தமிழகத்தையே பிரமிக்க வைத்த ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணமும், பின்னர் போயஸ்கார்டனில் கைப்பற்றப்பட்ட மலைக்க வைக்கும் நகைகள் மற்றும் புடவைகளும்தான் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய சாட்சியங்களாக அமைந்தன. சிவாஜியின் பேத்தியுடன் சுதாகரனுக்கு நடந்த திருமணம், போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஸ்பெஷல் கோர்ட் அமைந்த கதை ஆகியவை இந்தப் பகுதியில்...

டிவிஷன் பென்ச் தள்ளுபடியும் நீதிபதிக்கு மிரட்டலும்...

முதலமைச்சர் மேல் வழக்கு தொடர கவர்னர் அளித்த அனுமதியை எதிர்த்து கோர்ட்டுக்கு போனபோதே, முதல்வர் சற்று அமைதி இல்லாமல்தான் இருந்தார். தடை கேட்கும் இந்த வழக்கை எதிர்பார்த்தபடியே டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்துவிட்டனர். மதியம் இரண்டேகால் மணிக்குத் தங்கள் இருக்கைக்கு வந்த நீதிபதிகள், கவர்னர் கொடுத்துள்ள அனுமதி, மனுதாரர் கொடுத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு கவர்னர் அனுமதி கொடுத்தது செல்லும். அதை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பைச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டனர். கோர்ட் வளாகத்துக்குள்ளேயே காத்திருந்த உளவுத்துறை ஐ.ஜி.யான அலெக்சாண்டர் மூலம் செய்தி முதல்வரை எட்டியது!

போயஸ் தோட்டம் பெரும் அமைதியில் மூழ்கியது. சில நிமிடங்களுக்குள் தன்னைத் தேற்றிக்கொண்ட பிறகு, தோழி சசிகலா மற்றும் அலெக்சாண்டருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தீவிரமாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா. அதன் பிறகுதான் ‘உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மேல் அப்பீல் செய்து, சுப்ரீம் கோர்டுக்கு முதல்வர் போகப் போகிறார்’ என்ற பேச்சு அ.தி.மு.க வட்டாரத்தில் மிக வேகமாகப் பரவியது.

போயஸ் தோட்டத்தில் இதெல்லாம் நடந்துகொண்டிருந்த அதேசமயம், இந்தத் தீர்ப்பை அளித்த இரு நீதிபதிகளில் ஒருவரான எம்.சீனிவாசன் குடியிருக்கும் தி.நகரில் பரபரப்பு... அவர் வசிக்கும் ராமசாமி தெருவில் போலீஸ் படை வந்திறங்கியது. நீதிபதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது!

சொல்லப்போனால், தீர்ப்பு வருவதற்கு முன்தினமே நீதிபதி சீனிவாசன் வீட்டில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அந்தத் தெரு வழியாக மின்னல் வேகத்தில் பறந்தது ஒரு ஆட்டோ! சீனிவாசன் வீட்டைக் கடக்கும்போது, அவரை எதிர்த்துப் பலமான கோஷம் ஆட்டோவுக்குள்ளிருந்து கிளம்பி வெளிவந்தது! கடந்த ஒரு வாரமாகவே நீதிபதி வீட்டுக்கு மிரட்டல் போன்கால்கள் வந்துகொண்டிருந்தன. அதுபோல், தீர்ப்பு வழங்கிய அன்று, நீதிபதியின் வீட்டில் குடிநீர், மின்சாரம் ரத்து செய்யப்பட்டன. அதுபற்றி விஷயம் பத்திரிகைகளுக்கு தெரியவந்து, அவர்கள் நீதிபதி வீட்டில் போய் கேட்டனர். இதை பெரிதுபடுத்தாதீர்கள் என்று பத்திரிகையாளர்களிடம் நீதிபதியின் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், விஷயம் வேகமாகப் பரவி பத்திரிகைகளின் காதுகளுக்கும் போய்விட்டது என்பதை அறிந்த ஆளும் தரப்பு உடனடியாக நீதிபதியின் வீட்டிற்கு குடிநீர், மின்சாரத்தை மீண்டும் கொடுத்தது. எதற்கும் அஞ்சாமல் நின்ற நீதிபதியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

தகாத முறையில் நடந்தார் கவர்னர்...

தமிழக சட்டசபை நடந்துகொண்டிருந்தபோது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் கவர்னரை போய் சந்திப்பதில்லை என்ற கேள்வி சட்டமன்றத்தில் எழுந்தது. அதற்கு பதில் சொன்ன ஜெயலலிதா, நான் கடந்த 1993-ம் வருடம், ஆகஸ்ட் மாதத்தில் கவர்னரை சந்திக்கச் சென்றபோது, அவர் கவர்னர் மாளிகையில் உள்ள தனது அறையில் வைத்து என்னிடம் தவறான முறையில் நடந்து, தகாத வார்த்தைகளைக் கூறி அவமானப்படுத்தினார். அதனால், அதன்பிறகு அவரை நான் சந்திப்பதை தவிர்த்துவிட்டேன் என்று சட்டசபையிலேயே சொன்னார்.

சட்டசபையில் இப்படி முதல்வர் சொல்லிவிட்டார் என்ற தகவல் ராஜ்பவனுக்கு வந்து சேந்ததும், கவர்னரின் செயலாளர் ஷீலாப்ரியா துணுக்குற்றார். இதை எப்படி கவர்னரிடம் தெரிவிப்பது என்று கவலைப்பட்டார். வேறு சில ராஜ்பவன் அதிகாரிகளுடன் 10 நிமிடங்கள் பேசினார். கவர்னரிடம் சொன்னால், அவர் ராஜ்பவனையே ‘கிடுகிடு’க்கச் செய்யுமளவுக்குக் கோபம் அடைவாரோ என அதிகாரிகள் பயந்தனர். ஒருவழியாகத் துணிச்சலைத் திரட்டிக்கொண்டு போய்த் தகவலைத் தெரிவித்தனர். கவனமாக கடைசிவரை விவரங்களைக் கேட்டுக் கொண்டபின் ‘பளிச்’சென கவர்னர் புன்னகைத்ததைக் கண்டு அதிகாரிகள் அசந்துவிட்டனர்.

இப்படி ஒரு ‘ரியாக்க்ஷன்’ கவர்னரிடமிருந்து வந்தது கண்டு அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர் என்றே சொல்லலாம். உண்மையில் முதல்வர் தரப்பிலிருந்து இன்னும் மோசமான தாக்குதலை கவர்னர் எதிர்பார்த்துத் தயாராகவே இருந்தார் என்று ராஜ்பவன் அதிகாரிகளுக்குப் பிறகு தெரியவந்ததாம்.

பத்திரிகை அலுவலகங்களிலிருந்து ராஜ்பவனுக்கு டெலிபோன் மேல் டெலிபோனாக வரத் துவங்கிவிட்டது. முதல்வரின் குற்றச்சாட்டுக்கு கவர்னரின் பதில் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டு நெருக்கத் துவங்கினார்கள். கவர்னரின் செயலாளர் போய் கவர்னரிடம் இதை தெரிவித்தபோது, ‘இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலாக நான் என்ன சொல்வது..!’ என்று கேட்டுவிட்டு உரக்கச் சிரித்திருக்கிறார் கவர்னர்! ‘இல்லை.. பத்திரிகைகளிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள்’ என்று சொன்னதால், ‘முதல்வர் சொன்னது அபத்தமான பொய்’ என்று மட்டும் மிக சிம்பிளாக ‘கமென்ட்’ கொடுத்து முடித்துக் கொண்டுவிட்டார் சென்னா ரெட்டி.

“கவர்னர் பற்றி சட்டசபையில் முதல்வர் பேசிய அன்றைய தினம், மாலை டெல்லி உள்துறை அமைச்சகத்திலிருந்தும் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் சென்னை ராஜ்பவனுக்கு போன் அழைப்பு வந்தது. ‘நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். உங்களைத் தமிழ்நாட்டை விட்டு மாற்றுகிற எண்ணமெல்லாம் இல்லை’ என்றார்கள்.

இதையடுத்து இந்தப் பிரச்னை சற்று ஓய்ந்தது. சுவாமியும் விட்டுப்பிடித்தார். எதிர்க் கட்சிகளும் சற்றுப் பம்மின. பிரச்னைகள் கொஞ்சம் ஓய்ந்ததும், ஜெயலலிதா வேறு சொத்துக்களை வாங்கிப் போடுவதிலும், தமிழகமே வாய் பிளக்கும் வகையில் தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு ஒரு திருமணத்தை நடத்தும் வேலையிலும் கொஞ்சம் பிஸியானார். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா சொத்துக்கள் வாங்க என்ன வழிகளைப் பின்பற்றினார் என்பதை சில உதாரணங்களில் பார்க்கலாம்.

எந்தச் சொத்து... எத்தனை கோடி...

சென்னையில் உள்ள பாரம்பரிய மாளிகைகள், நிலங்கள், பண்ணை வீடுகள் என்று வளைத்துப்போட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா சசிகலா அன்கோ, தமிழகம் முழுவதும் இதே வேலையில் தீவிரமாக இறங்கின. அந்தக் காலகட்டத்தில் டீக்கடை, சலூன் கடை, பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் கூடுபவர்கள், இன்றைக்கு அவர்கள் வாங்கி உள்ளது எந்தச் சொத்து? அதன் மதிப்பு எத்தனை கோடி? என்பது பற்றித்தான் முதல் வேலையாகப் பேசுவார்கள். அந்த அளவிற்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் சொத்துக்களை வாங்கிப்போடுவதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தனர்.

‘’சென்னையிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ 30 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள கட்டடங்கள் விற்பனைக்காகப் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தால் போதும்... உடனே அவற்றின் பதிவு வேலைகள் நடக்காது. வாங்குபவரையும் விற்பவரையும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, நாலைந்து நாட்கள் கழித்து வரச்சொல்வார்கள். இடைப்பட்ட நாட்களில் அந்தச் சொத்து பற்றிய சகல விவரங்களும் ‘ஜெயலலிதா- சசிகலாவுக்குச் சென்றுவிடும். அவர்களாகப் பார்த்து, ‘இந்தக் கட்டடம் நமக்கு வேண்டாம்’ என்று முடிவு செய்துவிட்டால் பிரச்னை இருக்காது! இப்படி வரும் பதிலை ‘க்ரீன் சிக்னல்’ என்பார்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில்! ‘கிரீன் சிக்னல்’ கிடைக்காமல், ‘நாமே இந்த இடத்தை வாங்கி விடலாமே...’ என்பதுபோல் அபிப்பிராயம் வந்தால், நிலம் அல்லது கட்டட விற்பனை தடைபடும். அடிமாட்டு விலைக்குப் பேரம் பேச ஆட்கள் உரிமையாளரைத் தேடி வருவார்கள். அவர்கள் சொல்கிற விலைக்கு விற்க மறுத்தால் சிக்கல்தான்... சங்கடம்தான்!’’ அப்படி அவர்கள் வாங்கிப்போட்ட சில சொத்துக்கள் பற்றிய கதைகள் டீக்கடை பெஞ்சுகளில் பேசப்பட்டன.

அமிர்தாஞ்சன் மாளிகைக்கு தலைவலி ஆரம்பம்!

நெம்பர் ஒன்று, லஸ் அவென்யூ, மயிலாப்பூர், சென்னை.இதை வீடு என்று சொல்வதைவிட மாளிகை என்றே கூறலாம். ஒரிஜினல் பர்மா தேக்கில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள், ஜன்னல்கள், ஆர்ச்சுகள், இறக்குமதி செய்யப்பட்ட சலவைக்கல் தரை - எல்லாமே புரதான பொக்கிஷங்கள்.

