வெளியிடப்பட்ட நேரம்: 06:16 (25/08/2017)

கடைசி தொடர்பு:11:13 (25/08/2017)

நள்ளிரவில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்.! #VinayagarChaturthi

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். இதையொட்டி, தமிழகம் உள்பட நாடுமுழுவதும் திருவிழா கோலம் காணும். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடுவது வழக்கம். பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். 

களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள்

ஏற்கெனவே கடந்த ஒருவார காலமாக, பிள்ளையார் சிலை வைப்பதற்கான இடங்களைத் தயார் செய்தல், கொடிதோரணம் கட்டுதல்... எனப் பல்வேறு பணிகளைத் தொடங்கி இருந்தாலும், நேற்று நள்ளிரவில்தான் வழிபாட்டுக்கான விநாயகர் சிலைகள் அந்தந்த இடதுக்கு வந்து சேர்ந்தன. சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலா சிலைகள் புரசைவாக்கத்தையடுத்த கொசப்பேட்டை, சவுகார் பேட்டை போன்ற இடங்களிலிருந்து வாங்கப்பட்டு வழிபாட்டு இடத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இதனால் இன்று இரவு முதலே அழகிய கலை வேலைப்பாடுகளுடன், பல்வேறு வர்ணங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் தெருக்களையும் சாலைகளையும் அலங்கரிங்க தொடங்கிவிட்டன.

விநாயகர் சிலைகள்

இதேபோன்று சென்னை முழுவதும் விதவிதமாகக் கோணத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை முதல் பூஜைகள் நடத்தப்பட்டு, இரண்டொரு நாள்களில், விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

பிள்ளையார் சிலைகள்

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் கார்போரண்டன் யூனிவர்சல் கம்பெனியின் பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் சிலைகளைக் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்புக்கு மட்டும் 18 ஆயிரம் காவலர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 'மாற்று மதத்தினர் மனம் புண்படும்படியான போஸ்டர்கள் ஒட்டுவது, ஒலிபெருக்கியில் பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்', 'அனுமதியளிக்கப்பட்ட நேரத்தில், ஊர்வலத்தை துவக்க வேண்டும்', 'நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தினுள் ஊர்வலத்தை நிறைவு செய்ய வேண்டும்'... போன்ற பல்வேறு கோரிக்கைகளை விநாயகர் சிலை பிரதிஷ்டை குழுவினருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.