Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென்னிந்திய வழிபாட்டு மரபுக்குச் சான்றாக விளங்கும் 13-ம் நூற்றாண்டு கிருஷ்ணர் கோயில்!

ன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம், திருவட்டாறு என வைணவ திருத்தலங்கள் அதிகம் உண்டு. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அருகில் அமைந்துள்ளது, அருள்மிகு துவாரகை கிருஷ்ணர் கோயில். இதன் அருகில்தான் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகமும் உள்ளது. கோயிலின் எதிரே குமரி மாவட்டத்தை செழிப்பாக்கும் பழையாறு ஓடுகிறது.

கிருஷ்ணர் கோயில்

அருள்மிகு துவாரகை கிருஷ்ணர் கோயில் மிகவும் பழைமையானது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த கோயில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு முறைப்படி வழிபாடுகள் நடந்து வருகின்றன. இங்கு கருவறை, அர்த்த மண்டபம், அந்தராளம், முக மண்டபம், சுற்றாரை மண்டபம், சுற்றிலும்  பெரிய மதில்கள் அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். கருவறை சிறியதாக இருக்கிறது. மூலவர் கிருஷ்ணர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பரிவார தெய்வங்களாக சாஸ்தாவும், விநாயகரும் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கோயிலில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் இக்கோயிலின் பழமை வருகிறது. இன்றுள்ள கருவறைப் பகுதியை வேணாட்டு அரசர்கள் கட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. கோயில் விமானம் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலில் காணப்படும் 1208-ம் ஆண்டு  கல்வெட்டுகளில் துவாரகை கிருஷ்ணன் கோயில் இருக்கும் இடம் துவாரகை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூலவர் ஆழ்வார் அல்லது எம்பெருமான் எனப்படுகிறார்.

துவாரகை கிருஷ்ணர் கோயில்

வடதிருவிதாங்கூரைச் சேர்ந்தவரும் வேதங்களில் பாண்டித்யம் பெற்றிருந்தவருமான ஸ்ரீகோவிந்த ப்ரஞபடரர் ஸ்ரீ கான கிராமபகவான் என்ற ஞானி இந்தக் கோயிலில் இருந்துள்ளதாகவும், அவரிடம் சில மாணவர்கள் வேதம் கற்றுக்கொண்டதாகவும், அவர்களின் உணவு மற்றும் தங்கும் வசதிகளை சுசீந்திரம் கோயில் மகா சபை கவனித்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக்கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலின் நிர்வாகத்துக்கு உட்பட்டு இருந்தது. கோவிந்தப் ப்ரஞபடரர் முன்னிலையில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்  மகா சபை கூடியதை 1230-ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்தக் கூட்டத்தில், ஸ்ரீ படரர் ஆளுகையின் கீழ் துவாரகை கிருஷ்ணன் கோயிலின் முழுப்பொறுப்பை விட்டுக் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிகிறது. மேலும் திருவனந்தபுரம் பத்பநாபபுரம் கோயில் ஸ்ரீ காரியம்,  பெரிய படரர் சிபாரிசு செய்யும் நபரையே துவாரகை கிருஷ்ணன் கோயிலின் மேல் சாந்தியாக நியமிக்க வேண்டும் என்றும், இதற்கு ஆகும் செலவை சுசீந்திரம் கோயில் மேல் மகா சபை கொடுக்க வேண்டும் என்றும் கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது. 

 கன்னியாகுமரி துவாரகை கிருஷ்ணர் கோயில் முகப்பு

துவாரகை கிருஷ்ணன் கோயிலின் 1224-ம் ஆண்டுக் கல்வெட்டு  கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கு நிபந்தத்தையும்,1228-ம் ஆண்டு கல்வெட்டு கோயிலுக்கு இரண்டு குளங்கள் சொந்தமாக இருந்ததையும் கூறுகிறது. அக்காலத்தில் தற்போதைய  குமரிமாவட்டப் பகுதிகளில் இருக்கும் பார்த்திபசேகரபுரம், கோதை நல்லூர், கன்னியாகுமரி போன்று  மாணவர்களுக்கு வேதம் கற்பித்த மையமாக துவாரகை கிருஷ்ணன் கோயில் இருந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று துவாரகை கிருஷ்ணனை வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் மும்மூர்த்திகளை தரிசித்துவிட்டு கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கிழக்கு பார்த்து இருக்கும் துவாரகை கிருஷ்ணனை தரிசிக்கவும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close