வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (23/08/2017)

கடைசி தொடர்பு:10:35 (23/08/2017)

புழற்கோட்டம், புலியூர்க்கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம்... சென்னையின் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு! #Chennai378

"உங்களுக்குத் தெரிந்த ஒரு பழைமையான ஊரின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், யாருமே சென்னையின் பெயரைச் சொல்வதில்லை. ஆங்கிலேயர்களுக்குப் பிறகே சென்னையின் வரலாறு தொடங்குவதாக சிலர் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையும், தொன்மைச் சிறப்பும் கொண்டது சென்னை. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ரங்கராஜன். 

சென்னை

சென்னை தினத்தை முன்னிட்டு 'சென்னை-2000 பிளஸ் டிரஸ்ட்'  ஏற்பாடு செய்திருந்த 'சென்னை மாதம்' தொடர் நிகழ்ச்சியில் ரங்கராஜன் பேசியதில் இருந்து... 

* ''1000 வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தின் வடபகுதி 'தொண்டை மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில், புழற்கோட்டம், புலியூர்க்கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவிற்கோட்டம், வேலூர்க்கோட்டம் என 24 கோட்டங்கள் இருந்துள்ளன. இந்தக் கோட்டங்களுள் புலியூர்க்கோட்டம் நிர்வாக ரீதியாக சிறப்புற்று விளங்கியது. இன்று கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் புலியூர்க்கோட்டம், 1000 ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கத்தைத் தன்னுள் கொண்டிருந்த மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக இருந்தது. அன்றைய புலியூர்க்கோட்டத்தின் ஒரு பகுதியான குன்றத்தூர் வளநாட்டில்தான் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் தோன்றினார்.ரங்கராஜன்

* வியாக்கிரபாதர் என்ற முனிவர், தினமும் அதிகாலையில் வண்டுகள் மொய்க்காத மலர்களைப் பறித்து சிவபெருமானை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் பூக்களைப் பறிப்பதற்காக கூரிய கண்பார்வையும், மரங்களில் பற்றி ஏறுவதற்கு புலிக்கால் நகங்களையும் வேண்டி சிவபெருமானை பிரார்த்தித்தார். சிவபெருமானும் அவ்வாறே வழங்கினார். பின்னாளில் அவர், 'புலிக்கால் முனிவர்' என்று போற்றி அழைக்கப்பட்டார். இவர் வழிபடுவதற்காக பிரதிஷ்டை செய்து வழிபட்ட  சிவபெருமான், வேங்கீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். புலிக்கால் முனிவரின் பெயரில் அந்தப் பகுதி புலியூர் என்று அழைக்கப்பட்டது.

*அக்காலத்தில் புலியூரில் இருந்த (இன்றைய கோடம்பாக்கம்) வேங்கீஸ்வரர் திருக்கோயிலில் பல திருவிழாக்கள் நடைபெற்றுள்ளன. திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள படம்பக்கநாதர், வேங்கீஸ்வரர் ஆலயத்தில் மகிழடி சேவை நிகழ்த்தியுள்ளதை கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. அந்த நிகழ்வில் இரண்டாம் ராஜாதிராஜ சோழன்  பங்கேற்றதையும், அவருடன் 'ஞானாமிர்தம்' என்ற நூலின் ஆசிரியரான வாகீச முனிவர் இருந்ததையும் கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. 12-ம் நூற்றாண்டில் (1145-1205) தான் வாகீச முனிவர் வாழ்ந்துள்ளார். அதைவைத்துப் பார்த்தால், வேங்கீஸ்வர் ஆலயம் மற்றும் புலியூர்க்கோட்டத்தின் பழைமையை நம்மால் தெளிவாக அறியமுடியும். வியாக்கிரபாதர் முனிவர், பதஞ்சலி முனிவருடன் திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம் போன்ற தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டிருக்கிறார். வேங்கீஸ்வரர் திருக்கோயிலில் இவர்களுடைய சிலைகள் இருப்பதைக் காணலாம்.

