வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (24/08/2017)

கடைசி தொடர்பு:14:17 (17/11/2017)

குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இருக்குமா? #Astrology

தமிழக அரசியலில் உச்சபட்ச குழப்பம் நிலவுகிறது. பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். சேர்ந்தவர்கள் பிரிகிறார்கள். நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடும் வார்த்தைகளால் விமர்சித்துக்கொண்ட எடப்பாடி  பழனிசாமியும், ஓ.பி.எஸ்-சும் கைகுலுக்கி ஓரணியில் இணைந்துவிட்டார்கள்.

OPS-EPS

சில மாதங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னணியாக இருந்த தினகரன், இன்று கொஞ்சம் எம்.எல்.ஏ-க்களோடு தனி அணியாக பிரிந்து நிற்கிறார். தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துக் கடிதம் கொடுத்துவிட்டனர். இந்த ஆட்சி சில மாதங்களில் கலைந்து விடும் என்கிறார்கள் சிலர். 'இல்லை... இல்லை... ஆட்சிக்காலம் முழுவதும் கண்டிப்பாக நீடிக்கும்' என்கிறார்கள் சிலர்.

உண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா? குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இருக்குமா? பிரபல ஜோதிடர்களிடம் கேட்டோம். 

குருப்பெயர்ச்சி

ஜோதிடர் பெருங்குளம்  ராமகிருஷ்ணன்:

 "முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஜாதகத்தின்படி, அவர் பிறந்தது உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னம். கடக லக்னத்தில் பிறந்த பழனிசாமிக்கு பாதகாதிபதி சனி திசையில் சுகஸ்தானாதிபதி சுக்கிர புக்தி நடந்து வருகிறது. மேலும், சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருக்கிறார். 

இவருடைய ஜாதகத்தில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. லக்னாதிபதி சந்திரன், சூரியன் சாரம் பெற்று, இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறது. தனாதிபதி சூரியன் பத்தாமிடத்தில் உச்சமாக இருக்கிறது. மதியூக கிரகம் சனி உச்சமாக இருந்து, பத்தாமிடத்தைப் பார்ப்பது, லக்னத்தை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்ப்பது எல்லாம் விசேஷம்தான். 

எடப்பாடி பழனிச்சாமி

பாதகாதிபதி திசையில் இருக்கும் முதல்வருக்கு, உடன் இருப்பவர்களே பாதகம் செய்யும் தன்மை நடந்து கொண்டிருக்கிறது. கோசார ரீதியாக எல்லாம் சரியாக இருந்தாலும், லக்ன ரீதியாக சில சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

ஓ.பி.எஸ்-சைப் பொறுத்தவரை, 1951-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம்  தேதி பிறந்திருக்கிறார். அவரின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம், லக்னம் சிம்மம்.  சூரியன், தனது சுயசாரமான உத்திராடம் நட்சத்திரத்திலும், செவ்வாய் தனது நட்சத்திரமான அவிட்டம் நட்சத்திரத்திலும் சாரம் பெற்றிருக்கின்றனர். பெருங்குளம் ராமகிருஷ்ணன்

அரசாங்கம் சார்ந்த விஷயங்களுக்கு சில முக்கியமான கிரகங்கள் வலுவாக இருக்கவேண்டும். அரசாங்க கிரகமான சூரியன், அதிகாரத்துக்குரிய கிரகம் செவ்வாய், மதியூக கிரகமான சனி ஆகிய கிரகங்கள் இவரின் ஜனன கால ஜாதகத்தில் வலுவாக இருக்கின்றன. மேலும், குரு ராகுவின் சாரத்திலும் ராகு குருவின் சாரத்திலும் இருப்பது நல்ல அம்சம். 

ஓ.பி.எஸ் பிறந்த மீன ராசியும் எடப்பாடி பழனிசாமி பிறந்த சிம்ம ராசியும் சஷ்டாஷ்டகத்தில் வந்தாலும், இருவரது லக்னமும் நட்பு லக்னமாக வருவதால், இருவருக்கும் மனநிலை பரஸ்பரம் பொருந்திப் போகும். 

அடுத்து இரண்டு அணிகளும் இணைந்த நேரம், ஆவணி மாதம் 5- ம் தேதி, ஆகஸ்டு 21- ம் தேதி (திங்கள்கிழமை). கிரகநிலையைப் பொறுத்தவரை, மதியம் 2.01 முதல் 4.13  மணி வரை  தனுசு லக்னம். இந்த நேரத்தில் இணைவு ஏற்பட்டதால், பிரஸன்ன ஜோதிடப்படி அரசு 2019 வரை நீடிக்கும். அதன் பிறகு ஆட்சி கவிழ வாய்ப்பிருக்கிறது. ஆனால், இருவரது சுய ஜாதகப்படியும் பாதகாதிபதி வலுத்திருப்பதால், உடன் இருப்பவர்கள், ஆபத்தான நேரத்தில் காலை இடறி விடும் வாய்ப்புகள் அதிகம்''.

இரு அணிகள் இணைப்பு

 

ஜோதிடர்  சூரியநாராயணமூர்த்தி: 

இருவருடைய ஜாதகங்களையும் பார்த்த வகையில், 'தற்போது நடக்கும் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இருவருடைய ஆளுமைத் திறனையும் ஜாதக ரீதியாக ஆய்வு செய்யும்போது ராஜாங்க கிரகங்களான சூரியன், குரு, செவ்வாய் ஆகியோரின் பலம் சற்றுக் குறைவாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிம்மலக்னம் என்பதால் பிடிவாத குணம் இருக்கும். சூரியன் 6-ம் இடத்தில் இருப்பதால், தனது பிடிவாத குணத்தால் எதிரிகளுடன் மௌனயுத்தம் நடத்தியே வென்றுவிடுவார். சூரியநாராயணமூர்த்தி

அதேவேளையில் எடப்பாடி பழனிசாமியோ கடக லக்னம் என்பதால், ராஜதந்திரியாக வலம் வருவார். இவருடைய இந்த குணம்தான் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி பெறவைத்திருக்கிறது. எதிரியிடமும் சென்று, இங்கிதமாகப் பேசி காரியம் சாதித்து விடுவார். இதனால்தான் இணைப்பு முயற்சியை இவரால் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. 

ஜோதிடர் மணிவேல்:

வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் குருப்பெயர்ச்சி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இருக்காது. குரு 3, 6, 8 மற்றும்12 -ம் இடங்களுக்கு வரும்போது எதிர்பாராத பாதிப்புகளை உருவாக்கலாம். 

''3,6,8, 12- ல் குரு வந்தால்,

கூர்கெட்டு மன்னவனும் குடி ஒக்கும்

கொல்லாமல் நினைத்துக்கொல்லும்'' என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. மேலும், டிசம்பரில் நடக்கும் சனிப்பெயர்ச்சியும் ஆட்சியாளர்களுக்கு முரணாகத்தான் இருக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்