ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டார்கள். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.

அதையடுத்து ஜெ தரப்பு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கியதோடு, ‘டிசம்பர் 18-ம் தேதிக்குள் மேல்முறையீட்டு ஆவணங்கள் அனைத்தையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்’ உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கியது.

அதனால் ஜெ தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2014 டிசம்பர் 17-ம் தேதியே அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தது. அதையடுத்து உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் நான்கு மாதத்துக்கு ஜாமீன் அதிகப்படுத்தியது. உயர்நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் அமைத்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றது. இதையடுத்து யார் இந்த வழக்கில் நீதிபதியாக வருவார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்...

புத்தாண்டு தினத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தனி பெஞ்ச் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிபதியாக சி.ஆர்.குமாரசாமியை அறிவித்தார். அந்த மேல்முறையீட்டு மனு விசாரணை காட்சிகளில் சில சுவாரஸ்யமான பக்கங்கள் இங்கே...

இங்கேயும் வாய்தாவில்தான் ஆரம்பித்தார்கள்!

சிறப்பு நீதிமன்றம் ஜெ தரப்பு மீது முக்கியமாக வைத்த குற்றச்சாட்டு... ‘நீதிமன்றத்தை நடத்தவிடாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார்கள்’ என்பதுதான். மேல்முறையீட்டு விசாரணையிலும் ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், மணிசங்கரின் முதல் வார்த்தையே வாய்தா வேண்டும் என்பதுதான்.

ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் குமார்: 12-ம் தேதி வரை எங்களுக்கு வாய்தா வேண்டும்.

நீதிபதி குமாரசாமி: எதற்கு வாய்தா?

குமார்: டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதிட வர இருப்பதால் 12-ம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும்.

நீதிபதி: இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. அதனால் 1 மணி நேரம்கூட தர முடியாது. நீங்களே மூத்த வழக்கறிஞர்தானே? நீங்களே வாதிடலாம்.

குமார்: மூன்று மாதங்களுக்குள் முடித்துவிடலாம்.

நீதிபதி: வாயால் சொல்வதற்கு நன்றாக இருக்கும், மூன்று மாதங்களில் முடிப்பது கஷ்டம். அதனால் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.

இதை கேட்டு குமார் தயங்க... நீதிபதி குமாரசாமி, ‘‘சரி... அவர்கள் வருவதற்குள் வழக்கு பற்றிய வரலாற்றையும், எஃப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிகை, சொத்து விவர அட்டவணைகளை வாசியுங்கள்’’ என்றார். அதையடுத்து குமார் ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் வாசித்தார். இடையிடையே சந்தேகத்தைக் கேட்டு அறிந்துகொண்டார் நீதிபதி. மாலை நிறைவு செய்யும்போது குமார், ‘‘2 நாட்களாவது வாய்தா கொடுங்கள்’’ என்றார்.

நீதிபதி: இவ்வழக்கு நாள்தோறும் நடைபெறும். நீங்களே நாளைக்கு வரவில்லை என்றால், மற்றவர்கள் வாதிடுவார்கள். எக்காரணம் கொண்டும் வழக்கை தாமதிக்க முடியாது’’ என்றார்.

அறுபதுகளில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு?

குமார்: என் மனுதாரர் (ஜெயலலிதா) 16 வயதில் இருந்தே 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அறுபது, அறுபத்தைந்துகளில் முன்னணி நடிகையாக இருந்து அதிகமான வருமானங்கள் சம்பாதித்தார். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நீதிபதி: (பவானிசிங்கிடம்) 91-க்கு முன்பு குற்றவாளிகளின் வருமானம் எவ்வளவு?

பவானிசிங்: தெரியவில்லை.

நீதிபதி: (சிரித்துக்கொண்டே) சீனியரான பவானிசிங்குக்கு நிச்சயம் இது தெரியும் அறுபதுகளில் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு? பவானிசிங்: (சிரித்துக்கொண்டே) தெரியவில்லை.

தொடர்ந்து பவானிசிங்கிடம் நீதிபதி குமாரசாமி சராமரியாக கேள்விகளைக் கேட்டார். அதற்கு பவானிசிங் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

நீதிபதி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு சதவிகிதம் எவ்வளவு?

பவானிசிங்: தெரியவில்லை. (மராடியிடம் கேட்டு 714% என்றார்)

நீதிபதி: 714% எப்படி வந்தது?

பவானிசிங்: தெரியவில்லை. (அன்பழகன் வழக்கறிஞர் சரவணன் பதிலளித்தார். வருமானத்திற்கு அதிகமான சொத்து வகுத்தல் வருமானம் பெருக்கல் 100 = 714% வரும். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் 540% கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.)

நீதிபதி: எத்தனை எதிர் தரப்பு சாட்சிகளை விசாரித்தீர்கள்?

பவானிசிங்: (தயங்குகிறார். மராடியைக் கேட்டு...) 99 பேர்

நீதிபதி: அவர்களின் சாட்சியங்களை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

பவானிசிங்: (மௌனம்)

குமார்: சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறு வரியில் சொல்லி இருக்கிறார். அந்த சாட்சியங்கள் குற்றவாளிகளுக்கு வேண்டப்பட்டவர்களாம். ஆனால், எப்படி வேண்டப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை. இந்த சாட்சியங்கள் அனைத்தையும் வருமானவரித் துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை படித்துவிட்டீர்களா?

பவானிசிங்: படித்துவிட்டேன்.

நிதிபதி: பிறகு ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.

பவானிசிங்: (மௌனம்)

ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இவ்வழக்கின் ஆரம்ப காலகட்ட விவரங்களை நீதிபதி குமாரசாமிக்கு விளக்கி வாதிட்டார்.

குமார்: 1996-ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி சென்னை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இந்தப் புகார் மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, இந்திய தண்டனை சட்டம் 202-ன் படி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஏ.டி.ஜி.பி&யாக இருந்த லத்திகாசரணை விசாரிக்க ஆணையிட்டார். அதன்படி லத்திகாசரண் 300 பேரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அன்றைய ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஐ.ஜி-யான வீ.சி.பெருமாளை நியமித்து என் மனுதாரரை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாட்சியங்களிடம் விசாரணை செய்யாமலேயே பெருமாளே புகாதாரராக இருந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். சென்னை செஷன்ஸ் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டதே தவறு.

நீதிபதி: இதை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. உங்கள் மனுதாரரிடம் பணம் இல்லையா? (இதனை சிரித்துக்கொண்டே கேட்டார்)

குமார்: (மௌனம்)

நீதிபதி: தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் புலன்விசாரணை செய்ய அனுமதி அளித்தை எதிர்த்து உங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணை நடத்தலாம் என்று கூறி, உங்கள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பின் நகலை நான் காட்டவா? ஏன் இப்படி உண்மையை மறைத்து சொல்கிறீர்கள். காலையில் இருந்து மாலை வரை நீதிமன்றத்தின் நேரத்தையே வீணாக்கிவிட்டீர்கள்.

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்?

6-வது நாளான ஜனவரி 12-ம் தேதி... நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் குமார் எழுந்து, ‘இவர்தான் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ். இவர் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பசந்த். ஏ1 ஜெயலலிதாவுக்காக நாகேஸ்வரராவும், ஏ2 சசிகலாவுக்காக பசந்த்தும் வாதிடுவார்கள்’ என்று அறிமுகம் செய்துவைத்தார்.

டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதத்தில் இருந்து... ‘‘வழக்கு காலகட்டத்தில் ஜெயலலிதா எந்தவிதமான சொத்துகளையும் வாங்கவில்லை. வழக்கு காலகட்டத்துக்கு முன்பே பல சொத்துகள் வாங்கப்பட்டது. அதற்கு ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறையில் கணக்குகள் காண்பித்து வரி செலுத்தியும் இருக்கிறார். வருமான வரித்துறையும் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளுக்கு வருமான வரித்துறையில் வரிகளைச் செலுத்தி இருக்கிறார்கள். இந்தச் சொத்துகள் அனைத்தும் தங்களுடையது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதை வருமான வரித்துறையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இப்படியிருக்கும்போது இந்தச் சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டுவது தவறு. என் மனுதாரரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய ஆளுங்கட்சியினரை திருப்திபடுத்தும் விதமாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் செயல்பட்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சசிகலா வசித்து வருகிறார் என்ற ஒரே காரணத்துக்காக சசிகலா பெயரிலுள்ள சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தம் என்று சொல்வது அநியாயம்.

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருப்பதற்கு என்ன காரணம் என்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கூறியிருக்கிறார்கள். என் மனுதாரருக்கு சொந்தமான வீட்டில் யார் இருக்கலாம் என்று முடிவு செய்யும் உரிமை அவருக்குதான் உண்டு. இதில் யாரும் தலையிட முடியாது’’ என்று வாதிட்டார்.

போயஸ்கார்டன், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம்...