"இருள்நெறி மாற்றித்தன் தாள் நிழல் இன்பம் எனக்களித்தான் அருள்மொழித் தேவன்! நற் கோடலம் பாகை அதிபன்! எங்கோன்! திருநெறி காவலன்! சைவ சிகாமணி! சில் சமய மருள்நெறி மாற்ற வரும் பரமானந்த மாமுனியே! - என்று ஒரு பாடலில் தெரிவிக்கிறார் வாகீச முனிவர். இந்தப் பாடல் மூலம், வாகீச முனிவர் மட்டுமன்றி, அவருடைய குருவான பரமானந்த முனிவரும் புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த கோடம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. 

* முதல் குலோத்துங்கச் சோழன் காலத்தில், சென்னையின் எழும்பூர் பகுதி இருந்துள்ளது சில செப்பேடுகளின் மூலம் தெரியவந்துள்ளது. முதலாம் ராசேந்திரச் சோழனின் காலக்கட்டத்தில்  பதியப்பட்ட செப்பேடுகளில் நுங்கம்பாக்கமும், விசயநகர அரசர்களின் சாசனங்களில் புதுப்பாக்கம், வேப்பேரி, செம்பியம், வியாசர்பாடி ஆகிய இடங்களும் இடம்பெற்றுள்ளன.

அதற்கு முன்னரும் கூட, 7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நாவுக்கரசர் இயற்றிய தேவாரப் பாடல் ஒன்றில், எழும்பூர் குறிப்பிடப்பட்டுள்ளது. "இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழர் எறும்பியூர் ஏராரும் ஏம கூடம் கடம்பை இளங்கோயில் தன்னினுள்ளும் கயிலாய நாதனையே காணலாமே!'' என்று முடிகிறது அந்தப் பாடல்.

எழும்பூர்

மகேந்திரவர்ம பல்லவனின் காலத்தில் கட்டப்பட்ட பல்லாவரத்தின் குகை மண்டபங்கள் குறித்த பழைமை அனைவரும் அறிந்த ஒன்றே. 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட குகை ஓவியங்களின் மூலம் இதற்கான ஆதாரங்களைக் காணலாம். முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிக்குப் பிறகு, பல்லாவரத்துக்கு 'வானமாதேவி சதுர்வேதிமங்கலம்' என்ற பெயரும் அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த குகை மண்டபங்கள் தர்காக்களாக இருந்துவருகின்றன.

இன்றைக்கு பூந்தமல்லி என்ற பெயரில் உள்ள இடம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் காலத்திலேயே இருந்துள்ளது. முதல் குலோத்துங்க சோழனின் காலத்தில்,  'எழும்பூர் நாடு'  பெயரில் வடக்கு நிர்வாகப் பகுதிக்கு தலைநகரமாக எழும்பூர் இருந்துள்ளது. புலியூர்க் கோட்டம் பிரிவுக்கு கீழ்கொண்டுவரப்பட்ட சுரட்டூர் நாட்டின் சிறு பகுதிதான் தாம்பரம். 12 முதல் 15-ம் நூற்றாண்டு வரை, தாம்பரம் பகுதியைச் சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்கள் ஆண்டு வந்துள்ளனர். 

திருநீர்மலை கோயில்

 1280-களில், தாம்பரத்தின் பெயர் குணசீலநல்லூர். சோமங்கலம் பகுதியில் பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்களின் ஆளுமை அடுத்தடுத்து இருந்து வந்துள்ளதை அப்பகுதியில் உள்ள கோயில் சிற்பங்களின் கலைநயம் மூலம் தெளிவாகக் காணலாம்.

ஶ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள மணிமங்கலம் பகுதி, சில வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளைக் கொண்டது. நரசிம்மவர்ம பல்லவருக்கும், சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிக்கேசிக்கும் இந்த இடத்தில்தான் போர் நடைபெற்றது. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'சிவகாமியின் சபதம்' வரலாற்று நாவலில் மணிமங்கலம் இடம்பெற்றிருப்பதன் மூலம் இதனை தெரிந்துகொள்ளலாம். மட்டுமன்றி, மணிமங்கலத்தில் இருக்கக் கூடிய சிவன் கோயிலைப் பார்க்கும்போது, சோழர் காலத்து கோயில் என்பதும் தெளிவாகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்