தொடங்கியது வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத் திருவிழா!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது புனித ஆரோக்கிய மாதா பேராலயம். பால் விற்கும் சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் குணமானது, கடும் புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசிய மாலுமி கரை சேர உதவியது என 16-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளால் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதாவின் மீதான பக்தி பரவத் தொடங்கியது. 

வேளாங்கண்ணி


இயேசுகிறிஸ்துவின் தாய் மரியன்னையின் பெயரால் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்துக்கு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மதங்களைச் சேர்ந்த மக்களும் திரளாக வருகை தந்து அன்னையின் ஆசியைப் பெற்றுச் செல்வது வாடிக்கை. துன்பக் கடலில் சிக்கித் தவிப்போரை கைதூக்கி அவர்களின் துயர் துடைப்பதால் அன்னையாக, தாயாகப் பார்க்கிறார்கள் மக்கள். 


பண்பாடு, மொழி, சமயம் என வேறுபட்டிருந்தாலும் எல்லோரும் ஓரினமாகச் சங்கமிக்கும் புண்ணியத் தலமாக திகழ்ந்து வருகிறது. இதன்மூலம் மதநல்லிணக்கத்துக்கான ஈடு இணையற்ற ஓர் ஆலயமாகத் திகழ்கிறது. தன்னை நாடி வரும் மக்களை அரவணைத்துத் தேற்றி பரிவையும் பாசத்தையும் வழங்கி வரும் அந்த அன்னையின் பெயர் தாங்கிய புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பேராலய முகப்பில் இருந்து கொடி வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் பேராலயம் வந்தடைந்ததும் மாலை 6 மணி அளவில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் மந்திரித்து கொடி ஏற்றிவைக்கிறார்.

வேளாங்கண்ணி


இதைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையிலும் பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் முன்னிலையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து தினமும் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாதாவின் பிறந்த தினமான செப்டம்பர் 8-ம் தேதி திருவிழா நிறைவுபெறுகிறது. முன்னதாக செப்டம்பர் 7-ம் தேதி அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் மாதா எழுந்தருளி பவனி வருவார். வேளாங்கண்ணித் திருவிழாவின் இன்னொரு சிறப்பம்சம் தமிழகம் மட்டுமல்லாமல் வேறு சில இடங்களிலும் உள்ள பக்தர்கள் காவி உடை உடுத்தியபடி விரதமிருப்பதுடன் பாதயாத்திரையாக நடந்தே ஆலயத்துக்கு வருவார்கள். 

வேளாங்கண்ணி


மாதாவின் புகழைப் பாடியபடி வரும் அவர்களில் சிலர் மாதாவின் சுரூபத்தை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எடுத்து வருவார்கள். அவ்வாறு ஆலயம் வந்தடையும் பக்தர்கள் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திலிருந்து பழைய வேளாங்கண்ணி ஆலயம் வரை உள்ள மணல் பாதையில் முழங்கால் போட்டபடி சென்று தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நேர்த்திக் கடனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் மாற்று மதங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் வேண்டுதல் நிறைவேற மாதாவை நாடி வந்து மனமுருகி வழிபட்டுச் செல்வது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருக்கிறது.

வேளாங்கண்ணி


நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆலயம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயங்களில் திருவிழா நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 45-ம் ஆண்டுத் திருவிழா இன்று மாலை 5.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ் கொடி ஏற்றி வைக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!