நாகேஸ்வரராவ்: ‘‘என் மனுதாரருக்கு சொந்தமான மூன்று சொத்துகள் ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், போயஸ்கார்டன் மற்றும் போயஸ்கார்டன் கூடுதல் கட்டடங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் உத்தரவின் பேரில் மதிப்பீடு செய்த பொதுபணித் துறை பொறியாளர்கள் கட்டடம் புதுப்பிக்கப்பட்டதற்கான மொத்த செலவாக 13.64 கோடி செலவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அதில் சிறிதும் உண்மை கிடையாது. கட்டுமான தொழிலில் அனுபவம் உள்ள பொறியாளர்கள் இந்த கட்டடத்தின் மதிப்பை அளவீடு செய்யவில்லை. அதேபோல கட்டுமான பொருட்களுக்கு வாங்கப்பட்ட எந்த ஒரு ரசீதும் இணைக்கப்படவில்லை.

இந்த மூன்று கட்டடங்களைப் புதுப்பிப்பதற்காக உண்மையில் ஜெயலலிதா செலவு செய்த தொகை 3.52 கோடிதான். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து அதற்கான ரசீதுகளையும் கொடுத்திருக்கிறோம். வருமானவரித் துறை அதிகாரிகள் அதை ஆய்வுசெய்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல கட்டடங்களுக்குப் பயன்படுத்திய டைல்ஸ் ஒரு சதுர அடி 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. அதை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் டைல்ஸ் ஒரு சதுர அடி 20,000 ரூபாய் எனப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு ரசீது கிடையாது. கேட்டால், மும்பையில் பல டைல்ஸ் கடைகளை விசாரித்து போட்டதாக சொல்கிறார்கள். இது ஏற்புடையதல்ல. ஆனால், நாங்கள் டைல்ஸ் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினோம் என்பதை மும்பையைச் சேர்ந்த மாடசாமி என்பவர் சாட்சியம் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், வருமானவரித் துறையும் தணிக்கை செய்து ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆக, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கட்டடங்களின் மதிப்பு 28 கோடி என்று குற்றப்பத்திரிகையில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் கட்டடத்தின் மதிப்பு 6 கோடி. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்கான காரணத்தையும் சொல்லவில்ல. அதனால், கட்டடத்தின் மதிப்பை முழுவதுமாக நீக்கவேண்டும்.’’

கருணாநிதிக்கு 92 வயதாகிறதா?

நாகேஸ்வரராவ் (ஜெயலலிதா வழக்கறிஞர்): 1991-ல் முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 1992-ல் அவருடைய 44-வது பிறந்த நாள் தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு டிடி&யாக 2.15 கோடி பரிசாகக் கொடுத்தார்கள். அதை 1992 - 93 வருமானவரித் துறையில் காட்டி, ‘பரிசு பொருளாக வந்ததால், வரி கட்ட வேண்டியதில்லை’ என்றதற்கு, வருமானவரித் துறை அதை வருமானமாகக் காட்டி வரி போட்டார்கள். அதை எதிர்த்து நாங்கள் வருமானவரித் துறையில் மேல்முறையீடு சென்றோம். அப்போது எங்கள் தரப்பு வழக்கறிஞராக பல்கிவாலா வாதிட்டார். ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அரசியலும் தொழில்தான் என்று கூறி, வருமானவரிச் சட்டம் 28-ன் படி தொழில் நிறுவனத்தைப்போல வரி கட்டியாக வேண்டும் என்றது. அதையடுத்து மீண்டும் வருமானவரித் துறை தீர்ப்பாயத்துக்கு மேல்முறையீடு சென்றபோது என் மனுதாரருக்கு டிடி&யாக அனுப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கீழ் நீதிமன்றத்திலேயே விசாரிக்க சொன்னதையடுத்து, கீழ் நீதிமன்றம் விசாரித்து, சட்டப்படி பரிசு பொருட்கள் வருமானம்தான் என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து, நாங்கள் வருமானத் வரித்துறையில் வரிகள் கட்டினோம்.

நீதிபதி: (குறுக்கீடு) வருமானவரித் துறையின் நோக்கம் ஒருவரின் வருமானத்துக்கு ஏற்ப வரி வசூலிப்பது மட்டும்தான். ஆனால், கிரிமினல் கோர்ட் அந்த வரி செலுத்துவோருக்கு எங்கிருந்து வருமானம் வந்தது, எப்படி வந்தது என்பதையெல்லாம் விசாரிக்கும். அதனால், வருமானவரித் துறையில் வரி கட்டியதாக அடிக்கடி சொல்ல வேண்டாம்.

நீதிபதி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசனைப் பார்த்து) உங்கள் தலைவருக்கும் கிஃப்ட் தருவார்களா?

குமரேசன்: எங்கள் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் தினத்தில் நாங்கள் புத்தகம் கொடுப்போம். பணமெல்லாம் கொடுக்க மாட்டோம். (ஜெ தரப்பு வழக்கறிஞர்கள் கோரஸாக கருணாநிதி தன் தொண்டர்களிடம் உண்டி வைத்து வசூலிக்கிறார் என்றார்கள்.)

நீதிபதி: முதல் முறையாக முதலவர் ஆனதும், அனுபவம் இல்லாமல் கொண்டாடி இருக்கிறார்.

நாகேஸ்வரராவ்: இவர்களும் கிஃப்ட் வாங்குவார்கள்.

குமரேசன்: எங்க தலைவர் கருணாநிதி தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவருக்கு 92 வயதாகிறது. நாங்கள் கிஃப்ட் வாங்க மாட்டோம்.

நீதிபதி: கருணாநிதிக்கு 92 வயதாகிறதா? (கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யமானார்.)

நீதிபதி: முதலில் திமுக-தான் தொடங்கப்பட்டதா?

குமரேசன்: இல்லை. டி.கே-தான்.

நீதிபதி: டி.கே விளக்கம்...

குமரேசன்: திராவிடர் கழகம். பிறகு தி.மு.க உருவாகியது. அதில் இருந்து எம்.ஜி.ஆர் 1972-ல் விலகி அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

திருமண செலவுகளை பெண் வீட்டார்தான் செய்தார்கள்!

நாகேஸ்வரராவ் (ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்): என்னுடைய மனுதாரர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன். அவருக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் வழி பேத்தி சத்யலட்சுமிக்கும் சென்னை எம்.ஆர்.சி கிரவுண்டில் 7.9.1995 அன்று திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகள் கழித்து 17.4.97-ம் தேதி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து திருமணத்துக்கு 6,45,04,222 ரூபாய் செலவு செய்துள்ளதாக செலவுப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்? இந்தத் திருமணத்துக்கு ஜெயலலிதா 29 லட்சமும், சிவாஜியின் மூத்த மகனும், சத்யலட்சுமியின் தாய்மாமனுமான ராம்குமார் 1 கோடி ரூபாயும் செலவு செய்திருக்கிறார்கள். அனைத்து பரிமாற்றமும் காசோலை மூலமே நடைபெற்றது.

கீழ்நீதிமன்றத்தில் குன்ஹா ‘திருமணப் பெண்ணின் அப்பா இருக்கும்போது தாய்மாமன் செலவு செய்துள்ளதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை’ என்று சொல்லி திருமண செலவுகளை 3 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். சிவாஜி வீட்டில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்ததால் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தன் தம்பி பிரபு மூவீஸ் படங்களை வெளிநாடுகளின் விற்று தன் அக்கா மகள் திருமணத்தை நடத்தினார். ராம்குமார் செலவு செய்த விவரங்களை வருமானவரித் துறையில் சமர்பித்துள்ளார்.

நீதிபதி குமாரசாமி: திருமணத்தின்போது சிவாஜி இருந்தாரா?

குமார்(ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்) : இருந்தார். அதன் பிறகு 2000-ல் இறந்துவிட்டார்.

நாகேஸ்வரராவ்: திருமண மேடைக்கு வெளியே நடைபெற்ற அலங்கார வளைவுகள், கட் அவுட், தோரணங்கள், மின்விளக்கு, பேனர்கள் அனைத்தும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த காஞ்சி பன்னீர்செல்வம் செய்தார். திருமணத்துக்கு வந்த வி.ஐ.பி-களுக்கு அறைகள் போட்டுக் கொடுத்தது, சாப்பாட்டுச் செலவு அனைத்தும் ஓ.எஸ்.மணியனோடு மூன்று பேர் தாங்களாகவே விரும்பி செய்தார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கொடுத்த வெள்ளித் தட்டுகள் சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வழங்கினார்.

அதற்கான பில்களை வருமான வரித்துறையில் செலுத்தியிருக்கிறார். சுதாகரனுக்கு ஷூ மற்றும் உடைகள் 1.41 லட்சத்துக்கு சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கொடுத்தார். இப்படி ஒவ்வொருவரும் செலவு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் திருமண செலவுகளை பெண் வீட்டாரே செய்வதுதான் வழக்கம். அதனால், இந்தத் திருமணத்திலும் பெண் வீட்டார்தான் செலவு செய்தார்கள். ஜெயலலிதா வெறும் 29 லட்சம் மட்டுமே செலவு செய்தார். திருமண செலவுகள் அனைத்தையும் ஜெயலலிதாதான் செய்தார் என்பது போகிற போக்கில் புழுதியை வாரி தூற்றுவதற்கு சமம். இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் போடப்பட்ட பொய்யான வழக்கு.

ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கியிருப்பது தவறா?

ஜனவரி 28-ம் தேதி காலை நீதிபதி குமாரசாமி வந்ததும் கீழ் நீதிமன்றத்தில் ஏ2 சசிகலாவுக்காக வாதாடிய மணிசங்கர், ‘இந்த வழக்கில் ஏ2 சசிகலாவுக்காக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பசந்த் வாதாடுவார்’ என்று அறிமுகம் செய்துவைத்து அமர்ந்தார். பசந்த்: ஏ1 ஜெயலலிதாவின் அம்மா சந்தியா சினிமா துறையில் சிறந்த நடிகையாக இருந்து நிறைய பணம் சம்பாதித்தார். அவருடைய மகள் ஜெயலலிதா 1964 முதல் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்ததோடு தமிழ் சினிமா துறையின் இளவரசியாகவும் திகழ்ந்தார். அதன் மூலம் நிறைய செல்வங்களை ஈட்டினார். எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நடிகர். அவரோடு பல படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததால் எம்.ஜி.ஆரின் சிறந்த நட்புக்குரியவராகத் திகழ்ந்தார்.

நீதிபதி: எம்.ஜி.ஆரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே?

பசந்த்: ஆமாம்.

அதன் மூலம் எம்.ஜி.ஆர் 1982-ம் ஆண்டு தன் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவைச் சேர்த்தார். அன்றில் இருந்து ஜெயலலிதா முழு நேர அரசியல்வாதியாக மாறினார். பிறகு 1984 முதல் 1989 வரை ராஜ்ய சபா எம்.பி&யாக இருந்தார். துரதிஷ்டவசமாக 24.12.1987-ல் மரணமடைந்தார். அதன் பிறகு அ.தி.மு.க கட்சி இரண்டாகப் பிரிந்தாலும் அ.தி.மு.க-வின் பெரும்பாலான தொண்டர்கள் ஜெயலலிதாவையே எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக ஆதரித்தார்கள். அதன் மூலம் 1989-ல் எம்.எல்.ஏ-வாகவும் இருந்து கட்சியை தன் தலைமையின் கீழ் சிறப்பாக நடத்தியதால் 1991- தமிழகத்தின் முதல்வரானார்.

ஜெயலலிதா சசிகலா நட்பின் தொடக்கம்!

ஏ1 ஜெயலலிதா திருமணம் ஆகாதவர். ஏ2 சசிகலா பிசினஸ் செய்துகொண்டிருந்தார். அவர் வினோத் வீடியோ விஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. ஜெயலலிதா அரசியலிலும், சினிமா துறையிலும் இருந்ததால் அவருடைய வீடியோ பதிவுகள் சம்பந்தமாக சசிகலாவின் நிறுவனத்துக்குப் போக வர இருந்ததால், ஜெயலலிதாவும் சசிகலாவும் நெருங்கிப் பழகினார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் சிறந்த நண்பர்களாக மாற்றியது. இவர்களுக்குள் மிக நெருக்கமான ஈர்ப்பு இருந்ததால் ஏ1 ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சசிகலா நிரந்தரமாகத் தங்கினார். இவர்களுக்குள் மனரீதியான விஷயங்களைக்கூட பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமானதோடு, இருவரும் பிசினஸ் பார்ட்னர்களாகவும் இருந்தார்கள்.

இவர்களுடைய நட்பை யாரும் பிரிக்க முடியாது. இவர்களுடைய நட்பு பொன் எழுத்துகளால் பொறிக்கப்படக் கூடியது. இந்த நட்பை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தவறாக சித்தரித்தார்கள். இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் தங்கி இருப்பது தவறா?

ஏ2 சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரன் தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தங்குவதற்காக சின்னம்மாவான சசிகலா இருந்த போயஸ்கார்டன் வீட்டில் இவரும் தங்க ஆரம்பித்தார். அதற்கு ஏ1 ஜெயலலிதா ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லை. பின்பு அம்மா என்ற முறையில் சுதாகரனுக்கு நடிகர் சிவாஜியின் மகள் வழி பேத்தியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து, 7.9.1995-ல் மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. அதற்குக் காரணம், பெண் வீட்டாரான சிவாஜியின் குடும்பம் சமூதாயரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மிக வசதியாக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். இந்தத் திருமணத்தில் பல முன்னணி நடிகர்கள்கூட கலந்துகொண்டார்கள்.

ஏ2 சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன். இவர் ஏ1 ஜெயலலிதாவுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால் அவருடைய மனைவி இளவரசி கைக்குழந்தையோடு தன் கணவனின் தங்கை இருக்கும் போயஸ்கார்டனுக்கு வந்து தங்கினார். அதற்கும் ஜெயலலிதா ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லை. ஆக மொத்தத்தில் போயஸ்கார்டனில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவருடைய கைக்குழந்தை ஆகியோர் தங்கி இருந்தார்கள்.

முதல்வரும் அரசு ஊழியர்தான்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை அவரது வீட்டில் இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை பினாமிகளாக்கி அதன் மூலம் பல கம்பெனிகள் தொடங்கியதாக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

1998 செப்டம்பர் 5-ம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பினாமி சட்டத்தில், ரத்த சம்பந்தமான உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் எழுதி வைத்திருந்தால் மட்டுமே அவர்களை பினாமிகளாகக் கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. அப்படி பார்க்கும்போது ஜெயலலிதாவும் அவர் வீட்டில் தங்கி இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சம்பந்தமான உறவினர்கள் கிடையாது. அதனால், பினாமி சட்டம் இவர்களுக்குப் பொருந்தாது. அப்படி இருந்தபோதும் கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காக பினாமிகள் என்றும் சொல்ல முடியாது.

அரசு ஊழியர்கள்தான் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது. ஆனால், முதல்வர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்கள் தற்காலிக ஊழியர்கள். இந்தியாவில் காலகாலமாக குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் என பலரும் பரிசுப் பொருள்கள் வாங்கிதான் வருகிறார்கள். அப்படித்தான் தன் கட்சி தொண்டர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை ஜெயலலிதா வாங்கி இருக்கிறார். அந்த பரிசுப் பொருட்களை அவருடைய வருமானமாகச் சேர்த்துள்ளனர்.

நீதிபதி: அரசு பதவியில் இருந்து சம்பளம் வாங்கும் அனைவரும் அரசு ஊழியர்களாகத்தான் கருதப்படுவார்கள். இந்த விஷயத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது.

'சுற்றி வளைத்து ஜெயலலிதாவுக்காகவே வாதாடுகிறீர்கள்!'

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் ஏ2 சசிகலாவின் வழக்கறிஞர் பசந்த் 9 நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்த பிறகு, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சார்பாக அவரின் வழக்கறிஞர் சுதந்திரம் தன் வாதத்தைத் தொடங்கினார்.

நீதிபதி குமாரசாமி: இவ்வழக்கில் முக்கியமானது, 120பி கூட்டுச்சதி, 109 குற்றத்திற்கு உடந்தையாக இருந்தல். ஜெயலலிதா அரசு பதவியில் இருந்து அவர் சம்பாதித்த பணத்தை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோடு கூட்டுச்சதி செய்து சொத்துகள் வாங்கியதாகவும், ஜெயலலிதா குற்றங்கள் செய்ய சசிகலா, சுதாகரன், இளவரசி உடந்தையாக இருந்ததாகவும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பதிவு செய்திருக்கிறது. இதைப்பற்றி சரியாக யாரும் வாதிடவில்லை. நீங்கள் 120பி, 109 பற்றி வாதிடுங்கள்.

சுதந்திரம்: ஊழல் தடுப்பு சட்டம் 13(1) இ-யில் 120பி, 109 வராது. இந்த இரண்டு சட்டங்களும் ஐ.பி.சி (இந்திய தண்டனை சட்டத்தில்) தான் வரும். ஆனால் 13(1)இ-யில் இதைச் சேர்த்துள்ளது தவறு. சுதாகரன், இளவரசியும் அரசு ஊழியர்கள் கிடையாது. அதனால், அவர்களுக்கு 13(1)இ பொருந்தாது. ஏ1 ஜெயலலிதா கூட்டுச்சதியில் ஈடுப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை.

நீதிபதி: ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற நினைக்கிறீர்கள் உங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை மட்டும் வாதிடுங்கள். ஏ2-க்காக வாதிட்டவர், சாட்சியங்களின் ஆதாரங்களைக் சுட்டி காட்டி வாதிடவில்லை. நீங்களாவது குற்றப் பின்னணி கொண்ட கூட்டுச்சதி, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால் சாட்சிகளின் ஆதாரங்களை சுட்டிக் காட்டி வாதிட வேண்டும்.

