சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டு 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு 14 நீதிபதிகளைக் கண்ட இந்த மெகா வழக்கில் காந்தி நகர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்பெஷல் கோர்ட் முக்கிய கதாபாத்திரம். நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மாறும்போதெல்லாம் காட்சிகள் மாறிய விசித்திரங்கள், வாய்தாக்கள், இழுத்தடிப்புகள் என ஜவ்வாக நீண்ண்ட ஸ்பெஷல் கோர்ட் காட்சிகளில் சில சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே...

பசவராஜ் பாட்டீலை விட ஜெயலலிதா பெரிய ஆளா?

பிடிவாத ஆச்சார்யா, பெங்களூரு சீரியஸ் 2004-ல் பெங்களூரில் விசாரிக்கப்பட்ட ஜெ. வழக்கு சிந்துபாத் கதை போல தொடர்ந்து கொண்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கில், “இத்தனை ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதுவரை ஆஜராகவே இல்லை. இங்கு நடப்ப‌து எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா... இல்லையா?” என்று நீதிபதி மல்லிகார்ஜூனையா கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜூலை 27-ம் தேதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்!’’ என்று உத்தரவும் பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, 27-ம் தேதி, சசிகலா, இளவரசி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். சுதாகரனுக்கு கையில் அடிபட்டு இருப்பதாக அவரின் வழக்கறிஞர் சரவண குமார் மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயல‌லிதாவின் வழக்கறிஞர் பி.குமார், ‘‘குற்றம்சாட்டப்பட்டவர் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 313-ன் படி, நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவை இல்லை!’’ என 2008-ல் திருத்தப்பட்ட சட்டத்தினை மேற்கோள் காட்டினார். அத்துடன் பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் எடுத்து கூறி நீண்ட நேரம் வாதிட்டார். இறுதியாக, ‘‘என்னுடைய வாதம் இன்னும் முடியவில்லை. அடுத்து நீதிமன்றம் கூடும்போது வாதம் தொடர அனுமதிக்க வேண்டும்!’’ என கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, நீதிபதி மல்லிகார்ஜுனையா ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் 1-ம் தேதி கூடிய நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், பாதியில் விட்ட வாதத்தை மீண்டும் தொடர்ந்தார். ‘‘2003-ம் ஆண்டு முதல்வ‌ராக குற்றம்சாட்டப்பட்டவர் (ஜெயலலிதா) இருந்தபோது, சென்னை தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு இட்டார். அப்போது பாதுகாப்பு மற்றும் அலுவல் போன்றவற்றைக் காரணம் காட்டியதும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. அதே போல் எழுத்துப்பூர்வமாக (313(1) பிரிவின்படி) வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் மறுக்கும் பட்சத்தில், வீடியோ கான்ஃபெரன்ஸிங் (313(5)பிரிவின்படி) மூலமாவது அனுமதிக்க வேண்டும்!” என்று கேட்டார். அதோடு ஆந்திரா, மும்பை, டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். இதனை உன்னிப்பாகக் கவனித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பலமாக சிரித்தபடி, “நண்பர் ரொம்ப நேரமாக வாதிட்டுக்கொண்டு இருக்கிறார்... எவ்ளோ பெரிய வாதம்!’’ என்று சலித்துக்கொள்ள, நீதிபதியும் மீடியாக்காரர்களும் சிரித்தேவிட்டனர். அதற்குப் பிறகும், “ப்ளீஸ், இதுதான் கடைசி பாயின்ட்... இதுதான் கடைசிக் கருத்து!” என்று கூறி ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் வாதிட்டார் ஜெ.வக்கீல்.

அவரைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘‘2003-ல் சென்னையில் இருந்து இந்த வழக்கை பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றியபோதே, உச்ச நீதிமன்றம் வழக்கை இப்படித்தான் நடத்த வேண்டும் என சில நடைமுறைச் சட்டங்களைச் சுட்டிக்காட்டியது. எனவே உச்ச நீதிமன்ற ஆணையின்படி 313 பிரிவை அமல்படுத்தினால் யாராக இருந்தாலும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம். என்னுடைய அனுபவத்தில், கர்நாடக அரசில் பெரிய பதவியில் இருந்த பசவராஜ் பாட்டீல் கூட நேரில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருக்கிறார். எனவே, மீண்டும் மீண்டும் புதிய மனுக்கள் மீது விசாரணை நடத்தத் தேவை இல்லை. எனவே, எதிர்த் தரப்பில் தாக்கல் செய்த வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!” என்றார் அதிரடியாக‌.

உடனே ஜெ.வக்கீல் குமார் மீண்டும் எழுந்து, ‘குற்றம்சாட்டப்பட்டவர் வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் விளக்கம் அளிக்கலாம். எனவே, அது தொடர்பாக வாதாடப் போதிய நேரம் வழங்க வேண்டும்!’’ என்றார். உடனே நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘‘நாளையோ, நாளை மறுநாளோ நீங்கள் தாராளமாக வாதாடலாம்!’’ என்று கூறியதும், “எனக்கு மும்பை கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அதனால் கூடுதல் அவகாசம் வேண்டும்!’’ என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி. இப்படியே இழுத்துக்கொண்டு போய் 2011-ம் ஆண்டு வரை ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா, இளவரசி இருவரும் ஜுலை மாதம் 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜரானார்கள். உடல் நிலையைக் காரணம் காட்டி, சுதாகரன் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறிஞரான பி.குமார், ஜெயலலிதா ஆஜராகாமல் இருப்பதற்கான வாதங்களை எடுத்து வைக்க.. அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஏக எதிர்பார்ப்புகளுக்கிடையில், 12-ம் தேதி தனி நீதிமன்றம் கூடியது. நீதிபதி மல்லிகார்ஜூனையா, ‘‘ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணங்களை எழுதி, வக்கீல்பி.குமார் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுக்​களைத் தள்ளுபடி செய்கிறேன்’’ என்று கையோடு கொண்டு​வந்திருந்த குறிப்பை வாசிக்க... உடனே எழுந்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், ‘‘செப்டம்பர் 14-ம் தேதி வரை தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அதற்குள் ஜெயலலிதாவை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடக் கூடாது’’ என அடுத்த மனுவை தாக்கல் செய்ததும் கடுப்பாகிவிட்டார் நீதிபதி. ‘‘ஜெயலலிதாவை எப்போது எப்படி இங்கே வரவழைக்க வேண்டும் என கோர்ட்டுக்குத் தெரியும்’’ என்று சொல்லி அந்த மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

இந்த விவகாரங்களைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோரின் வக்கீல்கள், இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ‘‘சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம் மீண்டும் மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என கோரினர். இந்த மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா கோபம் அடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 27-ம் தேதி சசிகலாவும், இளவரசியும் ஆஜரானர்கள். அப்போதும் சுதாகரனுக்குக் கையில் காயம் காரணமாக ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான், இசட் பிளஸ் பாதுகாப்பில் ஜெ. இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என போடப்பட்ட இரண்டு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ஜெ. தரப்பு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது. ‘விலக்கு அளிக்க முடியாது. செப்டம்பர் 12-க்குள் ஆஜராகும் தேதியை நீங்களே சொல்லுங்கள்’ என சுப்ரீம் கோர்ட் டென்ஷன் காட்டியது.

இதையடுத்து, வேறு வழி இல்லாமல், ஜெயலலிதாவின் பெங்களூரு நீதிமன்ற விஜயம் சாத்தியமானது. ‘எழுத்து மூலமாக விசாரிக்க வேண்டும். இல்லை என்றால், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாவது விசாரிக்க வேண்டும்’ என ஜெ. தரப்பு வழக்கறிஞர் எவ்வளவோ நீண்ட வாதங்களைப் புரிந்தும்... ‘‘அக்டோபர் 20-ம் தேதி ஜெயலலிதா பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்!’’ என உச்ச நீதிமன்றம் கறார் உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. இதைத் தொடர்ந்து தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘இங்கு வரும் ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டார். எனவே, ஜெ-வின் பாதுகாப்புக்காக கர்நாடக அரசு, பெங்களூரு இணை கமிஷனர் மோகன் ஜி-யை நியமித்தது. இதையடுத்து, நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘‘பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் இருக்கும் மத்திய சிறைச்சாலை வளாக நீதிமன்றத்தில் காலை 11 மணிக்கு ஜெயலலிதா ஆஜராக வேண்டும்!’’ என்று உத்தரவு போட்டார்.

தங்கமும் வைரமும் நல்லம்ம நாயுடு வைத்தது

அதையடுத்து, 2011, அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானார். வெளியில் பார்க்கிற ஜெயலலிதாவுக்கும் நீதிமன்றத்தில் பார்த்த ஜெயலலிதாவுக்கும் அவ்வளவு வித்தியாசம். மிக அமைதியாகப், பொறுமையாகப் பேசினார். ஒவ்வொரு கேள்விக்கும் நிறுத்தி... நிதானமாக... ஆங்கிலத்தில் தெளிவாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்கு மட்டும் சிரித்தபடி பதில் சொன்னார். சில சமயங்களில் குரலை உயர்த்திப் பேசினார். ஆனால், விநாடி-வினா மாதிரி உடனுக்குடன் பதில் சொன்னார். நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் குரல் மென்மையானது. அதனால் அவர் கேட்கும் கேள்வி, குற்றவாளிக் கூண்டுக்குள் உட்கார்ந்து இருக்கும் ஜெயலலிதாவுக்கு கேட்காது என்பதால், நீதிபதிக்கு முன்னால் வந்து அமர்ந்து கேட்க வசதியாக கோர்ட் எழுத்தரின் பக்கத்தில் வந்து ஜெயலலிதா உட்கார்ந்தார். அப்போது அவருக்காக சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட எஸ் டைப் ஒயர் இருக்கை தரப்பட்டது. ஒவ்வொரு கேள்வி முடியும் அதே நிமிடத்தில், ஜெயலலிதாவிடம் இருந்து கணீர்... கணீர்... எனப் பதில்கள் வந்து விழுந்தன. ஆனால், நிறையக் கேள்விகளுக்கு அவரின் பின்னால் இருந்து வழக்கறிஞர் பி.குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், வேகமாகப் பதில்களைத் தேடி... மெதுவாகச் சொல்வதும், ‘யெஸ்... நோ...’ என சொல்வதும், சைகைகளைக் காட்டுவதுமாக உதவினர். ஜெயலலிதாவும், பல கேள்விகளுக்கு வழக்கறிஞர்களின் முகங்களைப் பார்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு பதில் அளித்தார்.

போயஸ் கார்டன் வீட்டை புதுப்பித்தது, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், திருநெல்வேலியில் வாங்கப்பட்ட நிலங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்தது... எனப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் நாள் கேட்கப்பட்ட 379 கேள்விகளுக்குப் பெரும்பாலும் ‘ஐயம் நாட் அவேர் ஆஃப் தட்’ எனப் பதில் அளித்தார். ‘ஐ டோன்ட் நோ’ என்று சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவருக்கு வழங்கப்பட்ட காசோலை, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் விரிவாகப் பதில் சொன்னார். உண்மையில் அவரது ஆங்கிலப் புலமையை எண்ணி அனைவரும் வியந்திருக்க வேண்டும். முதல் நாள் மதிய இடைவேளை வரை 112 கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது. எனவே, நேரத்தைச் சேமிக்க இரண்டு மூன்று கேள்விகளை ஒன்றாகச் சேர்த்து நீதிபதி கேட்க ஆரம்பித்தார். அப்போதுதான் ஜெயலலிதா ரொம்பவும் சிரமப்பட்டார். இதைப் பார்த்த ஜெ-யின் வழக்கறிஞர், தனித் தனிக் கேள்வியாகவே கேளுங்கள் என நீதிபதியிடம் விண்ணப்பித்தார். அதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். போயஸ் கார்டன் வீட்டைப் புதுப்பிக்கப் பயன்படுத்திய விலை உயர்ந்த தேக்கு, டைல்ஸ் பற்றிய கேள்விகளுக்கு, ‘கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எனக்கு எதிராக நல்லம்ம நாயுடு என்ற அதிகாரி, தவறான மதிப்பீடுகளைச் செய்து என் மீது தேவை இல்லாத அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள், அத்தனையையும் மிகைப்படுத்தியே சொல்லி இருக்கிறார்கள்’ என விரிவாகப் பதில் அளித்தார். பின்னர் அவர் சொன்ன பதில்களைத் தன் கைப்படவே நீதிபதி மல்லிகார்ஜுனையா தனித் தனி பேப்பர்களில் எழுதினார். 379 கேள்விகளுக்கும் 379 கையெழுத்துகளைப் போட்டார். இதற்கே அரை மணி நேரத்துக்கு மேலானது. லஞ்ச் நேரம் தவிர்த்து விசாரணை நடந்த ஐந்தரை மணி நேரமும் தண்ணீர்கூட குடிக்காமல் முழு ஒத்துழைப்பு அளித்தார் ஜெயலலிதா.

இரண்டாம் நாள்... அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘உங்களுக்கு கர்நாடக போஸீஸ் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. ஆனாலும், பரப்பன அக்ரஹாராவைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் ரொம்ப அவதிப்படுகிறார்கள்...’ எனச் சொல்ல, வழக்கறிஞர் பி.குமார் பேச எழுந்தார். அவரை அமரச் சொல்லிவிட்டு ஜெயலலிதாவே, ‘‘எனக்கு விளையாட்டாக ஒன்றும் பாதுகாப்புக் கொடுக்கவில்லை. எனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து உண்டு. அது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் இயங்கி வந்த தமிழ்த் தீவிரவாத அமைப்புகளை அடியோடு ஒழித்திருக்கிறேன். தேசிய அளவில் நக்ஸலைட், மாவோயிஸ்ட்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், அவர்களாலும் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ எனப் பொரிந்து தள்ளிவிட்டார்.

முதல் நாளைவிட இரண்டாம் நாள் சற்றுப் பதற்றமாகவே காணப்பட்டார் ஜெயலலிதா. காரணம், சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை அபாய கண்டமாகப் பார்க்கப்படுவது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம், விலையுயர்ந்த கடிகாரங்கள், செருப்புகள், புடவைகள், உடைகள் ஆகியவை பற்றிய கேள்விகளும், அவை பற்றிய மதிப்பீடுகளும்தான். எனவே, ‘இவை எல்லாம் எங்கிருந்து வாங்கப்பட்டன? எதற்காக வாங்கப்பட்டன? எப்படி வாங்கப்பட்டன?’ ஆகிய கேள்விகளை நீதிபதி கேட்டார். ‘உங்களிடம் இருந்து 24 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறதே?’ எனக் கேட்டு முடிக்கும் முன்னே, ‘என்னிடம் 21,000 கிராம் தங்க நகை மட்டுமே இருந்தது. நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். பிரபல நடிகையாக இருந்து சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கியவை. அவை அத்தனையும் புதிதாக வாங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அது சுத்தப் பொய். என்னிடம் இருந்த பழைய நகைகளை உருக்கிச் செய்தது. எனது நகைகளை மதிப்பிட்ட தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடு வேண்டும் என்றே என் மீது பழி போட்டுள்ளார். அதேபோல, எங்கிருந்தோ கொண்டுவந்த நகைகளை என் வீட்டில் வைத்துப் படம் எடுத்து எனது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறி, பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு என் பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்’ என காரசாரமாகப் பேசினார். அதேபோல, 918 வாட்ச்சுகள் பற்றிய கேள்விக்கு, ‘என்னிடம் இருந்த பழைய வாட்ச்சுகளையும் புதிய வாட்ச்சுகளாக மதிப்பிட்டு இருக்கின்றனர். ஒருவர் எப்படி அவ்வளவு வாட்ச்சுகளையும் பயன்படுத்த முடியும்?’ என எதிர்க் கேள்வி கேட்டு மடக்கினார். 914 புடவைகள், 6,195 சுடிதார் மற்றும் இரவு உடைகள் பற்றிய கேள்வியை நீதிபதி கேட்க, ‘என் வீட்டில் இருந்ததாக அவர்கள் சொல்லும் நூற்றுக்கணக்கான புடவைகள் என்னுடையவை அல்ல. அவை அனைத்தும் அவர்களே கொண்டுவந்து என் வீட்டில் வைத்தவை’ என அழுத்தமாகச் சொன்னார். மேலும், ‘நான் அரசியலுக்கு வந்து எதையும் புதிதாக சம்பாதிக்கவில்லை. அவை ஏற்கெனவே சம்பாதித்தவைதான்!’ என ஜெயலலிதா சொன்னதையும் நீதிபதி குறித்துக்கொண்டார்.

சிக்னோ என்டர்பிரைசஸ், ஜெ.ஜெ. டி.வி, ஜெ.ஜெ. குரூப் ஆஃப் கம்பெனிஸ் உள்ளிட்ட கம்பெனிகளில் உள்ள ஷேர் பற்றிய கேள்விக்கு, ‘நான் முழு நேர அரசியலில் இருக்கிறேன். அந்தந்த கம்பெனிகளின் அன்றாடச் செயல்கள் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. நான் வெறும் சைலன்ட் பார்ட்னர் மட்டுமே’ எனப் பதில் அளித்தார். மூன்றரை மணி ஆனபோது, ‘மேடம் களைப்பாக இருக்காங்க. நேரமும் ஆகிவிட்டது. இப்போது பதில்களைப் படித்துப் பார்த்துக் கையெழுத்துப் போட ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும்’ என வழக்கறிஞர் பி.குமார் கூற, ‘இல்லை... நேற்று போல் ஒவ்வொரு கேள்வி-பதிலுக்கும் ஒரு பக்கம் என்று ஒதுக்காமல், இன்று தொடர்ச்சியாகக் கேள்வி-பதில்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆகவே கேள்விகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு கையெழுத்து வீதம் போட்டால் போதும்!’ என நீதிபதி சொன்னார். முதல் நாளில் 379 கேள்விகளும் இரண்டாம் நாளில் 188 கேள்விகளுமாக மொத்தம் 567 கேள்விகள் கேட்கப்பட்டன.

