வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (23/08/2017)

கடைசி தொடர்பு:10:33 (23/08/2017)

சென்னை, மதுரை, கோவையில் யானை முகனுக்கு ஞானதீபத் திருவிழா..!

பிள்ளையார்- தனக்கு  மேல் ஒரு தலைவன் இல்லாத தெய்வம் ஆதலால் அவருக்கு விநாயகர் என்று திருப்பெயர். அதேநேரம், அவருக்கான வழிபாடுகளோ மிக மிக எளிமையானவை. அச்சு வெல்லம் போதும் அவருக்குப் படைக்க. இயற்கையின் வரமாய் அடர்ந்து வளர்ந்திருக்கும் அறுகம்புல் போதும் அவரை அர்ச்சிக்க.

தீபத் திருவிழா

‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்பார்கள் பெரியோர்கள். சாணம் என்றாலும் சரி, வெல்லம் என்றாலும் சரி பிடித்துவைத்து  ஒரு திலகமிட்டால் போதும் அதில் கோலாகலமாக எழுந்தருளி விடுவார் பிள்ளையார்!

இயற்கையின் அம்சங்கள் யாவற்றிலும் உறைந்திருக்கும் பிள்ளையாரை, எந்தெந்த பொருள்களில் செய்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று ஞானநூல்கள் விளக்குகின்றன.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபட்டால், சர்வ மங்கலங்களும் உண்டாகுமாம்.

வெல்லப் பிள்ளையார் கசப்பான அனுபவங்களை நீக்கி வாழ்க்கை இனிக்க வரம் தருவார்.

சந்தனப் பிள்ளையார் சந்தோஷமும் வெற்றியும் தருவார்.

பிள்ளையார்

இவைபோன்று தானியங்கள், வெள்ளெருக்கு வேர், இலைதழைகள் முதலானவற்றிலும் முழுமுதற் கடவுளாம் பிள்ளையாரை உருவாக்கி வழிபடும் வழக்கம் உண்டு.

பெரிய பெரிய ஆலயங்களில் மட்டுமின்றி ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும்கூட கோயில் கொண்டிருப்பார் விநாயகர். அந்த நீர்நிலைகளில் தண்ணீர் மோந்து அவரை அபிஷேகித்து, அங்கே வேலிகளில் பூத்திருக்கும் சங்குபுஷ்பங்களைப் பறித்து அவருக்குச் சமர்ப்பித்து வழிபட்டால் போதும்; சந்தோஷமாய் அருள்பாலிப்பார் பிள்ளையார். ஆம், இயற்கையோடு ஒன்றியது பிள்ளையார் வழிபாடு!

அதேபோல், பிள்ளைகளுக்குப் பிடித்த தெய்வமும் அவராகத்தான் இருக்க முடியும். தும்பிக்கையும், யானை முகமும், பெருத்த தொந்தியும் கொண்ட கணபதியைப் பார்த்த மாத்திரத்திலேயே குதூகலிப்பார்கள் குழந்தைகள்.

அதுமட்டுமா? பிள்ளையார் ஞான சொரூபம். அவருக்கு அவல் பொரிகடலைப் படைத்து, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், பிள்ளைகள் நன்கு படிக்கவும், படித்தது அவர்கள் மனதில் மறக்காமல் நிலைத்து நிற்கவும் அருள்பாலிப்பார் என்பது பெரியவர்கள் அனுபவத்தில் கண்டுணர்ந்து சொன்ன வழிகாட்டல்.

ஆக... இயற்கையோடு இயைந்த தெய்வமாம் பிள்ளையாரை, அவருக்குப் பிடித்த பிள்ளைகளோடு தீபவொளி துலங்க கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் அல்லவா?

அப்படியானதோர் அற்புத வாய்ப்பு நமக்கு. வரும் விநாயகர் சதுர்த்தியை அடுத்து வரும் ஞாயிறன்று (27.8.17) தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் ஞான தீபமேற்றி பிள்ளைகளோடு கொண்டாடப்போகிறோம் பிள்ளையாரை.

ஆம்! சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘ஆனை முகனுக்கு ஞான தீபத் திருவிழா’ சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகரத்தில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது.

புதிர்ப் போட்டி, ஓவியப் போட்டி, ஆடை-அலங்காரப் போட்டி, பாடல் மற்றும் கதை சொல்லும் போட்டி என சிறப்புப் போட்டிகளோடும் பரிசுகளோடும் நிகழவுள்ள இந்தத் திருவிழாவில்  நீங்களும் உங்கள் பிள்ளைகளோடு கலந்துகொண்டு ஆனைமுகனின் அருள் பெற்றுச் செல்லுங்கள்.

ஆனை முகன்

உங்கள் இல்லமும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் தீபச் சுடராய் ஒளிரட்டும்!

முன்பதிவுக்கு: 044-28524054

* ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர (காலை 10 முதல் மாலை 5:30 வரை முன்பதிவு செய்யலாம்)

நாள்: 27.8.17 - ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9:30 AM - 1:30 PM

விழா நடைபெறும் இடங்கள்

சென்னை: ‘ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (இன்ஃபோசிஸ் ஹால்), 71, பஸுல்லா ரோடு, தி.நகர், சென்னை-17

மதுரை: SPJ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அவுனியாபுரம், திருப்பரங்குன்றம் ரோடு (கல்குளம்), மதுரை-625 012

கோவை: ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா, 182, SIHS காலனி, சிங்காநல்லூர், கோவை-5

உங்கள் கவனத்துக்கு...

* காலை 9 மணிக்கே விழா நடைபெறும் இடத்துக்கு  வர வேண்டுகிறோம்.

* ஆடை அலங்காரப் போட்டிகளில் கலந்துகொள்வோர் பிள்ளையார், முருகன், கண்ணன், ராதை, அம்பாள் முதலான தெய்வ வேடங்களைத் தேர்வு செய்யலாம். விழாவுக்கு வரும்போதே பிள்ளைகளை/மாணவர்களை உரிய வேடமிட்டு அழைத்து வருவது சிறப்பு.

* ஓவியப்போட்டிக்குத் தேவையான உபகரணங்களை நீங்களே எடுத்து வரவேண்டுகிறோம்.

* வீட்டில் இருந்து நீங்கள் செய்து கொண்டுவரும் விநாயகர் சிலை, முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களால் ஆனதாக இருக்கவேண்டும். களிமண், தானியங்கள், காய்கறிகள், இலைகள் முதலான இயற்கைப் பொருள்களிலேயே பிள்ளையாரை உருவாக்கிக் கொண்டு வாருங்கள்.

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்