சுதந்திரம்: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நல்லம்மாள் வழக்கில் அவரின் கணவர் பரமசிவம் அரசு ஊழியராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்துகள் சேர்த்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் பரமசிவமும், நல்லம்மாளும் கூட்டுச்சதி குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததாக 120பி, 109 பதிவு செய்யப்பட்டது. அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதை எதிர்த்து 1999&ல் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்கள் உச்சநீதிமன்றமும் அந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்திருக்கிறது. ஆனால், அதில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து என்னவென்றால், அரசு ஊழியராக இல்லாதவர்களின் விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், என் மனுதாரர்களிடம் கேட்காமல் 120பி, 109 பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கொடுத்த எழுத்துபூர்வமான ஆவணங்களைப் பார்க்க வேண்டாம். அவர்கள் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமல் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பதிவு செய்துள்ள கணக்குகள் அனைத்தும் தவறானவை.

விளம்பரத்துக்காக வாங்கினாரா 1 ரூபாய் சம்பளம்?

313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார்.

குமார்: நாங்கள் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்பித்து இருக்கிறோம்.

நீதிபதி: தமிழ்நாட்டில் முதல்வருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

குமார்: (சற்று நேர மௌனத்துக்குப் பிறகு) அதுபற்றி எனக்குத் தெரியாது.

நீதிபதி: (மேலவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணனைப் பார்த்து) உங்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

நவநீதகிருஷ்ணன்: ஒரு லட்சத்து எட்டாயிரம். அதுதவிர பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது ஒரு நாளுக்கு 2 ஆயிரம் கொடுக்கிறார்கள்.

நீதிபதி: அதுதான் பாராளுமன்றத்தில் வாதிடாமல் நீங்கள் கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்துவிடுகிறீர்களே?

நவநீதகிருஷ்ணன்: இல்லை யுவர் ஆனர். எங்கள் அம்மா கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்தொடரின்போதும் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து கவனிப்பதோடு, நிறை, குறைகளை சுட்டி காட்டி பேச வேண்டும்.

நீதிபதி: (அதிமுக வழக்கறிஞர் குமாரைப் பார்த்து) உங்கள் மனுதாரர் முதல்வராக இருந்தபோது எவ்வளவு சம்பளம் வாங்கினார்?

குமார்: ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.

நீதிபதி: அதுதான் சம்பளம் கொடுக்கிறார்களே... வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே! விளம்பரத்துக்காக வாங்கினாரா, 1 ரூபாய் சம்பளம். சம்பளம் வாங்காமல் வேலைப் பார்த்தால், பொது ஊழியராக கருதப்பட மாட்டார்கள். ஆனால், மாதம் ஒரு ரூபாய் வீதம் சம்பளம் வாங்கி இருப்பதால் பொது ஊழியராகவே கருதப்படுவதால், இந்த நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். 1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு எப்படி 66 கோடி சொத்துகள் வந்தது? அதை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதை மறுப்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.

சுற்றி வளைத்து ஜெயலலிதாவிற்காகவே வாதிடுகிறீர்கள்...

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சார்பாக அவர்களது வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டார்.

சுதந்திரம்: அட்டவணை 2-ல் உள்ள 306 சொத்துப் பட்டியலில் ஏ3 சுதாகரனுக்கும், ஏ4 இளவரசிக்கும் தனிப்பட்ட சொத்துகள் 63 ஐட்டங்கள் இருக்கிறது. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1,38,31,961 ரூபாய், இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 6,91,81,200 ரூபாய், சுதாகரனும் இளவரசியும் பங்குதாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராபர்டீஸ், ரிவர்வே அக்ரோ உட்பட்ட 6 கம்பெனிகளின் சொத்து மதிப்பு 4,60,24,439 ரூபாய் எனவும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மொத்தம் 12,90,00,000 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பணம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்றும் ஜெயலலிதாவின் பினாமிகளான சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் ஜெயலலிதாவுக்கும் என் மனுதாரர்களாகிய சுதாகரன், இளவரசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நீதிபதி: சுற்றி வளைத்து மறைமுகமாக ஏ1 ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே வாதிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மனுதாரருக்காக வாதிடுங்கள்.

சுதந்திரம்: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, கம்பெனிகள் என அனைவரின் சொத்துகளையும் பொதுவாகக் காட்டி இருப்பதால் ஏ1 ஜெயலலிதாவை மையமாக வைத்துதான் இந்த வழக்கை வாதிட முடியும்.

அம்மா முதல்வர்... மகனுக்கு அரசு டெண்டர்!

சுதந்திரம்: 1994-ல் தஞ்சையில் 8&வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சி கழகத்தின் மூலம் முறையாக டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை சூப்பர் டூப்பர் டிவி நிறுவனம் 42 லட்சத்துக்கு எடுத்தது. அதற்கு தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக் கழகம் அட்வான்ஸாக 39,60,000 ரூபாய் சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்குக் கொடுத்தது.

நீதிபதி: அதற்கான ரசீதைக் கொடுங்கள்?

சுதந்திரம்: அதை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சீஸ் செய்து எடுத்துப் போய்விட்டார்கள்.

நீதிபதி: சீஸ் செய்ததற்கான கடிதத்தைக்காட்டுங்கள்.

சுதந்திரம்: (துலாவிக்கொண்டிருந்தார்கள்)

நீதிபதி: சுதாகரனின் அம்மா முதல்வர். தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சி கழகம் முதல்வரின் கீழ்தான் வருகிறது. மகனுக்கு அரசு டெண்டர் விட்டிருக்கிறார்கள் என்றால், அட்வான்ஸ் கொடுத்ததற்கான ரசீது கொடுக்காமலா இருந்திருப்பார்கள்? அந்த ஆதாரங்களைக் காட்டினால் மட்டுமே இந்தத் தொகையை நான் கணக்கில் எடுத்துக்கொள்வேன்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் செந்தில் தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக் கழகம் வழங்கிய 39,60,000 ரூபாய்க்கான ரசீதை எடுத்து நீதிபதியிடம் கொடுத்தார்.

நீதிபதி: இவ்வளவு பெரிய தொகைக்கு நீங்கள் ரசீது வைத்திருக்க வேண்டாமா?

சுதந்திரம்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் இந்த ரசீதை முத்திரையிடாத ஆவணங்களாக வைத்திருந்ததால் அதை எடுக்க முடியவில்லை.

நீதிபதி: இந்தத் தொகையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படித்தான் ஆதாரங்களைக் கொடுத்து வாதிட வேண்டும்.

சுதந்திரம்: 100% சரியாக யாராலும் வாதிட முடியாது. நீங்கள் அனுமதித்தால் இதற்கு ஒரு ஜோக் சொல்கிறேன்?

நீதிபதி: நீதிமன்றத்துக்குத் தேவையில்லாதவற்றை பேசக் கூடாது.

பவானி சிங்கின் மெத்தனம்!

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங் தொடர்ந்து குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்று பல தரப்புகளில் இருந்தும் புகார்கள் கிளம்பியது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, பவானி சிங்கின் மெத்தனமான செயல்பாடுகள் காரணமாக நீதிபதி குன்ஹா கடுமையாகவே அவரைக் கண்டித்தார். மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் அவரது மெத்தனமான போக்கு தொடர்ந்தது. அதன் காரணமாகவே அவரை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக அன்பழகன் தரப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியது. இனி, பவானி சிங்கின் வாதத்தில் இருந்து...

அனைத்து கேள்விகளும் டிஎஸ்பி சம்பந்தத்தை நோக்கி!

ஜெயலலிதா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதும்...

நீதிபதி குமாரசாமி: (அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்து) அடுத்து நீங்கள் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.

பவானிசிங்: நான் படிப்பதற்காக 5 நாட்கள் அவகாசம் வேண்டும்.

நீதிபதி: உச்சநீதிமன்றம் தினந்தோறும் நடத்தச் சொல்லி இருப்பதால், அவகாசம் கொடுக்க முடியாது. மதியம் வாதாட வேண்டும்.

நீதிபதி: புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும், அவருடைய வாக்குமூலத்தை படியுங்கள். பிறகு வாதம் செய்யலாம்.

பவானிசிங்: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு படிக்கிறேன்.

நீதிபதி: என்ன வாதங்களை வைத்து வாதிட போகிறீர்கள்?

பவானிசிங்: சாட்சியங்களின் வாக்குமூலம், குற்றப்பத்திரிகை மற்றும் பட்டியல்கள்

நீதிபதி: ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது எதன் அடிப்படையில் 65 கோடி சட்ட விரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு போட்டீர்கள்? ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். அவருக்கு எப்படி 65 கோடி வந்தது? அதற்கான ஆதாரங்கள் எங்கே? ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 9 1/2 கோடி என்கிறார்கள். நீங்கள் 65 கோடி என்கிறீர்கள். அதற்கு தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் கொடுக்க வேண்டும்.

பவானிசிங்: (தமிழ்நாடு ஊழல் தடுப்பு டி.எஸ்.பி., சம்பந்தத்தைப் பார்த்து) எப்படி வந்தது?

சம்பந்தம்: ஆவணங்கள் இருக்கிறது.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது யார்? அவர் நேரில் ஆஜராக வேண்டும்.

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) யார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது?

சம்பந்தம்: இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடு. அவருக்கு உடல்நிலை சரியில்லை 93 வயதாகிறது. (உண்மையில் நல்லமநாயுடுக்கு 73 வயதுதான் ஆகிறது.)

