வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (25/08/2017)

கடைசி தொடர்பு:17:24 (26/08/2017)

"நானும் ஒரு காலத்தில விநாயகர் சிலை வித்தவன் தான்"- பாண்டியராஜன் வீட்டில் கலகல விநாயகர் சதுர்த்தி!

னிதன் கடவுளின் ஷ்ருஷ்டி என்பது இந்து மத ஆன்மிகத்தின் அடிப்படை. அதே மனிதனுக்கு தன்னைப் படைக்கும் வாய்ப்பை கடவுள் விட்டுத்தருவது விநாயகர் சதுர்த்தி தினத்தின் சிறப்பு. மனிதனுக்கு இந்தப் பெருமையை அளிக்கும் ஒரே கடவுள், விநாயகர். விநாயகர் சதுர்த்தியான இன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கிவந்து வீட்டில் வைத்து அதற்கு சிறப்பான குடை, மாவிலைத் தோரணம், விநாயகருக்கு பி்டித்தமான அருகம்புல், எருக்கம் பூ மாலை, இவற்றை பக்தியோடு வீட்டுக்கு வாங்கி வந்து படைத்து முக்கண் முதல்வனும் முருகனுக்கு மூத்தவனுமான விநாயகரின் ஆசியைப் பெறுகிறோம். இது, ஒவ்வொரு வீடுகளிலும் நிகழும் இன்றைய சிறப்பான நிகழ்வு. 

விநாயகர்

விநாயகரைப் போற்றும் குடும்பங்களில் இன்று ஒருதினம் களிமண்ணால் விநாயகரின் சிலையை தாங்களே செய்து வணங்குவது சிறப்பு. ஆனால் கட், காபி, பேஸ்ட், செண்ட் என மனிதனின்  எல்லா நடவடிக்கைகளும் சுருங்கிவிட்ட இன்றைய வாட்ஸ்அப் உலகில் விநாயகருக்கு அந்த வாய்ப்பு ரொம்பக் குறைவு. அதற்காகவே கடைகளில்  ரெடிமேடாக விற்கப்படும் சிலைகளை தங்கள் பொருளாதாரத்துக்கு தக்கவகையில் வாங்கிவந்து வணங்கி மகிழ்கிறார்கள் மக்கள்.

ஆனால், இன்றும் அரிதாக சில வீடுகளில் விநாயகர் சிலைகளைத் தாங்களே செய்து வணங்குகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் கடந்த பல வருடங்களாக தங்கள் இல்லத்தின் விநாயகர் சதுர்த்திக்கு குடும்பம் சகிதமாக தானே களிமண்ணை வாங்கிவந்து சிலையைத் தயாரிக்கிறார். 

விநாகயர் சதுர்த்தி

திரைக்கதை உருவாக்கும் இந்த படைப்பாளியிடம் விநாயகர் சிலையை படைக்கும் யோசனை வந்தது எப்படி என அவரிடமே கேட்டோம். 
“நம்மைப் படைக்கும் கடவுளை நாமே ஒருநாள் படைப்பது மனதிற்கு மகிழ்ச்சியான விஷயம். விநாயகர் எனக்கு மட்டுமல்ல.

எல்லொருக்கும் பிடித்தமான கடவுள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் உங்களை முதலில் வரவேற்பது விநாயகர்தான். அவரைக் கண்டு வணங்கிவிட்டு மற்ற தெய்வங்களைப் பார்த்தால் மட்டுமே நமது வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகத்தினால் இப்படி கோவில்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பிரம்மச்சாரியாக இருந்தாலும் விநாயகரைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. தங்களைப் படிப்பில் தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என மாணவர்கள் வேண்டுவார்கள். பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்க ஆசி கேட்பார்கள் பெரியவர்கள். இப்படி அனைத்து தரப்புக்கும் பிடித்தமானவர் விநாயகர். அவருக்கான பிரத்யேக நாள் விநாயகர் சதுர்த்தி. அதனால் சிறுவயதிலிருந்தே விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் அவரது சிலைசெய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி சென்னை சைதாப்பேட்டைக்காரனான நான் என் சிறுவயதில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலையையும் குடைகளையும் வீட்டில் செய்து சைதாப்பேட்டை வீதிகளில் விற்றிருக்கிறேன். 

விநாயகர் சதுர்த்தி

அதனால் என் வீட்டுக்கு விநாயகர் சிலை மற்றும் குடையை நானே செய்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சிலையைச் செய்கிறபோது என் குடும்பத்தினர் அனைவரும் என் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி எனக்கு யோசனைகளையும் சொல்வார்கள். இந்த சில மணிநேரங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழியும். ஆளுக்கு ஒரு திசையில் குடும்பத்தில் அனைவரும் தினம் தினம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கையில் சில மணிநேரங்கள் மனம்விட்டுப்பேசி மகிழவும் விநாயகர் சிலை தயாரிப்பு உதவுகிறது. 
நான் செய்யும் சிலை அப்படி ஒன்றும் பெரிய கலைநுட்பத்துடன் இருக்காது என்றாலும் நமக்குப் பிடித்த கடவுளை நாமே மனதுக்குள் நினைத்தபடி உருவம் கொடுத்து செய்வது மனதுக்கு மகிழ்ச்சியான விஷயம். சிலை முடித்தபின் அது விநாயகரைப்போல் இருந்தாலும் இல்லையென்றாலும் மனைவி பிள்ளைகள் பாராட்டுவார்கள். எத்தனை பெரிய படைப்பாளிக்கும் வீட்டிலிருந்து பாராட்டு கிடைத்தால் அது பெரிய மகிழ்ச்சியைத் தரும்” என நெகிழ்கிறார் பாண்டியராஜன். 

விநாயகர் சதுர்த்திக்கு பக்தர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றோம். “எப்போதும் எந்த விஷயத்திலும் நமது நடவடிக்கைகளை கடவுள் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்பதை மனதில் வைத்துக்கொண்டால் நமது செயல்கள் நல்லதாக இருக்கும். யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காதபடி நம்மை வழிநடத்தும். விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகருக்கு இஷ்ட உணவான கொழுக்கட்டையைப் படைக்கிறோம். அதனால் நாமும் கொழுக்கடையைப்போல் இருப்போம். கொழுக்கட்டை என்றால் அதைப்போல் குண்டாக அல்ல; அதில் உள்ள ஜீரா போன்று எல்லோருக்கும் இனிப்பானவராக இருப்போம்."

இதய சுத்தியோடு தேடினால் இறைவன் துாணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பார்கள். பாண்டியராஜன் மனநெகிழ்வோடு செய்த சிலையில் அவர் இருக்கமாட்டாரா என்ன?!

படங்கள்:  'இதயக்கனி' எஸ்.விஜயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்