சுதாகரன் திருமணத்துக்கு செலவழிக்கவில்லை! - ஜெயலலிதா பதில்

சுதாகரன் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. 2011, நவம்பர் 22-ம் தேதி காலை தனி விமானம் மூலம் 9.50 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் தோழி சசிகலாவுடன் வந்து இறங்கிய ஜெயலலிதா, தயாராக இருந்த கேரவனில் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு 37 கார்கள் அணிவகுக்க தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் உற்சாகமாகக் கிளம்பினார். சரியாக 10.40 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் நுழைந்தார். அடுத்து, சுதாகரன் தனது வழக்கறிஞர்களுடன் தோரணையாக கோர்ட்டுக்குள் நுழைந்தார். உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி இளவரசி இரண்டு நாட்களும் ஆப்சென்ட். கடந்த முறை ஜெயலலிதா கோர்ட்டுக்கு வந்தபோது 3,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இதற்காக `45 லட்சம் செலவானது. பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகம் என்று முணுமுணுக்கப்பட்டது. அதனால், இந்த முறை அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று ஜெயலலிதாவே சொல்லிவிட்டாராம். அதனால், சுமார் 1,500 போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். இந்த முறை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, `30 லட்சம் மட்டுமே(!) செலவு செய்யப்பட்டதாக கர்நாடகக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

‘‘252 சாட்சிகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 1,384. இதில் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் 1,339. ஏற்கெனவே 567 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதால், மீதம் உள்ள கேள்விகளை காலை 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா கேட்க ஆரம்பித்தார். ஜெயலலிதா தரப்பில் பி.குமாரும், அரசுத் தரப்பில் ஆச்சார்யாவும் ஆஜர் ஆனார்கள். அதற்கு முன்னதாக, ஜெயலலிதா விசிட்டர்ஸ் ஹாலில் நுழையும்போது, சுதாகரன் எழுந்து நின்று வணக்கம் சொன்னார். அப்போது ஜெயலலிதாவும் வணங்கியதால், சுதாகரன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்தது. ஐந்து நிமிடங்கள் முன்கூட்டியே கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. இரண்டே நாட்களில் எல்லா கேள்விகளையும் கேட்டுவிட வேண்டும் என்ற அவசரத்தில் நீதிபதி அடுக்கடுக்காகக் கேள்விகளை வீசினார். வங்கிக் கணக்குகளின் பணப் பரிவர்த்தனைகள், ஷேர் மார்க்கெட், சுதாகரன் திருமணச் செலவுகள் பற்றிய கேள்விகளுக்கு ஜெயலலிதா தயங்காமல் பதில் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘யெஸ், நோ, ஐ டோன்ட் நோ’ என்பதுதான் அவரது பதில். முதல் நாள் மாலை 5.20 மணி வரை 580 கேள்விகளுக்கு ஜெயலலிதாவின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன. பேப்பர்களில் வேகமாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்னைக்குப் பறந்தார். பாக்கி இருந்த 192 கேள்விகளுக்கு மறுநாள் பதில் அளித்தார். மதியம் 2 மணி வரை 160 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததால், ‘உணவு இடைவேளை விடலாமா?’ என நீதிபதி கேட்டார். ‘இன்னும் 30 கேள்விகள்தானே இருக்கின்றன. ஒரேயடியாக முடித்துவிடலாம். வேறு யாருக்காவது இதில் பிரச்னை இருக்கிறதா?’ என அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவைப் பார்த்து ஜெயலலிதா கேட்க, அவரும் ‘நோ பிராப்ளம்’ என்று சொல்லவே... தொடர்ந்து விசாரணை நடந்து முடிந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஆபத்தானதாகக் கருதப்படுவது, சுதாகரனின் கல்யாண சம்பவமும் வீட்டில் இருந்த வெள்ளி, தங்க நகை, புடவைகள், வாட்சுகள் மற்றும் காலணிகள்தான். எனவே அவை குறித்த கேள்விகளுக்கு ஜெயலலிதா பதற்றமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷார்ப்பாகவே பதில் சொன்னார். அதுவும் ‘சுதாகரனின் திருமணத்திற்காக ஆறு கோடி ரூபாய் செலவு செய்தீர்களா?’ என நீதிபதி கேட்டபோது, ‘‘சுதாகரனின் திருமணத்துக்காக நான் ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை. மணப்பெண் வீட்டாரே எல்லாச் செலவுகளையும் செய்தார்கள்’’ என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொன்னார்.

‘சுதாகரன் திருமணப் பத்திரிகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் மாண்டலின் னிவாஸுக்கும் வெள்ளித் தட்டில் வைத்து, அந்தத் தட்டையும் பரிசாகக் கொடுத்தீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். ‘சுதாகரன் திருமணத்தில் ஒரு மணி நேரம் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்தி இருக்கிறார். அதற்கு எவ்வளவு கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. மணப்பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கலைத் துறையில் இருப்பதால் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்’ என்று விளக்கம் அளித்தார். ஸ்டேட் பேங்க் அக்கவுன்ட், கனரா பேங்க் அக்கவுன்ட், இந்தியன் பேங்க் அக்கவுன்ட்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளுக்கு, ‘என் அக்கவுன்ட்டில் நடந்த பரிவர்த்தனைகள் பற்றி மட்டும் எனக்குத் தெரியும். சசிகலா, இளவரசி, சுதாகரனின் கணக்குகளில் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது என்றார். அதேபோன்று சிக்னோ என்டர்பிரைசஸ், சசி என்டர்பிரைசஸ், ஜெ.ஜெ. என்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனிகளில் ஷேர் வாங்கியது, முதலீடு செய்தது போன்ற கேள்விகளுக்கும், ‘நான் அதில் வெறும் சைலன்ட் பார்ட்னர். அதனால் அந்த நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து முடித்த நிலையில் நீதிபதி, ‘உங்கள் மீது சாட்டப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டார். உடனே தன் கைப்பட அங்கேயே அமர்ந்து இரண்டு பக்க ஸ்டேட்மென்ட் எழுதி ஸ்பெஷல் மனுவாக தாக்கல் செய்தார்.

அதில், ‘1991-96 காலத்தில் எனது தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்தது. அதன் பிறகு 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், எனது பேருக்கும் ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தது. அந்த சமயத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறையில் ஒரு புகார் அளித்திருந்தார். அப்போதைய தி.மு.க. சட்ட அமைச்சர் மாதவன், ஆற்காடு வீராசாமி இருவரும் திட்டமிட்டு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு என் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் புனைந்தனர். நல்லம்ம நாயுடு எங்கிருந்தோ கொண்டுவந்த பொருட்களை, நகைகளை எல்லாம் என் வீட்டில் எடுத்ததாகப் பொய் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், தமிழ் உட்பட பல மொழிகளில் நான் பிரபல நடிகையாக 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். திரைப்படக் காட்சிகளுக்கு ஏற்ப புடவைகள், துணிகள், வாட்சுகள், காலணிகள் வாங்குவது வழக்கம். அப்படி நான் படங்களில் பயன்படுத்திய பொருட்களை ஷூட்டிங் முடிந்த பிறகு, என் மீதுள்ள அன்பால், எனக்கே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அவ்வாறு நான் நினைவுப் பொருட்களாக வைத்திருந்தவற்றையும் எனது சொத்துக் கணக்கில் சேர்த்துள்ளனர். எனது அறையில் இருந்த பெர்சனல் ஆல்பத்தை தி.மு.க-வின் குடும்பத் தொலைக்காட்சியில் காட்டி, என் பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்தனர். நான் முதல்வராக பதவியேற்ற பிறகு எனது சம்பளத்தில் எதனையும் வாங்கவில்லை. வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, போயஸ் கார்டனில் உள்ள ‘31ஏ’ எண் வீட்டை மட்டுமே வாங்கினேன். சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்பந்தம் இல்லை. எனவே அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் என்னைப் பழிவாங்கவே தி.மு.க. பொய்யாக வழக்கு தொடர்ந்து உள்ளது’’ என ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

அதிரவைத்த ஆச்சார்யா ஷாக் ராஜினாமாவின் முழு பின்னணி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், ‘ஜெயலலிதாவைக் காப்பாற்ற பி.ஜே.பி. முயற்சிக்கிறது’ என்று ஒரு அதிர்ச்சிக் குற்றச்சாட்டைக் கிளப்பினார் கர்நாடக அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா! கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆச்சார்யாவை, மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமித்தது. இதைத் தொடர்ந்து வீரபத்ரையா என்ற வக்கீல், ‘ஒரே நபரே அட்வகேட் ஜெனரலாகவும், அரசுத் தரப்பு வக்கீலாகவும் இரட்டைப் பதவிகளை வகிக்க சட்டத்தில் இடம் இல்லை’ என்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை அன்று கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அட்வகேட் ஜெனரல் பதவி மிக கௌரவமான பதவி என்பதால், ஆச்சார்யா தன்னிடம் உள்ள அரசுத் தரப்பு வக்கீல் பதவியை விட்டுத்தான் விலகிக் கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க... ஆச்சார்யாவோ, அட்வகேட் ஜெனரல் பதவியை உதறினார்.

இந்தச் சூழலில் அவரை நாம் சந்தித்துப் பேசினோம். ‘‘இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது என்று புகார் எழுந்தது முதலே இந்த வழக்கில் ஆஜராக வேண்டாம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எனக்கு நெருக்கடிகள் வந்தன. இப்போது பி.ஜே.பி. மேலிடம், கர்நாடக அரசு மூலமாக இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ளும்படி என்னை நிர்பந்திக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கில் ஆஜராகி வரும் என்னை, கடந்த ஆண்டு அட்வகேட் ஜெனரலாக நியமித்ததே இந்த சதியில் ஒரு பகுதிதானோ என்று சந்தேகிக்கிறேன். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உயர் நீதிமன்றம்​தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் வாதாட என்னை நியமித்தது. எனவே, எக்காரணம் கொண்டும் இந்த வழக்கில் இருந்து விலகப் போவதில்லை. இதைக் கர்நாடக அரசிடம் பலமுறை தெளிவாகக் கூறிவிட்டேன். அதன் பின்பும் இரட்டைப் பதவி விவகாரத்தைக் கிளப்பவே, அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கு மட்டும் அல்ல... எந்த ஒரு வழக்குமே சட்டப்படியும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம், வேண்டுதல் எல்லாமே...” என்றார் உறுதியாகவும் உருக்கமாகவும்!

எனக்கு ஆங்கிலம் தெரியாது - சசிகலா

குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 313-ன்படி அக்டோபர் மாதம் ஜெயலலிதா, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு நான்கு நாட்கள் விளக்கம் அளித்தார். அடுத்து, சசிகலா விளக்கம் அளிக்க வேண்டும். ‘சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே, தமிழில்தான் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று அவரது தரப்பில் மனு போடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. காலை 10.30 மணிக்கு சுதாகரன், இளவரசி சகிதமாக கோர்ட் படி ஏறியவர் சோகமயமாகவே காணப்பட்டார். குற்றவாளிக் கூண்டில் அமர்ந்த சசிகலா முகத்தில் கூடுதல் பதற்றம் தெரிந்தது. சரியாக 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா வந்தவுடன், ‘தமிழில் பதிவு செய்யக்கோரும் எங்கள் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. எனவே, தீர்ப்பு வரும் வரை வாக்குமூலம் பெறக் கூடாது’ என்று சசிகலா வக்கீல் மனு போட்டார். இதனைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா, ‘தனிக் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தச் சொல்லவில்லை. எனவே, இன்றே வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய வேண்டும்’ என்று அழுத்தம் கொடுத்தார். அதனால், சசிகலா தரப்பின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. அடுத்து, வாக்குமூலக் காட்சி அரங்கேறியது. நீதிபதிக்கு முன் ஒரு டேபிளும் சேரும் போடப்பட்டு சசிகலா உட்கார வைக்கப்பட்டார். மொழிபெயர்ப்பாளரும் வழக்கறிஞருமான ஹரீஸ், சசிகலாவுக்கு முன்பு அமர்ந்து, நீதிபதி ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்து சசிகலாவிடம் சொன்னார். சசிகலா தமிழில் கூறும் பதிலை ஆங்கிலத்தில் நீதிபதியிடம் கூற, அப்போதே நீதிபதி பதிவு செய்துகொண்டார். உணவு இடைவேளை முடிந்து சரியாக 3 மணிக்கு கோர்ட் கூடியது. மீண்டும் கேள்விகளை கோர்ட் முடுக்கிவிட, ‘ஆம்’ ‘இல்லை’, ‘எனக்குத் தெரியாது’ போன்ற ஒரு வரி பதில் செஷனாக இருந்தது. சரியாக 4 மணி ஆகும்போது குறுக்கிட்ட சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘நாங்கள் சென்னையில் இருந்து வரும்போதே, இன்று மாலை 6 மணிக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிவிட்டோம். எனவே, இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும். மீதம் இருக்கும் கேள்விகளை அடுத்த வாரம் கேட்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ‘வரும் திங்கள்கிழமை ஓகேவா?’ என்று நீதிபதி கேட்க, ‘திங்கள்கிழமை சிவராத்திரி. அரசு விடுமுறை’ என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டது. ‘செவ்வாய்?’ என நீதிபதி கொக்கி போட, ‘நைட் எல்லாம் சிவராத்திரியில் விழித்திருக்க வேண்டும். கோர்ட்டுக்கு வர முடியாது’ என்று பதில் வந்தது. அப்போது கோர்ட் சிரிப்பில் மிதந்தது. உடனே எழுந்த ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார், ‘‘நாங்கள் வேறு மாநிலத்தில் இருந்து வருகிறோம். எங்களுக்கு இந்த ஊர் ஹோட்டல் உணவு செட் ஆகாது. அப்படியே தொடர்ந்து சாப்பிட்டால் சிக் ஆகிவிடுவோம். அப்புறம் வழக்கை நடத்த முடியாது. அதுமட்டுமின்றி, சென்னையில் நிறைய கோர்ட் வேலைகள் இருக்கின்றன. எனவே, விசாரணையை இடைவெளிவிட்டு நடத்த வேண்டும்’’ என்று சீரியஸாகச் சொல்ல, இதற்கும் கோர்ட் முழுவதும் சிரிப்பலை. நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் முகத்திலும் சிரிப்பு ரேகைகள். இதையடுத்து 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

‘1994-ல் ஜெகதீஸ்ராஜு, சந்திரவதனா, காயத்ரி ஆகியோரிடம் 600 சதுர அடி நிலம் வாங்கியது தொடர்பான விசாரணையில் ஜெகதீஸ் ராஜுவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறியுள்ளாரே?’ என்று கேட்டார் நீதிபதி. காத்திருந்த மாதிரி தலையசைத்து, ‘ஆரம்பம் முதலே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கூறி வருகிறோம். நிலத்தின் உரிமையாளரான ஜெகதீஸ்ராஜுவுக்கு 10 லட்சம் காசோலை கொடுத்துத்தான் வாங்கினோம். ஆனால் அவரைக் குறுக்கு விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம நாயுடுவும், அவரோடு பணிபுரிந்த காவல் துறை அதிகாரிகளும் 20 லட்சம் அல்லது 30 லட்ச ரூபாய்க்கு விற்றதாக எழுதிக் கொடுக்குமாறு மிரட்டியதாக ஜெகதீஸ் ராஜுவே சாட்சியம் அளித்துள்ளார். ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை சாட்சிகளையும் நல்லம நாயுடு எங்களுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். எல்லாமே காவல் துறையின் ஜோடனை’ என்று கோபமாகவே சசி ப‌தில் அளித்தார்.

இந்தப் பழமொழியை எப்படி மொழியாக்கம் செய்வது என்று தெரியாமல் மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் திணற, ‘பழமொழி, கற்பனைக் கதைகள் எல்லாம் கோர்ட்டுக்குத் தேவை இல்லை’ என்று கூறியதும்... ஆச்சார்யாவும் அதை வழிமொழிந்தார். பழமொழி பதிவாகாமல் போனதில் சசிகலா அப்செட்தான்.

கருணாநிதியை கை காட்டிய சசிகலா!

இசையமைப்பாளர் கங்கை அமரன் அளித்த சாட்சியத்தில், ‘பையனூரில் எனக்கு 22 ஏக்கர் நிலமும் பண்ணை வீடும் இருந்தது. பாஸ்கரன் என்னை சந்தித்து, நிலம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார்’ என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த சசிகலா, ‘‘கங்கை அமரன் என்னை மட்டும்தான் சந்தித்தார். ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. அவரது சாட்சியம் பொய்யானது’’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘‘ஜெயலலிதா பையனூர் நிலத்தைப் பார்த்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்கு சரியான இடம் என்று கூறியதாகவும்... எனவே அவருக்கு நிலம் ரொம்பவே பிடித்துவிட்டதாகவும் நீங்கள் கங்கை அமரனிடம் கூறினீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘ஜெயலலிதா பேரை வேண்டும் என்றே சேர்ப்பதற்காக கங்கை அமரனை அன்றைய காவல்துறை அதிகாரிகள் பொய்சாட்சி சொல்ல வைத்தார்கள்” என்று அழுத்தமாக மறுத்தார். அதற்குப் பின்னும் நீதிபதி விடாமல், ‘தனக்கு இருப்பது ஒரே நிலம். அதுவும் கதை எழுதுவதற்கும், இசையமைப்பதற்கும் ஏற்ற இடமாக இருப்பதால் விற்பனை செய்ய விருப்பமில்லை என்று கங்கை அமரன் உங்களிடம் கூறியபோது, ‘நீங்கள் குடும்பத்தாரிடம் பேசிவிட்டுச் சொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னீர்களா?’ என்று கொக்கி போட்டார். இதில் சற்றே முகம் சிவந்த சசிகலா, “அவராகத்தான் நிலத்தை விற்க முன்வந்தார். போலீஸ், கங்கை அமரனை மிரட்டி ஜெயலலிதாவை சம்பந்தப்படுத்தி சாட்சியம் சொல்ல வைத்துள்ளனர். யார் பெயரில் சொத்து வாங்கினாலும் ஜெயலலிதா பெயரைச் சம்பந்தப்படுத்தி, வழக்கை ஜோடித்து உள்ளனர். அன்றைய கருணாநிதி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் உயர்பதவி கிடைக்கும் என்று போலீஸார் நினைத்தனர்” என்று கூறினார். உடனே நீதிபதி, ‘‘இப்போது ஏன் சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை இழுக்கிறீர்கள்” என்று கேட்டதும் சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘பொய் சாட்சி சொல்ல வைத்ததன் உள்நோக்கம் அதுவாக இருக்கலாம்’ என்று கூறி, அதனையும் சேர்த்து பதிவு செய்யுமாறு நீதிபதியிடம் வேண்டினார். அதற்கு ஆச்சார்யாவும், ‘கருணாநிதி அரசு’ என்று ஒரு வரிதானே...’ என்று ஆமோதிப்பாக சிரித்தார்.