நீதிபதி: அடுத்த அதிகாரி யார்?

சம்பந்தம்: எஸ்.பி சௌந்திரராஜன் இருந்தார். அவர் இறந்துவிட்டார்.

நீதிபதி: தற்போது யார் தமிழக ஊழல் தடுப்புப் பிரிவின் இன்சார்ஜ்?

சம்பந்தம்: தற்போது சண்முகபிரியா என்ற லேடி எஸ்.பி&தான் இன்சார்ஜ்.

நீதிபதி: எத்தனை வருடம் இந்த வழக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்?

சம்பந்தம்: 98ல் இருந்து இருக்கிறேன். கீழமை நீதிமன்றத்திலும் இருந்தேன்.

நீதிபதி: அப்படியென்றால் எல்லா ஆவணங்களையும் நீதிமன்றத்துக்கு எடுத்துவரத் தெரியாதா? 20 வருடமாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. நீங்கள் எல்லா ஆவணங்களையும் சரியாக பின்பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வழக்கின் ஆதாரமாக இருக்கும் ஆவணங்கள் இல்லையென்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 20 வருடமாக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து இருக்கிறீர்கள். சரியான ஆவணங்களைக் கொடுக்கவில்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். எதன் அடிப்படையில் இவ்வளவு நாட்கள் வாதம் செய்கிறீர்கள்? ஜெயலலிதா மீது போடப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் நீங்கள் கணக்கு காட்ட வேண்டும். எப்படி ஆடிட் செய்தீர்கள்? எந்த ஆடிட்டரை வைத்து ஆடிட் செய்தீர்கள்? நீங்களாகவே கணக்கு போட்டீர்களா? இவற்றையெல்லாம் தகுந்த ஆதாரத்தோடு விளக்க வேண்டும்.

சம்பந்தம்: குற்றப்பத்திரிகையில் இருக்கிறது.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

சம்மந்தம்: புலன் விசாரணை, சாட்சியங்கள், வழக்கு பற்றிய முழு விவரங்கள்.

நீதிபதி: அப்படியென்றால் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்பது தெரியாதா? அவர்கள் தரப்பு வாதத்திற்கு நீங்கள் ஆதாரங்களோடு கூடிய ஆவணங்களைக் காட்டி பதில் சொல்லியாக வேண்டும்.

நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தைத் திருந்த வேண்டும்!

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு... பவானிசிங் அரசு தரப்பு சாட்சி நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தை படிக்க மட்டுமே செய்தார். இடையில் குறுக்கீடு செய்த ஜெ. தரப்பு வழக்கறிஞர் செந்தில் வாக்குமூலத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றபோதுகூட பவானிசிங் வாய் திறக்கவில்லை. தனக்கு ரூம் வேண்டும் என்ற கோரிக்கையைதான் வைத்தார்.

பவானிசிங்: ஜெயலலிதா 91&96 வரை முதல்வராக இருந்தபொது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றம் ஊழல் தடுப்பு அதிகாரி லத்திகா சரணை நியமித்து விசாரணை செய்ய ஆணையிட்டது. அதன் பிறகு பெருமாள் இவ்வழக்கை விசாரித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். அதன் பிறகு எஸ்.பி நல்லமநாயுடு தலைமையில் 9 குழுவினராகப் பிரிந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கட்டடங்கள் என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

செந்தில்: இந்த வாக்குமூலத்தில் நிறைய தவறுகள் இருக்கிறது. அதை நாங்கள் திருத்தம் செய்து கொடுக்க அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: எல்லா வாக்குமூலத்திலும் தவறு இருக்கிறதா?

செந்தில்: 42 வாக்குமூலங்களில் நிறைய தவறுகள் இருக்கின்றன.

நீதிபதி: எப்போது திருத்தம் செய்து தரப்போகிறீர்கள்?

செந்தில்: திங்கள்கிழமை தருகிறோம்

பவானிசிங்: வழக்கு ஆவணங்கள் அனைத்து நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. அதைப் படிக்க வேண்டும். அதனால் எனக்கு இந்த நீதிமன்றத்தில் ரூம் ஒதுக்கித் தர வேண்டும்.

நீதிபதி: ஏன் உங்களுக்கு ரூம் இல்லையா?

பவானிசிங்: இல்லை.

நீதிபதி: சரி நான் சொல்லி ரூம் தரச் சொல்கிறேன். ஆனால், அதற்கான சார்ஜ் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக் கூடாது!

பவானிசிங்: இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் வீட்டை சோதனை செய்து அங்கிருந்த தங்க, வைர நகைகளைக் கைப்பற்றினோம். அதிகாரி வாசுதேவன் நகைகளை வேல்யூ செய்தார். செங்கல்வராயன் என்ற அதிகாரி சேலைகளை மதிப்பீடு செய்தார்.

நீதிபதி: (குறுக்கீடு செய்து) அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக் கூடாது. சி.ஆர்.பி.சி-யின் எந்தப் பிரிவின் அடிப்படையில் வீட்டை சோதனை செய்தீர்கள்?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) ஏன் ஆய்வு செய்தீர்கள்?

சம்பந்தம்: முறைப்படி அனுமதிபெற்று சோதனை செய்தோம்.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஜெயலலிதாவின் வீட்டை ரெய்டு செய்து நகைகள் கைப்பற்றியபோது வீடியோ எடுக்கப்பட்டதா?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) வீடியோ எடுக்கப்பட்டதா?

சம்பந்தம்: இல்லை.

நீதிபதி: சி.டி எடுத்தீர்களா?

சம்பந்தம்: இல்லை.

நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகளை யார் மதிப்பீடு செய்தது?

பவானிசிங்: (ஜெ. தரப்பு வழக்கறிஞர் மணிசங்கரைப் பார்த்து) யார்?

மணிசங்கர்: அதிகாரிகள் வாசுதேன் மற்றும் ஜெகநாதன்

நீதிபதி: அப்போது ஜெயலலிதாவின் சார்பாக வீட்டில் யார் இருந்தது?

பவானிசிங்: (மணிசங்கரைப் பார்த்து) யார் இருந்தது?

மணிசங்கர்: (அடக்க முடியாமல் சிரிக்கிறார்...)

சம்பந்தம்: (மிகுந்த தயக்கத்தோடு...) பாஸ்கரன் என்பவர் இருந்தார்.

நீதிபதி: ஜெயலலிதா சார்பாக பாஸ்கரன் இருப்பதற்காக ஜெயலலிதா கொடுத்த ஒப்புதல் கடிதத்தைக் காட்டுங்கள்.

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) அந்தக் கடிதம் எங்கே? (சம்பந்தம் துலாவினார்.)

மணிசங்கர்: (மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எடுத்துக் கொடுத்தார்.)

நீதிபதி: (சம்பந்தத்தைப் பார்த்து) என்ன படித்திருக்கிறீர்கள்?

சம்பந்தம்: பி.எஸ்ஸி

நீதிபதி: செகண்ட் லாங்குவேஜ் என்ன?

சம்பந்தம்: ஆங்கிலம்.

நீதிபதி: பிறகு ஏன் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?

சம்பந்தம்: (மௌனம்)

இந்த வழக்கே ஒரு கதைதான் யுவர் ஆனர்!

பவானிசிங்: ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டை சோதனை செய்தபோது, ஜெயலலிதா இன்னொரு வழக்கில் அரெஸ்ட் செய்யப்பட்டு இருந்தார்.

நீதிபதி: ஜெயலலிதா போலீஸ் கஸ்டடியில் இருந்தாரா? சிறையில் அடைக்கப்பட்டாரா?

சம்மந்தம்: சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிபதி: என்ன வழக்கில் அரெஸ்ட் செய்யப்பட்டார்.

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) எந்த கேஸ்?

சம்மந்தம்: தெரியவில்லை.

பவானிசிங்: அது ஊழல் வழக்கு கிடையாது. அது சி.ஆர்.பி.சி வழக்கு

குமார்: கலர் டிவி ஊழல் நடந்ததாக கைது செய்யப்பட்டார். 1996 டிசம்பர் 6-ம் தேதி கைது செய்யப்பட்டார். 7-ம் தேதி வீடு ரெய்டு செய்யப்பட்டது. சோதனை என்ற பெயரில் பெட்ரூம், பாத்ரூம் முதற்கொண்டு ஐந்து நாட்கள் ரெய்டு செய்து, அதை டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பச் செய்தார்கள். நீதிபதி: இன்றுபோல நாளைக்கும் கதை சொல்வதை விட்டுவிட்டு ஆதாரங்களோடு வாதிட வேண்டும்.

பவானிசிங்: (சிரித்துக்கொண்டே) இந்த வழக்கே ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைதான் யுவர் ஆனர்.

நீதிபதியின் சரமாரி கேள்விகளும் பவானிசிங்கின் பதறலும்...

நீதிபதி: வழக்கு காலகட்டத்திற்கு முன்பே போயஸ்கார்டன் வாங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த வழக்கில் போயஸ்கார்டனைச் சேர்த்துள்ளீர்கள்?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து...) ஏன் சேர்த்தீர்கள்?

