்தின் வருமானம் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதும், கடன் படிப்படியாகக் குறைந்து வருவதும் சாதகமான செய்தியாகும். நிர்வாகத்திறமை, முதலீடுகளைப் பிரித்து திறம்படக் கையாள்வது, வர்த்தகம் அதிகரிக்கும்போது, அதற்கேற்றாற்போல் தங்களது திட்டமிடலை மாற்றி உயர்த்திக் கொள்வது போன்றவை எஸ்.ஆர்.எஃப் நிறுவனத்தின் வரும் கால செயல்திறனை அதிகரிக்க வலுவான காரணங்களாக இருக்கின்றன. கோவிட் 19 ஊரடங்கு அமலில் இருந்த முதல் காலாண்டில், பேக்கேஜ் ஃபிலிம் சார்ந்த வர்த்தகம், சிறப்பாகச் செயல்பட்டதன் விளைவாக உள்நாட்டிலும், ஏற்றுமதியிலும் நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. இதே மாதிரியான சூழல் மேலும் சில காலாண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பது, சாதகமான செய்தியாகவே பார்க்கப்படுகின்றன.

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ்

விற்பனை, வருமானம், நிகர லாபம் ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய செய்தியாகும். நிறுவனத்தின் கடன்களும், தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருவது சாதகமானதாகவே கருதலாம். பென்சைனை அடிப்படையாகக் கொண்டுள்ளவைகளும், இடைநிலை ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்களையும் தயாரிக்கும் நிறுவனமாகச் செயல்படுகிறது.

மேற்சொன்ன அனைத்து நிறுவனங்களுக்கும், கச்சா எண்ணெய் விலைச் சரிவு என்பது சாதகமாக இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், முதலீட்டாளர்கள் அதன் விலைப்போக்கையும் கண்காணித்து வருவது அவசியமாகும்.

பெட்ரோகெமிக்கலிலிருந்துதயாராகும் பொருள்கள்!

பெட்ரோகெமிக்கல்களிலிருந்து பிரிக்கப்படுகிற முக்கிய பொருள்கள் பெட்ரொகெமிக்கல்கள் வர்த்தகத்தில் எத்திலின், புரொபிலின், புடாடின், பென்சின், ஜைலின், டாலுயின், மெத்தனால், சிந்தெடிக் ஃபைபர், எலோஸ்டோமர்ஸ், சால்வண்ட்ஸ் போன்றவை முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. 2019-ம் ஆண்டில், மொத்த வர்த்தகத்தில் 33% எதிலின் பயன்பாடாக இருந்துள்ளது. குறிப்பாக, பாலிப்ரொப்போலிலின் தனித்தன்மை காரணமாக வாகனத் துறை, உற்பத்தித்துறை, வீட்டு உபயோகப் பொருள்கள் துறை ஆகியவற்றில் கணிசமாகப் பயன்படுத்துவது அதிகரித்துக் காணப்படுவது இதன் தேவை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப் படுகின்றன. பென்சைன் என்று எடுத்துக் கொண்டால் இங்க், ரப்பர், ஒட்டுப் பசை, பெயின்ட், வார்னிஷ் ஆகியவற்றில் இதன் தேவை அதிகரித்து வருகிறது.