பங்குச் சந்தை தினசரி வர்த்தகத்தில் வெற்றி என்பது பலருக்கும் கைகூடாத கலையாகவே இருக்கிறது. என்னதான் டெக்னிக்கல் அனாலிசிஸ் கற்றுத் தேர்ந்திருந்தாலும், நம்முடன் பிறந்த குழப்பச் சிந்தனையும் அவசரப்புத்தியும் பல சமயங்களில் நம் முதலுக்கே மோசம் செய்துவிடுகிறது.
உளவியல் சொல்லும் உண்மைகள்..!
பங்குச் சந்தை வர்த்தகத்தில் பலமுறை தோல்வி கண்டவர் டாக்டர் வான் கே.தார்ப் என்னும் உளவியல் நிபுணர். 1980-களில் சந்தையில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தார். இது ஏன் என்று அறிய பலவிதமான சர்வேக்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். அவர் கண்ட உண்மைகள் சுவாரஸ்யமானவை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘‘மனிதர்களிடம் வெவ்வேறு வகையான கருத்துகளும் ஆளுமைகளும் மனோபாவங்களும் உள்ளன. அவை அவர்களின் வயது, இருப்பிடம், சூழ்நிலைகள், குறிக்கோள்கள் இவற்றைப் பொறுத்து அமையும். இதனால் சந்தையைப் பற்றிய அவர்களின் புரிந்துகொள்ளலும் அணுகும் முறையும்கூட மாறுபடும். சிலருக்கு வெற்றி பெறும் மனநிலை இயல்பாகவே அமைந்திருக்கும்; இன்னும் சிலருக்கு அது மிகக் கடினம்” என்பது போன்ற கருத்துகளை டாக்டர் தார்ப் முன்வைத்தார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமூன்று குணாதிசயங்கள்..!
ஆயிரக்கணக்கான மக்களிடம் சோதனை நடத்தி, கீழ்வரும் மூன்று குணாதிசயங்கள் பங்குச் சந்தை வெற்றிக்கு மிகவும் அவசியம் என்று கண்டறிந்தார்.

1. ஒரு வெற்றியாளர் விரிந்த கண்ணோட்டத்துடன் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியம்; உலகின் நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. உணர்வுரீதியாக இன்றி, ஆராய்ச்சிரீதியாகவும், தர்க்கரீதியாகவும் முடிவுகளை எடுப்பவராக விளங்க வேண்டும்.
3. தன் முடிவுகளில் உறுதியுடன் ஓர் ஒழுங்கைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
15 விதமான டிரேடர்கள்!
இந்தக் குணாதிசயங்களின் அடிப்படையில் டாக்டர் தார்ப், பங்குச் சந்தை டிரேடர்களை 15 விதமானவர்களாக வகைப்படுத்தியுள்ளார். அவற்றில் முதல் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள்; கடைசி மூன்று வகையைச் சேர்ந்தவர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்து, வல்லுநர்கள் மூலம் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது; நடுவில் உள்ள 10 வகையினர் ஒரு சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் தார்ப் ஒரு இலவச சோதனை சர்வேயையும் வடிவமைத்துத் தந்துள்ளார். அதில் 35 கேள்விகள் உள்ளன. ஐந்து நிமிடங்களில் பதிலளிக்கக்கூடிய முறையில் அமைந்திருக்கும் அவற்றில் சரியான பதில், தவறான பதில் என்று எதுவும் இல்லை. செய்திகளை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை மட்டுமே இந்த சர்வே கணிக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இலவச ரிப்போர்ட்
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தவுடன், நம்மை பற்றிய ரிப்போர்ட் வருகிறது. அதில் நாம் எந்த வகையான டிரேடர், நமது பலம் என்ன, பலவீனம் என்ன, சந்தையில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டா என்பது போன்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.

மேலும் விரும்பினால், ஒரு விரிவான, ஆறு பக்க இலவச ரிப்போர்ட்டும் தரப்படுகிறது. இதில் மேற்கண்ட மூன்று குணாதிசயங்களில் எத்தனை நம்மிடம் உள்ளன, நம் பலத்தைப் பெருக்கி, பலவீனத்தைக் குறைக்கும் முறைகள் என்னென்ன, எந்தெந்த விதங்களில் நம்மை வடிவமைத்துக்கொள்வது நன்மை தரும் என்பது போன்ற விவரங்கள் உள்ளன. ஆனால், ஒருவர் டிரேடிங்கில் எந்த முறையைப் பின்பற்ற வேண்டும், ஏற்ற இறக்க சந்தைகளில் அவருக்கு ஏற்றது எது என்பது போன்ற விவரங்கள் இதில் இல்லை.
பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் மேற்கொள்கிறவர்கள் www.tharptradertest.com என்ற வலைதளத்துக்குச் சென்று, அதில் உள்ள இலவச சோதனையை மேற்கொண்டு சந்தையில் தங்கள் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரலாம்!