சம்மந்தம்: போயஸ்கார்டனில் கூடுதல் கட்டடமும், மராமத்து வேலைகளும்தான் சேர்க்கப்பட்டுள்ளது.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா, சசிகலா 2 பேரும் பார்ட்டனர்களாக இருக்கும்போது, ஜெயலலிதாவுடைய பணம் என்று குறிப்பிடுகிறீர்களே... ஏன்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயலலிதாவின் பினாமிகளாக சசிகலா, சுதாகரன், இளவரசி செயல்பட்டதாகச் சொல்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பினாமி சட்டப்படி ரத்த உறவினர்களாக இருக்கும்பட்சத்தில்தான் பொருத்தும். இவர்களுக்கு எப்படி பொருந்தும்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ... அரசு ஊழியர்கள் இல்லாதவர்களை எப்படி இந்தச் சட்டத்தில் கொண்டுவருகிறீர்கள்? 120(பி) கூட்டுச்சதி... ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்பதால் மட்டுமே கூட்டுச்சதி என்று கூறிவிட முடியாது. இதற்கு வேறு என்ன ஆதாரங்கள் வைத்திருக்கிறீர்கள்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயலலிதாவிடம் இருந்து எப்படி சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றது?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதா யாருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்தார்?

பவானிசிங்: ஜெயலலிதா, சசிகலாவிற்கு கொடுத்தார்.

நீதிபதி: கம்பெனி ஆடிட்டர் சொக்கலிங்கத்தின் வாக்குமூலத்தை ஏன் இதில் கொண்டுவரவில்லை?

பவானிசிங்: தெரியவில்லை யுவர் ஆனர். எனக்கு ஒரு வாரம் படிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

நீதிபதி: அப்படி கொடுக்க முடியாது. நாளைக்கு வந்து புலன்விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் படியுங்கள். நாளைக்கு யாருடைய வாக்குமூலத்தைப் படிக்கிறீர்கள்? கால அவகாசத்தைப் பற்றி நாளைக்குப் பாக்கலாம்.

பவானிசிங்: புலன்விசாரணை அதிகாரி லத்திகாசரண், வி.சி.பெருமாள், கதிரேசன் என 3 பேரின் வாக்குமூலங்களைப் படிக்கிறேன். புலன்விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் படித்தபோதும் நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்திடமும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கரைப் பார்த்தும், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கேட்டு வருவதோடு, சுயமாக ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தார்.

நீதிபதி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பவானிசிங் பதில் சொல்லாமல், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்தை மாட்டிவிடுகிறார். சம்பந்தமும் பதில் சொல்லத் தயங்கவே, நீதிபதி அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என நினைக்கிறார். உண்மையில் சம்பந்தத்திற்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். அவர் ஒரு அரசு ஊழியர் என்பதால், தான் ஏதாவது சொல்ல அது ஆளுங்கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தார்.

நீதிபதி கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பவானிசிங் தொடர்ந்து பதில் சொல்லாமல் சம்பந்தத்தையும், மணிசங்கரையும் பார்த்துவரும் நிலையில், ‘‘திடீரென நீதிபதி ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கப் போகிறார். அதற்கும் மணிசங்கரையோ, சம்பந்ததையோ பார்த்து ‘என் பெயர் என்ன?’ என்று பவானிசிங் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ என்று கிண்டல் அடித்தனர் நீதிமன்ற காட்சிகளைப் பார்க்கும் பத்திரிகையாளர்கள்.

பவானி சிங்கை நீக்க நடந்த சட்டப் போராட்டங்கள்!

அரசு வழக்கறிஞரான பவானி சிங் தொடர்ந்து குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினார். அதில் இருந்து...

பேராசிரியர் அன்பழகன் மீது கடும் கண்டனம்!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனின் வாதத்தில் இருந்து...

சரவணன்: உச்சநீதிமன்ற ஆணையில், அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசு இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கவில்லை. அதனால், பவானிசிங் இந்த வழக்கில் ஆஜராவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

நீதிபதி: அந்த உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பியுங்கள்?

சரவணன்: (உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பிக்கிறார்.)

நீதிபதி: நீங்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை வையுங்கள். அல்லது, வழக்கு போடுங்கள். என்னிடம் ஏன் வந்திருக்கிறீர்கள். என்னை உச்சநீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து வழக்கை முடிக்கச் சொல்லி இருக்கிறது. நீதிமன்ற நேரத்தை வீணாக்காதீர்கள். (பவானிசிங்கைப் பார்த்து) உங்களை நியமித்தது யார்?

பவானிசிங்: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நியமித்திருக்கிறது.

நீதிபதி: (சரவணனிடம்) நீங்கள் அரசு வழக்கறிஞரை நியமிக்கப்போகிறீர்களா? ஏன் அரசியலைப் புகுத்துகிறீர்கள்? உங்கள் மனுதாரர் யார்?

சரவணன்: அன்பழகன்

நீதிபதி: அவர் எங்கே? அவரை ஆஜராகச் சொல்லுங்கள்.

சரவணன்: அவர் 92 வயதுடைய முதியவர். அவர் கோர்ட்டுக்கு வர முடியாது. கோர்ட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது. அவரின் சார்பாக நான் ஆஜராகி இருக்கிறேன். பவானிசிங்கை நீக்க வேண்டும். அதற்கான மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிபதி: (கோபத்துடன்) தேவையில்லாமல் மனு அளிக்க இது அரசியல் மேடை கிடையாது. என்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக சி.ஆர்.பி.சி.345-ஐ பயன்படுத்த நேரிடும். நீங்கள் ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்.

சரவணன்: ஏற்கெனவே ரீட் மனு தாக்கல் செய்திருக்கிறோம். நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. (இதையடுத்து காரசாரமான இந்த விவாதம் நிறைவு பெற்றது.)

நீதிபதி: அந்த மனுவின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம்!

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதை 14-ம் தேதி விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், ‘‘இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. நீதிபதி குமாரசாமி இந்த வழக்கை நடத்தி வருகிறார். இதற்கிடையில் அரசு வழக்கறிஞரை மாற்றுவதால் கால தாமதம் ஏற்படும் என்பதால் இந்த மனுவை குமாரசாமியே விசாரிப்பதுதான் நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன். அதனால், இந்த மனுவை நீதிபதி குமாரசாமியே விசாரிக்க பரிந்துரை செய்து இந்த மனு முதன்மை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன்’’ என்று தீர்ப்பளித்தார்.

இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி வஹேலாவின் கவனத்துக்கு வந்ததை அடுத்து, ‘இந்த மனுவை குமாரசாமி விசாரித்தால் ஏற்கெனவே நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணை காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த மனுவை ஆனந்த் பைரரெட்டி விசாரிப்பார்’ என்று அறிவிப்பு வந்தது. அதையடுத்து 19-ம் தேதி ஆனந்த் பைரரெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஷும், பவானிசிங் தரப்பில் செபஸ்டினும், தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் ராவும், கர்நாடக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும் ஆஜரானார்கள்.

நாகேஷ் (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்): ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும் கர்நாடக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு பவானிசிங்கை நியமிக்காதபோது அவர் இதில் ஆஜராகி வருவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது. இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதா சார்ந்துள்ள அ.தி.மு.க ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. அந்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர், பவானிசிங்கை நியமித்தி இருக்கிறார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை தமிழக அரசு நியமிக்க உரிமை கிடையாது. பவானிசிங்கை கீழமை நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அபராதமும் விதித்திருக்கிறது. இதில் தொடர்ந்து பவானிசிங் ஆஜரானால் நீதி கிடைக்காது.

ரவிவர்மகுமார் (அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்): இந்த வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் சரியான விளக்கத்தை எங்களுக்குக் கொடுத்தது. ஆனால், மேல்முறையீட்டு மனுவில் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறது. அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றி எதுவும் சொல்லவில்லை. பவானிசிங்கை வேண்டாம் என்று சொல்லவோ, அவரே தொடர்ந்து வாதிட வேண்டும் என்று கூறவோ அரசு முடிவு செய்யவில்லை. நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

செபஸ்டின் (பவானிசிங்கின் வழக்கறிஞர்): பவானிசிங் மிகவும் நேர்மையாக கீழமை நீதிமன்றத்தில் வாதாடியதால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார். தற்போது அவரை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக சொல்வதால் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ராவ் (தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கறிஞர்): சி.ஆர்.பி.சி 24(8)-ன்படி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு இந்த வழகின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உண்டு.

நீதிபதி: இந்த வழக்கில் அன்பழகனோ கர்நாடக அரசோ விரும்பினால், உச்சநீதிமன்றத்தை அணுகி அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படலாம். அதுவரை இந்த வழக்கில் பவானிசிங்கே தொடர்ந்து அரசு வழக்கறிஞராகத் தொடரலாம்.

மாறுபட்ட தீர்ப்புகள்!

