சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சக்கட்ட காட்சிகள் நடந்த இடம் பரப்பன அக்ரஹாரா. நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பு, ஜெயலலிதா சிறை செல்லல், தொண்டர்களின் கண்ணீர் காட்சிகள், ஜாமீன் கிடைத்து ஜெ. போயஸ் திரும்புதல் என அரங்கேறிய க்ளைமாக்ஸ் நவரச காட்சிகள்...

தீர்ப்பு நாள் பரபரப்புகள்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியதும் செப்டம்பர் 26, 27 தினங்களில் பெங்களூரில் நிலவிய அசாதாரண சூழல் லைவ் ரிலேவாக இங்கே...

இந்திய மீடியாக்கள் குவிந்தன...

தீர்ப்பு நாளான 27-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பே, இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து ஆங்கில, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்... என பல மொழி மீடியாக்களும் பெங்களூரில் குவிந்துவிட்டன. இதுவரையில் ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. தீர்ப்பு வழங்குவது மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தை ஒட்டியுள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றம் நடைபெறும் பரப்பன அக்ரஹாரா வளாகத்துக்குச் செல்வதற்கு 26-ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரு சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் பாஸ் கொடுக்கப்படுவதாக அறிவிப்பு வரவே, பத்திரிகையாளர்கள் குவிந்தனர். நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வி.ஐ.பி பாஸும் அதே இடத்தில் வழங்கப்பட்டதால் பத்திரிகையாளர்களும் அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களும் பெங்களூரு சிட்டி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் பெங்களூரு

26-ம் தேதி இரவே பெங்களூரு சிட்டியில் உள்ள அனைத்து லாட்ஜுகளிலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என ஆக்கிரமித்துவிட்டதால் மக்கள் ரூம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். 26-ம் தேதியே பெங்களூரு தமிழகமாக மாறியது. எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடந்து விடக் கூடாது என்று போலீஸார் பெங்களூரு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கி உடையிலும் மஃப்டியிலும் வேவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாகத் தமிழர்கள். சிறை வளாகத்தைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு போட்டிருந்தனர்.

அல்லல்பட்ட அமைச்சர்கள்

27-ம் தேதி காலை 6 மணியில் இருந்தே பரப்பன அக்ரஹாராவை நோக்கி அனைவரும் படையெடுத்தனர். ஜெயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் பாஸ் இல்லாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஸ் இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் வாகனங்களும் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதித்தார்கள். அவர்களின் உதவியாளர்களை அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர் நடந்தே நீதிமன்ற வளாகத்துக்கு வந்து சேர்ந்தனர். பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கு அமைக்கப்பட்ட மேடையில் அமர்த்தப்பட்டனர்.

‘நான் யாரு தெரியுமா?’

காலை 8.30 மணியில் இருந்து அமைச்சர்கள் ஒவ்வொரு​வராக வர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மேயர்கள், மாவட்டச் செயலாளர்கள் என வந்து சேர்ந்தனர். இதில் எவரும் கர்நாடக காவல் துறையினருக்கு அறிமுகம் இல்லாததால், பெரும் போராட்டத்துக்குப் பின்னரே உள்ளே செல்ல முடிந்தது. தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரைச்செல்வன், சரவணன், நடேசன், பாலாஜி சிங் ஆகியோர் காலை 7.30 மணிக்கே நீதிமன்றத்துக்குள் சென்றுவிட்டனர். ஜெயலலிதாவுக்கான நுழைவாயிலில் வந்த நால்வர் அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வத்திடம் அங்கிருந்த கர்நாடக போலீஸார், ‘‘நீவு யாரு? யாரு ஒலகே ஓக பாருது...’’ (நீங்கள் யார்... நீங்கள் யாராக இருந்தாலும் உள்ளே போகக்கூடாது) என்று சொல்லி தடுத்து நிறுத்தினர். ‘‘என் பேரு பன்னீர்செல்வம். நான் தமிழ்நாடு மினிஸ்டர்’’ என்று சொன்னார். அதன் பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட, அங்கிருந்து நடந்தே நீதிமன்றத்துக்குச் சென்றனர்.