ஜெயலலிதா பெயரில் கவனம்!

ஒவ்வொரு முறை சசிகலா பதிலளிக்கும்போதும், ஜெயலலிதா தொடர்பாகச் சொல்லும்போது டபுள் உஷாராகவே முகபாவம் காட்டிப் பேசினார். ஜெயா ஃபார்ம் நிறுவனத்துக்கு நிலம் விற்றது தொடர்பான கேள்விக்கு சசிகலா பதில் அளித்தபோது, ‘‘அம்பத்தூர் ரமேஷ் என்பவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்று சாட்சியம் அளித்திருக்கிறார். அது உண்மையல்ல. ‘‘ஜெயலலிதாவுக்குத் தெரிந்தவர் என்று சொல்லிக்கொண்டார் என்று பதிந்து கொள்ளுங்கள்’’ என நீதிபதியிடம் ரொம்பவே தெளிவாகச் சொன்னார் சசிகலா. அரசு தரப்பு வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் சசிகலா சொன்னவாறே திருத்தம் செய்யப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் முத்தையா, ஜவஹர் ஆகியோர், ‘ஊத்துக் கோட்டை அருகே ரத்னவேலு என்பவருக்குச் சொந்தமான 4.15 ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா வாங்கித் தருமாறு கேட்டார். இதனால் போயஸ் கார்டனில் இருந்து இரண்டு சூட்கேஸில் பணம் எடுத்துச் சென்று, கொடுத்து பதிவு செய்தோம்’ என்று கூறியதாக பதிவாகி இருப்பது பற்றி நீதிபதி கேட்டார். சசிகலா கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘இடம் வாங்கியது உண்மை. ஆனால் சாட்சிகள் தேவையில்லாமல் ஜெயலலிதாவைச் சம்பந்தப்படுத்த வேண்டும் என்பதற்காக போயஸ் கார்டனைக் குறிப்பிட்டு உள்ளனர்” என்றார். மிடாஸ் நிறுவனம் தொடர்பான 17 கேள்விகளுக்கும் ‘தெரியாது’ என்றே பதில் அளித்தார். அதற்கு நீதிபதி, ‘மிடாஸ் நிறுவனத்தின் பங்குதாரரான நீங்கள் எதுவுமே தெரியாது என்கிறீர்களே?’ என்று கேட்டதற்கும், ‘தெரியாது’ என்றே பதில் அளித்தார்.

ஜனாதிபதியின் கார்!

ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், மிடாஸ், அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்களுக்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கியது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. ‘‘வாங்கியது உண்மைதான். ஆனால், ஜெயலலிதா எம்.பியாக இருந்தபோது வாங்கப்பட்டவை. அதேபோல 1991-ல் இந்திய ஜனாதிபதி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஏலத்துக்கு வந்தபோது, கிருஷ்ணமூர்த்தி என்பவரால் வாங்கப்பட்டு, பிறகு, ஜெயலலிதா பெயருக்கு அதை மாற்றினோம். அதற்கான பணத்தை, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை வருமானத்தில் இருந்து செலுத்தினோம்’’ என்றார்.

‘36-ம் எண் போயஸ் கார்டன் வீட்டில் 643 ஜோடி தங்க, வைர ஆபரணங்கள் கைப்பற்றியது’ குறித்துக் கேட்டபோது, ‘போலீசார் 36-ம் எண் போயஸ் கார்டன் வீட்டில் மட்டுமே சோதனை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி இருந்தார்கள். ஆனால் 31-ஏ எண் போயஸ் கார்டன் வீட்டிலும் உரிமையாளர் இல்லாதபோது அத்துமீறி நுழைந்து, ஊழியர்களை கார் ஷெட்டில் அடைத்து வைத்துவிட்டு சோதனை நடத்தினார்கள். அப்போது 448 ஜோடி ஆபரணங்களை மட்டுமே எடுத்துச் சென்றனர். ஆனால் சொத்தின் மதிப்பை அதிகமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக போலீஸார் திட்டமிட்டே பொய்யாக 643 ஜோடி என்று கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த வழக்கு எப்படிப் பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்று ஒரு தெளிந்த வழக்கறிஞர் போன்று பதில் சொன்னார்.

உடனே நீதிபதி, ‘கேள்விக்குத் தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறினார். ஆனால் சசிகலா கொஞ்சமும் தயக்கம் இன்றி, ‘இதெல்லாம் இந்தக் கேள்விக்கு கட்டாயம் தேவை’ என்று மீண்டும் அழுத்திச் சொன்னார். ‘நீங்களே வக்கீல் மாதிரி பேசுகிறீர்கள். நீங்கள் இப்போது பேசுவதை எல்லாம் உங்கள் வக்கீல் இறுதி விவாதத்தின்போது பேசுவார்’ என்று நீதிபதி சொன்னதும் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணி சங்கர், ‘அம்மா என் வேலையை குறைக்கிறாங்க’ என்று சிரித்தார். அப்போது சசிகலாவிடம் முகம் கொள்ளாத சிரிப்பு!

கருணாநிதி ராமாயணம்

போயஸ் கார்டனில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனையிட்டபோது நகைகள், விலை மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுபற்றிய கேள்விக்கு, ‘‘வீட்டு உரிமையாளர் இல்லாதபோது வீட்டில் சோதனை நடத்தியதே சட்டப்படி குற்றம். அதுவும் 7.12.1996 முதல் 12.12.1996 வரை ஐந்து நாட்கள் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது எடுத்த வீடியோவை, கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பினர். இது ஜெயலலிதாவின் புகழைத் திட்டமிட்டுக் கெடுக்க கருணாநிதி, சன் டி.வி. மற்றும் போலீஸார் செய்த சதி. இந்த நாட்களில் எடுக்கப்பட்ட பொருட்களை 21.12.1996 அன்று எடுத்ததாக போலீஸ் பொய் சாட்சியம் சொல்லி இருக்கிறார்கள்’’ என்று சசிகலா சூடாக பதில் அளித்தார்.

ஜெயலலிதாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட புடவைகள் குறித்த கேள்விக்கு, ‘‘ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை அதிகமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக காவல் துறையே வெளியே இருந்து புதிதாக வாங்கிவந்த புடவைகளை வீட்டில் வைத்துள்ளனர். இதை கார் ஷெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டு சமையல்கார பெண்மணி ராஜம்மாள் மற்றும் டிரைவர் கண்ணனும் பார்த்துள்ளனர். போலீஸ் கொண்டு வந்த புடவைகளையும், வீட்டில் இருந்த புடவைகளையும் சேர்த்து மதிப்பிட்டு உள்ளனர்’’ என்று அழுத்தமாகவே பதிலளித்தார். 9 லட்சத்து 300 ரூபாய் மதிப்புள்ள பல ஜோடி வாட்சுகளைக் கைப்பற்றியது தொடர்பான கேள்விக்கு, ‘‘20.12.96 அன்று வீட்டில் 2-வது முறையாக சோதனை இட்டதாகச் சொல்லப்படுகிறது. நீதிமன்றத்தில் வைத்து மதிப்பிடாமல் போலீஸாரே தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து அதிகமாக மதிப்பிட்டு உள்ளனர். அதேபோன்று வீட்டில் இருந்த பழைய காலணிகளையும் புதியது போல கணக்கிட்டு உள்ளனர்’’ என்று சசிகலா கடுமையாக ஆட்சேபித்தார்.

சசிகலா பார்ட்னராக இருந்த ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ரிவர்வே பிரைவேட் லிமிடெட், மெடோ ஆன்ட்ரோ பிரைவேட் லிமிடெட், நெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான 53 கேள்விகளுக்கும், ‘தெரியாது’ என்று ஒற்றை வார்த்தையில் சசிகலா பதில் அளித்தார். அதேபோல நவஷக்தி பில்டர்ஸ், நமச்சிவாய பில்டர்ஸ், ஜெ.எஸ்.பில்டர்ஸ், ஜெ. கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் சார்பில் வாங்கப்பட்ட நிலங்கள் தொடர்பான 21 கேள்விகளுக்கும், ‘ஆம். உண்மை’ என்று பதில் கொடுத்தார். 22ம்தேதி மாலை 5 மணி வரை மொத்தம் 504 கேள்விகளுக்குப் பதில் அளித்த சசிகலாவை, வெள்ளிக்கிழமை யுகாதி என்பதால் சனிக்கிழமை ஆஜராகுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். உடனே, ‘‘நாங்கள் சென்னைக்குப் போய்விட்டு வருவது கஷ்டம். செவ்வாய் மற்றும் புதன் அன்று சசிகலாவுக்கு கண் டாக்டரிடம் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதால் வர இயலாது’’ என்று அவரின் வக்கீல் மணிசங்கர் வாதிட்டார். அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபணையும் இல்லாததால், 29-ம் தேதியைக் கேட்டு வாங்கிய மகிழ்ச்சியில் அன்று இரவே சென்னைக்குப் பறந்துவிட்டார்.

‘திரு.வி.க தொழிற்பேட்டையில் ஜெயா பப்ளிகேஷன் சார்பில் நான்கு கட்டடங்கள், 50 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது பற்றி தெரியுமா?’ என்ற நீதிபதியின் கேள்வியை பொறுமையாக எழுதிக்கொண்ட சசிகலா, ஆழ்ந்து யோசித்துவிட்டு, மொழிபெயர்ப்பாளர் ஹரீஸிடம், ‘எழுதிக்கோங்க... புனரமைக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்காக 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சாட்சிகளை மிரட்டி போலீஸார் பொய்யான மதிப்பீடு செய்துள்ளனர்’ என்று அழுத்தமாகவும் சத்தமாகவும் பதில் சொன்னார். அப்போது பென்சிலை ஸ்டைலாக ஆட்டிக்கொண்டே டிக்டேட் செய்ததை, அவரது வழக்கறிஞர்களே ஆச்சர்யத்தோடு கவனித்தனர்.

‘சூப்பர் டூப்பர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுதாகரனும், நீங்கள் இயக்குனராகவும் இருப்பதாக வருமானவரிச் சான்றிதழ் சொல்கிறதே?’ என்ற கேள்விக்கு, ‘உண்மைதான். சூப்பர் டூப்பர் நிறுவனம் கம்பெனி பதிவுச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் இயக்குனராக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் மற்ற விவரங்கள் எனக்குத் தெரியாது’ என்று, கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, குற்றவாளிக் கூண்டில் இருந்த சுதாகரனைப் பார்த்து தலைஅசைத்தார். இதைப் புன்முறுவல் பூத்து சுதாகரனும் ஆமோதித்தார். இருவரின் நடவடிக்கைகளையும் நீதிபதி கவனித்துக் கொண்டார்.

அடுத்து, ‘ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்தில் நீங்கள் நிர்வாக இயக்குனராகவும் சுதாகரன் இயக்குனராகவும் இருப்பது உண்மையா?’ என்று கேட்டார்.

அதற்கு சற்றும் யோசிக்காமலே, ‘உண்மைதான்’ என்று வேகமாகவே தலையை ஆட்டிப் பதில் அளித்தார் சசிகலா.

97 நகைப் பெட்டிகள்!

சொத்துக் குவிப்பு வழக்கில் திருப்புமுனை சாட்சியாகக் கருதப்படும், கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்த கேள்வி வேள்வி ஆரம்பமானது. சசிகலாவின் முகம் குழப்பத்தில் தத்தளித்தது. ‘நல்லம்ம நாயுடு தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 36, போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் 1996-ம் ஆண்டு சோதனை நடத்தியபோது, 97 நகைப் பெட்டிகளில் இருந்த 23 கிலோ 113 கிராம் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. இதில், தங்க நகையின் மதிப்பு 91 லட்சத்து 71 ஆயிரத்து 571 ரூபாய், வைர நகைகளின் மதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய். இதன் மொத்த மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 15 ஆயிரத்து 43 ருபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது பற்றி சாட்சியம் கூறி இருக்கிறார்களே என்ற கேள்வியை, இரண்டு மூன்று முறை சரியாகக் கேட்டு எழுதிக்கொண்டார். பிறகு தனது வக்கீலின் முகத்தைப் பார்த்த சசிகலா ஆழமாக யோசித்து, ‘36, போயஸ் கார்டன், சென்னை முகவரியில் போலீஸார் சோதனையிட்டபோது, நானும் செல்வி ஜெயலலிதாவும் சிறையில் இருந்தோம். இந்தச் சோதனை வீட்டு உரிமையாளர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் நடக்கவில்லை. சட்டப்படி வீட்டு உரிமையாளர் முன்னிலையில்தான் நடந்திருக்க வேண்டும் அல்லது அவரது அனுமதி பெற்றாவது நடந்திருக்க வேண்டும். அதைவிட்டு, வீட்டு ஊழியர்களை கார் ஷெட்டில் வலுக்கட்டாயமாக அடைத்துவிட்டு சோதனை நடத்தியது சரிதானா?’ என்று கோபமாக எதிர்க் கேள்வி கேட்டு மடக்கினார்.

சசிகலாவின் பதிலைக் கேட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தங்களுக்குள் ஏதோ பேசிக்​கொண்டனர்.

‘வாசுதேவன் அளித்துள்ள சாட்சியத்தில் 31 ஏ, போயஸ் கார்டன் வீட்டில் 42 நகைப் பெட்டிகளை எடுத்ததாகவும், அதில் 4 கிலோ 475 கிராம் தங்க, வைர நகைகள் இருந்ததாகவும், தங்க நகையின் மதிப்பு 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் என்றும், வைர நகைகளின் மதிப்பு 30 லட்சத்து 24 ஆயிரத்து 550 ரூபாய் என்றும் கூறி இருக்கிறார். கூடவே சில விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் கைப்பற்றியதாகவும் கூறி இருக்கிறாரே?’ என்ற நீதிபதியின் நீளமான கேள்விக்கு எதையும் யோசிக்காமல் சட்டென, ‘எழுதிக்கோங்க’ என்று கூறிவிட்டுப் பேசினார் சசி.

‘முதலில் 31 ஏ, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த முறையான அனுமதி பெறவில்லை. சோதனையின்போது 42 பெட்டிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வீட்டு உரிமையாளர் இல்லாமல் சோதனை நடத்தியதே தவறு’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு மீடியாக்களைப் பார்த்தார்.

மேலும் நீதிபதி, ‘36, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தியபோது 1,160 கிலோ வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய தாகவும், அதன் மதிப்பு 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்றும் கூறியுள்ளார்களே?’ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு ஆழ்ந்து யோசித்த சசிகலா, அவரது வக்கீல் மணிசங்கரைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு, ‘இதுபற்றி எழுத்து மூலமாகப் பதில் அளிக்கிறேன்’ என கூறிவிட்டு கண்ணோரம் கசிந்த நீரைத் தன் கறுப்பு கண்ணாடியை உயர்த்தி டிஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொண்டார். அதன்பின் வழக்கு மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அப்போது உடல்நிலை சரி யில்லை என்று சொல்லி குற்றவாளிகள் ஆஜராகவில்லை.

கொடநாட்டுக்கு கோர்ட்டை மாற்றிவிடலாமா?

பல்லிக்கு வால் துண்டானாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் நடைபெற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ‘இந்த வழக்கை நொண்டி அடிக்க வைப்பதற்காக எத்தனையோ மனுக்கள் போடப்பட்டன என்றாலும், ஜூன் 25-ம் தேதி போட்டதுதான் மெகா ‘மனு’ குண்டு. யாருமே எதிர்பாராத வகையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனத்தையே கேள்விக்குறி ஆக்கியது அந்த மனு. இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு கடந்த 3-ம் தேதி கோர்ட் கூடியது. பதில் மனுவைத் தாக்கல் செய்த ஆச்சார்யா, ‘‘சுப்ரீம் கோர்ட் ஒரு முறை மட்டும்தான், நீதிபதியின் பெயரைச் சொல்லி ஸ்பெஷல் கோர்ட்டுக்கு டைரக்ஷன் கொடுக்கும். அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றமும் மாநில அரசும் சேர்ந்து நியமிக்கும் நபரே, ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாகக் கருதப்படுவார். நீங்கள் கூறுவதுபோல் ஒவ்வொரு முறையும் நீதிபதியின் பெயரைச் சொல்லியோ அல்லது மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டோதான் நியமிக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இதெல்லாம் அவர்களுடைய வழக்கமான இழுத்தடிப்பு டெக்னிக்தான்’’ என்று அனல் கக்கினார்.

