Published:Updated:

பங்குச் சந்தை எதை நோக்கிச் செல்கிறது?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ஓர் அலசல்

பங்குச் சந்தை எதை நோக்கிச் செல்கிறது?

ஓர் அலசல்

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

டந்த 2019 காலண்டர் ஆண்டில் நிஃப்டி மிகவும் நல்ல முறையில் செயல்பட்டு, 10580 புள்ளிகளிலிருந்து, சுமார் 1,300 புள்ளிகள் ஏற்றம் பெற்று, 11800 புள்ளிகள் என்ற வரம்பை எட்டியது. இந்த நிலையில் சந்தை எதை நோக்கிச் செல்கிறது, சந்தையில் நம் செயல்திட்டம் எப்படியிருக்க வேண்டும் ஆகிய கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

பங்குச் சந்தை எதை நோக்கிச் செல்கிறது?

சந்தையின் செயல்பாடும் பொருளாதார வளர்ச்சியும்

சந்தை பல நேரங்களில் விசித்திரமாக நடந்துகொள்கிறது. 2019-ம் ஆண்டு முழுக்க பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் சந்தை தொடர்ச்சியாக சுறுசுறுப்பாகச் செயல்பட்டது; புதிய வரலாற்று உச்சங்களையும் எட்டியது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சந்தையின் செயல்பாடும், பொருளாதார வளர்ச்சியும் பல நேரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கின்றன என்பதைத்தான். பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு, மீண்டும் நல்லதொரு எதிர்காலத்தை எட்டும் என்ற நம்பிக்கை குறையாமலிருக்கிறது. அந்த நம்பிக்கைதான் சந்தையைத் தூண்டுகிறது. எனினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க - ஈரான் போர்ப் பதற்றம் காரணமாக நிஃப்டி 12000 புள்ளிகளுக்கும் கீழே இறங்கியது. இந்த மாறுபட்ட சந்தைச்சூழல் மூன்று உண்மைகளை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

உண்மை 1: கடந்த ஆண்டு முழுக்கப் பொருளாதார மந்தநிலை குறித்த புலம்பலாகவே இருந்தாலும், சந்தை துடிப்புடனேயே செயல்பட்டது. எந்தப் பாதகமான அழுத்தமும் ஏற்படவில்லை. 2019 நவம்பரில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கடந்த மூன்றாண்டுகளில் மிகவும் குறைவாக இருந்தது. இருந்தாலும், நிஃப்டி வரலாற்று உச்சமாக 12158 புள்ளிகளை எட்டியது.

பங்குச் சந்தை எதை நோக்கிச் செல்கிறது?

உண்மை 2: 2019-ம் ஆண்டில் நுகர்வு மிகவும் குறைந்ததால், சந்தைகளும் அழுத்தத்துடன் இயங்கியிருக்க வேண்டும். ஆனால், நுகர்வுக் குறைபாடு நிஃப்டி 50 இண்டெக்ஸில் 15% மட்டுமே (7-8 நிறுவனங்களில் மட்டுமே பாதிப்பு) பாதிப்பை ஏற்படுத்தியதால், பெரிய இறக்கம் எதுவும் ஏற்படவில்லை.

உண்மை 3: ஜி.டி.பி வளர்ச்சி குறைந்தபோதும், நிஃப்டி லாப வளர்ச்சி அதிகரித்தது. எனினும், நிஃப்டி குறித்த ஆய்வு, `2019-ம் ஆண்டில் நிஃப்டியின் ஏற்றப்போக்குக்கு அதிலுள்ள ஐந்து முன்னணி நிறுவனங்கள் மட்டுமே காரணம்’ எனக் காட்டுகிறது. 2018-ம் ஆண்டில் 151%, 2019-ம் ஆண்டில் 81% என அதன் வளர்ச்சி உள்ளது. எனவே, நீண்டகால நோக்கில் இதை நிலையானதாகக் கருத முடியுமா?

முடியாது. இது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், மேலும் பரந்துபட்டதாக மாற வேண்டும். இன்னும் பல பங்குகளும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அது விரைவில் சந்தையில் பிரதிபலிக்கத் தொடங்கும். இப்படியான சரிசெய்துகொள்ளும் நடவடிக்கையில் மேலும் சில பங்குகள் அடுத்தடுத்து இணையும். நம்பத்தகாத எதிர்பார்ப்புகள், யதார்த்தத்தால் விரைவில் முறியடிக்கப்படும். எனவே, 2020-ம் ஆண்டில் சந்தையைச் சீரமைக்க வேண்டும் என்பதே நாம் பரிசீலிக்க வேண்டிய முதல் தேவை.

நிஃப்டியின் நீண்டகால ஆதரவு நிலை 10800 என்ற வரம்பிலேயே இருக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2020-ம் ஆண்டில் பங்குச் சந்தை எப்படியிருக்கும்?

அது மூன்று விஷயங்களைப் பொறுத்தது. அவை, மத்திய பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள், மூன்றாம் காலாண்டு முடிவுகள், சந்தை தொடர்பான டெக்னிக்கல் பார்வை. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

வரும் 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரிக் குறைப்புகள், நீண்டகால மூலதன ஆதாய வரியை ரத்து செய்வது, நுகர்வை ஊக்குவிக்கும் சலுகைகள்போன்றவை இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. இவற்றில் சில நிறைவேறாமல் போகலாம். அதாவது, கார்ப்பரேட்களுக்கான வரிக் குறைப்பு, பொருளாதார மந்தநிலை காரணமாக நிறைவேற்றப்படாமல் போகலாம்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்பின்மை போன்றவற்றுடன் போராடும் சூழலில், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே வரிச் சலுகைகளை எதிர்பார்க்க முடியும்.