மகிழ்ச்சியாகப் புறப்பட்ட ஜெ.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் சென்னை விமான நிலையத்தில் 8.57-க்கு தனி விமானத்தில் கிளம்பி, பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் 9.40-க்கு தரையிறங்கினர். கர்நாடக அ.தி.மு.க மாநில செயலாளர் புகழேந்தி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு அங்கிருந்து கான்வாய் மூலம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா ஜங்ஷன் வரை அவரை வரவேற்று 500 ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு வளையத்தில் குன்ஹா... சிரித்த முகத்துடன் ஜெ.!

8 மணிக்கு தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம், 8.10-க்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், மராடி வந்தனர். 9.50-க்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வந்தார். அவருடைய காருக்கு முன்னும் பின்னும் மூன்று காவல் துறை வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தது. 10.10-க்கு ஜெயலலிதா வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில், குமார், மணிசங்கர், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றனர். 10.45-க்கு 23 வாகனங்கள் புடைசூழ தேசியக் கொடி கட்டிய வாகனத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூன்று பேரும் சிரித்த முகத்தோடு வந்து இறங்கினர். இதற்கிடையே பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் கூடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் காலை 11.20-க்கு லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இதில் நத்தம் விஸ்வநாதன் உட்பட பல அமைச்சர்களுக்கும் தடியடி விழுந்தது. இதேபோல் மாலை 4.30 மணிக்கும் லத்தி சார்ஜ் செய்து கும்பலைக் கலைக்க வேண்டியிருந்தது.

தாமதமாகவே வந்த தகவல்கள்!

பத்திரிகையாளர்கள் 500 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டதாலும், சிறை வளாகம் முழுவதும் ஜாமர் அமைக்கப்பட்டு செல்போன்களை இயங்காமல் செய்ததாலும் நீதிமன்றத் தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அங்கிருந்து வெளியே வந்த பிறகுதான் தகவல்கள் பரிமாறப்பட்டன. 11 மணிக்கு வந்து அமர்ந்ததுமே நீதிபதி குன்ஹா, நான்கு பேரும் குற்றவாளி என்பதை அறிவித்துவிட்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் கலவரம் வெடிக்கும் என்பதால், பத்திரிகையாளர்களுக்கு தகவல் போகும் முன்பு காவல் துறையை உஷார்படுத்த வேண்டும் என்பதால், 11.45 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து அவசரமாகக் கிளம்பிப்போனார் பெங்களூரு சிட்டி கூடுதல் போலீஸ் கமிஷனர். கர்நாடக காவல் துறை தலைவருடன் அவர் அவசர ஆலோசனை நடத்தி, உடனடியாக பெங்களூரு முழுக்கக் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்காகக் குவிக்க ஏற்பாடுகளை செய்தார். தீர்ப்பு விவரம் வெளிவரத் தொடங்கிய நேரத்தில் பெங்களூரு முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

குன்ஹா தீர்ப்பு முழு விவரம்

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப்பும் 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பக்கங்களில் உள்ள விவரங்​கள்தான் இவை...

‘‘ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, ‘இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது. வழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன்பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.

இரண்டாவது குற்றவாளி (சசிகலா), ‘இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), ‘இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது, பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

நான்காவது குற்றவாளி (இளவரசி), ‘இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்றம், ‘நிரஞ்சன் ஹேமச்சல் vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், ‘ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம். இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.

ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.

தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு ‘பி.சுப்பையா vs கர்நாடக அரசு’க்கும் வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், ‘உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.’’

பரப்பன அக்ரஹாரா காட்சிகள்!

ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைசாலையை ஒட்டிய பகுதிகள், அவர் பெயிலில் வெளியில் வரும் காலகட்டம் வரை பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. அந்தக் காட்சிகளில் இருந்து...