அமிர்தாஞ்சன் தலைவலி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் டைரக்டர் நாகேஸ்வரராவின் வீடுதான் அது. ஐந்தரை கிரவுண்டு பங்களாவில் பணியாளர்களைத் தவிர அந்த வீட்டில் இருப்பது அவர், அவரது மனைவி சேஷம்மா, ஒரே மகன். அதிர்ந்து பேசாத நாகேஸ்வரராவ் ஒரு கார் பிரியர், இசைக்கருவிகள் பல வாசிக்கக்கூடியவர். மகிழ்ச்சியான இந்தக் குடும்பத்துக்கு வந்தது பெரும் சோதனை. தன் வியாபாரத்துக்காக இந்த வீட்டை இந்தியன் வங்கியின் அபிராமபுரம் கிளையில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தார் ராவ். சில பிசினஸ் பிரச்னைகளினால் சரிவர வட்டி கட்ட முடியாமல் போய்விட்டது. சொத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே வந்ததைப்போல் வட்டியும் ஏறிக்கொண்டே போனது. மார்ச் மாத இறுதியில் ராவ் குடும்பத்தினரை அணுகி அந்த வங்கியின் மேலாளர் சுசரிதா சுந்தர்ராஜன், “கடன் ஏறிக்கொண்டே போகிறது. என்னை மேலதிகாரிகள் கோபித்துக் கொள்கிறார்கள். உங்கள் சொத்தை ஏலத்தில் விட வேண்டும் என்கிறார்கள். எனவே, அதற்குள் நீங்களே நல்ல விலைக்கு வீட்டை விற்றுவிடுங்களேன்” என்று அட்வைஸ் செய்துள்ளார்.

ராவ் குடும்பமும் இந்த விஷயத்தை ஏற்றுக்கொண்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மெல்ல விஷயத்தைச் சொல்லி உள்ளனர். வீட்டை வந்துபார்த்த அனைவரும் ஏகமனதாக இந்த வீடு குறைந்தது மூன்று கோடி ரூபாய் தேறும் என்று மதிப்பிட்டு இருந்தனர். யாருக்கு விற்பது என்று ராவ் யோசனை செய்த வேளையில் திரும்பவும் வந்தார் சுசரிதா. ஒரு நல்ல ‘பார்ட்டி’ இருப்பதாகவும், சீக்கிரமாக விற்றுத் தருவதாகவும் கூறிய சுசரிதாவிடம் “யார் வாங்கப்போகிறார்கள்?” என்று ராவ் குடும்பம் கேட்ட கேள்விக்குப் பதிலே இல்லை. ஒரு வாரம் கழித்து பிற்பகல் ஒரு ‘மாருதி 1000’ கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு சுரிதார் போட்ட பெண்மணியும், பர்முடாஸ் போட்டிருந்த ஒருவரும் இறங்கி வீட்டைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

சுசரிதா அனுப்பியதாகக் கூறிக்கொண்டு வந்ததனால் ராவ் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றிக் காண்பித்தனர் மிகவும் அன்பாகப் பேசிய அந்தப் பெண்மணி தனக்கு வீடு பிடித்திருப்பதாகவும், பாக்கி விஷயங்களை சுசரிதா பேசிக் கொள்வார் என்று கூறி புறப்பட்டுச் சென்றார். வந்தது யாராக இருக்கும் என்று குடும்பத்தினர் யோசித்துக் கொண்டிருக்கையில் வேலையாட்கள் ஓடிவந்து, “அம்மா, வந்தது யார் தெரியுமா?” என்று கிசுசிசுக்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் தெரிந்தது, வந்தவர் சசிகலா என்பது.

மீண்டும் வந்தார் சுசரிதா, “எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் பத்திரப்பதிவு செய்ய வேண்டும்” என்று அடுக்கிக்கொண்டே போனார். பலமுறை விலை எவ்வளவு என்று கேட்டும் பதிலே கூறாத சுசரிதா, கடைசியில் கூறியதைக்கேட்ட ராவ் குடும்பத்தினர் மயக்கம் போட்டு விழாத குறைதான். ஒரு கோடியே முப்பது லட்சம்.

“என்ன அநியாயம் இது? நீங்களே அசலும், வட்டியுமாக சேர்த்து பாங்க் கடன் இரண்டு கோடி ரூபாய் ஆகிவிட்டது என்று கூறினீர்களே. இப்போது அதைவிட கம்மியாக விற்கச் சொல்கிறீர்கள். இந்த விலைக்கு விற்றால் பாங்க் கடனைக்கூட கழிக்க முடியாதே” என்ற ராவ் குடும்பத்தினரின் கேள்விகளுக்கு விடையே இல்லை.

வீடு ராவ் பெயரிலும், நிலம் அவரது சகோதரியின் பெயரிலும் இருப்பதால், தான் மட்டும் முடிவெடுத்து எதுவும் கூறமுடியாது என்று கூறிய ராவ், “உங்களுக்கு வேண்டியது வங்கியில் வாங்கிய கடனை திருப்பித் தரவேண்டும் அவ்வுளவுதானே. இரண்டே நாள் டயம் கொடுங்கள், அட்லீஸ்ட் இரண்டரை கோடிக்கு வீட்டை யாருக்காவது விற்று கடனை திருப்பித் தருகிறேன்” என்று ராவ் கூறியபோதுதான் ஆரம்பித்தது மிரட்டல்.

“அம்மா வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பேரமாவது, மண்ணாவது... நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லா விட்டால் உங்களின் மற்ற கரன்ட் அக்கௌன்ட், ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டுகளை முடக்கிவிடுவேன். நான் இந்த வீட்டை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்துவிட்டேன். என்னைப் பொல்லாதவள் ஆக்கிவிடாதீர்கள்” என மிரட்டினாராம் மானேஜர்.

அடுத்தகட்டமாக அந்த மானேஜர், ராவின் சகோதரியைப் பார்த்து அவரையும் மிரட்டியிருக்கிறார். மிகவும் மிரண்டு போன சகோதரி நாகேஸ்வரராவை அழைத்து, “போனால் போகிறது விற்றுவிடு” என்று கூறியிருக்கிறார்.

ராவ் குடும்பம், ஒரு கோடியே முப்பது லட்சம் மிகவும் குறைவான தொகை என்று கூறியும் சுசரிதா விடவில்லை. ஒருநாள் திடீரென்று வந்து “தோட்டத்திற்குப் போகலாம் வா” என்று அவர்களின் குடும்பத்தை அழைத்துச் சென்றார்.

“சென்னையில் இப்படி ஒரு மாளிகையைப் பார்த்ததேயில்லை. மைசூர் அரண்மனையைத் தோற்கடிக்கும். எங்கு பார்த்தாலும் பிங்க் கிரானைட், பளிங்கு, வீட்டுக்கூரை எல்லாம் கிரானைட். உள்ளே 40 புது கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவலோகத்துக்கு வந்ததைப் போல உணர்ந்தேன். இப்படிப்பட்ட செல்வச்செழிப்பு எங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. அங்கு சசிகலா சுடிதாரில் வந்தார். அன்பாக விசாரித்தார். முழுத் தொகையும் உடனடியாகத் தருவதாகக் கூறினார். சிக்கல் இல்லாமல் வீட்டை ரெஜிஸ்தர் செய்து தரும்படியாகக் கூறினார். கடைசியில், உங்கள் ஒரே மகன் எந்தப் பள்ளியில் படிக்கிறான் நன்றாக இருக்கிறானா?” என்று கேட்கப்பட்டது. அவ்வளவுதான் அந்தக் கேள்வியில் தடவப்பட்டு இருந்த நஞ்சு புரிந்ததும், மிகவும் பயந்துபோனார்கள் அந்தக் குடும்பத்தினர். வழிக்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை அவர்களுக்கு. மளமளவென்று காரியங்கள் நடந்தேறின. நடையாக நடந்தாலும் ஒரு மாதத்துக்குக் குறையாமல் கைக்கு வராத வருமானவரி ‘நோ-அப்ஜெக்க்ஷன்’ சர்டிஃபிகேட் ஒரே நாளில் ராவ் குடும்பத்துக்குத் தரப்பட்டது. செய்வதறியாது திகைத்து நிற்கையில் ராவ் வீட்டுக்கே வந்து சப்-ரெஜிஸ்தாரால் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

‘நாகேஷ்வரராவ் பந்தலு’ பிளவுபடாத சென்னை மாகாணத்தின் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். சென்னைக்கு காந்தி வரும்போது எல்லாம் தங்குவது இந்த பங்களா உள்ளடங்கிய ‘பார்க்’ கட்டடத்தில்தான். காந்தியின் நினைவாக கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது. விற்கப்பட்ட இந்த தேசிய சின்னமான பங்களாவில் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தி உப்பு காய்ச்சிய பாத்திரம், உபயோகப்படுத்திய சாப்பாட்டுத் தட்டு, கைராட்டை, மகிழ்ந்து இசை கேட்ட கிராமஃபோன் போன்றவை இருக்கின்றன. இந்த வீட்டுக்கு எதிரேயே நாகேஸ்வரராவ் பந்துலு தானம் கொடுத்த இடத்தில்தான் நாகேஸ்வரராவ் பந்துலு பூங்கா இருக்கிறது. காசு பிரம்மானந்த ரெட்டி,. சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி போன்ற தலைவர்கள் நாகேஸ்வரராவ் பந்துலுவை சந்தித்த இடம் இது. சென்னை மாகாணம் பிரிந்தபோது ஏற்பட்ட உடன்படிக்கை தயாரானது இங்குதான்.

கல்பாக்கத்தில் ஒரு ஷாக்... சிறுதாவூர் பங்களா

முதல்வர் ஜெயலலிதா, தன் தோழி சசிகலாவுடனும் தனக்கு நெருக்கமான இன்னொரு குடும்பத்துடனும் ரகசியமாக மகாபலிபுரத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு பெரிய மாளிகையில் சத்தமின்றி முதல்வர் இரண்டு நாட்கள் தங்கியது மூத்த அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, மகாபலிபுரம் போலீஸூக்குக்கூடத் தெரியாது. சுப்பிரமணியன் சுவாமி விவகாரத்தில் கலங்கிப் போயிருக்கும் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று டாக்டர்களின் அறிவுரைப்படி ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விசிட்! ‘முதல்வர் எங்கே?’ என்ற கேள்விக்கு இரண்டு நாட்களும் மௌனம்தான் பதிலாக வந்தது!

ஆனால், விஷயம் வெளியே ’லீக்’ ஆனாது பெரிய கதை. கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்துக்கு ராட்சத கண்டெய்னர் ஒன்று சென்னை-மகாபலிபுரம் சாலையில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையில் மின்சார கம்பத்திலிருந்து போகும் மின்சார வயர்களை அந்த கண்டெய்னர்கள் ‘கிராஸ்’ செய்யும்போது ‘ஷாக்’ அடிக்காமல் இருக்க மின்சார சப்ளை நிறுத்தப்படுவது வழக்கம். அப்படி அந்த மாளிகை அருகே கண்டெய்னர் வந்தபோது ‘எந்தக் காரணம் கொண்டும் மின்சார சப்ளையை நிறுத்தக்கூடாது’ என்று சிலர் வாதாட, ’அப்படியென்ன அந்த மாளிகைக்கு முக்கியத்துவம் என்ற பேச்சும் கூடவே வந்தது. அப்போதுதான் தெரிந்தது அங்கு முதலமைச்சரும் அவருடைய தோழியும் தங்கி இருப்பது. ஆனால், அவர்கள் தங்கி இருந்த மாளிகை இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமானது ஆயிற்றே என்று எல்லோருக்கும் ஆச்சரியம். ஆனால், அதன்பிறகுதான் தெரிந்தது, அதற்கு பல மாதங்களுக்கு முன்பே, கங்கை அமரனை போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்து, அந்தப் பண்ணை வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றிவிட்ட செய்தி. பண்ணையை வாங்கியவர்கள் அத்தோடு நிற்கவில்லை. அதையொட்டி இருந்த பல ஏக்கர் நிலத்தையும் வளைத்து, அதில் நீச்சல் குளத்துடன் நவீன பங்களா ஒன்றையும் கட்டினார்கள்.

ஜெ. வளர்ப்பு மகன் - சிவாஜி பேத்தி திருமணம்!

ஜூன் 12-ம் தேதியன்று சென்னை தி நகரிலுள்ள செவாலியே சிவாஜி ரோட்டில் போலீஸ் வந்து குவிந்தது! வேகவேகமாக கார்களும் ஜீப்களும் விரைந்து சென்று சிவாஜி கணேசன் வீட்டு வாசலில் நின்றன. விஷயம் பத்திரிகைகளுக்குத் தெரிந்ததும் விசாரிக்கத் துவங்கினர் நிருபர்கள். “சிவாஜியைப் பார்க்க முதல்வர் ஜெயலலிதா வருகிறார்!” என்று மட்டுமே அந்த வீட்டிலிருந்து தகவல் சொல்லப்பட்டது.

