தியாகத்தின் மேன்மையைப் போதிக்கும் பக்ரீத் பண்டிகை! #EidMubarak | How to celebrate bakrid festival?

வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (01/09/2017)

கடைசி தொடர்பு:20:57 (01/09/2017)

தியாகத்தின் மேன்மையைப் போதிக்கும் பக்ரீத் பண்டிகை! #EidMubarak

தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையை எப்படி அனுஷரிக்க வேண்டும்? என மெளலவி. முஹம்மது முஸம்மில் அல்புகாரியை சந்தித்துக்கேட்டோம். ''தியாகத் திருநாள்' என்றழைக்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாள். உலக இஸ்லாமியர்களால் அரேபிய மாதமான துல்ஹஜ் பிறை பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. 'திருநாள்கள்' என்றாலே ஆட்டம், கோலாகலம், கொண்டாட்டம் என்பதல்ல, மாறாக அனைவரும் உண்டு உடுத்தி ஒரு சேர மகிழ்வாகக் கழிப்பது, சொந்தபந்தங்களுடன் உறவாடுதல், ஏழை எளியோருக்குக் கொடுத்து உதவி அதன்மூலம் உவகை அடைவது, இறைவனைப் புகழ்ந்து துதிப்பது போன்ற நல்ல அம்சங்கள்தான் திருநாளுக்கான அடையாளங்கள் எனச் சொல்லித் தருகின்றன.

பக்ரீத் பண்டிகை

ஹஜ்ஜுப் பெருநாளில் புத்தாடை அணிந்து தொழுகையை நிறைவேற்றிய பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஏதேனும் ஒன்றை இறைவனுக்காக பலியிட்டு உறவினர்கள், ஏழைகளுக்குப் பங்கிடுவார்கள். உடல் நலமும் பொருள் பலமும் நிரம்பியவர், தன் ஆயுளில் ஒருமுறை மெக்காவிலுள்ள 'கஃபா' என்னும் இறை ஆலயத்துக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுவர்.

இந்தப் பெருநாள் ஏன் கொண்டாடப் படுகின்றது என்பதற்கான காரணத்தை ஆய்ந்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னோக்கி வரலாறு விரிகின்றது. அது தியாக வாழ்வை நமக்குப் படிப்பினையாக விட்டுச் சென்ற இறைத் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு. 

புகாரிஇறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுவது போல மீண்டும் மீண்டும்  கனவு காண்கிறார்கள். இது இறைவனின் கட்டளையென உணர்ந்த அவர்கள், தனது மகனிடத்தில் தனது கனவை விவரிக்கின்றார். இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இறைவனின் ஆணை அதுவெனில், நான் தயார் என மாபெரும் தியாகத்துக்காகத் துணிகிறார்கள். அவ்வாறே துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் தனது மகனை அறுக்க கத்தியைத் கூர் தீட்டி அறுக்க முனைகிறார். கூர்முனை கொண்ட கத்தி அறுக்க மறுக்கிறது. இறுதி மணித்துளியில் மகனுக்குப் பதில் ஆட்டை அறுக்கச் செய்து, இறைவன் அருள்பாலிக்கின்றான். 

அதனால் தான் அவர்களின் அந்தத் தியாகத்தை நினைவுகூரும் விதமாக வசதியுள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஆடு, மாடு, ஒட்டகம் இவைகளில் ஏதேனும் ஒன்றை  அந்நாளில் அறுத்துப் பலியிட வேண்டும். இதன் நோக்கம் இறைத் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எவ்வாறு இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு தனது மகனையே அறுத்துப் பலியிட முன் வந்தார்களோ அது போல் இந்நாளில் ஆட்டை அறுத்து இறைவனுக்கு பலியிடுபவர் அத்தகைய தியாக உணர்வின் ஊற்றாக நான் இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என்பதன் முன் மொழிதலே.