திரும்பிப்போன தமிழக முதல்வர்!

பன்னீர்செல்வம் முதல்வர் என்று தீர்மானிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை இரவே ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற்று, பதவி ஏற்பதாகச் சொன்னதால் அனைத்து மீடியாக்களின் பார்வையும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையை நோக்கியே இருந்தது. ஆனால் அன்று இரவு அவர் வரவில்லை. அடுத்த நாள் திங்கள்கிழமை காலை ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற இருப்பதாகச் சொல்லப்பட்டதால் காலை 6 மணிக்கே பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால், வரவில்லை. பதவி ஏற்ற திங்கள்கிழமை இரவு சிறைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சிறைக்கு வராமல் மௌடன் ரோட்டில் உள்ள லீலா பேலஸ் அருகே உள்ள மைத்ரி ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். அடுத்த நாள் வருவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடைசிவரையில் சிறைக்கு வராமலேயே சென்னைக்குத் திரும்பிவிட்டார் பன்னீர்செல்வம்.

''இந்திய அரசியல் அமைப்பில் பற்றுகொண்டு அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்கிறார். அவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அரசியல் அமைப்புச் சட்டத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் ஒருவரை முதல்வர் பார்ப்பது பெரும் சட்ட பிரச்னை ஆகிவிடும்'' என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மூத்த சட்ட ஆலோசகர்கள் அறிவுறுத்தியதால் சிறைக்குச் செல்லாமல் திரும்பி சென்னைக்கு சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

வீரபாண்டியார் வழியில் அ.தி.மு.க அமைச்சர்கள்!

கடந்த தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் ஆறு பேர் கொலை வழக்கில் குற்ற விசாரணைக் கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது வீரபாண்டி ஆறுமுகம் சைரன் வைத்த அரசு வாகனத்தில் தேசியக் கொடியோடு சிறைக்குச் சென்று பாரப்பட்டி சுரேஷைப் பார்த்துவிட்டு வந்தது பெரும் சட்ட விதி மீறல் என்று ஜெயலலிதாவே அறிக்கைவிட்டார். ஆனால் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கப்பட்டு தண்டனைக் கைதியாக உள்ளே இருக்கும்போது வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் சைரன் வைத்த அரசு வாகனத்தில் தேசிய கொடியோடு சிறைச் சாலை வளாகத்துக்குள் சென்றார்கள். எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றார்.

காரப் பொரியும் கடலை உருண்டையும்!

முதல் மூன்று நாட்கள் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள் மற்றும் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க-வைச் சேர்ந்த அனைவரும் வந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். இதனால் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பாகவே இருந்தது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இப்போது காலை 10 மணிக்கு மேல் ஒரு சில அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மட்டும் வருகிறார்கள். சிறைச்சாலை வளாகத்துக்குள் காரப் பொரியையும் கடலை உருண்டையும் சாப்பிட்டுவிட்டு, பொழுது சாய்ந்ததும் புறப்பட்டுவிடுகின்றனர். அதனால், பரப்பன அக்ரஹாரா ரோடு வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

சைரன் வைத்த காரில் தம்பிதுரை!

அமைச்சர்கள் பெரும்பாலும் பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் தினமும் காலை 10 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வருகின்றனர். அமைச்சர்களுக்காக அவர்களது உதவியாளர்கள் பிளாஸ்டிக் சேர்களை எடுத்து வருகிறார்கள். அந்த சேர்களை மரத்தடியில் போட்டு உட்கார்ந்து கொள்பவர்கள், மதியம் வரை பேசியபடியே இருக்கிறார்கள். அங்கேயே மதிய உணவு வருகிறது. மரத்தடியில் அமர்ந்தபடியே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். சிலர் அங்கிருந்து சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு கிளம்பிவிடுகிறார்கள். மாலை 6 மணி ஆனதும், கொசு அதிகம் இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.