எனினும், தனிநபர் வருமான வரிவரம்பில் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று பெரிய அளவில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு, நுகர்வுத் தன்மையை ஊக்கப்படுத்துவதாக அமையும். இருப்பினும், ரூ.2.5 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை இருப்பதால், செலவினங்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது வளர்ச்சியை மேலும் பாதிக்கும். எனவே, பட்ஜெட்டில் முதலீட்டாளர்களின் விருப்பங்களை மிகவும் குறைந்த அளவே நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டால், பெரிய ஆச்சர்யம் இல்லாத பட்ஜெட்டாக எதிர்வரும் பட்ஜெட் அமையக்கூடும்.

மூன்றாம் காலாண்டு முடிவுகள்

பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்திருக்கும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் செயல்திறன் சவால் மிகுந்ததாக இருக்கும். இரண்டாம் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை. என்றாலும், கார்ப்பரேட் வரிவிகிதக் குறைப்பு காரணமாக நிஃப்டி 50-ல் வாராக்கடனுக்குக் குறைவாக நிதி ஒதுக்கியுள்ளன சில குறிப்பிட்ட வங்கிகளும் நிதி நிறுவனங்களும். இவற்றின் சிறப்பான செயல்பாட்டால் நல்ல லாப வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேவை குறைந்திருப்பதால், நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைவாரியான எதிர்ப்பார்ப்பு

ஆட்டோமொபைல்

குறைந்த அளவிலான வாகன விற்பனை பாதிப்பை ஏற்படுத்தும். கார்ப்பரேட் வரிக் குறைப்பு லாபத்தை அதிகரிக்கும்.

வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள்

குறிப்பிட்ட சில தனியார் வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கக்கூடும். பெரிய அளவிலான வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கீழ்மட்ட அளவில் வலுவான வளர்ச்சியைக் காட்டக்கூடும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

மூலதனப் பொருள்கள்

மூலதனச் செலவை மத்திய அரசாங்கம் குறைத்தால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

சிமென்ட்

குறைவான நிலக்கரி விலை மற்றும் சிமென்ட் விலை அதிகரிப்பு காரணமாக நிறுவனங்களின் வருமான வளர்ச்சி அதிகரிக்கக்கூடும்.

நுகர்வுப் பொருள்கள்

குறைவான விற்பனையால் நிகர லாப வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும். கார்ப்பரேட் வரிக் குறைப்பு மற்றும் செலவினங்களைக் குறைப்பதன் காரணமாக பெரும்பாலான நுகர்வோர் நிறுவனங் களின் லாப வரம்பு குறையாமல் அப்படியே இருக்கும்.

ஐ.டி நிறுவனங்கள்

முன்னணி ஐ.டி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி டாலர் மதிப்பில் 1.5-3 சதவிகிதமாக இருக்கும்.

உலோகங்கள்

2019-20-ம் நிதியாண்டின் முதல் பாதியில் பலவீனமாகச் செயல்பட்ட உலோகத் தயாரிப்பு நிறுவனங்கள், தற்போது வலுவான காலாண்டு முடிவுகளை வெளியிடக்கூடும்.

பார்மா

டிசம்பர் காலாண்டில் பார்மா நிறுவனங்கள் குறைவான வளர்ச்சியைக் காட்டக்கூடும். அமெரிக்க அடிப்படை மருந்துச் சந்தையில் விலை நிர்ணயச் சிக்கல், உள்நாட்டுச் சந்தையில் விலைக் கட்டுப்பாட்டுப் பிரச்னைகள், அமெரிக்க மருந்துத் தயாரிப்பு ஒழுங்குமுறை அமைப்பின் நடவடிக்கைகள் போன்றவை இந்த நிறுவனங்களின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.

டெக்னிக்கல் எதிர்ப்பார்ப்பு

பங்குச் சந்தைக் குறியீடுகளின் சார்ட்டுகள் நமக்குத் தெரிவிக்கும் விஷயங்களை பரிசீலனை செய்தால்தான் நம் ஆய்வு முழுமையடையும். நிஃப்டியின் நீண்டகால ஆதரவு நிலை 10800 என்ற வரம்பிலேயே இருக்கிறது. குறுகியகாலத்தில் 12600-க்குச் செல்லும் வாய்ப்புள்ளது. பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வரத் தொடங்கியதால் மீண்டும் 2019 டிசம்பரில் சந்தை ஏற்றம்கண்டது. இதிலிருந்து, சந்தைக்கு நல்ல ஆதரவு இருப்பது தெரியவருகிறது.

எதை நோக்கிச் செல்கிறோம்?

2020-ல் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் 12-15% அதிகரிக்கக்கூடும். இதைப் பயன்படுத்திக் கொள்ள நம் உணர்வுகளின் அடிப்படையில் அல்லாமல், பங்குகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். சரியான நேரத்தில், சரியான பங்கைத் தேர்வு செய்வதே நாம் லாபம் காண்பதற்கான முதல்படி!