நீதிபதி மல்லிகார்ஜுனையாவும் ஆச்சார்யாவின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ‘‘சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படி, ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக வருபவரின் பெயரை ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டியது இல்லை’’ என்றவர் சுற்று முற்றும் பார்த்தபடி, ‘‘குற்றவாளிகள் நான்கு பேரும் (ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி) கோர்ட்டுக்கு ஏன் வரவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார். ‘‘ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் இசட் ப்ளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சசிகலாவுக்குக் கண்ணில் கோளாறு, சுதாகரனுக்கு முதுகு வலி, இளவரசிக்கு சர்க்கரை நோய்’’ என்று வழக்கறிஞர்கள் வழக்கமான ரெடிமேட் பதிலை மீண்டும் சொன்னார்கள். அப்போது ‘‘அப்படின்னா கோர்ட்டை கொடநாடுக்கு மாத்திடலாமா?’’ என்று வேடிக்கை பார்க்க வந்த வக்கீல் ஒருவர் கமென்ட் அடிக்க... சிரிப்பலை எழுந்தது.

ஜெயலலிதா தரப்பு வக்கீல் பி.குமாரும், சசிகலா தரப்பு வக்கீல் மணிசங்கரும் எழுந்து, ‘‘அரசுத் தரப்பின் மனுவைப் படித்துப் பார்க்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும்’’ என்றார்கள். ‘‘அதுக்கு ஒரு வாரமா?’’ என ஷாக்கான நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கை எப்படியாவது முடக்கியாக வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு பகீரதப் பிரயத்தனங்களில் இறங்க... அதன் அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஆச்சார்யா வழக்கை முடிக்கத் துடித்தார். நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கம் போலவே ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வரவில்லை. முதல்வராக இருப்பதால் வேலைப்பளு, கண் கோளாறு, முதுகுவலி மற்றும் சர்க்கரை நோய் என்று முறையே நால்வருக்கும் காரணங்கள் சொல்லப்பட்டன. ‘மூணு மாசமா இதேதானா.. காரணத்தையாவது மாத்தச் சொல்லுப்பா’ என்று தன் ஜூனியர் சந்தேஷ் சவுட்டாவிடம் வெறுத்துப்போய்ச் சொன்னார் ஆச்சார்யா.

‘சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டும்’ என்று ஜெ. தரப்பில் எழுப்பிய கோரிக்கை மனுவுக்குத் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார் ஆச்சார்யா. எந்த மனுவாக இருந்தாலும் அரை மணி நேரத்துக்குள் வாதத்தை முடித்துக்​கொள்ளும் ஆச்சார்யா, இந்த முறை இரண்டு மணி நேரம் அனல் பறக்க வாதிட்டார். ‘‘ஜெயலலிதா, சசிகலா உள்​ளிட்ட நால்வர் மீதான சொத்​துக் குவிப்பு வழக்கு, 1997-ல் இருந்து விசார​ணையில் இருக்கிறது. மிகவும் சென்சிடிவான வழக்கு என்பதால் சுப்ரீம் கோர்ட், 2004-ம் ஆண்டு இந்த வழக்கை பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டுக்கு மாற்றி​யது. அப்போது, ‘வழக்கை எப்படி நடத்த வேண்டும்’ என்று ஸ்பெஷல் கோர்ட்டுக்கு சில வழிமுறைகளைத் தந்தது. அதில், ‘நீதிபதியின் நியமனம், அரசுத் தரப்பு வக்கீலின் நியமனம் ஆகியவற்றை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் இணைந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும்’ என வலியுறுத்தி இருக்கிறது. அதன்படிதான் 36-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் ஸ்பெஷல் கோர்ட்டின் நீதிபதியாக‌ ஏ.எஸ்.பச்சாபுர்ரே நியமிக்கப்பட்டார். அவரது பெயரைக் குறிப்பிட்டு அரசு ஆணை வெளியிட்டு, அதை அரசிதழிலும் பிரசுரித்தார்கள். நீதிபதி பச்சாபுர்ரேவின் பதவிக்காலம் முடிந்த பிறகு, நியமிக்கப்பட்ட நீதிபதிகளான ஆன்ட்டின், மனோலி, மல்லிகார்ஜுனையா உள்ளிட்ட மூவரின் பெயரையும் குறிப்பிட்டு அரசு ஆணையோ, அரசிதழில் அறிவிப்போ வெளியிடவில்லை. ஏனென்றால், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 3-ன் கீழ், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் முதல் நீதிபதியின் பெயரை மட்டும் வெளியிட்டால் போதும், அடுத்தடுத்து வரும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிடத் தேவை இல்லை என்பதற்கு இந்தியாவில் நடந்த பல்வேறு வழக்குகளைக் காரணமாகக் குறிப்பிடலாம்’’ என்றார்.

டெல்லி மிரட்டல்!

‘உச்ச நீதிமன்ற ஆணைப்படி, பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் முதல் குற்றவாளியான ஜெய லலிதா ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் இரண்டாம் குற்றவாளியான சசிகலா மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடிக்கிறார். இன்னும் 1,000 கேள்விகளுக்கு மேல் பதில் சொல்ல வேண்டிய சசிகலா, புதுப்புது காரணங்களைச் சொல்லி வழக்கைத் தாமதப்படுத்த முனைகிறார். எனவே ஸ்பெஷல் கோர்ட்டின் அன்றாட நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் காண்காணிக்க வேண்டும்’ என்று மனு போட்டு இருந்தார் பேராசிரியர் அன்பழகன். இந்த நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் கோகாய் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. அன்பழகன் மனுவை ஏற்றுக்கொண்டு, ‘இழுத்தடிக்க என்ன காரணம்?’ என்பது பற்றி பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கும் தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவு போடப்பட்டு உள்ளது.

‘‘தமிழகத்தில் நடந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியதே சுப்ரீம் கோர்ட்தான். எனவே, அவர்கள் கண்காணிக்க ஆரம்பித்தால் மூன்று மாதங்களில் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்துவிடும்’’ என்கிறார்கள் நீதித் துறையைச் சார்ந்தவர்கள்.

இதற்கிடையே, ‘நீதிபதியை மாற்ற வேண்டும்’ என்ற மனுவை டிஸ்மிஸ் செய்து தீர்ப்பு சொன்னார் நீதிபதி மல்லிகார்ஜுனையா! ‘‘சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஊழல் தடுப்புத் துறை சட்டப்பிரிவு 3-ன்படி, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலில் கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் கலந்து ஆலோசித்து புதிய நீதிபதியையும், அரசுத் தரப்பு வக்கீலையும் பெயரைக் குறிப் பிட்டு அரசாணை வெளியிட்டனர். அதன் பிறகு ஸ்பெஷல் கோர்ட்டுக்குப் புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கும், மாநில அரசுக்கும் இருக்கிறது. அதன்படியே எனக்கு முன்னர் இருந்தவர்களும், நானும் இந்த நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டோம். நீதிபதி நியமனத்தில் என்னென்ன வரைமுறைகளையும், சட்டப் பிரிவுகளையும் பின்பற்ற வேண்டுமோ, அவை எல்லாமே பின்பற்றப்பட்டு உள்ளது. இதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. எனவே, குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று கடகடவென தீர்ப்பு கொடுத்தார்.

இதுவரை நீதிபதி மல்லிகார்ஜு​னையாவிடம் ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு ‘டிஸ்மிஸ்’ ஆன மனுக்களின் வரிசையில் இந்த பிரம்மாஸ்திர மனுவும் சேர்ந்துகொண்டது.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘‘விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைக்கிறேன். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் கட்டாயம் ஆஜராக வேண்டும். சசிகலாவிடம் விசாரணை தொடரும். அதற்காக மொழிபெயர்ப்பாளரும் தயாராக இருக்கிறார்’’ என்றார். இதைக் கேட்டதும், உடனடியாக ஹைகோர்ட்டில் அப்பீல் மனு போட ஜெ. தரப்பில் பரபரப்பாக இறங்கிவிட்டனர்.

விடைபெற்ற மல்லிகார்ஜுனையா.... விலகிக்கொண்ட ஆச்சார்யா...

15 ஆண்டுகளாக நீண்ட நெடிய இழுத்தடிப்புப் பயணம் மேற்கொண்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை, விடாமல் விரட்டி இறுதிக் கட்டத்தை எட்ட வைத்தவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மல்லிகார்ஜுனையா. ஜெயலலிதா வழக்கின் ஜாதகத்தையே மாற்றிய இவர், 2012, ஆகஸ்ட் 4-ம் தேதி ஓய்வு பெற்றார். சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்துப் பிடித்து, சிதறிக்கிடந்த வழக்கை ஒருங்கிணைத்து ஒழுங்கான வடிவத்துக்குக் கொண்டு ​வந்தவர் நீதிபதி மல்லிகார்ஜுனையா. சாட்சிகளை ஆழமாக விசாரித்து, ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதாவை வரவழைத்தார். ஐந்து நாட்கள் உட்காரவைத்து 1,384 கேள்வி களைக் கேட்டுப் பதிவு செய்தார். சசிகலாவிடமும் 75 சதவிகிதக் கேள்விகள் முடிந்துவிட்டன. ஆனால், ஆகஸ்ட் 4-ம் தேதி அவருக்குப் பணி ஓய்வு நாள்.

நித்தம் நித்த‌ம் நிம்மதி இழந்து தவித்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினருக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் ஓய்வு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.

கேட்டது மூன்று தேதிகள்... கிடைத்தது சூடு!

நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் ஓய்வு, அரசு வக்கீல் ஆச்சார்யாவின் ராஜினாமா போன்ற காரணங்களால் சோர்வடைந்து கிடந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சுளீரென சாட்டையடி கொடுத்து எழுப்பினார் புதிய‌ நீதிபதி (பொறுப்பு) சோமராஜு! ‘அடுத்த தேதியை வாங்கிக்கொண்டு, விநாயகர் சதுர்த்தி கொண்டாட சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்’ என்றபடியே, 2012, செப்டம்பர் 18-ம் தேதி பெங்களூரு கோர்ட்​டுக்கு வந்தனர் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள். சரியாக காலை 11 மணிக்கு இடைக்காலப் பொறுப்பு நீதிபதி சோமராஜு முன்னிலையில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் வேலைப்பளு, சசிகலாவுக்குக் கண்ணில் பிரச்னை, சுதாகரனுக்கு முதுகு வலி, இளவரசிக்கு சர்க்கரை நோய்’ என்று வழக்கம் போலவே காரணங்களைச் சொல்லி, கோர்ட்டில் ஆஜர் ஆகாத காரணத்துக்கான மனுவைக் கொடுத்தனர் நால்வரின் வக்கீல்களும்.

‘‘என்ன இது? போனமுறை சொன்ன அதே காரணம்? அடுத்த முறை இதே மாதிரி காரணத்தைச் சொல்லக் கூடாது’’ என்று கண்டிப்பு காட்டினார் நீதிபதி. உடனே எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘‘முன்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்​ஜுனையாவின் நியமனம் குறித்த எங்களின் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரவில்லை. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 3-ன்படி, ஸ்பெஷல் கோர்ட்டின் நீதிபதியை ஹைகோர்ட் தலைமை நீதிபதியும், மாநில அரசும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்ட நீதிபதி குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட வேண்டும். ஆனால், நீதிபதி பச்சாபுர்ரேவுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனோலி, ஆன்ட்டன், மல்லிகார்ஜுனையா ஆகியோருக்கு இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. அதனாலேயே 2009-ம் ஆண்டு உங்களைப் (நீதிபதி சோமராஜு) போன்று இடைக்காலப் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆன்ட்​டன் இந்த வழக்கை விசாரிக்கவே இல்லை. ஏனென்றால், ‘இடைக்காலப் பொறுப்பு நீதிபதிக்கு ஸ்பெஷல் கோர்ட்டின் வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை’ என்ற எங்களின் வாதத்தை அப்போதே ஏற்றுக்கொண்டார். அதேபோன்று நீங்களும், ஹைகோர்ட்டில் தீர்ப்பு வரும் வரை சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கக் கூடாது’’ என்று சூடாக வாதிட்டார். அரசு வக்கீல் ஆச்சார்யாவின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத காரணத்தால், அவரின் ஜூனியர் சந்தேஷ் சவுட்டா உடனே எழுந்து, ‘‘ஸ்பெஷல் கோர்ட் நீதிபதிகளை நியமித்ததில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன என்று சொல்லி, எதிர்த் தரப்பின் மனுவை ஸ்பெஷல் கோர்ட்டிலேயே டிஸ்மிஸ் செய்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. ஆனாலும், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஹைகோர்ட்டுக்குப் போனார்கள். எதிர்த் தரப்பினருடைய மனுவை ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட், ‘இந்த மனு மீது தீர்ப்பு வெளியாகும் வரை, ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கு நடத்தக் கூடாது’ என எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ‘வழக்கை தினமும் நடத்தி... விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்று, சுப்ரீம் கோர்ட் பல முறை கண்டித்து இருக்கிறது. அதனால், இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் மீதி இருக்கும் கேள்விகளைக் கேட்க வேண்டும். இனியும் இழுத்தடிப்பதை அனுமதிக்கக் கூடாது’’ என்று ஆவேசமாக பதில் கொடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோமராஜு, மதியம் மூன்று மணிக்குத் தீர்ப்பு வழங்கினார். ‘‘நீதிபதி நியமனத்தில் எவ்வித விதிமுறை மீறலும் நடக்கவில்லை. அதேபோல, ‘ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கை நடத்தக்கூடாது’ என உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ எங்கும் குறிப்பிடவில்லை. அதனால், குற்ற வியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 313-ன்படி, வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் மீதி இருக்கும் கேள்விகள் கேட்கப்படும். அதனால் வரும் 29-ம் தேதி சசிகலா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக மொழிபெயர்ப்பாளர் ஹரிஸும் கோர்ட்டுக்கு வர வேண்டும்’’ என்று சூடாக அறிவித்தார். இதை சசிகலா தரப்பு வக்கீல்கள் எதிர்பார்க்கவில்லை.

உடனே எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘‘நீதிபதி மல்லிகார்ஜுனையா போன்று மூன்று தேதிகளைச் சொல்லுங்கள். எங்களுக்கு ஏதுவான தேதியைத் தேர்ந்தெடுக்கிறோம்’’ என்றார். அதற்கு நீதிபதி சோமராஜு, ‘‘அது மாதிரி எல்லாம் ஆப்ஷன் தர முடியாது. 29-ம் தேதி வந்துவிடுங்கள்’’ என்றார் கறாராக.

நீதிபதி பாலகிருஷ்ணா வந்தார்

ஜெயலலிதாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனிதராக வந்தார் நீதிபதி பாலகிருஷ்ணா!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விறுவிறுவென வழக்கை நடத்திவந்த நீதிபதி மல்லிகார்ஜுனையா, ஓய்வு பெற்றதும், அதன் பிறகு, இடைக்கால சிறப்பு நீதிபதியாக சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சோமராஜு நியமனம் செய்யப்பட்டார். ‘நீதிபதி சோமராஜு மிகவும் கண்டிப்பானவர்; மல்லிகார்ஜுனையா போல விட்டுப்பிடிக்க மாட்டார். மொத்தத்தில் அதிரடி ஆட்டக்காரர்’ என்று கோர்ட் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியது. அந்த சமயத்தில், ‘வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ என்று, உச்ச நீதிமன்றத்தில் மனுப்போட்டு அனுமதி வாங்கினார் சசிகலா. அதனால், ஜெட் வேகத்தில் க்ளைமாக்ஸ் நோக்கிப் பற‌ந்த வழக்கு, கடந்த இரண்டு மாதங்களாகவே மீண்டும் நொண்டி அடித்தது. இந்த நிலையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கை ஆறே மாதங்களில் முடிக்க வேண்டும்’ என்ற கண்டிஷனோடு நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா பெயரை டிக் செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

'இனி பெங்களூரு வழக்கு அவ்வளவு​தான்’ என, நீதிபதி மல்லிகார்​ஜுனையா ஓய்வுபெற்றதும் சொல்லி வந்த எதிர்த்தரப்பு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணாவின் அதிரடியால் அதிர்ந்து போனார்கள். நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் வழக்கம்போல கோர்ட்டுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்பம் ஆனதும் சசிகலா மற்றும் சுதாகரன் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ‘‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கடந்த 21 நாட்கள் வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப் பார்த்தோம். எங்கள் தரப்பிடம் இருந்து தமிழக ஊழல் தடுப்புத் துறை போலீஸார் கைப்பற்றிய ஆவணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆவணங்களை (60 ஆயிரம் பக்கங்கள்), வழக்கில் பயன்படுத்தவில்லை. அவை வெறுமனே இந்த கோர்ட்டில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கில் பயன்படுத்தாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கும் ஆவணங்களையோ அதன் பிரதிகளையோ எங்களுக்குத் திருப்பித்தர வேண்டும். எங்கள் கட்சிக்காரர் பதில் சொல்ல அந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது’’ என்றார் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர்.

‘‘இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவிடம் நீதிபதி பாலகிருஷ்ணா கேட்டார். ‘‘1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கை, எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, இதுவரை 800-க்கும் மேற்பட்ட மனுக் களை எதிர்த் தரப்பில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த மனுக்களின் நியாயத்தன்மையை ஆராய்ந்து ஸ்பெஷல் கோர்ட்டும், கர்நாடக ஹை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பெரும்பாலான சமயங்களில் தள்ளுபடி செய்து இருக்கிறது. இருப்பினும், மீண்டும் மீண்டும் மனு போட்டு ‘அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ எனக் கேட்டதால், சுப்ரீம் கோர்ட் 21 நாட்கள் அனுமதி அளித்தது. இப்போது அந்த மனுவைக் காரணம் காட்டி புதிய மனுவைப் போடுகிறார்கள். இது வழக்கை இழுத்தடிக்கும் செயலே. வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த ஆண்டு நான்கு நாட்கள் கோர்ட்டில் ஆஜராகி நீதிபதியின் 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ஆனால், இரண்டாம் குற்றவாளியான சசிகலா, கடந்த 13 மாதங்களாக மீதி இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மனு மேல் மனு போட்டு வழக்கை நகரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்’’ என்று கடுமையாக ஆட்சேபித்தார்.

இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த மனு மீதான தீர்ப்பை நாளை சொல்கிறேன். ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், இரண்டாவது குற்றவாளியிடம் மீதி இருக்கும் கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும்’’ என்றார்.

கருணாநிதி என்னை மிரட்டினார்

825 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்த சசிகலா, தன்னுடைய புதிய உதவியாளர் சுரேஷ் சகிதம் கோர்ட்டுக்கு சீக்கிரமே வந்து காத்திருந்தார். நீதிபதி பாலகிருஷ்ணா 11.20 மணிக்குத்தான் கோர்ட் ஹாலுக்கு வந்தார். ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பங்குப் பரிவர்த்தனை, கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், வரி தொடர்பாகவே கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும் மிகவும் தெளிவாக அழுத்தம்திருத்தமாக, ‘தெரியாது’ என்றார். ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் நிறுவனக் கட்டடம் கட்டியது, பராமரித்தது, நாதெள்ளா நகைக் கடையில் வைர நகைகள் வாங்கியது தொடர்பான நீண்ட நெடிய கேள்விகளை நீதிபதி மூச்சுவாங்க வாசித்து, அதனை ஹாரீஸ் கஷ்டப்பட்டு நான்கு பக்க அளவுக்கு மொழிபெயர்த்து விளக்கியதும், ‘எழுத்துப்பூர்வமாகப் பதில் தருகிறேன்’ என்று ஒற்றை வரியில் சொன்னார் சசிகலா.

அதனால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட கேள்விகள் ஜெட் வேகத்தில் பறந்தன.

வெள்ளிக்கிழமை மாலை வரை வங்கிக் கணக்குப் புள்ளி விவரங்களாகப் பயணித்த கேள்விகளின் திசையை நீதிபதி பாலகிருஷ்ணா திடீரென மாற்ற ஆரம்பித்தார். சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முன், சசிகலாவின் வக்கீல்கள் மணி​சங்கரும் செந்திலும் கைகளை அசைப்பதும், துண்டுச் சீட்டைக் காட்டுவதுமாக உதவி செய்தனர். அதேபோல ஏற்கெனவே கொண்டு வந்திருந்த ஃபைலைப் பார்த்தும் பதில் சொன்னார். பங்களாக்களைக் கட்டியது, பராமரித்தது, வரி செலுத்தியது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் தெரியாது என்றே பதில் சொன்னார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு சரியாகச் சொன்னேனா என்று வக்கீல்களைப் பார்த்து தலையசைத்து உறுதி செய்துகொண்டார்.

‘வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 62.27 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.

‘ஜெயலலிதாவின் சொத்து வேறு. எங்களுடைய சொத்து வேறு. அவர் மீது பொய் வழக்குத் தொடர வேண்டும் என்பதற்காகவே ‘எங்களுடைய சொத்துக்களை எல்லாம் அவருடைய சொத்தாகக் கணக்கில் சேர்த்துள்ளனர். எங்களு​டைய சொத்துகள் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறோம். அதேபோல வங்கியில் கடன் வாங்கியே எங்களுடைய நிறுவனங்களை ஆரம்பித்துப் பராமரித்தோம். அதற்கான ஆதாரங்களை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஜெயலலிதாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு’ என்ற சசிகலாவின் முகத்தில் புன்னகை வழிந்தது.

கடைசியாக, ‘இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்கத் தொடங்கிய‌ நீதிபதி, ‘போன கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலையே உங்கள் கருத்தாக எடுத்துக்​கொள்கிறேன்’ என முடிக்க முயற்சிக்க, ‘இல்லை... இல்லை... ஒரு சில வார்த்தைகள் மட்டும்’ என்று இழுத்தார் சசிகலா.

இதுவரை 1,031 கேள்விகளுக்கும் சசிகலா சொன்ன பதில், அவர் பக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குக்கூட தெளிவாகக் கேட்காத வகையில் மெள்ளப் பேசினார். ஆனால், கடைசிக் கேள்விக்கு மட்டும் அனல் தெறிக்கும் வகையில் அரசியல் வசனம் பேசி அனைவரையும் மிரள வைத்தார்.

‘தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அரசியல் பகை இருக்கிறது. அதனால், அரசியலில் இருந்து ஜெயலலிதாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகப் பொய்யாக இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அவரால் 66 கோடி ரூபாய்க்கான கணக்கைக் காட்ட முடியாததால், வழக்கு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து என்னையும், சுதாகரன், இளவரசியையும் இதில் சேர்த்தார். எங்களுடைய சொத்துக்களை எல்லாம் ஜெயலலிதாவின் சொத்தாகக் கணக்குக் காட்டியுள்ளார். இந்த வழக்குத் தொடர்ந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கருணாநிதி என்னை மிரட்டினார். மறுத்துவிட்டேன். அதனாலே, என்னை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். அதுமட்டுமில்லாமல் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை நேர்மையாக நடத்தவில்லை. எங்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எங்கள் வீட்டில் சோதனை நடத்திய வீடியோ காட்சிகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வியில் அடிக்கடி போட்டுக்காட்டினர். ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் பேச்சை விசாரணை செய்த அதிகாரிகளும் கடைப்பிடித்தனர். என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகவும் சொல்கிறேன்’ என்றபோது சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

ஜெயலலிதா 1,384 கேள்விகளுக்கும், சசிகலா 1,032 கேள்வி களுக்கும் பதில் சொல்லி இருப்பதால், அடுத்து சுதாகரன் பதில் சொல்ல இருக்கிறார். சுதாகரன் வக்கீல் அன்புக்கரசு, ‘நாடு முழுவதும் ஒரு வாரம் கோர்ட் விடுமுறை என்பதால், ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார். உடனே குறுக்கிட்ட நீதிபதி, ‘இது ஸ்பெஷல் கோர்ட். ஸ்பெஷல் கேஸ். அதனால் அந்த விடுமுறை நமக்குப் பொருந்​தாது. அதனால் அடுத்த அமர்வில் நிச்சயமாக சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படும்’ என்று கறாராகச் சொல்லி, வழக்கை ஒத்திவைத்தார்.

என் கல்யாணத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது! - சுதாகரன் பல்டி

நீதிபதி பாலகிருஷ்ணாவின் கிடுகிடு நடவடிக்கைகளால், சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கில் திடீர் உக்கிரம். கோர்ட் பக்கமே தலை​காட்டாமல் இருந்த சுதாகரனை நான்கு நாட்களாக பெங்களூருவிலேயே டேரா போட​வைத்தது. நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன சுதாகரன், அபிராமி பில்டர்ஸ், ரிவர்வே என்டர்பிரைசஸ், அக்ரோ பிரைவேட் லிமிடெட், மெடோ ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்களுக்காகப் பல்வேறு இடங்களில் நிலங்கள், கட்டடங்கள் வாங்கியது, அவற்றைப் பதிவு செய்தது, பராமரித்தது தொடர்பாக நீண்ட கேள்விகளை நீதிபதி சரமாரியாகக் கேட்க, சுதாகரனும் சளைக்காமல் ‘தெரியாது’ என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனாலும் நீதிபதி விடாமல், ‘‘சென்னை தி.நகரில் உள்ள 20.41 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சென்னை ராம் நகரில் உள்ள 20.57 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், மாமல்லபுரத்தில் உள்ள 53.11 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சோழிங்கநல்லூரில் உள்ள 80.37 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் வாங்கியது, பராமரித்தது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார் நீதிபதி. தான் ஏற்கெனவே ரெடி மேடாகக் கொண்டுவந்த ஃபைலைப் பார்த்து, ‘‘விசாரணை அதிகாரிகள் கட்டடத்தின் மதிப்பை உண்மையைவிட அதிகமாகக் காட்டி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் அதிரடியாகப் புகுந்து சோதனையிலும் ஈடுபட்டனர்’’ என்றார்.

சுதாகரன், சசிகலா மற்றும் இளவரசி மூவரும் இணைந்து நடத்திய நிறுவனங்கள், அப்போது வாங்கிய நிலங்கள், அவற்றைப் பதிவு செய்யச் செலவழித்த பணம் மற்றும் பங்குப் பரிவர்த்தனைகள் தொடர்பான கேள்விகள் அனைத்துக்கும் ‘தெரியாது’ என்ற பதிலையே வேடிக்கை பார்த்தபடியே ஹாயாக சொல்லிக் கொண்டு இருந்தார். அடுத்து, ஜெயலலிதா மற்றும் போயஸ் கார்டன் தொடர்பான‌ கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் சுதாகரன்.

பிரமாண்ட கல்யாணம்

சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்த வரை, ‘அபாய வளைவாக’க் கருதப்படுவது, சுதாகரனின் திருமணம் குறித்த கேள்விகள்தான். அதனால், நள்ளிரவு வரை தன்னுடைய வக்கீல்களிடம் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்த சுதாகரன் மறுநாள் காலை 10.50 மணிக்கு, சாய்​பாபாவை வணங்கிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார். நீதிபதியும் தயாராக இருந்ததால் சரியாகக் காலை 11 மணிக்கு கேள்வி கேட்கும் படலம் ஆரம்பமானது. ‘‘டெல்லியைச் சேர்ந்த மல்லம் லா என்ற தணிக்கை யாளரின் மதிப்பீட்டின்படி, உங்களின் திருமணச் செலவுக்காக ஜெயலலிதா கையெழுத்திட்ட 5.91 கோடி ரூபாய் காசோலை பற்றி தெரியுமா?’’ என்று நீதிபதி கேட்டதும் தன்னுடைய கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். ‘‘எனது திருமணத்துக்குச் செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் எனது மனைவி வீட்டார் செய்ததே...’’ என்று சுதாகரன் சொன்னார். கூடுதல் பதிலை எதிர்பார்த்திருந்த நீதிபதி, ‘அவ்வளவுதானா?’ என்பது​போல் பார்த்துப் பதிலை பதிவுசெய்தார். ‘‘உங்களின் திருமணத்துக்காக 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சிடுவதற்கு ஜெயலலிதா 1.15 லட்சத்துக்கு கா​சோலையில் கையெழுத்திட்டது குறித்துத் தெரியுமா?’’ என்று கேட்டதும் அதே ஸ்பீடில், ‘‘தெரியாது’’ என்றார் சுதாகரன்.

அதைத்தொடர்ந்து, ‘‘உங்கள் திருமணத்துக்காக யூனிட் டூல்ஸ் நிறுவனத்தின் ஆறு ஆடம்பர கார்களைப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா செக் கொடுத்தது, அ.தி.மு.க. அலுவலகத்தில் பணியாற்றும் பாபு என்பவரிடம் 50 ஆயிரம் அழைப்பிதழ்களை அச்சிடுவதற்கு 64 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தது, திருமணத்தின்போது வாங்கப்பட்ட 450 சட்டைகள், 450 பேன்ட்கள், 45 சைநோரா ஆடைகள் ஆகியவற்றுக்கான தையல் கட்டணமாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் காசோலையில் ஜெயலலிதா கையெழுத்திட்டுக் கொடுத்தது பற்றி வரிசையாக கேள்விகள் கேட்டு நீதிபதி கலங்கடித்தார். ஆனாலும் சுதாகரன் அனைத்துக்கும் கொஞ்சமும் அசராமல், ‘தெரியாது’ என்பதையே பதிலாகச் சொன்னார்.கல்யாண கேள்விகளைத் தொடர்ந்து, மீண்டும் வங்கிப் பணப்​பரிவர்த்தனைகள் தொடர்பான கேள்விகள் தொடர்ந்தன. ‘‘சென்னையில் உள்ள எஸ்.பி.எம். தலைமை அலுவலகத்தில் நீங்கள் கணக்குத் தொடங்கி இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கியது மற்றும் கனரா வங்கியின் மைலாப்பூர் கிளையில் கணக்குத் தொடங்கியது உண்மையா?” என்று கேட்டார் நீதிபதி.

‘‘உண்மையாக இருக்கலாம்’’ என்றார் சுதாகரன்.

அதுபோல் வங்கிக் கணக்கு எண் 1068-ல் இருந்து உங்களுடைய 1110 மற்றும் 1113 ஆகிய வங்கிக் கணக்குகளுக்கு பல லட்ச ரூபாய் பரிமாற்றம் நடை​பெற்றது தெரியுமா?’’ என்றார். இந்தக் கேள்விக்கும், ‘‘உண்மையாக இருக்கலாம்’’ என்றே பதில் சொன்னார்.

‘‘சசிகலாவின் வங்கிக் கணக்கில் இருந்து உங்களின் வங்கிக் கணக்குக்கு 1992- முதல் 1996- வரை பலமுறை பணப் பரிவர்த்தனைகள் ந‌டந்திருக்கின்றனவே?’’ என்ற கேள்விக்கும் ‘‘உண்மையாக இருக்கலாம். நிறுவனங்களின் நிர்வாகக் காரணங்களுக்காகப் பெறப்பட்டு இருக்கலாம். இதுதொடர்பான விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகத் தருகிறேன்’’ என்றார் சுதாகரன். ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வங்கிக் கணக்குகளுக்கும் சுதாகரனின் வங்கிக் கணக்குக்கும் இடையே நிகழ்ந்த பணப் பரிவர்த்தனைகள் பற்றி நீதிபதி கேட்ட அனைத்து கேள்விக்கும் ‘தெரியாது’ என பதில் அளித்தார். ‘‘ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து உங்களுடைய வங்கிக் கணக்குக்குத் திரு​மணச் செல​வுக்குக்‌ கோடிக்கணக்கில் பணப்பரி​மாற்றம் நடந்துள்ளதே?’’ என்ற நீதிபதியின் கேள்விக்கு, ‘‘எனது திருமணத்துக்குச் செலவு செய்யப்பட்ட தொகை குறித்து எதுவும் தெரியாது. திருமணச் செலவுகள் அனைத்தும் எனது மனைவியின் வீட்டார் சார்பிலே செய்யப்பட்டது’’ என்றார்.

‘‘உங்கள் திருமணத்துக்கு வந்த வி.ஐ.பிக்களுக்கும் உறவினர்களுக்கும் விலை உயர்ந்த அன்பளிப்புகள் கொடுக்கப்பட்டனவே?’’ என நீதிபதி கிடுக்கிப்பிடி போட்டபோது, ‘‘அதுபற்றி எனக்குத் தெரியாது. அவை அனைத்தும் என்னுடைய அண்ணன் பாஸ்கரன் தனிப்பட்ட முறையில் கொடுத்தார்’’ என்றார். இப்படி 914 கேள்விகளுக்கு வெற்றிகரமாகப் பதில் அளித்து முடித்தார் சுதாகரன். இறுதியாக நீதிபதி, ‘‘இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’’ என்றார். அதுவரை ஒற்றை வார்த்தைகளில் பதில் அளித்த சுதாகரன், ‘‘இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக, உண்மைக்குப் புறம்பாக‌ ஜோடிக்கப்பட்டது. எங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்துக்கும் கூடுதலாக மதிப்பிட்டுப் பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக எனது விளக்கத்தை சமர்ப்பிக்கிறேன்’’ எனப் பதில் சொல்லிவிட்டு சென்னைக்குக் காரில் திரும்பினார்.

இளவரசியின் வாக்குமூலம்

சுதாகரனின் வாக்குமூலங்கள் முடிந்துவிட, மறுநாள் வழக்கின் நான்காவது குற்றவாளியான இளவரசியை கோர்ட்டுக்கு வருமாறு பணித்தார் நீதிபதி பாலகிருஷ்ணா. ‘‘ஒரு நாள் மட்டும் இடைவெளி கொடுங்கள்’’ என அவரது வக்கீல் அசோகன் கேட்க, வழக்கை ஒருநாள் ஒத்திவைத்தார். அன்றைய தினம் காலை தன்னுடைய மருமகன் ராஜராஜனுடன் பெங்களூருவில் தரை இறங்கினார். அவருக்கு பெங்களூரு காந்தி நகர் பகுதியில் உள்ள ஃபார்ச்சூன் ஹோட்டலில் அறை. நீதிபதியின் கேள்விகளுக்குச் சரியாக பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக நள்ளிரவு வரை ‘ஸ்பெஷல் கோச்சிங்’ எடுத்ததால், திடீர்க் காய்ச்சலும் உடலில் சர்க்கரை அளவும் குறைந்துவிட்டதாம். இதனால் கோர்ட்டுக்குப் போக முடியாத அளவுக்குக் களைப்பு. அதனால் பெங்களூரு வந்தும் கோர்ட்டுக்கு வர முடியாத சூழல். நீதிபதியிடம், 3-நாள்கள் வரை நேரம் கேட்டுப் புதிய மனு போட்டுவிட்டு, அன்று மாலையே சென்னைக்குத் திரும்பினார்.

உடல்நிலை தன்னுடைய சரியானதும், தன் மருமகன் ராஜராஜனுடன் சோகமான முகத்துடனே கோர்ட்டுக்கு வந்தார் இளவரசி. நீதிபதி சரியாக 11 மணிக்கு வழக்கை ஆரம்பித்தார். மொழிபெயர்ப்பாளர் வருவதற்குப் 10 நிமிடங்கள் தாமதம் ஆனதால் நீதிபதியே இளவரசியிடம், ‘‘உங்கள் பெயர் என்ன? அப்பா பெயர் என்ன? வயது என்ன?’’ எனக் கேட்க, ‘‘என் பெயர் இளவரசி, அப்பா பெயர் கிருஷ்ண சுவாமி, வயது 48’’ எனப் பதில் அளித்தார். சற்றுநேரத்தில் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் வந்ததும் கேள்விக்கணைகள் பாயத் தொடங்கின. சசிகலா, சுதாகரன் ஸ்டைலில் இளவரசியும் ஒரு பெரிய ஃபைலில் பென்சிலால் எழுதிக்கொண்டு வந்து, அதை கைக்குட்டை மற்றும் சின்ன ஹேண்ட்பேக்கால் மறைத்து.... பார்த்துப் பதில் சொன்னார். அவ்வப்போது அவரது வக்கீல் அசோகன் பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி முடித்தவுடன், அதற்கான பதிலை டிக் செய்தார்.