மண்டை உடைக்கும் போராட்டம்!

திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க-வினர் சிலர், 'நாங்க அம்மாவை பார்த்தே ஆகணும்!’ என்று செக்போஸ்டில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'இப்போ நீங்க போகலைன்னா நாங்க அடிச்சு விரட்ட வேண்டியிருக்கும்’ என்று போலீஸார் எச்சரித்தனர். கடுப்பாகிப்போன அ.தி.மு.க-காரர் ஒருவர், ''வீரப்பன் இல்லாமல் உங்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு. வீரப்பன் இருந்திருந்தா இந்த நேரம் நீங்க அம்மாவை உள்ளே வெச்சுருக்க முடியுமா... அம்மா மட்டும் வெளியில வரட்டும் அப்புறம் நாங்க யாருன்னு காட்டுறோம்!'' என்று கோபப்பட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ்காரர், ''வீரப்பனை சுட்டுக் கொன்றதே உங்க அம்மாதானே!'' என்றதும், அ.தி.மு.க பார்ட்டி கப்சிப் ஆனார். செங்கம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், இளங்கோ, பிரகாஷ், இம்தியாஸ் ஆகியோர் சிறைக்கு எதிரே உட்கார்ந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். குளித்துவிட்டு வந்து, சிறையை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.

மொட்டை போட்ட அதே குழுவினர் மறுநாள் ஒரு தேங்காய் மூட்டையுடன் சிறை செக்போஸ்ட் அருகே வந்தனர். ''அம்மாவை வணங்கி இங்கே தேங்காய் உடைக்கப் போகிறோம்!'' என்று சொல்லிவிட்டு, ஜெயிலை நோக்கி கும்பிட்டுவிட்டு தேங்காய்களை ரோட்டில் உடைக்க ஆரம்பித்தனர். போலீஸார் பதறியபடி ஓடி வந்து தேங்காய்களைப் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். ''தேங்காய் உடைக்கிறதை தடுத்தீங்கன்னா உங்க மண்டையை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்!'' என்று அவர்கள் ஆக்ரோஷமாகக் கத்தினார்கள். அதனால் போலீஸார் அமைதியாக... 101 தேங்காய்களையும் ரோட்டில் உடைத்துவிட்டு மீண்டும் அங்கேயே விழுந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.

கொடுத்தாலும் விடமாட்டோம்!

சிறைக்குச் செல்லும் செக்போஸ்ட்டில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளையும், வாட்டர் பாட்டில், டீ, காபி, மற்றும் மதிய உணவு வாங்கிக் கொடுப்பது அங்கே வரும் அ.தி.மு.க-வினர்தான். போலீஸ்காரர்களை எப்படியாவது நட்பாக்கி ஜெயில் வளாகத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் மறுக்காமல் வாங்கிக்கொள்கிறார்கள் போலீஸார். ஆனால், யாரையும் உள்ளே மட்டும் அனுமதிப்பது இல்லை. பரப்பன அக்ரஹாராவுக்கு வரும் தொண்டர்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகிறார்கள். பலர் பெங்களூருக்கு வந்துதான் கருப்புச் சட்டை வாங்குகிறார்கள். இதனால், அங்கே கறுப்புச் சட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஜாமீன் காட்சிகள்!

சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். அதனை அடுத்து ஜெயலலிதாவின் ஜாமீன் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு விசாரணைக்குப் போனது. எப்படியாவது ஜெயலலிதாவை ஜாமீனில் எடுத்துவிட வேண்டும் என நவநீதகிருஷ்ணன் எம்.பி உள்ளிட்ட அ.தி.மு.க வழக்கறிஞர்கள் டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் கேம்ப் அடித்தனர். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆஜராவதற்கு ஃபாலி எஸ்.நாரிமன், கே.டி.எஸ்.துள்சி, சுஷில்குமார் போன்ற மூத்த வழக்கறிஞர்களின் பெயர்களைப் பரிசீலித்தனர். நாரிமன் சம்மதித்துவிட்டால், பெயில் கிடைத்துவிடும் என்று நம்பினர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.

