வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (12/09/2017)

கடைசி தொடர்பு:18:25 (12/09/2017)

காவிரி புஷ்கரம் என்றால் என்ன? தொடரும் சர்ச்சைகள்!

புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி  இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு. 

காவிரி புஷ்கரத் திருவிழா

புராணப்படி, ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு. மேஷ ராசி கங்கைக்கும்; ரிஷப ராசி நர்மதைக்கும்; மிதுன ராசி சரஸ்வதிக்கும்; கடக ராசி யமுனைக்கும்; சிம்ம ராசி கோதாவரிக்கும்; கன்னி ராசி கிருஷ்ணா நதிக்கும்; துலாம் ராசி காவிரிக்கும்; விருச்சிக ராசி தாமிரபரணிக்கும்; தனுசு ராசி சிந்து நதிக்கும்; மகர ராசி துங்கபத்ரா நதிக்கும்; கும்ப ராசி பிரம்மபுத்ரா நதிக்கும்; மீன ராசி பரணீதா நதிக்கும் உரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படும். சென்ற வருடம் குருபகவான் கன்னி ராசியில் பிரவேசித்தபோது, கன்னி ராசிக்கு உரிய கிருஷ்ணா நதியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறியிருக்கிறார். அதனால்,  துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கர விழா, இந்த வருடம் 12-வது முறையாகக் காவிரியில் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. 144 வருடங்கள் ஆனதால் இதை  'மகா புஷ்கரம்' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். 

புஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு புராண சம்பவம் இருக்கிறது. 

புஷ்கரம் என்பது பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம். உலக மக்கள் நீராடிப் புண்ணியம்  பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான். அதற்காக பிரம்மதேவரை வேண்டி தவம் இருந்தார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு முன்பு தோன்றி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். குருபகவானும் 'பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம்  வேண்டும்' என்றார். 

புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்கு சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது. 

காவிரி புஷ்கரத் திருவிழா தொடங்கியது

இதுதான் புஷ்கர விழாவின் தாத்பர்யம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு நதிகளில் புஷ்கர விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. குருபகவான் துலாம் ராசியில் இருக்கும்போது காவிரியில், நடைபெறுவது போலவே,  அடுத்தாண்டு அவர் விருச்சிக ராசிக்குச் செல்லும்போது விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணியில் புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் போலவே அளவற்ற புண்ணியம் சேர்க்கும் விழாதான் இந்த புஷ்கர விழா. 

காவிரியில் புஷ்கர விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சுவாமி ராமானந்தா தலைமையில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. புஷ்கர விழாவின் தொடக்கமாக காவிரி ஆற்றைத் தூர் வாரி சுத்தப்படுத்தியபோது பன்னிரண்டு நதிகளைக் குறிப்பிடும் வகையில் 12 கிணறுகள் இருந்தது தெரிய வந்தது. புஷ்கர விழாக் கமிட்டியின் சார்பில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன.

இது குறித்து வேத சாஸ்திரங்கள் தெரிந்த புலவர் மகாதேவன், அனைத்து ஆதீனங்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், தேவலோகத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வருடத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே பூலோகத்தில் இருக்கும் என்றும், அந்த நாள்களில் புனித நீராடுவதுதான் புண்ணிய பலன்களைத் தரும் என்று பத்மபுராணம் கூறுவதாகத் தெரிவித்திருக்கும் அவர் , தொடர்ந்து, புஷ்கரம் ஒரு நதியில் எழுந்தருளும் காலத்துக்குத்தான் ராசி நிர்ணயிக்கப்படுமே தவிர, அதுதான் அந்த நதிக்கு உரிய ராசி என்று சொல்வது சரியில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும்,  '12 ஆண்டுகளுக்கு ஒருமுறை துலாம் ராசியில் குரு இருக்கும்போது காவிரியில் புஷ்கரம் கொண்டாடவேண்டும். இதுவரை அப்படிக் கொண்டாடவில்லை. கொண்டாடி இருந்தால் அதுபற்றிய தகவல் காவிரி புராணத்திலோ அல்லது காவிரி மகாத்மியத்திலோ குறிப்பிடப்பட்டிருக்கும். விஷயம் இப்படி இருக்க, இவர்கள் எந்த அடிப்படையில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடுகிறோம் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை விடக் கொடுமையாக, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பரிகார விழாவாகவும் மாற்றி, புனிதமான புஷ்கர விழாவை ஒரு வியாபாரமாக மாற்றிவிட்டார்கள்' என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார். 

புலவர் மகாதேவனின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கும் திருப்பனந்தாள் ஆதீனகர்த்தர் ஶ்ரீலஶ்ரீ கயிலை மாமுனிவர்,  "நதிகளிலோ திருக்குளங்களிலோ இருப்பதைத்தான் தீர்த்தம் என்று முன்னோர் வரையறுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வறண்டு கிடக்கும் நதிக்குள் போர்வெல் போட்டு, அந்தத் தண்ணீரை தீர்த்தம் என்று சொல்வது மரபுக்கு எதிரானது. குடகு மலையில் உற்பத்தியாகி, பூம்புகார் கடலில் கலக்கும்வரை காவிரியில் நீர் நிறைந்திருந்து, அதில் புஷ்கரம் கொண்டாடினால் அது புண்ணியம் தரும். ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் துலாக்கட்ட காவிரியில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் நீராடி, மனிதர்கள் தங்களிடம் விட்டுச் செல்லும் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். தற்போது காவிரியில் நீரே இல்லை. அப்படியிருக்க போர்வெல் போட்டாவது புஷ்கரம் கொண்டாட என்ன அவசியம் ஏற்பட்டது?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று மயிலாடுதுறையில் காவிரியில் புஷ்கர விழா தொடங்கியது. தொடக்க நாளிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள். 