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து முடிந்த ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதா விசாரணை, கடந்த 21, 22 தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று நீதிபதி மதன் பீமாராவ் லோக்கூர் அளித்த தீர்ப்பில், ''இந்த வழக்கை ஏற்கெனவே நடத்தியவர் என்ற முறையில் பவானி சிங் எப்படி மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வழக்கறிஞராகத் தொடர முடியும்? ஏனென்றால், கர்நாடக அரசு அவரை அரசு வழக்கறிஞராக நியமித்தது சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மட்டும்தான். அந்த விசாரணை நடந்து முடிந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டதோடு பவானி சிங்கின் நியமனமும் முடிந்துவிட்டது. அதன்பிறகு மேல்முறையீட்டிலும் அவரையே அரசு வழக்கறிஞராக நியமிக்க கர்நாடக அரசு எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக, தமிழக அரசு அதைச் செய்துள்ளது. கர்நாடக அரசு இந்த வழக்கை நடத்துவதற்கு தமிழக அரசு தன்னால் இயன்ற ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை தமிழக அரசு தவறாகப் புரிந்துகொண்டு இந்த வழக்கில் அதிகப்படியான உரிமைகளை எடுத்துக்கொண்டது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்த வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராகத் தமிழக அரசு நியமித்தது செல்லாது’’ என்று கூறியிருந்தார்.

பவானி சிங்கை நியமித்தது செல்லும் என்ற நீதிபதி ஆர்.ஆர்.பானுமதி அளித்த தீர்ப்பில், ''301(1)சி.ஆர்.பி.சி சட்டம் ஒரு வழக்கின் ‘இன்சார்ஜ்’ என்ற முறையில், யாருடைய எழுத்துப்பூர்வமான உத்தரவும் இல்லாமல், அந்த வழக்கின் மேல்முறையீட்டிலும் அவரே அரசு வழக்கறிஞராகத் தொடரலாம் என்ற உரிமையை வழங்குகிறது. ஹரியானா மாநிலம் Vs சுர்ஜித் சிங் வழக்கு இதற்கு முன் உதாரணமாக உள்ளது. எனவே, பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடித்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார்.

மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!

இந்த வழக்கில் முடிவு எட்டப்படாததால் வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா.சி.பந்த் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா ஆஜராகி வாதிட்டார். ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஏப்ரல் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், "பவானி சிங்கை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை நியமித்திருக்கிறது. வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அங்குள்ள நீதிமன்றமே அரசு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டும். அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை.

மனுதாரர் அன்பழகன், 90 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், கர்நாடக அரசு 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசும் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கும் என உணர்ந்து தீர்ப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறினர்.

அன்பழகனின் எழுத்துபூர்வ வாதம்!

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு பல அசையும், அசையா சொத்துகள் வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறோம். அதை கீழ் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவும், சசிகலாவும் பார்ட்னராக இருந்து தொடங்கப்பட்ட ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனங்களை நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதா பவர் ஆஃப் அட்டர்னி சசிகலாவுக்கு கொடுக்கிறார். சசிகலாவிடம் இருந்து சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பல கோடிகள் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன. இதற்கு சாட்சியாக ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலக ஊழியர் ஜெயராமன், ராமவிஜயன் அளித்துள்ள வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 1991 முதல் 1999 வரை 5 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த போது வெறும் 27 ரூபாய்தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்” என்று சொன்னார்.

மீண்டும் வந்தார் ஆச்சார்யா!

பவானி சிங் நீக்கப்பட்டதை அடுத்து அரசு வழக்கறிஞராக (இந்த வழக்கில் ஸ்பெஷல் கோர்ட்டில் ஏற்கெனவே ஆஜராகியிருந்த) பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவர் 18 பக்க எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா முதல்வர் பதவியைத் தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு ஊழியர் சொத்துக் குவிப்பதும், லஞ்சம் பெறுவதும் தவறு. ஆனால் ஜெயலலிதா சொத்துகளை குவித்ததோடு லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்றபின் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தன் பதவி காலத்தின்போது புதிய கட்டடங்கள் கட்டியது, பழைய கட்டடங்கள் புதுப்பித்தது, வளர்ப்பு மகன் திருமணச் செலவு என ஏராளமான செலவுகள் செய்துள்ளார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் கர்நாடக அரசை ஒரு வாதியாக சேர்க்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகாவில் வழக்கு விசாரணை நடைபெறும்போது இந்த மாநில அரசை வழக்கில் சேர்க்காதது சட்டவிரோதமானது. அதனால் இந்த 4 பேரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று சொன்னார் ஆச்சார்யா!

மூன்றாம் தரப்பு வாதி யார்?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கியமானவர்கள் இருவர். ஒருவர்... திமுக பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன். இன்னொருவர் சுப்பிரமணியன் சுவாமி. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் இருவரும் 3-ம் தரப்பு வாதியாக தங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் இறுதியில் சுப்பிரமணியன் சுவாமிக்கு மட்டுமே வெற்றி கிடைத்தது. அது தொடர்பாக நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் இருந்து...

வழக்கின் காட் ஃபாதர்!

ஜனவரி ஐந்து... இந்த வழக்கில் ஜெ தரப்புக்கு எதிராக வாதிட கறுப்புப் பூனைப் படையோடு சுப்பிரமணியன் சுவாமி கோர்ட்டுக்கு வந்ததால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சு.சாமி: இந்த வழக்கில் என்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?

சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர். இந்த வழக்கின் காட் ஃபாதர். என்னுடைய புகார் மனுவை ஏற்றுதான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை விசாரிக்க செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த வழக்கில் நான் வாதிட்ட உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

நீதிபதி: உச்சநீதிமன்ற ஆணையின் நகலை கொடுங்கள்.

சு.சாமி: அதை நான் கொண்டுவரவில்லை.

நீதிபதி: சரி! எதன் அடிப்படையில் வாதிட அனுமதி கேட்கிறீர்கள்?

சு.சாமி: ஜே.கே., பிராப்பர்டீஸ் வழக்கின் மூலமாக.

நீதிபதி: அந்த நகலைக் கொடுங்கள்.

சு.சாமி: அதை கொண்டுவரவில்லை.

நீதிபதி: இந்த இரண்டு ஆவணங்களையும் கோர்ட்டில் சமர்பியுங்கள். பிறகு பரிசீலித்து உங்களை வாதிட அனுமதிக்கலாம். அதனை அடுத்து சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை விட்டு கிளம்பினார்.

யார் இந்த அன்பழகன்?

சுப்பிரமணியன் சுவாமியை அடுத்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் எழுந்தார்...

குமரேசன்: இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தைப்போல இந்த வழக்கில் எங்களை 3-ம் தரப்[பு வாதியாக சேர்த்துக்கொண்டு எங்களுடைய எழுத்துபூர்வமான வாதத்தை பதிவுசெய்ய வேண்டும்.

நீதிபதி: இந்த வழக்குக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

குமரேசன்: 2004-ல் சென்னையில் இருந்து இந்த வழக்கு பெங்களுக்கு மாற்ற என் மனுதாரர் அன்பழகன்தான் காரணம்.

நீதிபதி: யார் அந்த அன்பழகன்?

குமரேசன்: திமுக பொதுச்செயலாளர். உச்சநீதிமன்றம் எங்களையும் 3-ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

நீதிபதி: நீதிமன்றத்துக்குள் அரசியலைக் கொண்டுவராதீர்கள். அரசியல் பேச பாராளுமன்றம் இருக்கு. சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதித்து இருக்கலாம். மேல்முறையீட்டு மனுவில் ஏற்கெனவே வாதி பிரதிவாதி இருக்கிறார். உங்களைப்போல பலரும் வருவார்கள். மேல்முறையீடு என்பது கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை வாதிடுவதும், அதை மறுப்பதும்தான் வேலை. 3-ம் தரப்புக்கு இங்கு வேலை இல்லை.

உண்மையான புகார்தாரர் நான்தான்!

மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெற்று வரும் கோர்ட் ஹால்... நீதிபதி குமாரசாமி வருவதற்கு முன்பே சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்கு வந்து அமர்ந்திருந்தார். நீதிபதி 10.30 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்ததும், தன்னை 3-ம் தரப்பு வாதிகாக இணைத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.

சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர் நான்தான்.

நீதிபதி குமாரசாமி: உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.

சு.சாமி: ஜெயலலிதா 91 - 96 வரை தமிழக முதல்வராக இருந்தார். அப்போது தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தார். அது எனக்குத் தெரியவந்தது. அதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன் அடிப்படையில்தான் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதத்தின்போது ஆஜராகி, சுதந்திரமாக வாதிடவும், எழுத்துபூர்வமான வாதத்தை முன்வைக்கவும் அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: வழக்கு தொடங்கி 20 வருடமாகிறது. இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்?

சு.சாமி: இவ்வழக்கை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் மத்திய அமைச்சராகவும், எம்.பி-யாகவும், கட்சியின் தலைவராகவும் இருந்ததால், நீதிமன்றத்துக்கு வரவில்லை. என்றாலும் வழக்கின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நீதியின் நலனை கருதியும், குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதிசெய்யவும் இந்த வழக்கில் என்னை 3-ம் தரப்பு வாதியாக வாதிட அனுமதிக்க வேண்டும்.