அச்சமடைந்த அ.தி.மு.க-வினர்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் கடந்த 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சசிகலாவுக்கு ஆதரவாக கிரிமினல் வழக்குகளில் புகழ் பெற்ற கே.டி.எஸ்.துள்சி ஆஜரானார். இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஆதரவாக வழக்கறிஞர் சுஷில்குமார் ஆஜரானார். மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட 13-ம் தேதியே வாதத்தை அனுமதிக்காமல், தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட நீதிபதி அமர்வு விசாரணைக்கு 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் குறிப்பிட்டார். அதனால், அ.தி.மு.க தரப்பு அச்சம் அடைந்தது. அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டனர்.

நாரிமனுக்கு எதிர்ப்பு

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாரிமன் ஆஜரானது, டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியது. நாரிமன் இந்த வழக்கில் ஆஜராவதற்கு எதிராக உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி புகார் கொடுத்தார். நாரிமனின் மகனான ரோஹின்டன் நாரிமன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், இவர்கள் அந்த வழக்கில் தங்கள் செல்வாக்கை செலுத்துவார்கள் என்று அதில் தெரிவித்திருந்தார். அது உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

வழக்கத்துக்கு மாறான ஜாமீன்

தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக ஜாமீன் மனு மீதான விசாரணை பகல் 12 மணிக்கு முன்பாகவே தொடங்கியது. சுமார் 45 மணி நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. வழக்கறிஞர் நாரிமனுக்கும் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கும்தான் வாதம். இடையே 10 நிமிடங்கள் சுப்பிரமணியன் சுவாமிக்குக் கிடைத்தன. அந்த அமர்வில் இருந்த மற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருந்தனர். இறுதியில், ஜாமீன் வழங்குவதாக தலைமை நீதிபதி கூறினார். வழக்கமான முறைகளுக்கு மாறாக, ஜெ. தரப்பினருக்கு எப்படி ஜாமீன் வழக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன.

நேரில் வர வேண்டாம்!

உச்ச நீதிமன்றத் நீதிபதிகளின் உத்தரவை, மேலோட்டமாகப் பார்த்தால், ''டிசம்பர் 18-ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைக்கிறோம். வீட்டுக் காவல் எல்லாம் எதுவும் கிடையாது. ஜெயலலிதாவை ஜாமீனிலேயே விடுதலை செய்கிறோம். ஜெயலலிதா தரப்பு கேட்டது 6 வாரகால அவகாசம்தான். ஆனால், நாங்கள் 8 வாரம் அவகாசம் கொடுக்கிறோம். மேல் முறையீட்டில் ஜெயலலிதா நேரில் ஆஜராகத் தேவை இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள் வந்தாலேபோதும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு செக்!

உச்ச நீதிமன்ற உத்தரவில், ''ஜாமீன், விடுதலை மற்றும் தண்டனைக் குறைப்பு ஆகியவற்றைக் கேட்பதற்கு ஜெயலலிதாவுக்கு உரிமை உண்டு. ஆனால், பிரபல வழக்கறிஞர்களை எல்லாம் வைத்து வாதாடி, இந்த வழக்கை ஜெயலலிதா 18 ஆண்டுகள் இழுத்தடித்தார். இப்போது இதில், நாங்கள் ஜாமீன் வழங்கினால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி மேல்முறையீட்டு வழக்கை 20 ஆண்டுகளுக்கு அவர் இழுத்தடிப்பார் என்று ஏன் நினைக்கக் கூடாது? என்ற கேள்வியை எழுப்பினர்.