காவிரி புஷ்கர விழாவில் கூடிய முக்கிய பிரமுகர்கள்

காவிரி துலாக்கட்டம் அமைந்துள்ள தென்கரை, திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த ஆதீன நிர்வாகத்திலுள்ள அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாரப்பர், தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டிலுள்ள ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகளைத் துலாக்கட்டத்தில் எழுந்தருளச் செய்து,  அதன்பின் சூலத்துடன் காட்சித்தரும் அஸ்திரதேவருக்கு காவிரியில் அபிஷேக ஆராதனை செய்து தீர்த்தவாரி நடத்துவதுதான் ஐதீகம்.  இந்த சுவாமிகள், காலைநேர பூஜை முடித்து கோயிலில் இருந்து வீதிவழியாக துலாக்கட்டம் வந்தடைய சுமார் 2 மணிநேரமாகும். இதையெல்லாம் கணக்கிடாமல் காலை 6.00 மணிக்கு கொடியேற்றி, புனித நீராடல் துவங்கும் என்று விளம்பரம் செய்துவிட்டார்கள். இதனால் பக்தர்கள் விடியற்காலையிலேயே வரத்தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கும் முன்னதாக காலை 5.30 மணிக்கு  500-க்கும் மேற்பட்ட துறவியர்கள் துலாக்கட்டத்தில் பூஜைகள் செய்து புனிதநீராடி சென்றுவிட, அதிலிருந்து தொடர்ந்து பக்தர்கள் நீராடிய வண்ணமிருந்தனர்.  

அதன்பிறகு திடீரென நேரத்தை மாற்றியமைத்து, குரு பெயரும் நேரமான காலை 8.00 மணிக்கு கொடியேற்றம் என்றும், 8.25க்கு தீர்த்தவாரி என்றும் அறிவித்தார்கள்.  கொடிமரம் அமைக்கும்போதே வேறொரு குழப்பம் உருவானது. காஞ்சி சங்கராச்சாரியார்கள் மற்றும் தருமபுரம் ஆதீனம் நீராடும் வடகரையில் கொடிமரத்தை அமைப்பதா? திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் துறவியர்கள் நீராடும் தென்கரையில் அமைப்பதா? என்பதில் குழப்பம்.  அதன்பின் ஒருவழியாக வடகரையில் காவிரித்தாய் சிலை அமைத்து, அதன் முன்னே கொடிமரம் அமைத்தார்கள்.  ஆனால், நிகழ்ச்சி நிரலில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். காலை 7.45 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் துலாக்கட்டத்துக்கு வந்துவிட்டார். அவர், கொடிமரம் அமைத்திருந்த இடத்துக்கு செல்லமுடியாதபடி இருபுறமும் கட்டைகளால் தடுப்பு அமைத்திருந்தார்கள்.  ஆதீனம் திகைத்து நிற்க, அவசர, அவசரமாய் தடுப்புகளை அகற்றினார்கள்.  இதனால் பொறுமையிழந்த ஆதீனம், குருப் பெயர்ச்சிக்காக காத்திருக்காமல் 7.58 மணிக்கு கொடியை ஏற்றிவிட்டார்.  8.25 மணிக்கு அஸ்திரதேவர் ஆராதனை நடக்கும் முன்பே, 8.10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் புனித நீராடி புறப்பட்டுவிட்டார்.  

அதேநேரத்தில், தென்கரையில் முறைப்படி 8.25 மணிக்கு காவிரியில் அஸ்திரதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, அதன்பின் ஜெயேந்திரர், விஜயேந்திரர், தருமபுரம் ஆதீனம் புனிதநீராடினார்கள்.  ஜெயேந்திரரை ஒரு நாற்காலியில் அமரவைத்து, அவர் தங்கியிருந்த வீட்டுக்கு தூக்கிச் சென்றார்கள்.  

மகா புஷ்கர விழா

பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர், ''12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வதுபோல்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நதிகளை சுத்தம்செய்து, படித்துறை மற்றும் நதிக்கரை ஓரமுள்ள கோயில்களை புதுப்பித்து புனிதநீராடுவதுதான் புஷ்கரத் திருவிழாவின் தாத்பர்யமும். குடகில் தோன்றும் காவிரிப்பெண், நதி வடிவில் வழிநெடுகிலும் புண்ணியத் தலங்களைத்  தொட்டு, அந்தத் தலங்களில் நீராடும் பக்தர்களுக்கு புண்ணிய பலன் வழங்கி இறுதியில் சமுத்திரராஜனுடன் காவிரிப்பூம்பட்டினத்தில் சங்கமம் ஆகும்போதுதான் புஷ்கரம் முழுமைபெறும்.  இங்கு அதன்படி நடைபெறவில்லை.  போர்வெல் நீரில்தான் புனிதநீராடல். அதுவும், ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை அழுக்குநீர் அகற்றப்படும் என்றார்கள், ஒருபுறம் நீர்வடிய, மறுபுறம் நீர் உட்புக தொட்டி முழுவதும் குழம்பிய சேற்று நீரே காட்சியளிக்கிறது.  இதனால், சிலர் நீராடாமல் சிறிது நீர் எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு செல்கின்றனர். காவிரி மகா புஷ்கர விழா நடைபெறும் நாள்களில் மொத்தம் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால், முதல் நாளே 5 ஆயிரம் பக்தர்கள்கூட வரவில்லை'' என்றார்.  

தொடர்ந்து நடைபெறுகிறது புனிதநீராடல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்