வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (18/09/2017)

கடைசி தொடர்பு:08:44 (19/09/2017)

செப்-19-ல் தொடங்கி 20-ம் தேதி முடிகிறது மஹாளய அமாவாசை... எப்பொழுது தர்ப்பணம் கொடுக்கவேண்டும்?

றைந்த நம் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் அமாவாசைதோறும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். இயலாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாள்களில் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். வருடாந்திர சிராத்தம் செய்பவர்களும்கூட அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை தவறவிடக்கூடாது. முன்னோர்களான பித்ருக்களை மறக்காமல் வழிபட்டு அவர்களின் ஆசிகளைப் பெற்றால்தான், நமக்கும் நம் சந்ததியினருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்கிறது சாஸ்திரம். நம்முடைய முன்னோர்களின் ஆசிகள்தான் நம்முடைய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறுவதற்கு அடிப்படை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹாளய அமாவாசை

ஆன்மா வடிவத்தில் பூமிக்கு வருகை தரும் நம்முடைய பித்ருக்களை திருப்தி செய்ய உகந்த நாள் மஹாளய அமாவாசை. ஆனால், இந்த வருடம் மஹாளய அமாவாசை 19-ம் தேதி மதியம் தொடங்கி 20-ம் தேதி மதியம் வரை இருப்பதால் என்றைக்கு முன்னோர்களுக்குகுமார சிவாச்சாரியார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு குழப்பமும் கவலையும் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. 

இது குறித்து விளக்கம் அறிய  சாஸ்திர நிபுணர் குமார சிவாச்சாரியாரை தொடர்புகொண்டு கேட்டோம். 

"இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்த மஹாளய அமாவாசை தொடங்குவதால், பஞ்சாங்க விதிப்படி அப்போது தர்ப்பணம் அளிக்கக் கூடாது. 12 மணிக்கு மேல் தர்ப்பணம் கொடுக்க சாஸ்திர அனுமதி இல்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால் மறுநாள் 20-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.32 மணி அளவில் தொடங்கி மதியம் 12 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் அளிக்கலாம். சூரிய உதயத்துக்குப் பின்னர் எத்தனை சீக்கிரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்த தர்ப்பணம் நல்லது. இதுதான் பஞ்சாங்கம் கூறும் விதி. மற்றபடி இன்று மதியத்துக்கு மேல் தர்ப்பணம் செய்வது என்பது அவரவர் விருப்பம். குடும்பத்தினர் இணைந்து தர்ப்பணம் செய்வதே உகந்தது. ஆண்களுக்கு பெண்கள் உதவி செய்வது அவசியம். அது பித்ருக்களை மகிழ்விக்கும். பசுக்களுக்கு அகத்திக் கீரையும், வாழைப்பழங்களும் அளிக்கலாம். காகத்துக்கு உணவிட்ட பிறகே உண்ணவேண்டும் என்பதும் இந்நாளின் விதி.

தர்ப்பணம்

மஹாளய அமாவாசை, அமாவாசைகளில் உயர்ந்தது. பித்ருக்களுக்கு விசேஷமானது. "மறந்ததை மஹாளயத்தில் சேர்" என்று சொல்வார்கள். அதாவது நமது முன்னோர்களின் நினைவு தினத்தை இன்றைய அவசர உலகத்தில் ஞாபகம் வைத்து திதி கொடுப்பது எல்லாம் மறந்து போய்விட்டது. அதனால் எல்லோருக்குமாக, ஏழு ஏழு தலைமுறைக்கும் சேர்த்து மறைந்து போனவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்து அவர்களை மகிழ்விக்கும் நாள்தான் மஹாளய அமாவாசை. ஆடிப்போனவனுக்கு ஆடி அமாவாசை, தடுமாறிப்போனவனுக்கு தை அமாவாசை, மறந்து போனவனுக்கு மஹாளய அமாவாசை என்று சொல் வழக்கே உள்ளது. அதன்படி மறந்து போன நமது தலைமுறை பெரியோர்களை வணங்கி அவர்களுக்கான தர்ப்பணம், பூஜை, படையல்களை அளிக்க வேண்டும். கட்டாயம் இந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும், முடிந்தால் வஸ்திர தானம் அளிக்கலாம்'' என்றார். 

நிஜம்தான். 'நடமாடும் நரனுக்கு ஒன்று ஈவது படமாடும் பரமனையே சேரும்' என்பது திருமூலர் வாக்கல்லவா? பித்ருக்களுக்கான தர்ப்பணம், பூஜைகளுடன், ஏழைகளுக்கான தானமும் செய்து பித்ருக்களின் ஆசியை பூரணமாகப் பெறுவோம்.


டிரெண்டிங் @ விகடன்