ஜெயலலிதா, சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோரின் பெயரில் இருக்கும் பல்வேறு வங்கிகளின் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள், கடன்கள் தொடர்பாக நீதிபதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் ‘தெரியாது’ என்றே இளவரசி பதில் அளித்தார். ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், ஜெயா அக்ரோ ஃபார்ம், ஜெயா பில்டிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், சசி பில்டிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர்., ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ பிரைவேட் லிமிட்டெட், வினோத் வீடியோ விஷன், ஜெயா ஹவுஸிங் டெவலெப்மென்ட் என இளவரசி பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், பணப்பரிவர்த்தனைகள், கட்டடங்கள், பதிவு செய்யப்பட்டவை குறித்த விவரங்கள், பராமரித்த செலவுகள் தொடர்பாக நீதிபதி கேட்ட 363 கேள்விகளையும் ‘தெரியாது’ என்ற ஒற்றை வார்த்தையிலேயே சமாளித்தார். ‘‘1988-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்த உங்கள் பெயரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் விலாசத்துக்கு மாற்றினீர்களா?’’ என்ற நீதிபதியின் கேள்விக்கு சற்று நேரம் யோசித்த இளவரசி, ‘‘1988 வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை. இதில் நான் போயஸ் கார்டனுக்கு மாற்றினேன் என்பது முற்றிலும் தவறானது’’ என்றார்.

அடுத்து, ‘‘1994-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் போயஸ் கார்டன் முகவரியில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் கைப்பற்றிய 106 புடவைகள், நூற்றுக்கணக்கான காலணிகள், நூற்றுக்கணக்கான வாட்ச்கள் குறித்து தெரியுமா?” என நீதிபதி கேட்டதற்கு, ‘‘விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியதில் என்னுடைய புடவைகளும் பொருட்களும் இருக்கின்றன. அவை எல்லாம் ஜெயலலிதாவின் பொருட்கள் எனச் சொல்வது உண்மை அல்ல. பொருட்களின் மதிப்பையும் பல மடங்கு அதிகமாகக் காட்டி உள்ளனர். என்னுடைய அப்போதைய மாத வருமானம் 48 ஆயிரம் ரூபாய் என வருமான வரித் துறையில் தெரிவித்து வரி கட்டி ரசீது பெற்றுள்ளேன்’’ என்று விளக்கம் அளித்தார்.

‘‘ஜெயலலிதா 62 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது பற்றி?’’ என நீதிபதி கேட்டதற்கு, ‘‘இதனை நான் முழுமையாக மறுக்கிறேன். என்னுடைய சொத்துகளையும் ஜெயலலிதாவின் சொத்து எனக் கணக்குக் காட்டி உள்ளனர்’’ என மறுத்தார். ஆனாலும் நீதிபதி விடாமல், ‘‘விசாரணை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றிய 23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளியை மதிப்பிட்ட வாசுதேவன் என்ற அதிகாரி, அதன் மதிப்பு 55 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என சொல்லி இருப்பது பற்றி தெரியுமா?’’ என கிடுக்கிப்பிடி போட்டபோது, சற்று நேரம் யோசித்து, ‘‘தெரியாது’’ என்றார் இளவரசி.

‘‘கடைசிக் கேள்வி... இந்த வழக்கைப்பற்றி இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என நீதிபதி கேட்க, ‘‘இது முற்றிலும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் பொய்யாக ‌ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதைப்பற்றி என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகப் பதிவுசெய்கிறேன்’’ எனச் சொல்லி பெருமூச்சு விட்டார் இளவரசி. நீதிபதியின் நீண்ட நெடிய கேள்விகளுக்கு ‘தெரியாது’ என்ற பதிலையே 95 சதவிகிதம் உபயோகித்ததால், மூன்றே நாட்களில் 651 கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்து விட்டார் இளவரசி.

திக்குத் தெரியாத காட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு!

16 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் வருகையால் ஜெட் வேகத்தில் பறந்தது. பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜராகிப் பதில் சொல்லாமல் ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரையும் உடும்புப்பிடி பிடித்து பதில்களை வாங்கினார். அடுத்து சாட்சிகளின் விசாரணை, அதற்கடுத்து தீர்ப்பு என முடிவை நோக்கிப் பயணித்த வ‌ழக்கில் திடீர் ஷாக்.

சென்னை, டெல்லி, பெங்களூரு என்று மாறி மாறி அதே இடத்தில் வட்டமடித்த‌ சொத்துக் குவிப்பு வழக்கை இறுதிக் கட்டத்துக்கு நகர்த்தியதில் சிறப்பு அரசு தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யாவின் பங்கு முக்கியமானது. 14 ஆண்டுகளாக கோர்ட்டுக்கு வராமல் இழுத்தடித்த ஜெயலலிதாவை, ‘மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ எனச் சீறி, பெங்களூரு கோர்ட்டுக்கு வரவழைத்தவர். 75 வயதான ஆச்சார்யா மீது தனிப்பட்ட முறையில் கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்குப் போடுவது, துண்டறிக்கை வெளியிடுவது, ஆளுநருக்கு மொட்டைக் கடுதாசி போடுவது, கோர்ட் வட்டாரத்தில் போஸ்டர் ஒட்டுவது என எதிர்ப்புகள் எகிறின.

‘கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருக்கும் ஆச்சார்யா, இந்த வழக்கின் அரசு வக்கீலாக ஆஜராகக் கூடாது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது’ என்று நெருக்கடி கிளம்பியது. உடனே, கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிறப்பு நீதிமன்ற வக்கீல் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார் ஆச்சார்யா. சொத்துக் குவிப்பு வழக்கில் அசைக்க முடியாத தூணாக இருந்த ஆச்சார்யாவுக்குத் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் சிலர் பல்வேறு பிரச்னைகளைக் கொடுத்தனர். வழக்கையும் அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் மனு மேல் மனு போட்டு இழுத்தடித்தனர். மனம் நொந்துபோன ஆச்சார்யா, ‘எனக்கு வயதாகி விட்டது. இனி, இவர்களின் இழுத்தடிப்பை என்னால் ஏற்க முடியாது’ என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென ராஜினாமா செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவும் அதே மாதத்தில் ஓய்வு பெற்றார். பிறகு, இடைக்கால நீதிபதி சோம ராஜு, அவருக்குப் பிறகு வந்த புதிய நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் அதிரடியால் வழக்கு இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

குற்றம்சாட்டப்பட்ட நால்வரிடம் போராடி, பதில்களைப் பெற்று விட்டதால் அடுத்து சாட்சிகளின் விசாரணையை எதிர்பார்த்து நீதிமன்றம் கூடிய வேளையில், அரசுத் தரப்பு ஜூனியர் வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, ‘‘எங்களுடைய சீனியர் வக்கீல் ஆச்சார்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் இருந்து ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அதனால், இந்த வழக்கில் தொடர்ந்து எங்களால் ஆஜராகி வாதாட முடியாது’ என்று சொன்னார்கள். நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்குமே பயங்கர ஷாக்.

நீதிபதி பாலகிருஷ்ணா, ‘புதிய அரசுத் தரப்பு வக்கீலாக யாரை நியமிப்பார்கள்?’ எனக் கேட்டார். அதற்கு சந்தேஷ் சவுட்டா, ‘எனக்கு அதுபற்றி தெரியாது’ என்றார். சற்றுநேரம் யோசித்த நீதிபதி, ‘இதையே காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட வேண்டாம். உங்கள் தரப்பில் இன்றைக்கு சாட்சியங்களின் பட்டியலைச் சமர்ப்பிக்கச் சொன்னேன் அல்லவா? லிஸ்ட்டைக் கொடுங்கள். யாரை விசாரிக்கலாம் என நான் முடிவு எடுக்கிறேன்’ என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டார். அவர்களோ, ‘இன்னும் முழுமையான லிஸ்ட்டைத் தயாரிக்கவில்லை. அதற்கு எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. சாட்சியங்களின் விசாரணையின்போது அரசுத் தரப்பு வக்கீல் இருப்பது அவசியம்’ எனச் சொல்லி, ஐந்து பேர் பட்டியலைக் கொடுத்தனர். வழக்கை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

சந்தேஷ் சவுட்டாவிடம் பேசியபோது, ‘‘எல்லாம் முடிந்து விட்டது. இனி பேச என்ன இருக்கிறது?’’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார். ஆச்சார்யாவின் செல்போனும் சுவிட்ச்டு ஆஃப். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் புதிய அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை நியமித்தது.

யானை ஊர்வலம்... அலங்கார வளைவு... தோட்டாதரணி டிசைன்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரின் வாக்குமூலங்களையும் பதிவுசெய்து முடித்திருக்கிறது நீதிமன்றம். கடந்த மாதம் 28-ம் தேதி, கோர்ட் ஆரம்பித்ததும் ஜெ.தரப்பு வழக்கறிஞர் பி.குமார், முதல் கட்டமாக‌ 54 பேர் அடங்கிய சாட்சிகளின் பெயர்ப் பட்டியலை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி சாட்சியங்களின் விசாரணையை ஆரம்பிக்கச் சொல்ல... நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு ஆயுள் சந்தா செலுத்திய 12 பேர் தனித்தனியாகக் குற்றவாளிக் கூண்டுக்கு அழைக்கப்பட்டனர். ‘உங்களுடைய பெயர் என்ன? முகவரி என்ன? ஆண்டு வருமானம் எவ்வளவு? கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?’ என கேள்விகளைக் கேட்டு பதில் வாங்குகின்றனர். சாட்சிகள் தமிழில் சொல்லும் பதில்களை மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க, அரசு வக்கீல் பவானி சிங் மற்றும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா அவற்றைப் பதிவுசெய்தனர். முதல் நாள் வாக்குமூலம் அளித்த 12 சாட்சிகளில் 6 பேரை மறுநாள் மார்ச் 1-ம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் குறுக்கு விசாரணையை கன்னடத்தில் நடத்தினார். சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், ‘‘அவர்களுக்கு கன்​னடம் தெரியாது’’ என்று சொல்ல, ‘‘அதற்குத்தான் மொழி​பெயர்ப்பாளர் இருக்​கிறாரே...’’ என்று, கன்னடத்திலேயே தொடர்ந்தார். ‘‘சாட்சிகளின் வருமானத்தையும், வருமான வரி செலுத்தியதையும், அவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எல்லாம் பொய் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இவ்வளவு குறைவான வருமானம் உள்ளவர்கள் லட்சக்கணக்கில் ஆயுள் சந்தா செலுத்துவதும், ஜெயலலிதாவுக்கு விலை உயர்ந்த பிறந்த நாள் பரிசுகள் அளிப்பதும் நம்பும் வகையில் இல்லை. கட்சியினரிடம் நன்கொடை வசூலித்ததாகச் சொல்வதற்கு ஆதாரமாக எந்த ரசீதுகளும் இல்லை. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றப் பொய் சாட்சியம் அளிக்கிறார்கள்’’ என, தன்னுடைய வாதத்தைப் பதிவுசெய்தார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெ. தரப்பு வழக்கறிஞர், ‘‘நாங்கள் உண்மையை மட்டுமே சொல்கிறோம்’’ என அழுத்திச் சொன்னார்.

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சாட்சியம் அளித்தார். ‘‘1995-ம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதி அம்மா பேரவையின் செயலாளராக இருந்தேன். சுதாகரன் திருமண‌த்துக்கு வருகை தரும் அம்மாவை வரவேற்க, தொண்டர்களிடம் ரூ 50 ஆயிரம் வசூலித்தேன். சென்னை லைட் ஹவுஸ் முதல் எம்.ஆர்.சி. நகர் வரை அலங்கார வரவேற்பு வளைவு வைத்தேன்’’ என்றார்.

பெரம்பூரைச் சேர்ந்த ராமலிங்கம் தனது சாட்சியத்தில், ‘‘அ.தி.மு.கவின் பெரம்பூர் பகுதிச் செயலாளராக நான் இருந்தபோது, எம்.ஆர்.சி. நகர் முதல் அண்ணா சாலை வரை வாழை மரம், கொடிமரம், பேனர் வைக்க ஒன்றரை லட்சம் கொடுத்தேன். இது தொடர்பான ஆவணங்கள் எனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்துவிட்டது’’ என்றார்.

அடுத்ததாக, தென் சென்னையைச் சேர்ந்த சி.எம்.சாமி அழைக்கப்பட்டார். ‘‘நான் தென் சென்னை மாவட்ட இணைச் செயலாளராக இருந்தபோது, சுதாகரனின் திருமணம் நடந்தது. இதற்காக கேரளாவில் இருந்து பாரம்பரிய இசைக் குழுவை அழைத்து வந்தேன். யானை ஊர்வலம் நடத்தினேன். இதற்காக 70 ஆயிரம் செலவு செய்தேன். திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகச் சொல்லி, சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் எனது பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். நானும் பணத்தை வசூலித்த தொண்டர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்’’ என்றார். மார்ச் 6-ம் தேதி வரை வழக்கில் 21 சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கினர்.

ஒத்திவைக்கப்பட்ட விசாரணை, மார்ச் 8-ம் தேதி தொடங்கியது. அன்று சாட்சி சொல்வதற்காக, சினிமா கலை இயக்குநர் தோட்டாதரணி வந்திருந்தார். ‘‘சுதாகரன் திருமணத்துக்காக, அ.தி.மு.க-வைச் சேர்ந்த காஞ்சி பன்னீர்செல்வம் என்பவர் என்னைச் சந்தித்து, மேடை அலங்காரம் செய்து தருமாறு கேட்டார். சின்ன வயது முதலே சிவாஜி குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான உறவு இருந்ததால், ஒப்புக்கொண்டேன். எனக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் செட் அமைக்க முடியவில்லை. தெரிந்தவர்கள், பழகியவர்கள் வீட்டுக்கு இலவசமாக டிசைன் வரைந்து தருவது என்னுடைய வழக்கம். சுதாகரன் திருமணத்துக்கும் அப்படித்தான் டிசைன் மட்டும் வரைந்து கொடுத்தேன். அதற்காக எந்தக் கட்டணமும் வாங்கவில்லை. மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று சாட்சியம் சொன்னார்.

70 யானைகள்... 60 லட்சம் ரூபாய் அலங்காரம்!

பெங்களூரு நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெ. தரப்பு சாட்சிகள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குமூலமும் வழக்கின் போக்கையே மாற்றும் வல்லமை பொருந்தியவை என்பதால், மேலிடத்து உத்தரவுப்படி படுபவ்யமாக கோர்ட்டுக்கு வந்தனர். வளைந்து, நெளிந்து, குனிந்து வாக்குமூலம் அளிப்பதைப் பார்த்து கோர்ட்டே ஆச்சர்யப்பட்டது. அவர்கள் அளித்த ‘சத்திய’ வாக்குமூலங்களைப் பார்ப்போம்.

என் தோட்டத்துக் காய்கறிகள்

காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. ‘ஜெயலலிதா தரப்பு சாட்சியங்களைத் தொடரலாம்’ என, நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா பணித்தார். ஜெ. தரப்பு வக்கீல் பி.குமாரும் சசிகலாவின் வக்கீல் மணிசங்கரும் இணைந்து சாட்சிகளிடம் விசாரணையை ஆரம்பித்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்து. ‘‘சுதாகரன் திருமணத்துக்குத் தேவையான வாழை இலைகளையும் மதிய உணவையும் ஏற்பாடு செய்தேன். உணவு தயாரிப்பதற்காக‌ப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் அனைத்தும் என்னுடைய தோட்டத்தில் விளைந்தவை. அது மட்டுமல்லாமல் தஞ்சாவூரில் இருந்து இரண்டு சமையல்காரர்களையும் அழைத்து வந்தேன். அவர்களுக்கு சம்பளமாக தலா 17 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். காலை உணவை பெண் வீட்டாரே ஏற்பாடு செய்திருந்ததால், அதில் என்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லை’’ என, சரியாக வாக்குமூலம் அளித்த பூரிப்பில் ஜெ. தரப்பு வக்கீல்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு வெளியேறினார்.

வளர்ப்பு மகன் திருமணம்... 60 லட்ச ரூபாய் அலங்காரம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பியான பன்னீர் செல்வம், ‘‘1995-ம் ஆண்டு நடந்த சுதாகரனின் திருமணத்துக்குப் பந்தல் போடலாம் எனத் திட்டமிட்டு, சிவாஜியின் மகன் ராம்குமாரை அணுகினேன். அவர், ‘கல்யாணப் பந்தல் போடுவது பெண் வீட்டாரின் வேலை’ எனச் சொல்லிவிட்டதால், நான், பாண்டுரங்கன், கே.பி.ராஜு, கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி, தணிகை பாபு, தங்கவேலு, பன்னீர்செல்வம், காந்தராஜன், ரத்னவேலு, முத்துமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய 12 பேரும் கலந்து பேசி கல்யாண மண்டபத்தின் முகப்பு அலங்காரத்தை ஏற்பாடு செய்வது என முடிவெடுத்தோம். அதற்காக, பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியிடம் முகப்பு அலங்காரம் அமைத்துத் தருமாறு கேட்டோம். நிறைய வேலைகள் இருப்பதால் அவருடைய உதவியாளர் ரமேஷ்குமாரைச் சந்தித்து முடித்துக் கொள்ளுமாறு சொன்னார். அவர், ‘முகப்பு அலங்காரத்துக்கு 60 லட்சம் செலவாகும்’ என்றார். அதற்கு என்னுடைய பங்காக ஐந்து லட்ச ரூபாயை செங்கல்பட்டு கட்சி நிர்வாகிகளிடம் வசூலித்துக் கொடுத்தேன்’’ என வியர்க்க விறுவிறுக்க சொல்லி முடித்தார்.

தமிழ்நாட்டுக்கு விரோதமான கட்சி தி.மு.க.

