வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (28/08/2017)

கடைசி தொடர்பு:21:39 (28/08/2017)

தகுதியான குருவை அடையாளம் காண்பது எப்படி? - ஆன்மிகப் பெரியோரின் விளக்கம் #WhyInGodsName

தகுதியான குருவை அடையாளம் காண்பது எப்படி? - ஆன்மிகப் பெரியோரின் விளக்கம் பார்ப்போம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். உலகில் தாய் தந்தையருக்கு அடுத்த இடத்தை குருவுக்குத் தந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் தெய்வம் என்கிறார்கள். நம்முடைய கர்மவினைகள் தீருவதற்காக நாம் பிறவி எடுக்க நேரிடுகிறது. அதற்குக் காரணமாக இருப்பவர்கள் நம் பெற்றோர். அதனால்தான் அவர்களை முதலில் வைத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்மைப் பெற்றதின் நோக்கம், நாம் நெறிமுறைகளுடன் வாழ்ந்து, வினைகளைக் களைந்து, இறைவனின் திருவடிகளைச் சேர்ந்து, பிறவாப் பேரின்ப நிலையை அடையவேண்டும் என்பதுதான்.

குரு

அப்படி நாம் நெறிமுறைகளுடன் வாழவேண்டுமானால், நெறிமுறைகளை நமக்கு உபதேசிக்கவும், ஆன்மிக சாதனைகளில் நாம் முன்னேறவும் நமக்கு ஒரு குருவின் தேவை ஏற்படுகின்றது. அவர்தான் நமக்கு நெறிமுறைகளை கற்றுத்தேறவும், ஆன்மிக சாதனைகளில் நாம் முன்னேறவும் துணை நிற்கிறார்.

ஆனால், இன்றைக்கு பெரும்பாலானோர் தவறான நபர்களைத் தங்களின் ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு, அதன் விளைவாக பெரும் அவதிகளுக்கு ஆளாகிறார்கள். 

ஓரளவு ஆன்மிக அறிவு பெற்றிருக்கும் சிலர், முதலில் மக்களில் ஒருவராகப் பழகுகிறார்கள். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகிறார்கள். அதன் காரணமாக தேவைகள் நிறைவேறப் பெறும் மக்கள், அவரிடம் அன்பும் மதிப்பும் கொள்கிறார்கள். மக்களின் அன்பையும், மதிப்பையும் பயன்படுத்திக் கொண்டு, தங்களையே குருவாகவும், அதன் நீட்சியாக ஒரு கட்டத்தில் தங்களையே தெய்வமாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கின்றனர். மக்களிடம் தங்களுக்கு இருக்கும் புகழ் வெளிச்சம் என்ற திரையின் மறைவில் பல அக்கிரமங்களையும் செய்கிறார்கள். அக்கிரமங்கள் வெளிப்பட்டு தண்டனைக்கு ஆளாகும்போது, அவருடைய பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இப்படிப் போலியான குருமார்கள் பெருகிவிட்ட நிலையில், இன்றைக்கு இருக்கும் ஆன்மிக குருமார்களிடம் நமக்கு  நம்பிக்கை இல்லாமல் போவதுடன், அவர் நமக்கு அவசியம்தானா என்ற கேள்வியையும் நமக்குள் எழுப்பிவிடுகிறது. 

அப்படியென்றால் தகுதியான குரு என்று ஒருவரை நாம் எப்படி அடையாளம் காண்பது? அவரைப் பற்றி சாஸ்திரங்கள் சொல்லுவது என்ன? 

ஆன்மிகப் பெரியோர்களிடம் கேட்டோம்.