ஓரளவு கலகலப்பாக நிருபர்களிடம் பேசக்கூடிய அமைச்சர் ஒருவர், ‘‘மேடம் சீக்கிரம் சிவாஜி குடும்பத்துக்கு சம்பந்தி ஆகப்போறாங்க!” என்று மட்டும் சொன்னார். அப்போதும் புரியவில்லை. அன்று மாலையே முதல்வர் இல்லத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தை திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியது. ‘சிவாஜியின் மகள் வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமியை சசிகலாவின் அக்காள் மகன் சுதாகருக்கு நிச்சயித்திருக்கிறார்கள்!’ என்பது அந்த செய்திக்குறிப்பில் இருந்த விவரம். கூடவே நுழைக்கப்பட்டிருந்த வார்த்தைதான் பலருக்கு வியப்பூட்டியது.!

‘முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர்’ என்பவைதான் அந்த வாசகங்கள்!

சசிகலாவின் அக்காள் மற்றும் திருச்சியில் அரசு அதிகாரியாக இருக்கும் விவேகானந்தன் தம்பதியின் இளைய மகன்தான் சுதாகரன். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே தனது சித்தி சசிகலாவுடன் போயஸ் தோட்டத்திலேயே தங்கியிருந்தார் அந்த இளைஞர். முதல்வருக்கும் அவர் மேல் அன்பு உண்டு என்பதும் அ.தி.மு.க மேல்மட்டப் பிரமுகர்களுக்குத் தெரிந்த கதைதான். ஆனால் இந்த சுதாகரனை முதல்வர் எப்போது வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார் என்பதுதான் பலருக்குப் புரியாத மர்மமாக இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் சுதாகரனின் அண்ணன் பாஸ்கருக்குத் தஞ்சையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துக்கு முதல்வரும் போயிருந்தார். அந்தத் திருமண வீட்டில் தனது முக்கிய உறவினர்கள் முன்னிலையிலேயே “சுதாகரை உங்கள் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்ற வேண்டுகோளை முதல்வரிடம் வைத்தாராம் சசிகலா. அப்போது சிரித்தபடியே மௌனமாக இருந்துவிட்டார் முதல்வர்.

பிறகு ‘என் உடன்பிறவா சகோதரி’ என்று சசிகலாவை குறிப்பிட்ட ஓர் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு வற்புறுத்தல் தொடர்ந்தது என்கிறார்கள். ‘என்னை உங்கள் சகோதரி என்று நாடறிய ஒப்புக்கொண்ட பிறகு, என் மகன் அந்தஸ்த்தில் உள்ள சுதாகரை உங்கள் மகனாக ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்? போயஸ் தோட்டத்தில் சகலவிதமான நிர்வாகங்களையும் தன் பொறுப்பில் வைத்திருந்து, கடமை தவறாமல் பணியாற்றும் அவனை உங்கள் தத்துமகனாக அறிவிப்பதில் என்ன தவறு?’ என்று உருக்கமாகக் கேட்டிருக்கிறார் சசிகலா! இந்தச் சூழ்நிலையில்தான் சிவாஜியின் பேத்தியை உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தற்செயலாகப் பார்த்திருக்கிறார் சுதாகரன். அவரை இவருக்குப் பிடித்துவிட, அதைத் தன் சித்தி சசிகலாவிடம் சொன்னார். விஷயம் ஜெயலலிதா காதுக்கும் போனது!. இந்த நிலையில்தான் “சுதாகரன் எனது வளர்ப்பு மகன்’’ என்று முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்துத்தான் அன்னை இல்லம் - போயஸ் கார்டன் சம்பந்தம் உருவானது. இதற்கு முக்கிய காரணம், ‘சாந்தி’ தியேட்டர் நிர்வாகியும், சிவாஜியின் தங்கையை மணந்துகொண்டவருமான வேணுகோபால். இவர், சசிகலாவின் ஊர்க்காரர். ஊர்க்காரர்-உறவுக்காரர் ஆகும் ஆசையில் இந்தத் திருமணப் பேச்சுகளை வேணுகோபால் ஊக்குவித்தார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர், ‘முதல்வரும் சரி... சிவாஜியும் சரி... அந்த நிகழ்ச்சியில் ரிலாக்ஸ்டாக இல்லை. ஏதோ நிர்ப்பந்தத்தில் நடந்துகொள்வது போல் இருந்தனர்!’’ என்றார். நிச்சயதார்த்தத்தின்போது, தாம்பூலத் தட்டுகளைப் பரிமாறிக்கொண்டபோது மட்டும் சிவாஜி அந்த இடத்தில் தலையைக் காட்டி உள்ளார். மற்ற சமயங்களிலெல்லாம் வீட்டுக்கு முன்புறமுள்ள பந்தலுக்கு வந்துவிட்டார். மணமகள் சத்யலட்சுமியின் தாயார் சாந்தி, சசிகலா குடும்பத்தாரிடம், ‘நீங்கள் என் அப்பாவின் (சிவாஜி) பிரம்மாண்டமான இந்த வீட்டைப் பார்த்து இந்தச் சம்பந்தம் பற்றி பெரிதாக எண்ண வேண்டாம். எங்களுக்கென்று ஒரு சிறிய வீடு (ராயப்பேட்டையில் சிவாஜி ஃபிலிம்ஸ் அலுவலகத்துக்கு எதிரிலுள்ள காம்பௌண்டில் இருக்கும் மூன்று வீடுகளில் ஒன்று) மட்டும் இருக்கிறது. அவ்வளவுதான்!’’ என்று குறிப்பாகச் சொல்லி வைக்கவும் தவறவில்லை. மணமகள் சத்யலட்சுமிக்கு நிச்சயதார்த்தத்தின்போதே சசிகலா 150 சவரன் மதிப்புள்ள நகைகளைப் போட்டு அழகு பார்த்தார்.

ராணி வீட்டுக் கல்யாணம்!

சாலையெல்லாம் ஒளிவெள்ளம் பொழிய அந்த வெளிச்சத்தில் உடலெங்கும் வைரமும் தங்கமும் மின்ன தன் தோழி சசிகலா மற்றும் பரிவாரங்களுடன் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்தார் முதல்வர்!

‘‘இந்த ஒரு திருமணத்துக்கு இத்தனை கோடிச் செலவா...? திருமணமாகாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஒரு லட்சம் என்று கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்தாலும் நிச்சயம் ஒரு லட்சம் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாமே!’ ஓர் ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மத்தியதரக் குடும்பத்து வாக்காளர் அடித்த வயிற்றெரிச்சல் கமென்ட் இது!’’ தமிழகத்துக்கே உரிய ‘விசேஷ நிகழ்ச்சிகளுடன்’ களைகட்டியது செப்டம்பர் ஆறு. அன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அந்தி சாயும் நேரம்... அடையாறு சிக்னல் அருகிலுள்ள சுந்தரவிநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம்!

மாப்பிள்ளைக்காக அலங்கார சாரட் வண்டி காத்திருக்க, மக்கள் கூட்டமோ ‘மணமகனை’ எதிர்பார்த்து நிற்க... சரியாக 6.10க்கு வந்தார் சுதாகர்! அந்தக்கால இளவரசர் கெட்-அப்பில் சிரிப்பு கொப்பளிக்க சுதாகர் நிற்க... சுற்றிலும் குவிந்திருந்த அமைச்சர்களோ ‘ஏவலர்கள்’ போல அவரையே மொய்த்துக் கிடந்தனர்!

சில நிமிடங்களுக்குள் வெள்ளை காரில் வந்திறங்கிய ஜெயலலிதா, குத்துமதிப்பாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு வளர்ப்பு மகனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்.

6.20-க்குத் தொடங்கியது மாப்பிள்ளை ஊர்வலம். சந்தன மரத்தால் இழைத்துத் தயாரிக்கப்பட்ட ‘சாரட்’ வண்டி என்று முதல்வர் தரப்பிலிருந்தே பெருமையுடன் செய்திகள் அளிக்கப்பட்டிருந்தன! ஆனால், அந்தச் சந்தன அழகை ரசிக்க முடியாதபடி சிவப்பு நிற ‘வெல்வெட்’ துணியால் மறைக்கப்பட்டிருந்தது சாரட்!

சட்டம்-ஒழுங்கைக் காப்பது தவிர, கரகாட்டம், ஒயிலாட்டத் துக்குக்கூட ஸ்பெஷல் பயிற்சி பெற்ற போலீஸ் டீம் பயன்படுத்தப்பட்டது! கலைக்குழுக்கள் ஆட்டத்தோடு முன்னே செல்ல... அடுத்ததாக பாண்டு வாத்தியக்குழு பாடிக் கலக்க... தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப் படை அணிவகுத்தது! அதன் பின்னே பார்த்தால் அதிசயம்... ஆச்சரியம்!

இதுவரை இல்லாத வகையில் கிட்டத்தட்ட கும்பலோடு கும்பலாக ‘அம்மா’ நடந்து வந்துகொண்டிருந்தார்! அவரை ஒட்டியபடியே ‘நடமாடும் ஜூவல்லரி’ என்று வர்ணிக்கத் தகுந்த வகையில் உடல் முழுவதும் நகை மறைக்க தோழி சசிகலா கம்பீரமாக நடந்துவர... அவரது உறவுக்காரப் பெண்கள் அதைவிட சற்றே குறைந்த நகைகளுடன் சிரிப்பும் சந்தோஷமுமாக நடைபோட்டனர்.

25 நிமிடம் நடந்து சாதனை படைத்த நிலையில் ஜெயலலிதா முகத்தில் களைப்பு பெருகியது. தடித்த வைர வளையல் மாட்டிய தனது வலதுகையால் முகத்தை லேசாகத் துடைத்தபடி அவர் திரும்பிப் பார்க்க... கூடவே ஊர்ந்து வந்த அவரது கார் கதவு திறந்தது. ஏறிக்கொண்டார்! அடையாறு பாலத்தைக் கடந்து அமைச்சர்கள் இல்லத்துக்கு அருகே போடப்பட்டிருந்த ‘கோட்டை செட்டிங்கை’ ஊர்வலம் நெருங்கியபோது முதல்வரின் கார் நின்றது. மீண்டும் ‘வாக்’ செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இசைக்கல்லூரி அருகே மதில்மேல் உட்கார்ந்திருந்த அழுக்கு உடை அணிந்த இளைஞர் ஒருவர், அம்மாவைக் கிட்டத்தில் பார்த்தவுடன் அவரை நோக்கி அப்படியே ஓடிவர... சுதாரித்த போலீஸ் பாய்ந்து போய் அவரை ஒரே அமுக்காய் அமுக்கியது! மீண்டும் காரில் முதல்வர்!

நல்லவேளையாக, மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபம் போய்ச் சேர்ந்த பிறகு சொல்லிவைத்தது போல இருபது நிமிடத்துக்கு ‘சோ’வெனப் பெய்தது மழை! திடுக்கிட்ட தொண்டர்கள் ஓடி ஒளிய இடம் பார்ப்பதற்குள், அவர்களை முற்றிலுமாக நனைத்து முடித்தது மழை!

உள்ளே மணவீட்டார் நலுங்கு சம்பிரதாயங்களை நடத்திவிட்டு சாப்பிடத் துவங்கியபோது, வெளியே கட்சிக்காரர்கள் பலர் குளிரில் வெடவெடத்துக்கொண்டிருந்தனர்!

மறுநாள்... திருமணம்!

போயஸ் தோட்டத்திலிருந்து மெரீனா வரை கட்டப்பட்ட வாழை மரங்கள் அனைத்தும் அவசர கதியில் கட்டப்பட்டதால், முன்னிரவு பெய்த மழைக்கு அனைத்துமே உடைந்து தெருவில் சரிந்துகிடந்தன. குலை இல்லாமல் வாடி வதங்கி அமங்கலமாகக் காட்சியளித்த வாழை மரங்களை மாநகராட்சி வண்டியின் குப்பை லாரிகளில் அவசர அவசரமாக அள்ளி ஏறக்கட்டிக் கொண்டிருந்தனர் மாநகராட்சி ஊழியர்கள்.

மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அடுத்தடுத்து வந்திறங்க.. எம்.ஆர்.சி. நகரிலிருந்த அந்த மாபெரும் திருமண வளாகம் (ப்ளேகிரவுண்ட்) கலகலப்பு பெற்றது. பந்தலின் கடைசி வரிசையிலிருந்து பார்த்தால் ‘தகதக’க்கும் தங்க நிறத்துடன் மணமேடை தக்கணூண்டு தெரிந்தது. மேடையில் இருந்தவர்கள் சிறு புள்ளிகளாகத் தெரிந்தனர். பந்தல் அத்தனை நீளம். முக்கால் வாசிப் பேர் க்ளோஸ் சர்க்யூட் டி.வி.யில் தான் கல்யாணம் பார்த்தார்கள்.

ஜெயலலிதா, மணமகன் சுதாகர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்துப் பெண்கள் அனைவரும் தங்க நிற உடையை யூனிஃபார்ம் போல் அணிந்திருந்த காட்சியை மேடைக்கு அருகில் இடம் கிடைத்தவர்கள் கண்டு ரசித்தனர்.

பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் வராததால் முதல்வர் அப்செட் ஆனதாகத் தெரிகிறது. ‘‘அவ்வளவு தூரம் நேரில் போய் அழைத்தும் காங்கிரஸ்காரர்கள் தங்களின் புத்தியைக் காட்டிவிட்டார்களே... நல்லவேளை, தேசிய முன்னணித் தலைவர்களாவது வந்திருந்து எனக்கு அகில இந்திய ஸ்டேட்டஸைக் கொடுத்தார்களே...’’ என்று ஒரு அமைச்சரிடம் அந்தத் திருமண கலாட்டவுக்கு நடுவிலேயே சொன்னார் முதல்வர். வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தவர்களில் தலையானவர் தலைமைச் செயலர் ஹரிபாஸ்கர். நாட்டியமாடுவது போல் அங்குமிங்கும் ஓடிச் செயல்பட்டவர் பத்மா சுப்பிரமணியம். இடுப்பிலிருந்த ரிவால்வரைத் தொட்டபடியே நடை பழகினார் வால்ட்டர் தேவாரம். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சகிதம் மனைவியுடன் வந்தார் முன்னாள் டி.ஜி.பி. பால்.

சசிகலாவின் கண்ணசைப்பில் செயல்பட்டவர் இந்திரகுமாரி. தொழிலதிபர்களையும் வி.ஐ.பி-க்களையும் மட்டுமே கவனிக்கும் பொறுப்பு இந்திரகுமாரியுடையது. சசிகலா எங்கே திரும்பினாலும் அங்கே இருந்தார் அவர்.

நடிகர் கமலஹாசன் மனைவியுடன் வந்து சிவாஜி கணேசனையும் மணமக்களையும் மட்டும் பார்த்துப் பேசிவிட்டு ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாமல் போனார்.

திருமண மந்திரம் சொல்லும் புரோகிதர்கள் மணமகனின் பெயரை ஒவ்வொரு தடவையும் உச்சரிக்கும்போதும் ‘தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெ.ஜெயலலிதாவின் மகன் சுதாகரன்’ என்று கூறினார்கள். ஆனால், செவாலியர்-நடிகர் திலகம் என்றெல்லாம் அடைமொழி தராமல் ‘சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தி’ என்று சிம்பிளாகச் சொன்னார்கள்.

திருமண விழாவில் ஒரு ஸ்பெஷாலிட்டி! திருமண மந்திரங்களில் நிறைய திவ்யப்பிரபந்தங்களும் திருக்குறளும் சொல்லப்பட்டதுதான். முகூர்த்தம் பத்தரையிலிருந்து பன்னிரண்டு மணிக்குள். தாலி கட்டியபோது கரெக்டாக மணி பதினொன்று இருபது!

‘‘இந்தக் கல்யாண விஷயத்திலேயே மிகக் கவனமாக முதல்வர் ஏற்பாடு செய்தது தொண்டர்களுக்கான சாப்பாடுதான். ஒரே மூச்சில் ஒரே சமயத்தில் பன்னிரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். நிச்சயம் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திருமணத்தில் சாப்பிட்டார்கள். இதை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு எழுதி அனுப்பப்போகிறோம்!’’ என்று அமைச்சர்கள் பரமசிவம் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும் சொல்கிறார்கள். இவர்கள்தான் சாப்பாட்டுப் பந்தி இன்சார்ஜ்கள்!

இதுபோன்ற களேபரங்களுக்கு இடையே, 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில், அ.தி.மு.க. துடைத்து எறியப்பட்டது. தி.மு.க. த.மா.கா. கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த நேரத்தில்தான் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்ட சுப்பிரமணியன் சுவாமி, அதை சொத்துக் குவிப்பு வழக்காக நீதிமன்றத்தில் மனுச்செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு...

ஜெயலலிதா ஆட்சியைவிட்டு இறங்கிய பிறகும் சுப்பிரமணியன் சுவாமி விடுவதாக இல்லை. கொட்டும் மழையையும் மீறி, சென்னை உயர் நீதிமன்றத்தைக் 1996 ஜுன் 15-ம் தேதி காலை, பரபரப்பாக்கினார் சுவாமி. அன்றுதான் ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்க வந்திருந்தார். இந்த வழக்கு, ஊழல் தடுப்புக் காவல் சட்டத்தின்படி தாக்கல் செய்யப்பட்டது. இதற்காகச் சரியாகப் பத்து மணிக்கெல்லாம் சந்திரலேகா, வழக்கறிஞர் வெங்கட்ராமன் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சகிதம் மாருதி ஜிப்சி வேனில் வந்திறங்கிய சுப்பிரமணியன் சுவாமி, நிருபர்களைப் பார்த்து ‘‘என்ன எனக்கு முன்னாலயே வந்துட்டீங்களா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு, ‘‘கவலைப்படாதீங்க, ஜெயலலிதாவை விடமாட்டேன்!’’ என்று சொல்லி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோர்ட் அறைக்குள் நுழைந்தார். வழக்கம் போலவே நீதிபதி வருவதற்கு முன்னால் வழக்கறிஞர் வெங்கட்ராமனிடம் வழக்கு சம்பந்தமான தஸ்தாவேஜூகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு, நீதிபதி வந்ததும் வாதாடுவதற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தார். கிட்டதட்ட மணி ஒன்றை நெருங்கியபோது, நீதிபதி ராமமூர்த்தி வந்தார்.

மனுவைப் பொறுமையாகப் படித்துப் பார்த்த நீதிபதி, ‘‘ஜெயலலிதா மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் வைத்து இருக்கிறீர்கள்?’’ என்றதும் ‘‘கடந்த 1993-ம் வருடத்தில் நான் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்து விவரம் குறித்துக் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே போதுமானது!’’ என்றார் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயம் இதுதான்; ‘‘கடந்த 1991-ம் வருடத்தில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, உண்மையாக மக்கள் தொண்டாற்றுவார் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாகச் சொன்ன ஜெயலலிதா, முறைகேடாகச் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அதோடு, ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் தமிழகம் முழுவதும் வாங்கிக்குவித்த சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை!

1989-90-ம் வருட வருமான வரிக் கணக்கின்படி, எனக்கு சொத்துக்கள் எதுவுமே இல்லையென்று சொன்ன ஜெயலலிதா, 94, 95-ல் 38.21 கோடி ரூபாய்க்குச் சொத்துக்களை சேர்த்துள்ளதாகச் சொன்னால் அவருக்குச் சொத்துக்கள் வந்ததெப்படி?! முறைகேடாகத்தான் அவர் சம்பாதித்திருக்க வேண்டும்! இதேபோல பல ஆதாரங்கள் உள்ளன! எனவே ஊழல் தடுப்புக் காவல் சட்டத்தின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

‘‘அமைச்சராகவோ, அரசு ஊழியராகவோ இருந்தவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர உரிய அதிகாரியிடம் இருந்து அனுமதி வாங்கப்பட்டுள்ளதா?’’ என்று சுப்பிரமணியன் சுவாமியிடம் நீதிபதி கேட்க, ‘‘அவர் முதல்வராக இருந்தால்தான் அனுமதி வாங்கப்பட வேண்டும்! அவர் முதல்வர் பதவியிலிருந்து போய்விட்டதால் அனுமதி தேவையில்லை!’’ என்று கூறியவர், ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை அதற்காக மேற்கோள் காட்டினார். ஏ.ஆர்.அந்துலே வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும் எடுத்து வைத்து வாதாடினார்.

உடனே நீதிபதி, ‘‘இதையெல்லாம் நீங்கள் இந்த கோர்ட் முன்னால் வாக்கு மூலமாகத் தரமுடியுமா?’’ என்று கேட்க, ‘‘தருகிறேன்’’ என்று கூண்டில் ஏறிய சுப்பிரமணியன் சுவாமி, ‘‘முறைகேடாகச் சொத்துக்கள் சேர்த்த முன்னாள் முதல்வரை ஜாமீனில் வெளிவராதபடிக்குக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள் அல்லது வருமானவரித் துறை விசாரணைக்கு உத்தரவிடுங்கள்!’’ என்றார். அதன் பின் 26-ம் தேதியன்று மறு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாமியின் புகார் மீது உரிய விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லத்திகா சரண், வி.சி.பெருமாள் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் போய் ஜெயலலிதா, இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதனால் வழக்கு சிறிது நாள் தாமதமானது. ஆனால், அதன் பின் புகாரில் ஆதாரங்கள் இருப்பதால், வழக்கை தொடர்ந்து நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வந்தார் நல்லம்ம நாயுடு...

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வி.சி.பெருமாள் முதல் கட்ட விசாரணையை முடித்து வைத்திருந்தார். அதில் குற்றச்சாட்டுகள் பற்றி நிறைய ஆதாரங்கள் அவருக்கு கிடைத்திருந்தன. அதன்பின் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 18, 1996-ம் ஆண்டு இதில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. நல்லம்ம நாயுடுவுக்கு ஆதாரவாக 16 இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஜெயலலிதாவின் வீடு மற்றும் தோட்டங்களில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 6, 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நுழைந்தது தனிப்படை. ஆனால், அப்போது கலர் டி.வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நல்லம்ம நாயுடு நேரடியாக சிறப்பு அனுமதி பெற்று, மத்திய சிறைக்கே போய் விஷயத்தை ஜெயலலிதாவிடம் சொன்னார். அவர் தன் சார்பில் பாஸ்கரன், விஜயன் ஆகியோரை நியமித்தார். இதையடுத்து 7-ம் தேதி ரெய்டுக்காக போயஸ் கார்டன் வீட்டிற்குச் சென்றனர்.

ஆர்ப்பாட்டமான போயஸ் அரண்மனை!

கிட்டதட்ட 144 மணி நேரம் போயஸ் தோட்டத்தில் தொடர் ரெய்டு நடத்தி லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை ‘கின்னஸ்’ சாதனை நிகழ்த்தியது! காலை பத்து மணியளவில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போதே, அவரிடம் சோதனை நடத்துவதற்கான அனுமதியும் பெறப்பட்டது. பாஸ்கரன், விஜயன் என்ற இரு நபர்களையும் சில வழக்கறிஞர்களையும் இந்தச் சோதனை செய்யும்போது கண்காணிக்கத் தன்னுடைய பிரதிநிதிகளாக ஜெயலலிதா நியமித்தார்! இதன்படி, அன்றைய தினம் பகல் 12 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.சி.பெருமாள், கூடுதல் சூப்பிரன்டென்டெண்ட் நல்லம்ம நாயுடு தலைமையில் ஒரு டி.எஸ்.பியும் 20 இன்ஸ்பெக்டர்களும் போயஸ் கார்டனுக்குள் புகுந்தனர். அதிகாரிகள் உள்ளே வந்ததுமே வரவேற்காத குறைதான்... பொதுவாக ‘ரெய்டு’ என்று போனால், அந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு டென்ஷன் ஏற்படும். ஆனால் இவர்களைக் கண்டவுடன் போயஸ் தோட்டத்தில் இருந்த ஒருவர் ‘‘நீங்க வருவீங்கன்னு நாலு மாசமா எதிர்பார்க்கிறோம்... இவ்வளவு லேட்டாக வர்றீங்களே...? என்று சொல்ல... அதிகாரிகள்தான் ‘ஷாக்’காகிப் போனார்கள்! பிறகு சுதாரித்துக்கொண்டு தாங்கள் வந்த பணியைத் தொடங்கினார்கள். முதல் நாளன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடுகளைப் பொதுவாக ‘அப்ஸர்வ்’ செய்தனர். அதாவது அந்த வீடுகளின் வாயில்கள் எத்தனை? யார்... யார்... உள்ளே இருக்கின்றனர். எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கே உள்ளன? என்ற விவரங்களைச் சேகரித்தனர். இந்த விவரங்களை அறியவே அன்றைய தினம் முழுக்க நேரம் செலவனதாகத் தெரிகிறது! அந்த அளவுக்கு ஏராளமான பொருட்கள் அறைக்கு அறை கொட்டிக் கிடக்க பிரமித்துப் போனார்கள்!