முன்னாள் எம்.பியான முத்துமணி கொஞ்சம் விரிவாகவே விளக்கம் அளித்தார். ‘‘வி.என்.சுதாகரனின் திருமண விழாவுக்கு முகப்பு அலங்காரம் அமைக்க என்னுடைய பங்காக‌ ஐந்து லட்ச ரூபாயைக் கொடுத்தேன். இந்தப் பணம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு, ‘முகப்பு அலங்காரம் செய்வதற்கு 57.50 லட்சம் மட்டுமே செலவானது’ என்றனர். ‘மீதி இருக்கும் 2.50 லட்சத்தைக் கட்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லிவிட்டேன். 2011-ம் ஆண்டு தணிகை பாபு இற‌ந்துவிட்டார். காந்திராஜன் தி.மு.கவில் இணைந்துவிட்டார்’’ என இதர தகவல்களைச் சொல்ல முற்பட்டபோது, நீதிபதி தடுத்தார். ‘‘இல்லை.. இல்லை... யுவர் ஹானர்... நானும் அட்வகேட்தான். இது வழக்குக்கு மிக முக்கியமானது. அம்மாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் விரோதமான கட்சி தி.மு.க.’’ என சம்பந்தம் இல்லாமல் எதையோ சொல்ல, நீதிபதி உட்பட கோர்ட்டில் இருந்த அனைவரும் உரக்கச் சிரித்தனர்.

நம‌து எம்.ஜி.ஆரின் தீவிர வாசகர்கள்

அடுத்த விசாரணையில் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழுக்கு சந்தாவாக டெபாசிட் செலுத்தியது குறித்தவையே. ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் வழக்கின் 2-வது குற்றவாளியான சசிகலா சம்பந்தப்பட்டது என்பதால், சசிகலாவின் வக்கீல் மணிசங்கரும் இளவரசியின் வக்கீல் அசோகனும் சாட்சிகளிடம் விசாரணை செய்தனர்.

ஆலந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை அளித்த வாக்குமூலத்தில், ‘‘சுதாகரன் திருமணத்துக்காக கேரளாவில் இருந்து 70 யானைகளை வரவழைத்து ஊர்வலமும் செண்டை மேளமும் ஏற்பாடு செய்தேன். இதற்கு இரண்டு லட்சம் செலவானது. இது தொண்டர்களிடம் வசூலித்த நன்கொடை’’ என்றார்.

தி.மு.க. திடீர் என்ட்ரி... திகிலில் ஜெ. தரப்பு!

அதிரடி திருப்பங்களுடனும் அந்தர் பல்டிகளுடனும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதால் இந்திய அரசியல் வட்டாரமே பரபரக்கிறது. இந்த வழக்கில் திடீரென பெரிய திட்டத்துடன் தி.மு.க. குதித்திருப்பதால், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் தீப்பொறி! கடந்த 5-ம் தேதி நீதிபதி எம்.எஸ்.பால​கிருஷ்ணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான‌ ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார், ‘‘இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் வருமானவரித் துறையினரும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் சோதனையிட்டு, பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் தன்னிச்​சையாக செயல்படாமல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் தலையீட்​டுடனே கட்டடங்களின் மதிப்புகளை வரையறுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் உரிய ஆதாரங்களுடன் மதிப்பீடு செய்யவில்லை என குறுக்கு விசாரணையில் தெரியவருகிறது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என சொல்லப்படும் சுதாகரனின் திருமணம் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த தகவல்கள் அனைத்துமே உண்மைக்குப் புறம்பானவை. தமிழ்க் கலாசாரப்படி திருமணச் செலவை மணப்பெண்ணின் குடும்பத்தாரே ஏற்றுக்கொள்வது வழக்கம். அதே நடைமுறைதான் சுதாகரனின் திருமணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் ஜெயலலிதா பணம் செலவழிக்கவே இல்லை. ஒரு சில கட்சிக்காரர்கள் மட்டும் தங்களின் விருப்பப்படி அன்பளிப்பாக செலவு செய்​தார்கள். இதெப்படி ஜெயலலிதாவின் சொத்தாக இருக்கும்?’’ என கேள்விகளுடனே தனது வாதத்தை நிறைவு செய்தார்.

மறுநாள் காலை 11 மணிக்கு கோர்ட் ஆரம்பமாகும்போதே அமர்க்களம். வழக்கம்போல ஜெயலலலிதா தரப்பும் வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரும் கைகுலுக்கி பாசமழை பொழியும்போதே திடீர் என்ட்ரி கொடுத்தனர் தி.மு.க. தலைகள். கடலூர் எம்.பி. ஆதிசங்கர் மூன்று தி.மு.க. வக்கீல்களுடன் வந்ததை சற்றும் எதிர்பாராத ஜெயலலலிதா தரப்பு வக்கீல்களுக்கு செம ஷாக். அக்கம் பக்கத்தில் ஏதோ கிசுகிசுத்து விட்டு, வெளியே எழுந்துபோய் மேலி​டத்துக்குத் தகவலை சொன்​னார்கள். வழக்கு நேர முடிவில் திடீரென பேச எழுந்த அரசு வக்கீல் பவானி சிங், ‘‘ஜெயலலிதாவின் வக்கீல் மிகவும் மெதுவாக வாதிடுகிறார். வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே நாள் முழுவதும் வாதிடாமல், அரை நாள் மட்டுமே வாதிடுகிறார். எதிர் தரப்பினர் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் முடித்தால், ஆகஸ்ட் 16-ம் தேதியில் இருந்து எனது வாதத்தைத் தொடங்குவேன்’’ என சற்று கோபத்துடனே சொன்னார்.

இதைத் தொடர்ந்து வழக்கை நீதிபதி புதன் கிழமைக்கு ஒத்திவைத்தார். அன்றைக்கு தி.மு.க. தரப்பில் இருந்து தர்மபுரி எம்.பியான தாமரைச்செல்வன், அதே மூன்று தி.மு.க. வக்கீல்களுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் என்னென்ன நடந்தது, எத்தனை புதிய மனுக்கள் போட்டார்கள், மனுக்கள் மீதான தீர்ப்புகள், பல்வேறு நீதிபதிகளின் உத்தரவுகள், எதிர்த்தரப்பு வாங்கிய வாய்தாக்கள், சாட்சிகளின் விளக்கங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் விளக்கங்கள் என அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு உத்தரவிட்டார். அதற்காக தர்மபுரி எம்.பி. தாமரைச்செல்வன் 11 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தினார். தி.மு.கவின் திடீர் விசிட் குறித்து விசாரித்தோம். ‘‘ஜெயலலிதா இந்த வழக்கை இவ்வளவு காலம் இழுத்ததற்கு காரணமே, தண்டனை உறுதி என்பதால்தான். இப்போது வழக்கில் என்னென்னமோ புதிய புதிய தகிடுதத்தங்களைச் செய்வதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால்தான் நாங்கள் களத்தில் குதித்திருக்கிறோம். பல மாஸ்டர் பிளான்கள் இருக்கின்றன. போகப் போகப் பார்ப்பீர்கள்’’ என்றனர் உற்சாகமாக.

பவானி சிங் சொல்லும் 306 பூகம்பம்!

2014, மே மாதம் 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் 306 சொத்துகளின் பட்டியலை மாறி மாறி வாசித்து முடித்தபோது, அத்தனை பரபரப்பு. அரசு வழக்கறிஞர் பவானி சிங், ‘‘1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன். இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை. இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர் களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது’’ என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30-க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர். மேலும் சில ஆவணங்களை 15-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லி முடித்தார் பவானி சிங். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்....

‘‘இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ். ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்க்ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009, ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36-ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடிக் கட்டடம் ரூ.50,000, ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058, மேலும் அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060, ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கடசுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530, சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை- 4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904-க்கு ஷாப்பிங் மால், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919, மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409. தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125, அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315, மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420, ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039, புதுக்கோட்டை 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371, டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000, வெலகாபுரம் கிராமத்தில் மெடோ ஆக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன. பையனூர் பங்களா ரூ.1,25,90,261, ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901, போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000, சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன. இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211, ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561, மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570 சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242, சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப், ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914 பட்டுப் புடவைகள் ரூ.61,13,700, மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870, 28 கிலோ தங்க நகைகள், மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573 ஆகும்’’ என்று விடாமல் வாசித்து முடித்தார்.

நீதிமன்றம் முடிந்து வெளியே வந்த பெங்களூரு தி.மு.க வழக்கறிஞர் நடேசன், ‘‘ஜெயலலிதா வாங்கியிருக்கும் இந்த 306 சொத்துகளின் இப்போதைய மதிப்பு பல நூறு கோடியைத் தாண்டும். அரசுத் தரப்பு இறுதி வாதம் 15-ம் தேதியோடு நிறைவு பெறும். அதன் பிறகு ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் தொடங்கும். அது முடிந்ததும் இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்புக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும்’’ என்றார்.

அ.தி.மு.க வழக்கறிஞரும் சேலம் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் மணிகண்டன், ‘‘இந்தச் சொத்துகள் அனைத்தும் 20 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டவை. அதில் பலர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நிலத்தின் மதிப்பு குறைவு. ஆனால், இன்று நிலத்தின் வேல்யூ அதிகரித்துள்ளது. நான் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டை மூன்று லட்சத்துக்குக் கட்டினேன் என்றால், அதன் மதிப்பு இப்போது 30 லட்சமாக அதிகரித்து இருக்கும். நான் 30 லட்சத்துக்கு வீடு கட்டினேன் என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போன்றதுதான் இந்த வழக்கும். இதைச் சொத்துக் குவிப்பு என்று சொல்வதே அடிப்படையற்ற வாதம். கருணாநிதியைப் போல வெறும் கையை வீசிக்கொண்டு அம்மா அரசியலுக்கு வரவில்லை. அவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் இருந்து அம்மா கூடிய சீக்கிரத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வருவார்’’ என்றார்.

306-ஐ அடுத்து 248....

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை நெருங்கி மே 15-ம் தேதியோடு அரசு தரப்பு இறுதி வாதம் முடிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா உட்பட 7 நிறுவனங்கள்... ‘‘எங்களுடைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். எங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொண்டு மீண்டும் மூல வழக்கை விசாரிக்க வேண்டும். அதுவரை மூல வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக அரசு வழக்கறிஞர் பவானி சிங் கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றுவிட்டதால் ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா மாலை 4 மணி வரை காத்திருந்தார். அடுத்த நாள் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல், அரசு தரப்பு இறுதி வாதத்தைத் தொடர ஆணையிட்டார். இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் பல சந்தர்ப்பங்களில் உண்மையை மறைத்து விசாரணையைத் திசைதிருப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் பிரதிவாதிகள் செயல்படும்போது அதற்கு சரியான பதில் கொடுக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செயல்படுவதாகத் தெரிகிறது. இது சரியானதல்ல. இது கண்டனத்துக்கு உரியது. உண்மையை மறைக்கும் முயற்சியும் குற்றமே. நீதிமன்றத்தை ஏமாற்றுபவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது தீர்ப்பின்போது பிரதிபலிக்கும்’’ என்று கூறியதோடு, மூல வழக்கு விசாரணைக்குத் தடைகோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி தள்ளுபடி செய்து 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

‘அதையடுத்து மே 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தவர்களான, திருநெல்வேலி கருங்குளம், வெள்ளக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாஸ்கரன், ஜெயராமன், வீராசாமி, ஸ்ரீதர், சமுத்திரபாண்டி, பிச்சைக்கனி நாடார், அருணாசலம் ஆகியோர் சாட்சியளித்தனர். அவர் களிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தினார். இடையிடையே நீதிபதி குன்ஹா சாட்சிகளிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு அசத்தினார். இந்த விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறப்போகிறது என்பது தெரிந்ததும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அசோகன், மணிசங்கர், மூர்த்தி ராவ், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் அனைவரும் குஷியானார்கள். ஸ்வீட் வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

வீராசாமி, பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வீராசாமி. ‘‘இந்த கோர்ட்டில் என்ன கேஸ் நடந்துட்டு இருக்குன்னாவது தெரியுமா?’’ என்று வக்கீல் கேட்டார். ‘‘அம்மா கேஸ்’’ என்று சொன்னார் வீராசாமி. இதேபோன்று மற்றவர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. ‘ஒரு ஏக்கர் என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘2,000 ரூபாய்க்கு’ என்றும், ‘உங்க சொத்தை யார் வாங்கியது தெரியுமா?’ என்றதற்கு ‘தெரியாது’ என்றும், ‘எதற்காக நிலத்தைக் கொடுத்தீர்கள்?’ என்றதற்கு சிலர் ‘கஷ்டத்துக்காக’ என்றும், சிலர் ‘கிராமத்தில் உள்ள எல்லோரும் கொடுத்தாங்க. நாங்களும் கொடுத்துட்டோம்’ என்றும் பதிலளித்தனர். இந்த சாட்சிகளின் விசாரணை முடித்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணி முதல் 4.30 மணி வரை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருக்கும் 32 நிறுவனங்களின் பெயர்களில் 1991 முதல் 1996 வரை சேர்த்த 306 சொத்துகள் பட்டியலை கடந்த 9-ம் தேதி வாசித்ததைப்போல 1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார்.

மராடி வாசித்த செலவுப் பட்டியலில் இருந்து...

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய 1.5 கோடிக்கு கடனுக்குச் செலுத்திய வட்டி 50,93,921. இதே வங்கியில் சசி என்டர்பிரைசஸ் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய தொகை 18,32,683. இதே கிளையில் லெக்ஸ் ப்ராபர்ட்டீஸ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது 17,52,069. ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் இளவரசி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது 4,41,569. மயிலாப்பூர் கனரா வங்கியில் இருந்து சேலம் ஸ்டோர்ஸுக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை 12,73,642. இதே வங்கியில் இருந்து பி.பி.எல். கேலரிக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை 1,28,530. இதே வங்கியில் இருந்து கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு ஜெயலலிதா கணக்கில் இருந்து செலுத்திய தொகை 5,95,000. இதே வங்கியில் இருந்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு 5,00,000. மௌலி அட்வர்டைஸுக்கு 11,00,000-ம் ஜெயலலிதா கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

1987-88 ஆண்டுக்கான வருமான வரி 2,50,445, 1988-89 ஆண்டுக்கு 5,63,482, 1989-90 ஆண்டுக்கு 8,18,161, 1990-91 ஆண்டுக்கு 30,61,549... இப்படி ஜெயலலிதா 1997 வரை வருமான வரி கட்டியுள்ளார். 88-89 ஆண்டுக்கு 89,619, 1989-90 ஆண்டுக்கு 2,68,475, 92-93 ஆண்டிற்கு 13,51,590 என சொத்து வரி கட்டியுள்ளார்.

இதேபோல் சசிகலா 91-ல் இருந்துதான் வருமான வரி கட்டுகிறார். 91-92 ஆண்டுக்கு 2,23,750, 92-93 ஆண்டுக்கு 3,00,550, 93-94 ஆண்டுக்கு 7,62,151 என வருமான வரி கட்டியுள்ளார். 91-92 ஆண்டுக்கு 14,240, 92-93 ஆண்டுக்கு 1,17,955 என சொத்து வரி கட்டியுள்ளார்.

ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு 16,15,500. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் -சத்தியலட்சுமி திருமணச் செலவு 6,45,04,222. கொடநாடு பங்களா கட்டிய செலவு 12,20,310. மன்னார்குடியில் செங்கமலம் தாயார் நினைவு மகளிர் கல்லூரிக்கு டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்க சசிகலா கொடுத்த தொகை 10,82,420.

ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம் 2,69,102. 1993 முதல் 96 வரை ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம் 7,38,433. குமரன் சில்க்ஸுக்கு 4,84,712, ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் 30,00,000. இப்படி 1991 முதல் 1996 வரை செலவுசெய்த மொத்த செலவு தொகை 12,00,59,338.

5 ஆண்டுகள்... 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஒருவழியாக அரசு தரப்பு இறுதி வாதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மூன்றாம் தரப்பு வாதிகளான தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பினர் தங்களது இறுதி வாதத்தை எழுத்துபூர்வமாக நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டனர்.

இனி, வழக்கில் அடுத்த கட்டமாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்குபேருடைய இறுதி வாதம் நிறைவடைந்ததும் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதுவார் என தமிழகமே எதிர்நோக்கி கவனித்துக் கொண்டிருந்தது.

இதையடுத்து, மெடோ அக்ரோ ஃபார்ம் இயக்குநர் குமாரிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தி முடித்துவிட்டு, சரியாக 11.30 மணிக்கு ஜெ. சொத்துக் குவிப்பின் இறுதி வாதத்தை எடுத்து வைக்கத் தொடங்கினார். அதில் ஏ1, ஏ2, ஏ3, ஏ4- நான்கு பேர் மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருந்த கம்பெனிகளுக்குமான வருமான பட்டியலை வாசித்த முடித்து, க்ளைமாக்ஸாக மராடி, ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், நலிந்த கம்பெனிகளை வாங்கி, முறைகேடாகப் பணம் செலுத்தி சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வந்த 20 கோடியும், சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்கு வந்த ஆறு கோடியும் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது. இது இரண்டுமே மிக முக்கியமான ஆதாரங்கள். ஆணித்தரமாக நிரூபிக்​கப்பட்ட ஆதாரங்கள். எனவே, இந்தச் செயலில் ஈடுபட்​டவர்களை ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களில் தண்டிக்க வேண்டும்’’ என்றதும் கோர்ட்டே அமைதியானது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி குன்ஹா, ‘‘இதில் ஏ1 க்கு என்ன தொடர்பு இருக்கிறது?’’ என்றதும் எழுந்த பவானி சிங், ‘‘ஏ2, ஏ3, ஏ4 ஆகியோர் அனைவரும் ஏ1 வீட்டில்தான் இருக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஏ1 வீட்டின் முகவரிகளில்தான் வங்கிக் கணக்குகள் தொடங்கப்​பட்டிருக்கின்றன. ஏ2, ஏ3, ஏ4 மூவருக்கும் குறைந்த வருமானம்தான் இருந்துள்ளது. ஏ1 வங்கி இருப்பின் மூலம்தான் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதனால் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் இதில் சம்பந்தப்பட்டவர்களே’’ என்று தன்னுடைய இறுதி வாதத்தை நிறைவுசெய்தார்.

இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம் தரப்பு வாதி என்பதால், இறுதி வாதத்தை நேரடியாக வாதிட முடியாது. அதனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குமரேசன், சரவணன், நடேசன் ஆகியோர் நீதிபதி முன்பு 428 பக்க எழுத்துபூர்வமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஆவணத்தின் சாராம்சம்...

‘‘இந்த வழக்கின் ஏ1 ஆக இருக்கும் ஜெயலலிதா 1984-89 வரை எம்.பியாகவும் 1989-91 வரை எம்.எல்.ஏவாகவும் 1991-96 வரை தமிழக முதல்​வராகவும் இருந்துள்ளார்.

இந்த வழக்கின் ஏ2 ஆக இருக்கும் சசிகலா கேசட் கடை நடத்தி வந்தார். அவரது கணவர் நடராஜன் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக இருந்து 1991-ல் அந்தப் பணியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கின் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்​பட்டுள்ள சுதாதரன், சசிகலாவின் சகோதரி மகன். இவரை ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்.

இந்த வழக்கின் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்​பட்டுள்ள இளவரசி 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி. 1996-ல் ஜெயராமன், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் சொந்த வீடான போயஸ் கார்டனுக்கு இளவரசி வந்துவிட்டார்.

ஜெயலலிதா 1964-77 வரை திரைத் துறையில் நடிகையாக இருந்தார். அவரது அம்மா சந்தியா 1971-ல் காலமானார். அப்போது அவருக்கு நாட்டிய கலாநிகேதன் என்ற இசைப் பள்ளியும் போயஸ் கார்டனில் வீடும் ஆந்திரா மாநிலத்தில் நகரில் ஒரு வீடும் ரங்காரெட்டி தாலுக்காவில் 10.20 ஏக்கரில் திராட்சைத் தோட்ட பண்ணை வீடும், பஷீராபாத்தில் 3.25 ஏக்கர் நிலமும் மட்டுமே இருந்தது. அவை ஜெயலலிதாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.

1987-ல் ஜெயலலிதாவின் மொத்த அசையா சொத்துகள் 7.5 லட்சமும் வங்கி இருப்பு ஒரு லட்சமும் மட்டுமே இருந்தது. 1989-ல் எம்.பியாக இருந்தபோது நான்கு கார்கள் (மதிப்பு ரூ9,12,129) ஒரு ஜீப் (மதிப்பு ரூ.1,04,000) வாங்கி இருக்கிறார். இதுவே வருமானத்துக்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. 1988 முதல் 1990 வரை ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் என்ற கம்பெனிகளைத் தொடங்கி நடத்தி வந்தாலும்... வரவு, செலவுகள் செய்யாமல் வருமானம் இல்லாமல் இருந்தது. 1991 வரை ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,01,83,957 ஆக இருந்தது.

1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நலிந்த நிறுவனங்களான மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக்ஷன், சக்தி கன்ஸ்ட்ரக்ஷன், மார்பிள் அண்ட் மார்பிள்ஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகளை வாங்கி, அதில் நேரடி மற்றும் மறைமுக பங்குதாரர்களாக நுழைந்து, புதியதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, 1991-96 வரை ஐந்து வருடங்கள் இந்த 32 நிறுவனங்களில் 898 முறை பணம் டெபாசிட் மட்டுமே செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு இன்கம்டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் எதுவும் கிடையாது. இந்த நிறுவனங்களின் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலம், கட்டடம், விளைநிலங்களை வாங்கி வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்.

1991-ல் ரூ.2,01,83,957-ஆக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1996-ல் 66,44,73,573 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடைப் பட்ட காலத்தில் இவருக்கு எந்த வருமானமும் இல்லை. முதல்வராக இருந்ததற்குக்கூட சம்பளம் வாங்காமல் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். பொதுச் சேவையில் இருந்துகொண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கியுள்ளனர். இவை அரசு துறை சாட்சியங்கள், ஆவணங்கள், நேரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து நிரூபிக்கப்பட்டதால் இவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2(D) பிரிவில் இந்தியத் தண்டனை சட்டம் 109-குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படுதல் மற்றும் 120B-கூட்டு சதி ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும்’’ - இவ்வாறு தி.மு.க தனது இறுதி வாதத்தை சமர்ப்பித்துள்ளது.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ‘‘ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டதால், எங்களுடைய இறுதி வாதத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, ‘‘ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் இறுதி வாதத்தை 2.6.2014 தொடங்கலாம் என்றும், மற்ற ஏ2 - சசிகலா, ஏ3 - சுதாகரன், ஏ4 - இளவரசி மூவரும் நாளையில் இருந்து தங்களது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து ஏ2, ஏ3, ஏ4 மூவரும் 21-ம் தேதி மீண்டும் நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். அதில் ‘‘ஏ1 பொதுத் துறையில் இருப்பதால் அவருடைய இறுதி வாதம் நிறைவடைந்த பிறகுதான் நாங்கள் இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஸ்டேட்மென்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காக எங்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, ‘நாளை முதல் இறுதி வாதத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார். இனி ஜெட் வேகம்தான்.

இனியும் இந்த வழக்கை தாமதப்படுத்த முடியாது!

இது என்னுடைய நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை இந்த வழக்கு எப்படி நடந்திருந்தாலும் எனக்கு ஆட்பேசனை இல்லை. இனி என்னுடைய ஒவ்வொரு வாய்தாவுக்கும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரன்ட் பிறப்பிப்பேன்!’ - ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதியாக கடந்த 2013-ம் ஆண்டு பொறுப்பேற்ற முடிகவுடர் இப்படி அதிரவைத்தார்.

இப்போது நீதிபதியாக இருக்கும் ஜான் மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பேற்றதில் இருந்து ஜெயலலிதா தரப்புக்கு எந்தக் கடிவாளமும் போடவில்லை. ஆனால், 18 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் அரசு தரப்பின் இறுதி வாதத்தை முடிக்கச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் நீதிபதி. அத்துடன் தி.மு.க தரப்பு இறுதி வாதத்தையும் எழுத்துபூர்வமாக பதிவு செய்துவிட்டார்.

23-ம் தேதி... அன்றே, ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்கவும் உத்தரவிட்டார். ஆனால், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்து விட்டதால், எங்கள் தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்க முடியாது என்று நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். ‘சரி... ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஜூன் 2-ம் தேதி தொடங்கட்டும். அதற்கு முன்பு சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்குங்கள்’ என்று நீதிபதி சொன்னார்.

அதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் மூன்றாவது முறையாக நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். ‘‘தி.மு.க கொடுத்த 428 பக்க இறுதிவாத ஸ்டேட்மென்ட்டைப் படிக்க கால அவகாசம் தேவை. இந்த வழக்கில் ஏ1 குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் பொதுசேவையில் இருப்பதால், அவருடைய இறுதி வாதம் முடிந்த பிறகுதான் நாங்கள் வாதத்தைத் தொடங்க முடியும். இந்த வழக்கில் கம்பெனிகள் தரப்பு விசாரணை எங்களுக்குச் சாதகமாக நடைப்பெற்று வருவதால், அந்த வழக்குகள் நிறைவடைந்த பிறகுதான் எங்களுடைய இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். எனவே, 309-வது விதிப்படி எங்களுக்குக் கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

மனுவைப் பார்த்த நீதிபதி, ‘‘இனியும் இந்த வழக்கைத் தாமதப்படுத்த முடியாது. நன்றாக யோசித்து ஒரு மணிக்கு உங்கள் வாதத்தைத் தொடங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்களும், வாதாட முடியாது என்று சொல்லி அமர்ந்திருந்தனர்.

சரியாக ஒரு மணிக்கு நீதிபதி, ‘‘வாதாடுகிறீர்களா?’’ என்று கேட்டார். ‘‘முடியாது...’’ என்று வழக்கறிஞர்கள் சொல்ல... ‘‘மதிய உணவை முடித்துவிட்டு 3 மணிக்கு வாருங்கள்!’’ என்று சொன்னார் நீதிபதி.

பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி வந்ததும், ‘‘வாதாடுகிறீர்களா..?’’ என்றார். ‘‘முடியாது’’ என்று சொல்லி, காலையில் கொடுத்த மனுவை திரும்பவும் நீதிபதியிடம் கொடுத்தார்கள். ‘‘மனு மீதான விசாரணை 4.30 மணிக்கு நடக்கும்’’ என்று சொன்னார் நீதிபதி.

4.30 மணிக்கு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ‘‘சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேருக்கும் தலா 3,000 வீதம் மொத்தம் 9,000 அபராதம் விதிக்கிறேன். அத்துடன் இனி வரும் ஒவ்வொரு இறுதி வாதத்தின்போதும் கட்டாயம் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

26-ம் தேதி காலை சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பெங்களூரு கோர்ட்டுக்கு வந்தனர். இருக்கைக்கு நீதிபதி வந்து அமர்ந்ததும் சுதாகரன் வழக்கறிஞர் அன்புக்கரசு, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன் கோர்ட்டுக்கு வருவதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இரவு அவருக்கு கடுமையான ஜுரம் என்பதால், வர முடியவில்லை. விமான டிக்கெட்டை விடியற்காலை 3.15 மணிக்கு கேன்சல் செய்து விட்டோம். அதற்கான ஆதாரம் இது!’’ என்று சொன்னார். அதை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு நீதிபதி கேட்டார்.

அடுத்து சசிகலா பெயரை அழைத்ததும், அவர் நீதிபதி முன் வந்து நின்றார். ‘‘உங்கள் வழக்கறிஞர் எங்கே?’’ என்று கேட்டார். நீதிபதி சொன்னதை சசிகலாவிடம் மொழிபெயர்ப்பாளர் தமிழில் சொன்னார். அதற்கு பதிலளித்த சசிகலா, ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் கம்பெனிகளின் சொத்துகள் எங்கள் மீது சேர்க்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு அதிக சொத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. அந்த வழக்கில் இருந்து கம்பெனிகளை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தோம். அது தொடர்பான விசாரணைக்காக என்னுடைய வழக்கறிஞர் மணிசங்கர் சுப்ரீம் கோர்ட் போய்விட்டார்’’ என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிக்கும், சசிகலாவுக்கும் இடையே நடந்த உரையாடல் அப்படியே...

நீதிபதி: கோர்ட் நடவடிக்கையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

சசிகலா: கோர்ட்டை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் போனதால்தான் வாதாட முடியவில்லை.

நீதிபதி குறுக்கிட்டு... ‘‘சத்தமாகப் பேசுங்கள். எல்லோருக்கும் கேட்கட்டும்.’’

சசிகலா (சத்தமாக): ‘‘சரி.’’

நீதிபதி: ‘‘அப்போ நீங்கள் வாதாடுகிறீர்களா?’’

சசிகலா: ‘‘இல்லை.’’

நீதிபதி: ‘‘பிறகு எப்போது வாதாடப் போகிறீர்கள்?’’

சசிகலா: ‘‘ஜூன் 2-ம் தேதி.’’

நீதிபதி: ‘‘அப்போது நீங்கள் வாதாடுவீர்களா? இல்லை, உங்க வழக்கறிஞர் வாதாடுவாரா?’’

சசிகலா: ‘‘என் வழக்கறிஞர்தான் வாதாடுவார்.’’

நீதிபதி: ‘‘ஏன் நாளை உங்கள் வழக்கறிஞர் இங்கே வந்து வாதாட மாட்டாரா?’’

சசிகலா: ‘‘இன்னும் அவர் தயாராகவில்லை.’’ அடுத்து இளவரசி அழைக்கப்பட்டார்.

நீதிபதி: ‘‘நீங்கள் எப்போது வாதாடப் போகிறீர்கள்?’’

இளவரசி: ‘‘ஜூன் 2-ம் தேதி.’’

நீதிபதி: ‘‘உங்கள் வழக்கறிஞர் அசோகன் இருக்கிறாரே... அவர் வாதாட மாட்டாரா?’’ என்றவர், ‘‘கண்டிப்பாக இன்று ஏ4 (இளவரசி) இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும். ஏ2 நாளை இறுதி வாதத்தை தொடங்க வேண்டும். கோர்ட்டுக்குள் அமர்ந்து நீங்களே யோசியுங்கள். மாலை தீர்ப்பு சொல்கிறேன்’’ என்று முடித்தார்.

இந்த நேரத்தில்தான் சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சொத்துக்குவிப்பு வழக்கை ஜூன் 6-ம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் பெங்களூரு நீதிமன்றத்துக்கு அந்த உத்தரவு நகல் வந்து சேராததால், ‘நாளைக்கு ஒத்திவைக்கிறேன்!’ என்று எழுந்து கொண்டார்.

எப்படியோ, நீதிபதி குன்ஹா பதவியேற்ற பிறகு முதன் முறையாக சசிகலா, இளவரசி ஆகியோரை கோர்ட் படியேற வைத்திருக்கிறார்.

தமிழக ஊழல் தடுப்புத்துறை எங்களுக்கு ஊதியமே கொடுக்கவில்லை!

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தனது இறுதி வாதங்களை முடித்துவிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங். இனி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதி வாதங்களை வைக்க வேண்டும். அதற்குள் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பவானி சிங் தன்னுடைய இறுதி வாதங்களை வைத்து வரும்போது அவரைச் சந்தித்து நாம் பேட்டி கேட்டோம்.

‘‘தற்போது நீதிமன்றத்தில் என்னுடைய இறுதி வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பேட்டி கொடுப்பது நன்றாக இருக்காது. என்னுடைய இறுதி வாதம் முடித்த பிறகு வாருங்கள் நிச்சயம் பேசலாம்’’ என்று சொல்லியிருந்தார் பவானி சிங். அவரது இறுதி வாதம் முடிந்ததும், சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள பவானி சிங்கின் அறைக்குச் சென்றோம். தன்னுடைய ஜூனியர் வழக்கறிஞர் மராடியை அழைத்து அருகில் வைத்துக் கொண்டு நமக்கு பேட்டி கொடுத்தார் பவானி சிங். அதில் இருந்து...

‘‘18 வருடங்களாக நடக்கும் வழக்கு இது. இந்த வழக்கில் அரசு தரப்பின் இறுதி வாதங்களை நீங்கள்தான் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பல வழக்குகளை நடத்தியிருக்கிறேன். எனக்கு எல்லா வழக்குகளும் ஒன்றுதான். வழக்குகளைப் பிரித்துப் பார்க்கும் பழக்கம் கிடையாது. எனவே, இந்த வழக்கில் இறுதி வாதத்தை முடித்துவிட்டோம் என்பதெல்லாம் எனக்குப் பெரிதாகவும் தெரியவில்லை. அதை நினைத்துப் பெருமைப்படவும் அவசியம் இல்லை!’’

‘‘இந்த வழக்கைப் பதிவுசெய்த, தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?’’

‘‘அவர்கள் எங்களுக்கு எங்கே ஒத்துழைப்பு கொடுத்தார்கள்? ஒரு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. ஒன்றரை ஆண்டு காலமாக கர்நாடக உயர் நீதிமன்றம், சிட்டி சிவில் கோர்ட் என மாறி மாறி வாதாடி இவ்வழக்கை முடிக்கும் நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக சம்பளம்கூட கொடுக்கவில்லை, என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களது ஒத்துழைப்பு இப்படித்தான் இருந்தது... இருக்கிறது.’’

‘‘இந்த வழக்குக்கு வலிமையான ஆதாரங்கள் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?’’

‘‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் இருக்கும் வங்கி கணக்குகள், பத்திரப் பதிவு ஆவணங்கள், 16 கம்பெனிகள் ரெஜிஸ்டர் செய்தது, 1991-க்கு முன்பு இருந்த சொத்து விவரம், 1996-க்குப் பிறகு காட்டப்பட்ட சொத்து விவரம்... இவை அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இவை வலிமையான ஆதாரங்கள்தான்!’’

‘‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த அளவு இதில் தொடர்பு இருக்கிறது?’’

‘‘அது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறேன். இப்போது அதுபற்றி கருத்துச் சொல்ல முடியாது.’’

‘‘ஜெயலலிதா தரப்பு இவ்வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்துடன் தடை வாங்கியிருக்கிறதே?’’

‘‘இதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை.’’

‘‘நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது?’’

‘‘அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், அவர் இந்த வழக்கை விரைவாக முடிக்கும் நோக்கத்தில் அதிக வேகமாகக் கொண்டு செல்லுகிறார். அந்த விஷயத்தில் சூப்பர்!’’

‘‘தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, ‘நீங்கள் ஜெயலலிதாவுக்கு சாதகமாகச் செயல்படுகிறீர்கள்’ என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறாரே?

‘‘நான் வழக்கறிஞர். கருணாநிதி அரசியல்வாதி. இந்த வழக்கை அவர் அரசியலாக்கி, அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு பேசுகிறார். நான் பணம் வாங்கினேன் என்பது உண்மைக்குப் புறம்பான தகவல். அப்படி பணம் வாங்கியிருந்தால் இந்த வழக்கை இவ்வளவு வலுவாக இறுதி வாதம் வரை கொண்டு வந்திருக்க முடியுமா? அதனால் யூகத்தின் அடிப்படையில் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் இந்த வழக்கை நேர்மையாக கையாண்டு இருக்கிறேன்.’’

‘‘இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எப்படி வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘வழக்கு நிலுவையில் இருப்பதால் தீர்ப்பைப் பற்றி எதுவும் பேசக் கூடாது. நீதி வெல்லும்!’’

குன்ஹாவின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.