பவானிசிங்: எழுத்துபூர்வமான வாதத்தை அனுமதிக்கலாம். சுதந்திரமாக வாதிட அனுமதிக்கக் கூடாது.

குமார் (அதிமுக வழக்கறிஞர்): உண்மையான புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி கிடையாது. இவர் கோர்ட்டில் புகார் செய்ததோடு சரி. இந்த வழக்கின் புகார்தாரர் வி.சி.பெருமாள்தான். அவரே புகார்தாரராக இருந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். அதனால், சுப்பிரமணியன் சுவாமிக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரை சுதந்திரமாக வாதிடவோ, எழுத்து மூலம் வாதிடவோ அனுமதிக்கக் கூடாது.

சு.சாமி: மஹாராஸ்டிரா முதல்வர் அந்துலே வழக்கில் தனி நபர் புகார் கொடுத்தார். அந்த தனிநபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று இந்த வழக்கில் புகார்தாரர் என்ற முறையில் என்னை அனுமதிக்க வேண்டும்.

அன்பழகன் அரசியல்வாதிதானே?

‘அன்பழகன் தரப்பை இவ்வழக்கில் 3-ம் தரப்பு வாதியாக சேர்க்க வேண்டுமா... வேண்டாமா?’ என்று நடைபெற்ற வாதம்.

நீதிபதி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.

சரவணன்: இந்த வழக்கு இங்கு நடைபெற காரணமாக இருந்தவர் என் மனுதாரர் அன்பழகன்தான். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், எங்கள் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: அன்பழகன் அரசியல்வாதிதானே?

சரவணன்: ஆமாம்.

நீதிபதி: அரசியல் பேச பாராளுமன்றம் இருக்கிறது. அங்கு போய் பேசிக்கொள்ளுங்கள்.

சரவணன்: அரசியல் என்று பார்க்காமல் எங்கள் தரப்பு விவரங்களை சொல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதில் அரசியலை நுழைப்பதாக சொல்வது தவறு.

நீதிபதி: இப்படி தமிழ்நாடு முழுவதும் இவ்வழக்கில் ஆஜராக வந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

சரவணன்: 2004-ல் இவ்வழக்கு சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றதால் சரியான தீர்ப்பு கிடைக்காது என்று கருதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது. அதன் பிறகும் இந்த வழக்கில் எங்களை இணைத்துக்கொள்ளாமல் வெளியில் இருந்து கவனித்து வந்தோம். இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வழக்கறிஞர் தடம் மாறுகிறார் என்றபோதுதான் எங்களை 3-ம் தரப்பு வாதியாக சேர்த்து எங்கள் எழுத்துபூர்வ வாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம். சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் எங்களை 3-ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்தார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் பங்கேற்று நீதி கிடைக்க போராடி வருகிறோம்.

நீதிபதி: ஏன் இதில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள்?

சரவணன்: தனி ஆர்வமெல்லாம் கிடையாது. குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது.

குமார்: அரசு வழக்கறிஞராக பவானிசிங் இருக்கும்போது 3-ம் தரப்பினரை அனுமதிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் லாபம் பெற முயற்சிக்கிறார்கள்.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) என்ன சொல்கிறீர்கள்?

பவானிசிங்: நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

அன்பழகன் வெளியே... சுவாமி உள்ளே!

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்களை 3-ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி வாதமும், அன்பழகன் தரப்பு வாதமும் நிறைவு பெற்றதும்... நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி: அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று அன்பழகன் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், ஒரு பக்கம் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் அரசு வழக்கறிஞரை நீக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவும் போடுகிறார்கள். இப்படி இரு வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி இவர்களால் அரசு வழக்கறிஞருக்கு உதவ முடியும்?

மேலும் அன்பழகன் திமுக பொதுச்செயலாளராக இருப்பதால் ஏ1-க்கு அரசியல் எதிரி என்பதும் தெரிய வருகிறது. அவர்களும் (அன்பழகன் தரப்பினரும்) அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள். அப்போது ஊழலை ஒழிக்க எந்த முயற்சியும் எடுத்ததைப்போல தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அன்பழகன் பொது நோக்கத்தோடு இதில் ஆஜராவதாகத் தெரியவில்லை. கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தனிநபர் வாதிட அனுமதி மறுத்திருக்கிறது. அதனால், இந்த வழக்கிலும் அன்பழகன் என்ற தனிநபர் தன்னை இவ்வழக்கில் 3-ம் தரப்பு வாதியாக இணைத்துக்கொள்ள கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.

அதேபோல இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தன்னை சுதந்திரமாக வாதிடவும், எழுத்துபூர்வமாக தன் வாதத்தைப் பதிவுசெய்யவும் அனுமதி கேட்டிருக்கிறார். இவர் இந்த வழக்கில் முதல் புகார்தாரராகவும், இவ்வழக்கில் சாட்சியாகவும் இருந்து தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் அரசு வழக்கறிஞர் தனக்கு உதவியாக இருக்க சுப்பிரமணியன் சுவாமி சிறந்தவராக இருப்பார் என்று கூறியதாலும், சுப்பிரமணியன் சுவாமியை இவ்வழக்கின் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க அனுமதிக்கிறேன்.

மேலும், இறுதி வாதம் நிறைவில் சுப்பிரமணியன் சுவாமி தன் கருத்தை எழுத்துபூர்வமாக பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இவ்வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை இணைத்துக்கொண்டு சுதந்திரமாக வாதிட அனுமதிக்க முடியாது.

கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி?

சுப்பிரமணியின் சுவாமி தாக்கல் செய்த எழுத்துபூர்வ வாதம் இதுதான்... ஜெயலலிதா முதல்வர் பதவியை துஷ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்ததால் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 1979 ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கடந்த 1985 - 86-ம் ஆண்டு வருமானவரித் துறையில் தாக்கல் செய்த அறிக்கையில், தனக்கு எந்த வருமானமும் இல்லை என்று கூறி இருக்கிறார். 1984 - 89 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 1988-ம் ஆண்டு 9.2 லட்சம் செலவில் 4 கார்களும், 1.40 லட்சத்தில் ஒரு ஜீப்பும் வாங்கியுள்ளார். எந்த வருமானமும் இல்லை என்று 1985-ல் தெரிவித்தவருக்கு, எப்படி எம்.பி-யாக இருந்த காலத்தில் மட்டும் வாகனம் வாங்க வருமானம் வந்தது?

1990-ம் ஆண்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகிய 3 நிறுவனங்களைத் தொடங்கினார்கள். அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் எந்த பணப்பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஆனால், ஜெயலலிதா முதல்வரானதும் இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கூடுதலாக 29 நிறுவங்னகள் தொடங்கப்பட்டு அதில் சுதாகரன், இளவரசி பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

அந்த 29 நிறுவனங்களில் எந்தச் செயல்பாடும் இல்லாத நிலையில், அந்த நிறுவன வங்கிக் கணக்கில் மட்டும் கோடிக்கணக்கான அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றது. ஜெயலலிதா 1991-ல் முதல்வராவதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்ட பங்களா புதுப்பிக்க தனி நபரிடம் 4 லட்சம் கடன் வாங்கிய ஜெயலலிதாவுக்கு, 1991 - 96 வரை அவர் முதல்வராக இருக்கும்போது கோடிக்கணக்கான பணம் எப்படி வந்தது?

1987 - 93-ம் ஆண்டு வரை வருமானவரித் துறையில் குற்றவாளிகள் வரிகள் கட்டவில்லை. முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைப் பயன்படுத்தி மற்ற குற்றவாளிகள் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். குற்றவாளிகள் கூட்டுச்சதி செய்து வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்த்துள்ளதை கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தி உறுதி செய்துள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்!

இதையடுத்து சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்துக்கு பதில் எழுத்துபூர்வ வாதத்தை சமர்பிக்க வேண்டும் என ஜெ தரப்பு வழக்கறிஞர் குமாரும், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் நீதிபதி குமாரசாமியிடம் கேட்டார்கள். மதியம் 2.30 மணிக்கு சமர்ப்பியுங்கள் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கபடும் என்ற எதிர்பார்ப்பால் அ.தி.மு.க&வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பெருமளவு வந்திருந்தார்கள். இதனால், நீதிமன்றம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. சரியாக 2.30 மணிக்கு நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்தார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்துக்கு பதில் எழுத்துபூர்வ வாத்தை 6 பக்கங்கள் தயாரித்து கொடுத்தார். அதில், சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதம் ஆதாரமற்ற வாதம் என்பதால் இந்த நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லியிருந்தார். பவானிசிங் தன் பங்குக்கு 4 பக்கங்களில் உச்சநீதிமன்றம், பல மாநில உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எழுத்துபூர்வ வாதத்தைக் கொடுத்தார். அதையடுத்து நீதிபதி குமாரசாமி, ‘‘இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்துவிட்டதால் தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்’’ என்றார்.