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு ஒட்டினாற் போல் இரண்டு வீடுகள். 36, போயஸ் கார்டன் என்றும் 31 ஏ, போயஸ் கார்டன் என்றும் வீட்டு எண்கள்! நம்பர் 36, போயஸ் கார்டன்தான் ஜெயலலிதா நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் வீடு. 1968-ல் ஜெயலலிதாவின் தாயாரும் நடிகையுமான சந்தியா இருந்தபோதுதான் இங்கு பத்து கிரவுண்ட் நிலத்தை வாங்கி வீடு கட்டியுள்ளார். அப்போது கட்டத் தொடங்கப்பட்ட வீடு, 1972-ல் முடிவடைந்தது!

இந்த வீட்டில் இரண்டு மாடிகள்தான் உள்ளன. கீழ்தளத்தில் நான்கு அறைகள். ஒரு பெரிய வராண்டா, டைனிங் ரூம், கெஸ்ட் ரூம், இரண்டு ஆபீஸ் ரூம்கள், சமையலறையை ஒட்டி இரு ஸ்டோர் ரூம்கள்.. இரண்டாவது மாடியில் இரண்டு அறைகள் மட்டுமே! இந்த பழைய வீட்டுக்குப் பின்புறம், வேலைபார்ப்பவர்களுக்குத் தனியறைகளும் சமையலறையும் உண்டு. இதுதவிர, வீட்டின் மேற்குத் திசையில் கார்ஷெட்டுகள். இந்த கார்ஷெட்டுகளுக்கு மேலே பெரிய ரூம்கள். இந்த ரூம்களையும் மெயின் வீட்டின் முதல் மாடியையும் இணைக்கும் பாலம் ஒன்றும் உண்டு! மெயின் வீட்டின் முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் படுக்கையறை. மற்ற அறைகளில் ஏராளமான பொருட்கள், பரிசுப் பொருட்கள், துணிமணிகள், ஷோ கேஸ்கள் என்று குவிந்து இருந்துள்ளன! ஆனால் சமையலறை மட்டும் படுசிம்பிள்! இந்த வீட்டின் பின்பகுதியில் ஒரு ராட்சத டிஷ் ஆன்ட்டெனா காட்சியளிக்கிறது. இந்த பழைய வீட்டின் கிழக்குத் திசையில் தான் 31ஏ, போயஸ் கார்டன் இருக்கும் இடம். ஜெயலலிதா முதல்வராவதற்கு முன்பு இந்த இடத்தில் சில குடிசைகள் இருந்தன. திருச்சியைச் சேர்ந்த பி.வி.ராஜாராம் என்பவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு கிரவுண்ட் இடத்தை எட்டு லட்ச ரூபாய்க்கு ஜெயலலிதா வாங்கியுள்ளார். 1993-ல் இந்த இடத்தில் கட்டடம் கட்டத் தொடங்கி 1995-ல் முடித்துள்ளார். கீழ்தளம் மற்றும் ஐந்து மாடிகள் கொண்டது, இந்த புதிய கட்டடம். ஒவ்வொரு மாடியும் 1,500 சதுர அடி பரப்பளவு! கீழ்த்தளத்தில் கார் நிறுத்த இடம், ஜெனரேட்டர் ரூம் மற்றும் இரு அறைகள் உள்ளன. இந்தப் புதிய கட்டடத்தின் முதல் மாடியை கான்ஃபரன்ஸ் ஹாலாக மாற்றியுள்ளனர். அங்கே ஆடம்பரமான ஃபர்னிச்சர்கள் போடப்பட்டுள்ளன. இரண்டாவது மாடியில் ஒரு மினி சினிமா தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது- மிகவும் சொகுசான சோபாக்களோடு! மூன்றாம் மாடி, நான்காவது மாடிகளில் விருந்தினர் தங்குவதற்கு ஏற்றாற்போல் படுக்கையறைகளுடன் இருந்தது. இதற்கும் மேலே இருந்த மாடியில் செயற்கைத் தோட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தத் தோட்டத்தில் சிறிய மலை, கொரியன் புல்வெளி என்று ஓர் அழகான இயற்கைச் சூழலை வடிவமைத்திருக்கிறார்கள்.

மறுநாள் சோதனை தொடங்கியவுடன் போயஸ் கார்டனில் இருந்தவர்களைத் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்விலை. உள்ளே இருந்தவர்களும் அதிகாரிகளின் அனுமதியுடன்தான் வெளியே போக முடியும். சோதனை நடந்த ஏழு தினங்களும் இப்படித்தான். முதலில் வீட்டில் இருந்த டம்ளர், பிளாஸ்க் முதல் ஃபர்னிச்சர்கள், டி.வி, மிக்ஸி, ஏர்கண்டிஷன் வரை ஒவ்வொன்றாக கணக்கிட்டுக் குறித்துக்கொண்டனர். இதில் ஏராளமான அலங்கார விளக்குகளும் அடங்கும். இந்தப் பழைய வீட்டில் மட்டும் 35 ஏர்கண்டிஷன் மெஷின்கள் இருந்தன. புதிய வீட்டில் ஒன்பது ஏ.சி-க்கள். இதுதவிர, ‘வராண்டா’, ‘லாபி’ பகுதிகளில் ஸ்பிளிட் ஏர்கண்டிஷனும் வைக்கப்பட்டிருந்தது.

இப்படி உபயோகிக்கப்படும் பொருட்கள் தவிர, ஷோ கேஸில் வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களின் விவரங்களை எடுத்தனர். இதில் வெள்ளியிலான பொருட்களும் அடக்கம். சில பொருட்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டவை. இவையெல்லாம் ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது ஜெயலலிதாவுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்டதாம்! ஏராளமான மது அருந்தும் கோப்பைகளும் அழகுப்பொருட்களாகக் காட்சியளித்தன. இப்படிப்பட்ட அழகுப் பொருட்களின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தவர்கள் வெள்ளிச் சாமான்களை மட்டும் எடை போட்டுப் பார்த்தனர். 800 கிலோ வரை இருந்தது.

அடுத்து பல பீரோக்களில் பாலியெஸ்டர் புடவைகள், பட்டுப்புடவைகள் இருந்ததை எடுத்துக் கணக்கிட்டனர். விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் சுமார் 750 உட்பட 10,500 புடவைகள் இருந்தன. இப்படிப் புடவைகள் ஆயிரக்கணக்காக இருந்தால் அதற்கு மேட்சான வேறு சில விவகாரங்களும் வேண்டாமா? அதாவது சேலைக்கு மாட்சாக எழுநூற்று ஐம்பது ஜோடி செருப்புகள் இருக்க அவற்றையும் கணக்கிட்டுக்கொண்டனர். இவையெல்லாவற்றையும் விட தங்க, வைரம், கரன்ஸி எங்கே இருக்கிறது என்று தேடியபோது அந்த விவரங்கள் ஜெயலலிதாவின் சித்தி (அம்மாவின் தங்கை) ஜெயலட்சுமிக்கு மட்டுமே தெரிந்துள்ளது. அவர்தான் இவை இருந்த இடத்தைக் காட்டியுள்ளார். அந்த ‘நகைக் கடையை’ச் சித்தி எடுத்துக் கொட்டியுள்ளார். 700 வளையல்கள், 26 ஒட்டியாணங்கள் (பல வைரம் பதிக்கப்பட்டவை), பம்பாய், மாடல் பிரேஸ்லெட், நெக்லஸ்கள், வைரத்தோடுகள், தங்கத் தட்டுகள் என்று 23 கிலோ எடையில் இந்தத் தங்க, வைர நகைகள் இருந்தனவாம். ரொக்கப் பணமாக இருந்தது ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மட்டுமே! இதுதவிர, ஜெயலலிதா வாங்கிய சொத்துக்களின் பத்திரங்களும் கிடைத்தன. அதாவது ஹைதராபாத் வீடுகள், மந்தைவெளியில் இருந்த பூர்வீக வீடுகள், போயஸ் கார்டனின் பழைய-புதிய வீட்டின் பத்திரங்கள், ஜெயா பப்ளிக்கேஷன், சசி என்டர்பிரைஸஸ், கிண்டி இதயம் பேசுகிறது பில்டிங் மற்றும் நமது எம்.ஜி.ஆர் பில்டிங் பத்திரங்கள் கிடைத்தன.

இப்படிப் பழைய வீட்டில் அலசிவிட்டுப் புதிய அடுக்குமாடிக் கட்டடத்திலும் சோதனை நடந்தது. அங்கும் ஐந்து கிலோ தங்க நகைகள் கிடைத்தன. சித்தியிடம் இந்த நகைகள் பற்றி ஏன் சொல்லவில்லை என்று அதிகாரிகள் கேட்டபோது ‘‘அது சசிகலா வைத்துவிட்டுப் போன நகைகள்’’ என்று சொல்லியுள்ளார்.

இந்த புதிய கட்டடத்தில் விதவிதமான அலங்கார விளக்குகளும் ஏற்கனவே பகிரங்கமாக இருக்கும் தியேட்டர், ஃபர்னிச்சர்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால், கிலோ கணக்கிலும் குவிண்டால் கணக்கிலும் கிடைத்த தங்க, வைர வெள்ளிப் பொருட்களைக் கணக்கிடத்தான் பெரும்பாடு பட்டனர்.

முதலில் லோக்கல் அப்ரைஸர் ஒருவரைக் கொண்டு இந்த நகைகளின் தரம், எடை மதிப்பைக் கணக்கிட்டனர். ஆனால் அரசு அப்ரைஸர்கள்தான் இதைக் கணக்கிட்டுச் சான்றிதழ் தரவேண்டும் என்று சொல்லப்பட சுங்க இலாகாவைச் சேர்ந்த அப்ரைஸர்கள் வந்து கணக்கிட்டனர். இவை எல்லாவற்றையும் விட போயஸ் கார்டனில் இருந்த பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டியதையும் புதிய வீட்டைக் கட்டியதைப் பற்றிய விவரங்கள்தான் அதிகாரிகளுக்குத் தேவைப்பட்டன. ஜெயலலிதா முதல்வரான பின்னர் பழைய வீட்டின் வெளிப்பகுதியை முழுக்க விலை உயர்ந்த கிரானைட் கற்களாலும் உட்பகுதியின் சீலிங்கை (மேற்கூரை) தவிர, சுவரும் தரையும் மார்பிள் கற்களால் பதிக்கப்பட்டிருந்தன. இப்படிப் பதிக்கப்பட்ட கற்களின் மதிப்பையும் அதிகாரிகள் கணக்கிட்டனர். இதே மாதிரி புதிதாகக் கட்டப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடத்தின் மதிப்பையும் இந்த வீட்டிலும் முழுக்கப் பதிக்கப்பட்டிருந்த கிரானைட், மார்பிள் கற்களைப் பற்றிய விவரங்களையும் கணக்கெடுத்தனர். இந்தப் புள்ளிவிவரங்களைக் கணக்கிட பொதுப்பணித்துறையைச் சேர்ந்த பொறியாளர்கள் வந்தனர். கட்டடம் மற்றும் எலெக்டரிக்கல் பொறியாளர்கள் ஒவ்வொன்றையும் அளந்து பார்த்து மதிப்பீடு செய்தனர், கூடவே, புதிய கட்டடங்கள் எப்போது கட்டப்பட்டிருக்கும் போன்ற விவரங்களையும் ஆராய்ந்தார்கள்.

இதுதவிர, இரு வீடுகளிலும் விலைமதிப்பிலான தேக்குமரம் மற்றும் சந்தன பவுடர் கோட்டிங் முறையில் இருந்த கதவுகள், நிலைகளையும் கணக்கிட்டனர். புதிய கட்டடங்களின் பிளான்கள் அதன்படி முறையாகக் கட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் அப்படிப்பட்ட டாக்குமென்ட்களையும் கைப்பற்றினார்கள். ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பத்தொன்பது கார்களும் லிஸ்ட் எடுக்கப்பட்டன.

