Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சென்னையின் வரலாறு 16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது!" - வரலாற்று ஆய்வாளர் சாந்தி பப்பு

டந்த வாரம் சென்னையின் 378-வது பிறந்தநாளை எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆனால், இதைக்கண்டு சிலர் சென்னைக்கு வெறும் 378 ஆண்டுகால வரலாறு மட்டுமே இருக்கிறது என்று கருதத் தொடங்கி விட்டார்கள்.  "உண்மையில் சென்னையின் வரலாறு 16 லட்சம் ஆண்டுகளுக்கு  முற்பட்டது" என்கிறது, தமிழர்களின் வரலாற்றைத் தேடி அறிவியல் மற்றும் ஆன்மிக வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் 'சென்னை 2000 பிளஸ்' என்ற அமைப்பு. 

சென்னை வரலாறு

கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பழங்காலக் கல்வெட்டுகள், பக்தி இலக்கியங்கள் இப்படி பல்வேறு வழிகளில் தீவிரமாக இயங்குபவர்களைத் தேடிப்பிடித்து சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது இந்த அமைப்பு. 

தற்போது,  தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகங்கள் துறையுடன் இணைந்து 'சென்னை மாதம்' என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 

 

 

இதன் ஒரு பகுதியாக நேற்று, பூண்டி அருகே கொசஸ்தலை ஆற்றுப் படுகை மற்றும் குடியம் மலைப்பகுதியில் கிடைத்த பழங்கற்கால கற்கோடாரிகள் பற்றிய கருத்தரங்கம் சென்னை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. 

இதில் வரலாற்று ஆய்வாளர் சாந்தி பப்பு கலந்துகொண்டு அவரின் ஆய்வுகளைப் பற்றி விரிவாகப் பேசினார். 

"கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக புவித்தரைத் தோற்றவியளாலர் ராபர்ட்  ப்ரூஸ் ஃபூட் சென்னை பல்லாவரம் மற்றும் அத்திரம்பாக்கம் பகுதிகளில் பழங்காலக் கற்கருவிகளைக் கண்டறிந்தார். இது 2 லட்சம் ஆண்டுகள் பழமையான கருவி என்பதை அவரின் ஆய்வின் மூலம் நிரூபித்தார். 

சாந்தி பப்பு

அதற்கு முன்பு வரை, 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மனிதக்குடியேற்றம் நடந்தது என்று உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் மைக்கேல் வுட் தெரிவித்திருந்தார். உலகின் பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே கூறிவந்தனர். அதனை ராபர்ட் புரூஸ் தனது கண்டுபிடிப்பின் மூலமாக தகர்த்தார். இதுபோன்ற கற்கருவிகள் ஆப்பிரிக்காவிலும், இஸ்ரேலிலும் இருப்பதைக் கண்டறிந்தார்.

ஆப்பிரிக்காவில் உள்ள கற்கருவிகளின் வயது, 30 லட்சம் ஆண்டுகளுக்கு மேலானது என்பதை ராபர்ட் புரூஸ் கண்டறிந்தார். ஆப்பிரிக்காவில், இஸ்ரேலில், அதிரம்பாக்கத்தில் கண்டறியப்பட்ட அனைத்து கற்கருவிகளும் ஒரேதொழில்நுட்பத்தில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்துக்கு 'அசூலியன் ' என்று பெயர். இந்த கற்கருவிகள் மிருகங்களைக் கொல்வதற்கும், மரங்களைக் வெட்டவும் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் கண்டறிந்து வெளியிட்டார்.

அகழ்வாராய்ச்சி

அதன்பிறகு 1999-ம் ஆண்டில் நாங்கள் அத்திரம்பாக்கம் பகுதியை அகழ்வாராய்ச்சி செய்தபோது அங்கே எட்டுவிதமான மணல் அடுக்குகள் இருந்ததைக் கண்டறிந்தோம். அதன் அடிப்பகுதியில் 3000 கற்கருவிகளைக் கண்டறிந்தோம். அதனை 'காஸ்மோஜெனிக் நியூக்ளைட் பரியல் டேட்டிங்' (cosmogenic nuclide burial dating)  மூலமாக  ஆராய்ச்சி செய்தபோது இது 16 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். இதை எனது 'Early Pleistocene presence of Acheulian hominins in South India'  என்ற ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளேன். தென் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவுக்கு இங்கே மக்கள் ஏன் குடியேறினார்கள் என்பதைக் கண்டறிவதே எங்களின் அடுத்த இலக்கு" என்றார்.ரங்கராஜன்

அடுத்ததாக, சேக்கிழார் சைவ சித்தாந்தப் பள்ளியுடன் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 'திருப்புகழ்' ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பாகப் பாடினர்.

" தமிழ் வளர்ச்சியில், தமிழர்களின் வரலாற்றுப் பாதையில் சமயங்களின் பங்கு மிகமுக்கியமானது. இதன் அடிப்படையில் அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' ஒப்புவித்தல் போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. 

தமிழில் எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் இருக்கின்றன. அதில் சந்தத் தமிழோடு இருப்பது திருப்புகழ். இது தனி மரபாக தமிழ் இசையில் பேசப்படுகிறது. திருப்புகழ் பாடினால், மூச்சுப்பயிற்சி, யோகப்பயிற்சி செய்த பலன் கிட்டும். தன் பாடல்களில் அதிகமாக யோகத்தைப் பற்றி பேசியவர் அருணகிரிநாதர். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி இக்காலத்துக்குத் தேவையான ஒன்று" என்றார் சென்னை 2000 பிளஸ் நிர்வாக இயக்குநர் ரங்கராஜன்.

மேலும், " வடபழனி முருகன் கோயில், வடபழனி வேங்கீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் விநாயகர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், பாம்பன் ஸ்வாமிகள் கோயில் போன்ற இடங்களில் சொற்பொழிவுகளையும், இசை நிகழ்ச்சிகளையும் இதுவரை நடத்தியுள்ளோம்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பாடல் பெற்ற ஸ்தலங்களைப் பற்றிய தகல்வல்களை எடுத்து, அந்தப் பாடல்களை நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இசைக்கச் செய்கிறோம்.

திருப்புகழ் ஒப்புவித்தல்

 

தேவாரப் பாடல்கள், நாயன்மார்களின் பாடல்கள், ஆழ்வாரின் பாசுரங்களைப் பற்றியும், அருணகிரிநாதரின் திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள், திருவாசகம் ஆகியவைகளைப் பற்றியும் இசையுடன் கலந்த சொற்பொழிவுகள் நடத்தி வருகின்றோம். அடுத்ததாக  4.9.2017 சென்னையில் 'ஞானசம்பந்தர் உலா' எனும் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்" என்றார் ரங்கராஜன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement