ஜனதா கட்சித் தலைவர் ஆரம்பித்து வைத்த 18 ஆண்டு கால வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியால் மூன்று நிமிடங்களில் முடித்து வைக்கப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் குமாரசாமி வழங்கிய தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த கொண்டாட்ட காட்சிகளும் இந்தப் பகுதியில்...

பூசாரிகளாக மாறிய அமைச்சர்கள்!

தீர்ப்பு நாள் மே11 என்று அறிவிக்கப்பட.. தீர்ப்புக்கு முந்தைய மூன்று நாட்களும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் அமைச்சர்களே கிட்டதட்ட பூசாரிகளாக மாறிவிட்டார்கள்! அதில் ஹைலைட், வழக்கம்போல செந்தில்பாலாஜிதான்! கடந்த 5-ம் தேதி மாலை கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் ‘அம்மா’ என்ற எழுத்துகள் இருப்பதுபோல ஒரு லட்சத்து எட்டு விளக்குகள் வைத்து பூஜை நடத்தினார். இதற்காக 7,200 லிட்டர் நெய் வாங்கப்பட்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் நடக்கவே இடம் இல்லாத அளவுக்கு விளக்குகளால் நிரம்பியிருந்தது. விடியவிடிய அந்த விளக்குகள் அணையாமல் எரிய... மறுநாள் 6-ம் தேதி காலை நவக்கிரஹ சாந்தி ஹோமம், அஸ்திர ஹோமம் என்ற பிரமாண்ட ஹோமங்களையும் நடத்தினார் செந்தில்பாலாஜி. தீர்ப்புக்கு முதல் நாள் தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்கள் அனைத்திலும் அணையா விளக்கு ஏற்றிவைக்கச் சொல்லியும் உத்தரவு பறக்க... அதன்படி அணையா விளக்கும் ஏற்றப்பட்டிருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள பிரதாப வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் தொடர்ந்து ஹோமம் நடத்தி வந்தவர் அமைச்சர் வைத்திலிங்கம். முதல்நாள் இந்தக் கோயிலில் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் வைத்திலிங்கம். ‘யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கக்கூடிய ஆற்றல்படைத்தவனே... என்னுடைய காரியங்களையும் சாதித்துத்தருவாயாக!’ என்று ஆஞ்சநேயரிடம் மனமுருக வேண்டி இருக்கிறார் வைத்திலிங்கம். அந்த ஆஞ்சநேயர்தான் நேரில் வந்து அருள் பாலித்துவிட்டதாக நினைக்கிறார் வைத்திலிங்கம். கோவை மாவட்டம் ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலில் விளக்குபூஜை, தென்கயிலை என்று சொல்லப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் 108 திரவியங்களுடன் சத்ரு சம்ஹார ஹோமத்தை நடத்தியிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இப்படி ஒவ்வொரு அமைச்சர்கள் தொடங்கி கட்சியில் அடிமட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் வரை யாரும் ஒரு கோயிலையும் விடவில்லை.!

அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் எந்த நேரமும் ‘ஓம்.. க்ரீம்... க்ரீம்!’ என்று மந்திரவாதி வீடுபோல சத்தம் கேட்டபடியே இருந்தது. பால்குடம், காவடி என்று செல்லூர் ராஜு வேண்டாத தெய்வம் இல்லை! போகாத கோயில் இல்லை. திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு அமைச்சர் காமராஜ் தலைமையில் 6,667 பெண்கள் பால்குடம் தூக்கி வந்தனர். வருடத்துக்கு ஒருமுறை திருவிழா நடந்த கோயில்கள் எல்லாம் தினம் தினம் திருவிழா ஆனது. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது பவரைக் காட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு விதவிதமான பிரார்த்தனைகளைச் செய்தனர்.

மூன்று நிமிடத்தில் முடிந்த தீர்ப்பு!

தீர்ப்பு நாள் மே 11 என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்தனர். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்ற அறை எண்14 இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குமாரசாமி சரியாக 10.47-க்கு தீர்ப்பை வாசிக்கத் துவங்கினார். "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.

மேலும், ''வருமானத்தைவிட 10 விழுக்காட்டுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் தண்டனை வழங்கலாம். ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 விழுக்காடு இருக்கிறது. இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது. வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை'' என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

தீர்ப்பு முழு விவரம்!

ஜெயலலிதாவை விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

* மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு தரப்பின் வாதம் உண்மையானது என்றும், மேல்முறையீட்டு மனுதாரர்களின் குற்ற நிரூபணம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை நீதிமன்றங்களை போலவே, மேல்முறையீட்டு நீதிமன்றத்தையும் திருப்திப்படுத்த வேண்டும்.

* விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் இந்த நீதிமன்றத்தை திருப்திப்படுத்த வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வேலை. அந்த வகையில், விசாரணை நீதிமன்றத்துக்கு உள்ள அதே அதிகாரங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் உள்ளன.

* அதன்படி, ஆதாரங்களை ஆராய்ந்தால், விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகள் தவறானவை, ஆதாரங்களுக்கு முரணானவை என்றே சொல்லத் தோன்றுகிறது.

* இந்த வழக்கில், வருமான வரித்துறையின் மதிப்பீட்டை விசாரணை நீதிமன்றம் பெரிய ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவில்லை.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தியன் வங்கியில் கடன் பெற்றதை விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த கடனை ஒரு வருமானமாக கருதவில்லை. இதன்மூலம், கடனை வருமானமாக கருதாத தவறை விசாரணை நீதிமன்றம் செய்துள்ளது.

மேலும், கட்டுமான செலவு தொடர்பான ஆதாரங்களை முறையாக ஆராய தவறி விட்டது. கட்டுமான செலவாக, 20 சதவீத செலவை கழித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக முடிவு செய்து விட்டது. இந்த 20 சதவீத கழிவு என்பது சந்தேகத்துக்கு உரிய வகையிலும், யூகத்தின் பேரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

* மேலும், (சுதாகரன்) திருமண செலவை ரூ.3 கோடி என்று விசாரணை நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது. அந்த ரூ.3 கோடியை முக்கிய குற்றவாளிதான் (ஜெயலலிதா) செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அதையும் மீறி, திருமண செலவு ரூ.3 கோடி என்ற முடிவுக்கு வந்துள்ளது.

* திருமண செலவு ரூ.3 கோடி என்றும், அந்த தொகையை முக்கிய குற்றவாளியின் செலவு கணக்கில் சேர்த்ததும் முறையல்ல.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்வைத்த பெரும்பாலான வாதங்களை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்கு சாதகமான முறையில் அரசுத்தரப்பு கேள்விகள் கேட்டுள்ளது.

* குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக இதை கருத வேண்டும். சாட்சிகள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.

* மேலும், முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் சொத்துகள் வாங்கப்பட்டதாக யூகிப்பது கடினம். எனவே, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.

* ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் விசாரணை நீதிமன்றம் ஆராயவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கித்தான், அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

* 4 குற்றவாளிகளும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முக்கிய குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.

* ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான், அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.

* ஆனால், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேரும், பெருமளவு கடன் வாங்கி, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.

* எனவே, வருமானம் வந்த வழி, சட்டப்பூர்வமானது. நோக்கம், சட்டப்பூர்வமானது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக, 4 பேரும் சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது.

* ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும்போது, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது. சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது.

* குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது. கட்டுமான செலவாக ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 945-ஐயும், திருமண செலவாக ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 என்று மதிப்பிட்டுள்ளது.

* மிகைப்படுத்தப்பட்ட கட்டுமான செலவையும், திருமண செலவையும் கழித்து விட்டோம் என்றால், மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆகும். ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்பு குறைவாகவே இருப்பதால், அந்த செலவை நான் கழிக்கவில்லை.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ஆகும்.

* சொத்து மதிப்பில் இருந்து மொத்த வருமானத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இதுவே, வருமானத்துக்கு மீறிய சொத்து ஆகும். இந்த தொகை மொத்த வருமானத்தில் 8.12 சதவீதமே ஆகும்.

* கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்பவரின் வழக்கில், சொத்துக்குவிப்பு வருமானத்தை விட 10 சதவீதம்வரை இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

* சொத்து குவிப்பு வருமானத்தை விட 20 சதவீதம்வரை இருந்தால், அதை அனுமதிக்கத்தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத்தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

* இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே இருப்பதால், அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.

* முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது, சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.

* ஆகவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், சிறைத் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.

* அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஆச்சர்ய ஆச்சார்யா... அதிர்ச்சி சுவாமி!

''இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. சில தீர்ப்புகள் ஆச்சரியமளிக்கத்தான் செய்யும்!' - தீர்ப்புக்குப் பின்னர் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா சொன்ன கருத்து இது. அத்துடன், ''வாதத்தை வாய்மொழியாக எடுத்து வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்ய ஒருநாள் மட்டுமே அவகாசம் கிடைத்தது'' என்றார்.

