கயிலையே மயிலை, மயிலையே கயிலை... கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்!

மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் இங்கே...

மயிலையே கயிலை

சப்த சிவஸ்தலங்கள்:

1.ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில், 2.ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில், 3.ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில், 4.ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில், 5.ஶ்ரீவாலீஸ்வரர் கோயில், 6.ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில், 7.ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில். இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த முறையிலேயே நாமும் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்போம்.

காரணீஸ்வரர்

1) ஶ்ரீகாரணீஸ்வரர்  கோயில்:

12 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

தீர்த்தபாலீஸ்வரர்

2) ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்:

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம்  ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். இது திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் உள்ளது. பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும்.

 

வெள்ளீஸ்வரர்

3) ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்:

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட  திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.

 

வழிபடும் முறை

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள்.

விருபாக்ஷீஸ்வரர்


4) ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்:

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார்.  இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.

வாலீஸ்வரர்

5) ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்:

‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஶ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். 5-வதாக வழிபடவேண்டிய கோயில் இது.

 

 

மல்லீஸ்வரர்

6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்:

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 6-வதாக வழிபடவேண்டிய ஆலயம் இது.

 

 

 

கபாலீஸ்வரர்

7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்:

மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் நிறைவாக தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.

 

மயிலை பழைய படம்

புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் 7-வதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றது போலும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!