இப்படி முழுக்கக் முழுக்கக் கிடைத்த பொருட்கள், டாக்கு மெண்ட்கள் விவரங்களுக்குப் பின்னர் சின்னச் சின்ன சந்து பொந்துகளையும் அலசினார்கள். ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் வேறு சில தகவல்கள் பிரமிப்பூட்டுபவை. மாதம் ஒன்றுக்கு மின்சாரக் கட்டணத்துக்கு மட்டும் முப்பத்தையாயிரம் ரூபாய்க்கு மேலாகச் செலவாகிறதாம். இதோடு ஜெயலலிதா வீட்டு டிரைவர்கள், வேலைக்காரர்கள், இவர்களின் சம்பளம், நாய்களின் பராமரிப்பு செலவுகள் மட்டும் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே செலவான விவரங்கள் கிடைத்தன.

பழைய வீட்டின் இரண்டாவது மாடியில்தான் முன்பு சசிகலா இருந்தார். பின்னர் அங்கு வளர்ப்பு மகன் சுதாகரன் வந்து தங்க, சசிகலா புதிய அடுக்குமாடி வீட்டில் குடிபுகுந்தார். வெளியூரில் இருந்து வரும் விருந்தினர்கள் சந்தோஷமாகத் தங்கிப் போவதற்காகவே ஜெயலலிதா இந்தக் கட்டிடத்தைக் கட்டினாராம். இதற்காகவே தியேட்டர், நடன அரங்கம், மீட்டிங் ஹால், விருந்தினர்கள் தங்க பெட்ரூம் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டதாம். ஆனால், மனைஅடி சாஸ்திரப்படி வாசல்படி சரியில்லாமல் போகவே தனக்குப் பல தொல்லைகள் என்று நம்பிய ஜெயலலிதா, வேறொரு வாசல் கட்டும் முயற்சியில் இருந்தார். இந்த வீட்டுக்கு எப்போதாவது ஒரு முறைதான் ஜெயலலிதா மினி தியேட்டரில் படம்பார்க்க வந்துள்ளார். இப்படிப் பல்வேறு முறையில் தொடர்ந்து ஏழு தினங்களாகச் சோதனையும் விசாரணையும் நடத்தினார்கள் டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள். இரவு பகலாகத் தொடர்ந்துப் பணியாற்றினார்கள். பாத்ரூம் போகவும் குளிக்கவும் ஒரு குட்டித் தூக்கம் போடவும் மட்டும் தங்கள் வீடுகளுக்குப் போய் வந்தனர். தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள் மற்ற சேலைகள், செருப்புகள், வாட்சுகள், ஏ.ஸி மெஷின்கள், கார்கள், ஃபர்னிச்சர்கள், புதிய சொத்துக்கள், போயஸ் தோட்டத்தின் புதிய கட்டடம் மற்றும் மார்பிள் கிரானைட்கள், ஹைதராபாத் தோட்டத்தில் புதுப்பிக்கப்பட்டது மற்றும் புதிய பங்களா உட்பட எல்லாம் சேர்ந்து 50 கோடி வரை மதிப்பிட்டனர்.

போயஸ் தோட்டத்தில் யார்... யார்?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கிட்டத்தட்ட 30 பேர் அப்போது இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெயலலிதாவைவிட சசிகலாவின் விசுவாசிகள்தான். கார்டனில் உள்ள எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்தவர் ஆடிட்டர் சண்முகம். இவரிடம் கட்டளை பெற்றுதான் மற்றவர்கள் செயல்பட்டுள்ளனர். ‘இவர் ஒரு அபார மூளைக்காரர்’ என்று புகழ்கின்றனர் அதிகாரிகள். இவருக்கு அடுத்து இருந்தவர் விஜயன், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் இதற்கு முன்பு சுப்ரமணியன் சுவாமியிடமும் இருந்துள்ளார். இவருடைய திருமணத்தை ஜெயலலிதாதான் நடத்தி வைத்துள்ளார்.

இவர் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் வேலை கேட்டுப் போக.. அவர் மூலம் ஆடிட்டர் சண்முகத்தின் அறிமுகம் கிடைத்து போயஸ் கார்டனில் நுழைந்துள்ளார். ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிக்கையில் வேலைக்கும் சேர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரிடம் அண்டர் செக்ரெட்டரியாகப் பணிபுரிந்தவர் ஜெயராம் என்பவர். இவர் அரசு ஃபைல்களைப் பார்த்தாரோ இல்லையோ... போயஸ்கார்டனின் முழு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அவர் ஓய்வுபெற்ற பின்னர் இந்தப் பொறுப்பை ஏற்றவர்தான் விஜயன். கார்டனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கிப்போட வேண்டியது இவருடைய பொறுப்பு. இவருக்கு போயஸ் கார்டனைப் பற்றிய அனைத்து ரகசியங்களும் தெரியும்.

அடுத்து பாஸ்கரன் மற்றும் தாமஸ் என்ற இரட்டையர்கள்! இதில் பாஸ்கரன்தான் நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் இருப்பவர். இவர்கள் இருவரும் சிறப்புப் பாதுகாப்புப்படை ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் சிபாரிசால் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானவர்கள். இவர்கள் போயஸ் கார்டன் தயவில் மிகப்பெரிய பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கும் கனவோடு வந்தவர்கள். அது நிறைவேறவில்லை. பாஸ்கரனின் பூர்வீகம் இலங்கை.

ராஜம்மா - ஜெயலலிதாவின் பிரத்யேகச் சமையல்காரம்மா, ‘சுமார் 20 வருடங்களாக போயஸ் கார்டனில் இருக்கிறேன்’ என்று சொன்ன அவருக்கு அங்கே ஏராளமான சலுகைகள். தனி பெட்ரூம் வசதி இவருக்கு உண்டு! இவரது அறையில் மட்டுமே 25 பட்டுப் புடவைகள் இருந்ததாம். ஆல் இன் ஆலாக இருக்கும் இவரைக் கண்டால் மற்ற பணியாளர்களுக்கும் பயம்! ஜெயலலிதாவின் பெட்ரூமுக்குள் போகக்கூடிய அனுமதி இவருக்கு மட்டுமே உண்டு. ஜெயலலிதாவுக்குத் தேவையான காய்கறிப் பழங்களை நேரடியாக வாங்கி வருவது இவர்தானாம்! ஆனால் ஜெயலலிதா பெரும்பாலும் சாக்லெட், ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் என்று சாப்பிட்டே காலம் தள்ள... ராஜம்மாவுக்கு சமையல் வேலையும் அவ்வளவாக இருக்காது. இப்போது ஜெயிலில் ஜெயலலிதாவை அடிக்கடி போய்ப் பார்த்து வரும் இவர், அப்படியே சசிகலாவையும் பார்த்துவிட்டு வருகிறார். இதன்படி இரு அம்மாக்களுக்கிடையே போஸ்ட்மேனாகவும் இப்போது வேலைபார்க்கிறார்.

ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் கேரளாவைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவர். எம்.எஸ்ஸி, பி.எட், படித்த சுவாமிநாதன் என்பவருக்கு போயஸ் கார்டனில் என்ன வேலை என்றால் டெலிபோன் வந்தால் அதை அட்டெண்ட் பண்ணி, சம்பந்தப்பட்டவர்களைப் பேசச் சொல்லுவதுதான்.

அதிகாரிகள் வரம்பு மீறினார்களா?

இரண்டாவது கட்டச் சோதனை நடத்தச் சென்றபோது போயஸ் கார்டனில் ஒரு அறையில் குவிந்து கிடந்த இருநூற்றுப் பதினான்கு சூட்கேஸ்களைப் பார்த்து மலைத்துப் போய் நின்றனர் அதிகாரிகள். இந்த சூட்கேஸ்களில் சிறியவற்றில் ஒரு லட்சமும் பெரிய சூட்கேஸ்களில் அதற்கு மேலேயும் ஐநூறு ரூபாய் கட்டுகளாகப் பணம் வைக்க முடியும், ஆனால் இந்த சூட்கேஸ்களில் வந்த பணம் எங்கு போனது என்பதை டி.வி.ஏ.ஸி அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா சூட்கேஸ்களும் காலியாக இருந்தன. இந்த வெற்று சூட்கேஸ்களின் மதிப்பு மட்டுமே சுமார் மூன்று லட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாய்! சோதனையில் கிடைத்த செருப்புக்களை மீண்டும் கணக்கிட்டவர்கள் காதி கிராஃப்ட் மற்றும் ‘சாட்லர்ஸ் நிறுவனத்தினர். முந்நூற்று ஐம்பது ஜோடி செருப்புகளின் மதிப்பு ஏற்கனவே லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையினர் கணக்கிட்ட மதிப்பைவிட, அறுபத்தாறாயிரம் ரூபாய் அதிகமாகவே இருந்தது.

ஜெயலலிதாவின் அறையில் இருந்த 700 பட்டுப் புடவைகளை அப்படியே வைத்துவிட்டு வீட்டில் மீதமிருந்த 914 பட்டுப்புடவைகள் உட்பட 7,100 சேலைகளின் மதிப்பு மட்டுமே கணக்கிடப் பட்டது. இந்தப் பணியைச் செய்தது கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தொழில்நுட்பக் குழு! இதேமாதிரி பதினைந்து லட்சம் மதிப்புள்ள நூற்று நாற்பத்தாறு நாற்காலிகளையும் 20 லட்சம் மதிப்புள்ள 20 சோபா செட்டுகளையும் மதிப்பிட, சம்பந்தப்பட்டத் தொழில்நுட்பக் குழுக்களையே அழைத்து வந்தனர் டி.வி.ஏஸி அதிகாரிகள்

30 டேப்ரிக்கார்டர்கள், 12 டி.வி., எட்டு வி.ஸி.ஆர், முப்பத்து மூன்று (இண்டர்காம்) தொலைபேசிகள், பத்து ஃபிரிஜ்களும் (மூன்று கதவுகளுடையது) கணக்கெடுக்கப்பட்டன. 91 வாட்சுக்களை மதிப்பிட கனி கோ-வினர் வந்திருந்தினர். பிளாட்டினம் வாட்ச், கோல்டு-ஒமேகா வாட்ச் என்று விதவிதமாக இருந்த சில வாட்சுகளை இவர்களாலும் மதிப்பிட முடியவில்லை. போலீஸ் போட்டோகிராபர்களும் அரசு திரைப்படக் குழுவினரும் சிரமப்பட்டு விதவிதமாக இவற்றைப் படமெடுத்தனர்.

இந்த பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் கோர்ட்டில் காட்ட சாம்பிளுக்கு எடுத்துக்கொண்டனர். மற்றவற்றைத் திருப்பிக்கொடுத்துவிட்டனர். செருப்புகளையும், சூட்கேஸ்களையும் மட்டும் ஜெயலலிதா வீட்டிலே ஒரு ரூமில் வைத்து சீல் வைத்தனர். விலை மதிப்புமிக்க நகைளை மட்டும் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக அவற்றைப் பதிவுசெய்து எடுத்து வர அதிகாரிகள் நினைத்தபோது, போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அதற்கு உடன்பட மறுத்துவிட்டனர்.

‘‘முதல் கட்ட சோதனையின்போதுதான் என்னை ஏஜெண்டாக அம்மா நியமிச்சிருந்தாங்க... இரண்டாவது கட்ட சோதனை செய்யும்போது என்னை நியமிக்கவில்லை. நான் பொறுப்பேற்க முடியாது. வேண்டுமானால் நீங்கள் பூட்டை உடைத்து எடுத்துக்கொண்டு போங்கள். நாங்கள் வெளியே போகிறோம்’’ என்று ஆவேசமாக கூறிவிட்டார் உதவியாளர் பாஸ்கரன்.

இதுமட்டுமல்ல, டி.வி.ஏ.ஸி. அதிகாரிகளைப் பற்றிப் புகார் கூறி பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார் அந்த உதவியாளர். இதனால் வி.சி.பெருமாள் (ஐ.ஜி) தலைமையில் சென்ற டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள், சோதனையின் இடையிலேயே திரும்பி வந்தனர். ஆனால் போயஸ் தோட்டத்தினர் கூறிய புகார் விளம்பரத் துக்காகவே இருந்தது. ‘எனது பெட்டில் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தனர்’ என்று கூறி ஜெயலலிதா கூட அறிக்கை விட்டிருந்தார்.