சேக்ஷாத்திரிநாத சாஸ்திரிகள்

சேக்ஷாத்திரிநாத சுவாமிகள்

''ஒரு மனிதனுக்கு, 'குரு' கட்டாயம் இருக்கணுங்கிறது அவசியமில்லை. ஆனா, அவன் செய்கிற காரியம் சரியா தவறா அப்படிங்கிறதைப் பார்த்து, அவனை ஊக்குவிக்கிறதுக்கு ஒரு குரு அவசியம் தேவை. பிறந்த குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை ஒரு நிமிஷம் கூட எவராலும் சும்மா இருக்கமுடியாது. ஒரு செயலை தன்னுடைய முன்னேற்றம் கருதியோ, சந்தோஷத்துக்காகவோ, தேச சேவையாகவோ, உலக  நன்மைக்காகவோ செய்யும்போது நல்லவிதமா நடக்கணும்னா அவசியம் ஒரு குருவிடம் போயே ஆகணும். நம்முடைய மனதில்  ஏற்படும் சந்தேகங்கள், அதன் விளைவாக எழும் கேள்விகள் நம் மனதைக் குழப்பி, நம்முடைய சிந்தனை, செயல் அத்தனையிலும் குழப்பம் ஏற்படுத்துகிறது. நமக்குத் தெளிவு ஏற்படுத்தி வழிநடத்த அவர் அவசியம் தேவைதான்.

நமக்கு என்ன தேவை, நம்முடைய திறன் என்ன, நம்மால் என்ன வெல்லாம் செய்யமுடியும் என்பதை நம் அருகிலிருந்தே கவனித்து, நம் வழியாகவே தீர்வு காண உதவுபவரே குரு.

 

குரு சீடர்

இயற்கைதான் எல்லா உயினங்களையும் படைத்தது, எல்லா உயிரினங்களுக்கும் தேவையான வளங்களையும் அளிக்கிறது. அந்த வளங்களை முறையாகப் பயன்படுத்துவதுடன் அடுத்தவர்களுக்கும் அந்த வளங்களைப் பாதுகாத்துத் தரவேண்டும். அறியாமை என்னும் குறைபாடு மனித மனதை,  கண்ணின் கருமணியில் படர்ந்துள்ள தசை போல் மூடி இருக்கிறது. காட்சி சரியாகத் தெரிவதில்லை. இதை அகற்றுவதற்கு குரு நிச்சயம் தேவை. மற்றபடி, 'நான் உனக்கு இதைப் பண்றேன், நீ எனக்கு அதைப் பண்ணு'-ன்னு சொல்றவங்கள்லாம் குரு கிடையாது'' 

பி.என்.பரசுராமன் 

பி.என்.பரசுராமன்

''பூட்டி இருக்கிற அறையின் கதவைத் திறந்தால்தான் என்ன இருக்கிறதுன்னு தெரியும். அந்த அறையைத் திறக்கறதுக்கு உரிய சாவியைத் தர்றவர்தான் குரு. நமக்குள்ள இருக்கிற திறமை என்ன? நாம எந்தத் துறையில் போனா வெற்றிபெறுவோம்ங்கிறதை சொல்கிறவர்தான் குரு. 'இப்படிச் செய், அப்படிச் செய்' என்றெல்லாம் நமக்கு கட்டளையிட மாட்டார். நாம யார்ங்கிறதை நம் கூடவே இருந்து நமக்குக் காண்பிப்பார்.  அதன் பிறகு நம் மூலமே அதற்கு உரிய தீர்வை தெரிவிப்பார்.  எது சரி, எது தப்புன்னு நமக்குப் புரிய வைப்பார். அதனால்தான் நம் முன்னோர்கள், 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்று சொல்வார்கள். 

 

'மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் வணங்கினார்க்கு 

வார்த்தை சொல சத்குருவும் வாய்க்கும் பராபரமே'

எனப் பாடுகிறார் தாயுமானவர். நல்ல குருவும் அவருடைய சீடரும் ஏ.டி.எம் கார்டும் பாஸ்வேர்டும் போன்றவர்கள். சரியான பாஸ்வேர்டைப் போட்டால் பணம் வரும். தவறான பாஸ்வேர்ட் என்றால்,  கம்பிதான் எண்ண வேண்டும். அப்படித்தான் மக்களின் பேராசையை, அறியாமையை சிலர் காசாக்குகிறார்கள். பிறகு கம்பி எண்ணுகிறார்கள். இவர்கள் எல்லாம் குரு என்னும் வார்த்தையையே களங்கமாக்கி விடுகிறார்கள்"! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்