இந்த வழக்கின் சூத்ரதாரியான சுப்பிரமணியன் சுவாமி, ''கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. கர்நாடக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒருவேளை கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும். குஜராத் கலவர வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை போன்று, அந்த அடிப்படையில் நான் மேல் முறையீடு செய்வேன்'' என்றார்.

கொண்டாடி தீர்த்த அதிமுகவினர்!

தீர்ப்பு வந்த தினத்தன்று தமிழகத்தின் பல இடங்களில் லேசான மழை பெய்ய... 'எங்கள் தலைவியின் விடுதலையை வருண பகவானே கொண்டாடுகிறார்' என்று அதிமுக தொண்டர்கள் இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி தீர்த்தனர்.

தீர்ப்பு வெளிவந்த அடுத்த விநாடி கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அதிமுக வழக்கறிஞர்கள், தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். தீர்ப்பு செய்தி டி.வி-க்களில் ஃப்ளாஷ் செய்தியாகவும், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மூலமாகவும் வைரலாக பரவ... தமிழகத்திலும் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். போயஸ் கார்டனில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை யானை கவுனியில் சக்தி சிவன் என்ற அதிமுக தொண்டர் கொடி கட்டும்போது மின்சாரம் பாய்ந்து பலியானது சோகம்.

கருணாநிதியின் கேள்விகள்!

ஜெ. வழக்கு தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை உதிர்த்துகொண்டிருக்க... திமுக தலைவர் கருணாநிதி சில கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

"நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது.

கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா குறித்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தான் நினைவுக்கு வருகிறது.

29-1-2015 அன்று விசாரணையின்போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, “சொத்துக்குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை” என்று கூறினார்.

நீதிபதி குமாரசாமி தெரிவித்த அந்த முடிச்சுகள் இப்போது அவிழ்க்கப்பட்டு விட்டனவா? 16-2-2015 அன்று ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பி.குமார் “இது அரசியல்ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய்வழக்கு” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர். குமாரசாமி, “இது பொய் வழக்கு, பொய் வழக்கு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள். ஆனால், குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய் வழியாக பொய் வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத் தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை” என்றார். அரசுத் தரப்புக் குற்றச்சாட்டினை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக எந்தத் தகவலும் இல்லை!

மீண்டும் ஒரு முறை நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம், “தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82 - 92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களை காட்டவும் இல்லை. 30 - 35 சதவிகிதம் வரைதான் வாதிட்டிருக்கிறீர்கள் என்றார்.

அப்போது ஜெயலலிதா வழக்கறிஞர், “35 மார்க் எடுத்தாலே பாஸ்தான்” என்றார். அதற்கு நீதிபதி குமாரசாமி “பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் எதிர் தரப்பைவிட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் பண்ண முடியும். அப்படிப் பார்த்தால் உங்களைவிட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ்” என்று பதிலளித்தார். தற்போது ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கிவிட்டதாக நீதிபதி குமாரசாமி முடிவுக்கு வர என்ன நடைபெற்றது? எங்கே நடைபெற்றது?

இதற்கெல்லாம் விடை காணத்தான் கர்நாடக அரசின் சார்பில் அண்மையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா இன்று தீர்ப்பு வெளியானதும் “இதுவே இறுதி தீர்ப்பல்ல; இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும்“ என்று கூறியிருக்கிறார்.

எனவே இன்று சொல்லப்பட்டிருப்பது இறுதி தீர்ப்பல்ல. “நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது” என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதைத் தான் இப்போது எல்லோருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.

புடம் போட்ட தங்கமாக மீண்டுள்ளேன்! - ஜெயலலிதா

தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து ஜெயலலிதா போயஸ்கார்டனில் இருந்து வெளியில் வந்து தொண்டர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் கோயிலுக்குச் செல்வதற்காக வெளியில் வருவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால். போயஸ்கார்டன் கதவுகள் திறக்கப்படவில்லை. அவர் தரப்பில் இருந்து உற்சாக அறிக்கை மட்டுமே வெளியானது. அந்த அறிக்கையில், "இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது.

நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது.

இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு. சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும்தான் கிடைக்கும்.

திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது. இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது.

என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும்.

நேற்று (10.5.2015) கூட நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி இருக்கலாம்.

தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன்" என்றார்.

ஜெயலலிதா முதலமைச்சர் பதவி ஏற்பது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என அடுத்த கட்டத்தை நோக்கி வழக்கு நகரத் தொடங்கியது.