ஆனால் உண்மையில் நடந்தது அப்படியல்ல... பெட்டின் பஞ்சு மெத்தையில் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்குமோ என்று சோதிக்க மெட்டல் டிடெக்டரை வைத்து பார்த்திருக்கிறார்கள் அதிகாரிகள். அப்போது டிடெக்டரில் ஏதோ சத்தம் வர, பெட்டை அப்படியே தூக்கி வைத்துப் பார்த்தனர். பெட்டுக்கு குறுக்கே சென்ற இரண்டு இரும்பு கம்பிகள்தான் மெட்டல் டிடெக்டரை அப்படிச் சத்தம் போட வைத்தது என்பது தெரிந்தவுடன் பெட்டை மீண்டும் பழைய நிலையில் வைத்துவிட்டனர்.

இதேமாதிரி போயஸ் கார்டனில் ஒரு பூஜை ரூம் இருந்தது. பக்தி யோடு சென்ற அதிகாரிகள் சில வெள்ளி சிலைகளை மட்டும் பார்த்துக் கணக்கெடுத்துக் கொண்டனர். பூஜை அறை என்பதால் எந்த அவமரியாதையும் செய்யக்கூடாது என்பதற்காகவே அந்த ரூமை ஜாக்கிரதையாக சோதனை செய்து வந்துள்ளனர்.

இதோடு சோதனை நடந்துகொண்டிருக்கும்போது ஐ.ஜி. உட்பட அதிகாரிகள் வெளியே வரும்போதும் சரி... உள்ளே வரும்போதும் சரி... போயஸ் கார்டனில் இருந்தவர்களைக் கொண்டு தங்களை முழு சோதனை செய்யச் சொல்லியுள்ளனர். ‘அதாவது உள்ளே இருந்த பொருட்களை வெளியே கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்கும் வெளியே இருந்து பொருட்களைக் கொண்டு வந்து உள்ளே வைத்து கணக்குக் காட்டிவிட்டனர் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்கும்தான் இப்படி செய்துள்ளனர்.

இரண்டாவது சோதனையின்போது போயஸ்தோட்டத்தில் இருந்து தங்கம், வைர நகைகளைப் பறிமுதல் செய்துகொண்டுவர டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் முயற்சி செய்ததற்குக் காரணம் உண்டு. ஜெயலலிதாவின் அபரிதமான சொத்துக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் நகைகள் மாறிவிடக் கூடாது, அல்லது காணாமல் போய்விடக் கூடாது என்று நினைத்தனர் அதிகாரிகள். போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் பெட்ரூம் உட்பட பல இடங்களில், ஜெயலலிதாவும், சசிகலாவும் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் இருந்தன. ஜெயலலிதாவிடம் அதிகப்படியான நகைகள் இருந்தாலும், அதை வெளிப்படையாக அணிவதில்லை. ஆனால், உடன்பிறவா சகோதரிகள் இருவருமே உடம்பு முழுக்க நகையை அணிந்து கொண்டு சில புகைப்படங்களில் காட்சியளிக்கின்றனர். ஆனால், படங்களில் ஜெயலலிதா அணிந்துள்ள பல நகைகள் இப்போது வீட்டில் இல்லை. அந்த நகைகள் எங்கே என்று தேடினர் அதிகாரிகள். இதனால்தான், இருக்கும் நகைகளும் இப்படி மறைக்கப்பட்டுவிடுமோ என்றுதான் அவற்றை மீட்க நினைத்தனர் அதிகாரிகள். இதற்கு போயஸ் கார்டனில் இருந்தவர்கள் ஒத்துழைக்க மறுக்க, இதுகுறித்து செசன்ஸ் கோர்ட்டில் டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் புகார் கொடுத்திருக் கிறார்கள்.

அதன்படி கூடுதல் எஸ்.பி. நல்லம்ம நாயுடு ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்டார். ஜெயலலிதாவும் தனது இரு ஏஜெண்டுகளை குறிப்பிட்டார். அதோடு நகைகளையும் முழுமையாக ஒப்படைப்பதாகவும் கூறிவிட்டார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை போயஸ் கார்டன் சென்று நகைகளைக் கணக்கிட்டு எட்டுப் பெட்டிகளில் கொண்டு வந்தனர். மறுநாள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

போயஸ் கார்டனில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் வெள்ளித் தட்டுகளும் ஏராளமான வாட்சுகளும் கிடைத்ததில் ஒரு பின்னணி உண்டு. இவை வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு வாங்கப்பட்டவையாம். மிக முக்கிய புள்ளிகளுக்கு வெள்ளித் தட்டோடு பட்டுச்சேலை, வேட்டியும், சாதாரண நபர்களுக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள வாட்சும் கொடுக்கப்பட்டன. வெள்ளித்தட்டை எடை பார்த்தபோது, ஒரு கிலோ! ஆக பட்டு விவகாரங்களையும் சேர்த்து ஒரு அழைப்பிதழுக்கு 10,000 ரூபாய் செலவு செய்துள்ளனர் என்றால், அழைப்பிதழ் பெற்ற நபர்கள் மணமக்களுக்கு எவ்வளவு மதிப்பில் பரிசளித்திருப்பார்கள் என்பதுதான் கேள்வி!

சிறப்பு நீதிமன்றம்... குற்றப்பத்திரிகை... முதல் சம்மன்!

ஜெயலலிதா, அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக் குவிப்பு பற்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் கட்டம் தொடங்கியது.

1997, ஜூன் 4-ம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினர் (டி.வி.ஏ.சி) ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அரசு ஊழியர் என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி தேவை. கடந்த வாரம்தான் கவர்னர் அனுமதி கொடுத்தார். இதை தமிழக அரசு ஜூன் 2-ம் தேதி டி.வி.ஏ.சி-யினருக்கு அனுப்ப, அவர்கள் உடனடியாகச் செயல்பட்டு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

ராஜீவ் கொலை வழக்கை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், கிரிமினல் வழக்குகளில் ஜெயலலிதா சொத்துச் சேர்ப்பு வழக்கு ஒரு கின்னஸ் சாதனைக்கு ஈடானது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.சி.பெருமாள் மேற்பார்வையில் செயல்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுதான் இந்த வழக்கை விசாரித்தது. புலனாய்வுக்குத் தலைமை வகித்தவர் எஸ்.பி.யான நல்லம்மநாயுடு. இந்த வழக்கை நேரடியாக விசாரிக்க இவரைத்தான் கோர்ட் நியமித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தியது இந்தக் குழு.

ஜெயலலிதா-சசிகலா நகைகள் பற்றி இன்ஸ்பெக்டர் கல்யாண சுந்தரம் விசாரிக்க... இன்ஸ்பெக்டர்கள் பாலுச்சாமி, முரளி, இக்பால், வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஜெ - சசியின் வங்கி விவகாரங்களை விசாரித்தனர். பல்வேறு ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்களைக் கண்டுபிடித்து அவை சம்பந்தப்பட்ட ரெக்கார்டுகளைத் தேடிப்பிடித்த இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மற்றும் வள்ளிநாயகம்...

பங்களாக்கள் மற்றும் இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரித்தவர்கள் டி.எஸ்.பி.-யான ஜெகநாதன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், கிருஷ்ணாராவ் ஆகியோர். சாட்சிகளாக இருக்கும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்களை விசாரித்தவர் டி.எஸ்.பி.-யான அன்புச்செழியன். கோர்ட் சம்பந்தமான விவகாரங்களுக்கு டி.எஸ்.பி.கதிரேசனும் அவருக்கு உதவியாக இன்ஸ்பெக்டர் சந்திரமோகன்... இப்படி போலீஸ் அதிகாரிகளைத் தவிர, பதிவுத்துறை பதிவாளர்கள், அரசின் தணிக்கைப் பிரிவு ஆடிட்டர்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்கள், சொகுசு பஸ் உட்பட பல்வேறு வாகனங்களை மதிப்பிட அரசு வொர்க்ஷாப் மேலாளர்கள் என்று இந்த விசாரணையில் பலதரப் பட்டவர்கள் பங்கெடுத்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் விசாரிக்கப்பட்டு 963 பேர் சாட்சி களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அடுத்து ஜெயலலிதா - சசிகலா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட 750 டாக்குமென்ட்டுகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் எல்லாம் சேர்ந்து சுமார் 30,000 பக்கங்கள் கொண்டுள்ளன. கிரிமினல் வழக்குகளில் இது ‘வேர்ல்ட் ரெக்கார்டு’ இவர்கள் வாங்கிய கடன் சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்டுகள் மட்டும் 100 பக்கங்கள் இருந்துள்ளன. இந்த 30,000 பக்கங்களில் உள்ள விவரங்கள் 300 பக்கங்களில் சுருக்கப்பட்டன. அதுதான் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட வழக்கின் புலனாய்வை ஒன்பது மாதங்களுக்குள் முடித்தது மிகப்பெரிய சாதனை! ஆனால், முதல் கோணல் ஒன்று நடந்துவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி சம்பந்தம் பொறுப்பேற்றிருக்கும் 11-வது கூடுதல் செஷன்ஸ் (ஸ்பெஷல்) கோர்ட்டில் இருக்கிறது. இந்தக் கோர்ட்டில் அன்றைய தினம் டி.வி.ஏ.சி. அதிகாரிகளால் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யமுடியவில்லை.

இவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு கார் ரிப்பேரானதால், நீதிபதி சம்பந்தம் அன்று கோர்ட்டுக்கு வரமுடியவில்லை. குற்றப் பத்திரிகையை பண்டல் பண்டலாகக் கட்டி நாலைந்து பெட்டிகளில் வைத்து டி.வி.ஏ.சி-யினர் கொண்டு போனார்கள். மற்றொரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி பெற்றுக்கொண்டார்.

மொத்த சொத்துக்களில், ஜெயலலிதா பெயரில் தனியாக இருப்பவையும் ஜெயலலிதா - சசிகலா ஆகிய இருவரின் பெயரில் கூட்டாக இருப்பவையும் ஜெயலலிதா தயவால் சுதாகரன் (வளர்ப்பு மகன்) மற்றும் இளவரசி போன்றோர் தங்கள் பெயரில் வாங்கிய சொத்துக்களும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இரண்டாயிரம் ஏக்கர் நிலம், முப்பதுக்கு மேற்பட்ட பங்களாக்கள், கிலோ கணக்கில் நகைகள், வாகனங்கள், வங்கிக் கணக்கில் இருந்த டெபாஸிட்டுக்கள் போன்றவை குற்றப் பத்திரிக்கையில் லிஸ்ட் போடப்பட்டன. இவற்றின் மதிப்பு 66 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்! ஆனால், உண்மையான மதிப்பு 1,200 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இதில் உள்ள உண்மையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு வேறு சில பின்னணிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினரின் வழக்கமான வருமானங்கள் மற்றும் பூர்வீகச் சொத்துக்கள் முதலில் கணக்கிடப்பட்டது. ஜெயலலிதா தமிழக அரசிடம் ஊழியமாகப் பெற்றது மாதம் ஒரு ரூபாய்தான்! இது தவிர அவருக்கு வாடகையாக வந்த வருமானம், வங்கியில் டெபாஸிட் செய்து அதன் மூலம் கிடைத்த வட்டி மற்றும் சசிகலாவின் பூர்வீகச் சொத்துக்கள் போன்றவையெல்லாம் சேர்த்தால் மொத்தம் 9 கோடிதான் தேறியது. இது தவிர ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனாகப் பெற்றிருந்தார்கள். ஆக மொத்தம் இந்த ஐந்து வருட காலகட்டத்தில் பதினோரு கோடிதான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் இவர்கள் பெயரில் இப்போது இருப்பது 66 கோடி ரூபாய் சொத்துக்கள்!

இவையெல்லாமே மார்க்கெட் மதிப்பைவிடக் குறைத்துக் காட்டி பதிவு செய்யப்பட்டவை என்பதால், இவர்களது சொத்துக்களின் உண்மை மதிப்பு 1,200 கோடியைத் தாண்டும். அதை ஊர்ஜிதம் செய்ய ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன.