''தற்போது ஜாமீன் வழங்குகிறோம். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை டிசம்பர் 18-ம் தேதி வரை நிறுத்தி வைக்கிறோம். ஆனால், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான வேண்டுகோள் மனுவை நீங்கள் உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 35 ஆயிரம் பக்கங்கள் உள்ள வழக்கின் ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும், நாங்கள் ஜாமீனை உடனடியாக ரத்து செய்வோம். மேல் முறையீட்டு வழக்கை மூன்றே மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஓர் ஒத்திவைப்புக்குக்கூட ஜெயலலிதா தரப்பு முயற்சிக்கக் கூடாது. தங்களது உத்தரவில், மற்ற மனுதாரர்களுக்கு (தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி) ஜெயலலிதா தரப்பில் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது ஏற்பட்டு, அந்த மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகினால், உடனடியாக ஜாமீனை ரத்து செய்துவிடுவோம்'' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சென்னைக்குப் புறப்பட்டார் ஜெயலலிதா!

உச்ச நீதிமன்றம் 17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது என்ற செய்தி வெளியே கசிந்ததும் உற்சாகக் கொண்டாட்டம் ஆரம்பித்தது. தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்ற பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ரிலீஸ் ஆர்டர் வாங்குவதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால், அன்று மாலை வரை பெயில் உத்தரவு வரவில்லை. 18-ம் தேதி காலை நீதிபதி குன்ஹாவின் வருகையை எதிர்பார்த்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், நவநீதகிருஷ்ணன், செந்தில், அன்புக்கரசு, செல்வக்குமார், கருப்பையா ஆகியோர் காத்திருந்தார்கள். நீதிபதி குன்ஹாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் சிறப்பு நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் பவானி சிங் தன் சேம்பரில் அமர்ந்திருந்தார். சரியாக 11.05-க்கு சிரித்த முகத்தோடு அனைவருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்தார் நீதிபதி குன்ஹா. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், உச்ச நீதிமன்ற பெயில் ஆர்டரை கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த குன்ஹா, ''அனுமதிக்கிறேன்'' என்றார். அதன் பிறகு ஷ்யூரிட்டி ஆவணங்களை சரிபார்த்தார். ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியின் மனைவி குணஜோதியும், டாக்டர் வெங்கடேஷின் சகலை பரத்தும் ஷ்யூரிட்டி கொடுத்திருந்தார்கள்.

விசாரணைக்குப் பிறகு ரிலீஸ் ஆர்டர் டைப் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நீதிபதி குன்ஹா அதில் கையெழுத்திட்டார். கோர்ட் தபால் அலுவலகத்தில் அந்த பெயில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. தபால் ஊழியர் வெங்கடேஷை, அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தங்கள் காரில் வரச் சொன்னார்கள். ஆனால் அவரோ, ''அரசு விதிப்படி நான் என்னோட வாகனத்தில்தான் போக வேண்டும். இல்லைன்னா அரசு வாகனத்தில் போகலாம்! உங்களோடு வர முடியாது'' என்று மறுத்துவிட்டார். பிறகு, போலீஸ் வாகனத்தில் பெயில் ஆர்டர் பரப்பன அக்ரஹாராவுக்குப் போக... அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். சரியாக 3 மணிக்கு பெயில் ஆர்டர் ஜெயிலில் கொடுக்கப்பட்டது.

'திருப்பிக் கொடுக்கப்பட்ட வாட்ச்!’

பெயில் ஆர்டர் சிறைக்கு வருவதற்கு முன்னதாகவே ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் புறப்படத் தயாராக இருந்தனர். 'ஆர்டர் சீக்கிரமே வந்தாலும் நாம் மூன்று மணிக்குப் பிறகு கிளம்பலாம்!’ என்று சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. மதியம் ஒரு மணி அளவில் ஜெயலலிதா உட்பட மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிறைக்குள் அடைக்கப்பட்டபோது, ஜெயலலிதா கையில் கட்டியிருந்த வாட்ச் மற்றும் வைர கம்மல்களை சிறை நிர்வாகம் வாங்கிக் கொண்டது. அந்த வாட்ச், வைர கம்மல்களை ஜெயலலிதாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு, அதற்காக கையெழுத்தும் பெறப்பட்டது. அதேபோல சசிகலா, இளவரசி ஆகியோரின் நகைகளை அவர்களிடம் திருப்பிக் கொடுத்தனர் சிறை அதிகாரிகள். சரியாக 3.11-க்கு சிறையில் இருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா. வந்ததும் ஒருமுறை திரும்பி ஜெயிலைப் பார்த்தார். அதன் பிறகே காரை நோக்கி நடந்தார்.