இறைவன் கூறுகின்றான்: (அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் ரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்குர்ஆன் (22 : 37)

தியாகத்தின் உருவாக  நாம் அறுத்து, பலியிடும் பிராணியும் குறையுள்ளதாக இருத்தலாகாது. அறுத்து, பலியிடும் பிராணிக்கு நோய் இருக்கக்கூடாது, காயம் ஏற்பட்டிருக்கக் கூடாது, அப்பிராணி கர்ப்பம் அடைந்திருக்கக் கூடாது, அதன் உடல் உறுப்புகள் சேதமடைந்திருத்தல் கூடாது. என்பது அதன் நிபந்தனைகளாகும் ஏனெனில், நாம் இறைவனுக்காக செய்யும் வணக்கத்தில் நாம் ஏனோ கடமைக்குச் செய்கின்றோம் என்றில்லாமல், அனைத்திலும் பரிபூரண நிலையைக் கையாளச் செய்கிறது இஸ்லாம். நாம் பிறருக்கு தானம் செய்யும் போதும்கூட நமக்கு பிடித்தமான பொருளிலிருந்து தானம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. 

இறைவன் கூறுகிறான்: “நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடையமாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்". (திருக்குர் ஆன் 3:92)
பின்னர் நாம் அறுத்த பிராணியின் இறைச்சியை மூன்றாகப் பிரித்து மூன்றில் ஒரு பாகத்தை ஏழை எளிய மக்களுக்கும், மறுபாகத்தை உறவினர்களுக்கும் கொடுத்துவிட வேண்டும். பிராணியின் தோலை விற்று வரும் பணத்தை வறியவர்களுக்குத் தானம் செய்துவிட வேண்டும்.

இதுதான் ஹஜ்ஜுப் பெருநாளின் சாரம்சம். ஆனால், இது ஆண்டுகொருமுறை தவறாமல் செய்யும் சடங்கல்ல. இது தியாக உணர்வை நமக்கு நினைவுபடுத்திச் செல்லும் திருநாள். நாம் ஏதேனும் தியாகம் செய்துள்ளோமா? 

ஆம், நாம் அனைவரும் தியாகிகளே. ஆனால், அந்தத் தியாகங்கள் எதற்காக என்பதில்தான் வேறுபாடு உள்ளது நாம் பணத்துக்காக எதையும் தியாகம் செய்கிறோம். நமது விருப்பத்துக்காக வாழ்கையைத் தியாகம் செய்கிறோம். இத்தகையது தியாகமல்ல அதற்கு மாறாக, பிறருக்காக அதுவும் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனுக்காக செய்கின்ற தியாகமே உன்னதமானது அவனுக்காக நாம் அர்ப்பணம் செய்வதுதான் மாபெரும் தியாகம். அது எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதல்ல. அத்தகைய பண்பு இடைவிடாத பயிற்சியின் மூலமாக, இறைக்கட்டளைகளுக்குக் கீழ்படிவதன் வாயிலாக, இறைவனைச் சார்ந்திருந்து வாழ்வதன் மூலமாக கிடைக்கப்பெறும் அரிய பண்பு.

சகோரதத்துவம்

இத்தைகைய குணங்களே இப்ராஹீம் அலை அவர்களை அத்தகைய தகுதிக்கு இட்டுச் சென்றது. ஆதலால், அவர்களின் வாழ்வு நமக்கான பயிற்சிப் பெட்டகமாகத் திகழ்கிறது. இறைத் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வு முழுவதும் தியாகமே நிரம்பியிருந்தது. அதனால்தான் இறைவன் இப்ராஹீம் அலை அவர்களைத் தனது நண்பனாக ஆக்கிக் கொண்டேன் என குர்ஆனில் தெரிவிக்கின்றான். 
இப்ராஹீம்  நபியின்  தந்தை ஆஜர் தலைமைப் பூசாரி. சிலைகளை வடித்து, அவற்றுக்குப் பூஜை செய்வது அவரது தொழில். மகன் இப்ராஹீமுக்கு இதில் உடன்பாடில்லை. தந்தை மகனுக்குமிடையேயான கருத்து வேறுபாடு கொள்கை மோதலாக முடிகிறது. அருமைத் தந்தை, சொந்த பந்தம், ஊர் உறவு, உயரிய பதவி, சொத்து சுகம் யாவும் துறந்து சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் மேற்கொள்கின்றார்கள் இப்ராஹீம் நபி.