சசிகலா, சுதாகரன், இளவரசி போன்றோர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள்தான். இவர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் ஜெயலலிதா தயவில் வாங்கப்பட்டவை என்பதற் கான ஆதாரங்கள்... வளர்ப்பு மகன் திருமணம், கட்சி மற்றும் அரசு விழாக்கள் பற்றிய விடியோ மற்றும் போட்டோக்கள்... இவற்றைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பல்வேறு செய்திகள் வந்துவிட்டன என்றாலும், தற்போது கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு போட்டோ ஆல்பம் குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் பிறந்த நாள் ஆல்பம்... ஜெயலலிதா தன் உடன்பிறந்த அண்ணன் மகனுக்குக்கூட இவ்வளவு அமர்க்களமான ‘பர்த்டே’யைக் கொண்டாடவில்லை. ஆனால் உடன்பிறவா சகோதரியின் அண்ணன் மகனுக்குப் படு அமர்க்களமாகப் பிறந்த நாள் கொண்டாடியதற்கு இந்த ஆல்பம் ஆதாரம். இளவரசியின் பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஜெயலலிதாவால் கூறமுடியாது. இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு 1997, ஜுன் 11-ம் தேதி ஆஜராக கோர்ட் சம்மன் அனுப்பியது.

சென்னை டூ பெங்களூரு... சுப்ரீம் கோர்ட் தந்த ‘கிடுகிடு‘ தீர்ப்பு!

66 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு தொடர்ந்தது. டான்சி நிலம் தொடர்பான வழக்கை விடவும் இந்த சொத்துக் குவிப்பு வழக்குத்தான் தி.மு.க.வின் ‘நம்பிக்கை நட்சத்திரம்’. வேகமாக அரசு தரப்பில் சாட்சிகள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனாலும் வழக்கு கொஞ்சம் இழுத்தடிக்கப்பட, தீர்ப்பு கொடுக்கப்படாமலே ஆட்சி மாறியது! அதன் பின்னரும் இந்த வழக்கு வழக்கு வேகமாகப் போனது. ஆனால் வேறொரு கோணத்தில்! தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் தார்மீக ரீதியாக ராஜினாமா செய்ய அ.தி.மு.க. அரசு சார்பில் வேறு வழக்கறிஞர் நியமனம் நடந்தது. இந்த வழக்கில் கிட்டத்தட்ட 250 சாட்சிகள் மொத்தம் விசாரிக்கப்பட்டனர். இதில் பல சாட்சிகள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தனர். மீண்டும் அரசு தரப்பு வழக்கறிஞரால் விசாரிக்கப்பட்டபோது நேர்மாறாக சாட்சியம் அளித்தனர். அதாவது மெகா பல்டி அடித்தனர்!

வழக்கு விசாரணை இந்த ரீதியில் கிட்டத்தட்ட முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ராஜமாணிக்கம். இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் ஆதிராஜாராம் போன்றவர்கள் மீதான் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியம் இல்லை என்று தீர்ப்பு கூறியவர் இந்த ராஜமாணிக்கம். இவரே சொத்துக் குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு கூற இருக்க.. தி.மு.க. வேகமாகச் செயல்பட்டது.

இதையடுத்து, தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் 2003, பிப்ரவரி ஐந்தாம் தேதி மனுச் செய்தார். ‘முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு ஸ்பெஷல் கோர்ட்டில் விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை. அரசு தரப்பில் சாட்சியம் கூறியவர்களே பல்டியடித்துள்ளனர். இதனால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார் அன்பழகன்.

இந்த மனு மீதுதான் விசாரணை நடைபெற்று, 2003, நவம்பர்- 18ம் தேதி திருப்புமுனை தீர்ப்பு வந்தது. நீதிபதி எஸ்.என்.வரியவா மற்றும் ஹெச்.கே.சேமா அடங்கிய பெஞ்ச் தந்திருக்கும் தீர்ப்பு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அசைத்துப் பார்த்திருக்கிறது. வழக்கை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக்கு மாற்ற உத்தரவு போட்டதோடு, அங்கே எந்த தந்திரங்களும் செல்லுபடி யாகாதபடி விசாரணை நடக்கும் வகையில் அடுக்கடுக்கான உத்தரவுகளை வழங்கினார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

பெங்களூரில் இதெற்கென்றே ஒரு ஸ்பெஷல் கோர்ட் உருவாக்கப்படுவதோடு, ஸ்பெஷல் நீதிபதி மற்றும் ஸ்பெஷல் அரசு வழக்கறிஞரையும் நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு போட்டனர். நீதிமன்ற சரித்திரத்தில் இதுபோன்ற உதாரணம் ஏற்கெனவே இருக்கிறது. 1966-ல் குருசரண்தாஸ் என்பவர் சம்பந்தமான வழக்கும் ராஜஸ்தானிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அது தீவிரவாதி சம்பந்தப்பட்ட வழக்கு. ஒரு அரசியல் வி.வி.ஐ.பி. சம்பந்தப்பட்ட வழக்கு மாற்றப்பட்டது இதுவே முதல் முறை!

தி.மு.க. தரப்பில் இந்த மனு பிப்ரவரி 5-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே எதிர் தரப்பு சுதாரித்திருக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை எடுத்து விசாரித்து ஒரு முடிவைச் சொல்வதற்கு உள்ளேயே ஸ்பெஷல் கோர்ட்டில் தீர்ப்பு வந்துவிடும் என்று நினைத்து விட்டனர். ஆனால், பிப்ரவரி 28-ம் தேதியே சுப்ரீம் கோர்ட் மனுவை எடுத்ததோடு ஸ்பெஷல் கோர்ட் விசாரணைக்கு தடையும் விதித்து ஷாக் கொடுத்தது. இதன்பின்னர் விசாரணையின்போது அன்பழகன் தரப்பில் வாதாடிய டெல்லி வக்கீல் அல்லி அர்ஜுனா வைத்த வாதங்கள் இந்த அளவுக்குக் கூர்மையாக இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த வழக்கில் பேராசிரியர் அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தவர் தி.மு.க. வழக்கறிஞரான பிரகாசம் என்றாலும், இதில் வாதாடியவர் மூத்த வழக்கறிஞர் அல்லி அர்ஜுனா. பார்ஸியான இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஜெயலலிதா தரப்புக்கு வழக்கம் போல் கே.கே.வேணுகோபால், சசிகலா குடும்பத்தினருக்கு வழக்கறிஞர் பாப்டே ஆஜரானார்கள்.

தி.மு.க. தரப்பில் இந்த வழக்கில் அடிப்படையாக வைக்கப்பட்ட வாதம் ‘‘அரசுத் தரப்பில் வழக்கை நடத்தவேண்டிய போலீஸ் துறை முதல்வரின் கையில்தான் இருக்கிறது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவரே பிராஸிக்யூட்டராக இருப்பதால் இந்த வழக்கு தமிழகத்தில் நடக்கும் பட்சத்தில் நீதி கிடைக்காது!’’ எனபது.

இரண்டாவதாக, இந்த வழக்கில் அரசு சாட்சிகள் பல்டி அடித்த விவகாரம். கிட்டத்தட்ட 76 அரசு தரப்பு சாட்சிகளில் 64 பேர் பல்டி அடித்தனர். இதுதான் இந்த விவகாரத்தின் முக்கிய பிரச்சனையாகி, சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமரிசித்துவிட்டது. இப்படி அரசு தரப்பு சாட்சி ஏற்கனவே தான் சொன்னதில் இருந்து மாறும்பட்சத்தில் அவரை பல்டி அடித்த சாட்சியாக அரசு வழக்கறிஞரே அறிவிக்கவேண்டும். விசாரணை செய்த ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியிடம் சொல்லி இதை ரிக்கார்டு செய்திருக்க வேண்டும். ஆனால் புதிதாக வந்த அரசு வழக்கறிஞர் அப்படிச் செய்யவில்லை.

மூன்றாவது விவகாரம்.. முதல்வர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட நேரடியான விஷயம். இந்த சொத்து சேகரிப்பு வழக்கில் சாட்சியங்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டு, இறுதியில் கேள்வி கேட்கும் படலம் வந்தபோது குற்றம்சாட்டப்பட்ட எல்லாரும் கோர்ட்டில் ஆஜராகி தாங்கள் குற்றம் புரிந்தவர்களா என்பது பற்றி நீதிபதியிடம் கூறவேண்டும். இந்த கேள்வி படலத்தில் போது குற்றச்சாட்டுக்குள்ளான முதல்வர் ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவருடைய வழக்கறிஞரான ஜோதி கோர்ட்டின் ஸ்பெஷல் அனுமதியைப் பெற்று, நீதிமன்றம் கொடுத்த கேள்விகளை போயஸ் கார்டனுக்கு கொண்டு போய், வினாக்களுக்கான விடையை எழுதிக்கொண்டு வந்து கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறார்.

இதுவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை செமக் கடுப்பாக்கி விட்டது. ‘‘குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் இப்படி அரசு தரப்பு சாட்சிகள் பல்டி அடித்ததால்தான் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அங்கும் கோர்ட் சாட்சிகளை பல்டியாக பதிவு செய்யவில்லை.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் (ஜெயலலிதா) நடந்துகொண்ட விதத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அவர் கோர்ட்டுக்கு வராமல் தவிர்த்தது விசாரணையையே கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது’’ என்பது நீதிபதிகளின் முக்கிய கண்டனம்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘முதல்வர் ஜெயலலிதா ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளவர். பாதுகாப்பு காரணங்களால் வரமுடியாமல் போனது’’ என்று வாதாடியதை கோர்ட் ஏற்கவில்லை.

சாட்சி பல்டியைப் பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு வேணுகோபாலிடம் நேரடியான பதில் இல்லை. ‘‘சாட்சிகள் திரும்பக் கொடுத்த சாட்சியங்களில் எவ்வளவு உண்மை இருப்பதாக கோர்ட் கருதுகிறதோ, அதற்கான பலனையாவது என் கட்சிக்காரருக்கு தரவேண்டும்’ என்றார் வேணுகோபால். ‘‘இப்படி கண் முன்பு நீதியை குழிதோண்டிப் புதைப்பதை சுப்ரீம் கோர்ட் அனுமதிக்காது’’ என்ற நீதிபதி சேமா, ‘‘முதல்வர் ஜெயலலிதா உள்ளூரில் இருந்துகொண்டே கோர்ட்டுக்கு வராமல் இருந்திருக்கிறார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்’’ என்றார் கோபமாக.

அத்துடன் இந்த மனுவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 2003, நவம்பர் 18-ம் தேதியன்று இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றி உத்தரவிட்டது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். சிறப்பு நீதிபதியாக பச்சாப்புரே நியமிக்கப்பட்டார்.

பெங்களுருவுக்கு வழக்கு மாற்றப்பட்டபோதே இந்த வழக்கு ஏறத்தாழ முடியும் கட்டத்தில்தான் இருந்தது. ஆனால், அதன் பிறகுதான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முழு வீச்சில் வாய்தா வாங்கும் வேலையில் இறங்கினார்கள். அதனால், அதன்பிறகு 10 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் ஆஜராகவில்லை. ஜெயலலிதா தரப்பில் ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். இப்படி அவகாசம் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன நீதிபதி, இப்படி குற்றவாளிகள் ஆஜராகாமல் இருப்பதைக் காரணம் காட்டியே நான் தீர்ப்புச் சொல்லிவிடுவேன் என்று எச்சரித்தார். அதன்பிறகும் குற்றவாளிகள் அவகாசம் கேட்டனர். இதையடுத்து, 2005, மே 16ம் தேதி கண்டிப்பாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும். அதற்கு மேல் அவகாசம் தரமாட்டேன் என்றார்.

ஆனால், நீதிபதி சொன்ன நாளில் அவர்கள் ஆஜராகவில்லை. அப்போது வெறுத்துப்போன நீதிபதி, ‘‘கடந்த ஆறுமாதங்களாக இந்த வழக்கில் ஒன்றுமே நடக்கவில்லை. நான் தனியாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறேன். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதுபோல் உணர்கிறேன்’’ என்று வெறுத்துப்போய் சொன்னார். இதையடுத்து, லண்டன் ஹோட்டல் வழக்கையும் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார். அதை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அப்படி விசாரித்தால் இந்த வழக்கு அடிபட்டுப்போகும் என்று நினைத்து, தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்போது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை மட்டும் நடத்துங்கள் என்று உத்தரவிட்டது. இப்படியாக ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு 2004-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் நடைபெற ஆரம்பித்தது.