காலில் விழுந்த முதல்வர்!

சிறைக் கதவுகளுக்கு வெளியே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் காத்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் அமைச்சர்களைக்கூட அருகே அனுமதிக்காமல் கயிறு கட்டப்பட்டு, அதற்குப் பின்பாகவே நிறுத்தப்பட்டனர். முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும் கயிறுக்கு மறுபுறம் இருந்தார். ஜெயலலிதா வெளியே வந்ததும் காரில் ஏறுவதற்கு முன்பாக, அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். அவரைப் பார்த்து எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இறுகிய முகத்துடன் காரில் ஏறிக்கொண்டார் ஜெயலலிதா. அதே காரின் பின் சீட்டில் சசிகலாவும், இளவரசியும் ஏறினர். காரின் நான்கு டயர்களுக்கும் எலுமிச்சைப் பழங்கள் வைக்கப்பட்டன. பூசணிக்காயில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுக்கப்பட்டு காருக்கு முன்பாக உடைக்கப்பட்டது. அதன் பிறகே ஜெயலலிதா கார் அங்கிருந்து கிளம்பியது. ஜெயில் வாசலில் இருந்து செக்போஸ்ட் வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள், எம்.பி-க்கள், முக்கியப் பிரமுகர்கள் என வரிசைகட்டி நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்தபோதும் ஜெயலலிதா அமைதியாகவே இருந்தார்.

தலைக்குப்புற விழுந்த மேயர்!

ஜெயலலிதாவைப் பார்த்ததும் அனைவரும், 'அம்மா வாழ்க! தங்கத் தாரகையே, புரட்சித்தலைவி வாழ்க!’ என கோஷங்கள் எழுப்பி உணர்ச்சிவசப்பட்டதும், கர்நாடக போலீஸார் மொழி புரியாமல் என்னவோ, ஏதோவென பதறிவிட்டனர். பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றை வேகமாக போலீஸார் பிடித்து இழுக்க... அந்தக் கயிறு மதுரை மேயர் ராஜன் செல்லப்பா காலில் மாட்டி, அவர் தலைக்குப்புற விழுந்தார். தலையில் அடிபட்டு எழு முடியாமல் கதறி அழுதார். அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஜெயலலிதாவின் கார் செக்போஸ்ட்டை தாண்டிய பிறகுதான் மேயரை, மதுரை மாநகரச் செயலாளர் முத்துராமலிங்கம் தூக்கிவிட்டார்.

பரப்பன அக்ரஹாராவில் இருந்து கிளம்பிய ஜெயலலிதாவின் கார், சரியாக 3.50 மணிக்கு ஹெச்.ஏ.எல் ஏர்போர்ட்டை வந்தடைந்தது. வழி நெடுகக் கூட்டத்தைப் பார்த்த பிறகே ஜெயலலிதா முகத்தில் சின்ன உற்சாகம் தெரிந்தது. ஏர்போர்ட்டில் காத்திருந்து கையசைத்தவர்களைப் பார்த்துச் சிரித்தார். வணக்கமும் வைத்தார். ஏர்போர்ட்டில் ஜெயலலிதாவுக்காக காபி தயாராக வைத்திருந்தார் இளவரசியின் மகன் விவேக். அங்கே சற்று இளைப்பாறி காபி சாப்பிட்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட்டார்.