ஓரிறைக் கொள்கையேந்திய போராளியாக அவர்களின் நெடும்பயணம் தொடர்கிறது. பகுத்தறிவுப் பிரசாரம் வீறுகொண்டு பரவுகிறது. எதிர்ப்பலைகள் ஓயாது உயர்ந்தெழுகின்றன. எதிர்ப்பின் உச்சமாக நம்ரூத் மன்னனின் முன் நிறுத்தப்படுகிறார்கள் இப்ராஹீம் நபி.
நம்ரூது இறை மார்க்கத்துக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இதனைப் பொறுக்க இயலாத நம்ரூத் கொதித்தெழுந்து நெருப்புக் குண்டத்தைத் தயார் செய்து அதில் ‘இப்ராஹீமை வீசி எரியுங்கள்’எனக் கட்டளையிடுகின்றான், அதைக் கண்டு துளியும் அஞ்சாத இப்ராஹீம் நபி கொண்ட கொள்கைக்கு மாறாது துணிந்து நின்று, தனது வாழ்வைத் துறக்கத் தயாராகிறார்கள். அவர்கள்  நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்கள். இப்ராஹீம் நபிக்காக இறைவன் நெருப்பைக் குளிர்ந்து போகும்படி கட்டளையிட்டுக் காப்பற்றினான்.

 

பக்ரீத்

முதிர்ந்த வயதில் இஸ்மாயீல் என்னும் மகன் பிறக்கின்றார். இறைவன் தன் தூதர் இப்ராஹீமை சோதிக்க நாடுகிறான். இப்ராஹீம் நபி அவர்களுடைய மனைவியையும் குழந்தை இஸ்மாயீலையும் மனித சஞ்சாரமே இல்லாத பாலைப் பெருவெளியில் தனித்து விட்டு வருமாறு இறைவன் கட்டளையிடுகின்றான். ஏன், எதற்கு என்ற கேள்வி இப்ராஹீம் நபியிடமோ அவர்களுடைய மனைவியிடமிருந்தோ எழவில்லை. கைப்பிடித்த மனைவியையும் தள்ளாத வயதில் பெற்றெடுத்த செல்ல மகனையும் தனித்து விட்டு, சென்று இறைக் கட்டளையை நெஞ்சார ஏற்றார்கள். அவர்களது வாழ்வில் தொடர்ந்து வந்த இறைசோதனையில் இறுதியில் வந்ததுதான் மகனை அறுத்துப் பலியிடுமாறு வந்த இறைக் கட்டளை. இவ்வாறாக தனது வாழ்வின் அனைத்து சோதனைகளையும் நெஞ்சுறுதியோடு வென்றெடுத்த தியாகத்தை இறைவன் திருக் குர்ஆனில் சான்றளிக்கின்றான் “இப்ராஹீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். இன்னும் அவர் அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்து விட்டார். அப்போது அவன் கூறினான்; ‘நான் நிச்சயமாக உம்மை மனித குலத்துக்குத் தலைவராக்கப் போகின்றேன்''.
(திருக்குர்ஆன் 2:124)

தோழர்களே இத்தகைய தியாகத்தை நம் வாழ்வு தோறும் நினைத்து வாழவே இந்தத் தியாகத் திருநாள். இப் பெருநாளில் நாமும் தியாகச் செம்மல் இறைத் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு நம் வாழ்வை அமைப்போம். தியாகம் செய்து வாழ்வோம். இறை நேசம் பெறுவோம் '' இவ்வாறு அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close