நவராத்திரி! - விகடனோடு கொண்டாடுங்கள்! | Lets celebrate Navratri Puja with Vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (20/09/2017)

கடைசி தொடர்பு:08:24 (21/09/2017)

நவராத்திரி! - விகடனோடு கொண்டாடுங்கள்!

தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் இந்த முப்பெரும் தேவியரின் அருளைப்பெறவே அடுத்து வரப்போகும் ஒன்பது நாள்களும் நவராத்திரி விழா  கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, ஆண்டுக்கு நான்கு முறை கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசியில் கொண்டாடப்படுவது தான் சாரதா நவராத்திரி அல்லது பாத்ரபத நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. இதில் புரட்டாசியில் கொண்டாடப்படும் நவராத்திரியே சிறப்பானது. 

நவராத்திரி

வரங்கள் பல பெற்ற மகிஷாசுரன், சகல ஜீவன்களையும் இம்சித்தான். அதனால் அந்த அசுரனை ஆதிபராசக்தி அன்னை, துர்க்கை வடிவம் எடுத்து சம்ஹாரம் செய்த ஒன்பது நாள்களே சாரதா நவராத்திரி என்று சிறப்பிக்கப்படுகிறது. வலிமை குன்றிய பெண் ஒருத்தி தன்னை அழிப்பாளா என்ற தவறான கணிப்பால், மகிஷன் மாண்டு போனான். பெண்களை தவறாக கணிப்பவர்கள் அழிந்துதான் போவார்கள் என்பதே இந்த விழாவின் நோக்கம். ஒன்பது நாள்களும் ஒன்பது விதமான சக்தி வடிவம் எடுத்து அம்பிகை போர்புரிந்தாள். அசுரகுலத்தை அடியோடு  அழித்தாள். 

கலைகளின் அதிபதியான கலைமகளையும், செல்வத்தின் அதிபதியான திருமகளையும், வீரத்தின் அடையாளமான மலைமகளையும் கொண்டாடும் விழாவே நவராத்திரி. இந்த நாளில் முதல் மூன்று நாள்கள் மலைமகளையும், அடுத்த மூன்று நாள்கள் திருமகளையும், கடைசி மூன்று நாள்கள் கலைமகளையும் கொண்டாடி இறுதிநாளான விஜயதசமி அன்று ஆதிபராசக்தியின் வடிவமான முப்பெரும்தேவியரையும் வணங்கி பரவசப்படுவது மரபு. 

நவராத்திரி கொலு

விதவிதமான நைவேத்தியங்கள், கோலங்கள், வழிபாடுகள், தானங்கள், பாடல்கள் என இந்த விழாவே களிப்பூட்டக்கூடியது. இந்த நாள்களில் ஆட்டம், பாட்டத்துக்கு குறைவே இருக்காது. சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை அடுக்கி வைக்கும் வைபவம். அனைத்து உயிர்களிலும், சக்தியைக் காண வேண்டும் என்பதை சொல்லவே படிகளில் தெய்வங்களின் பொம்மைகள் மட்டுமின்றி எல்லாவித பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. மாலைவேளைகளில் கொலு வைத்தவர்கள் வீடே,  திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறுமிகளை அம்பிகையின் வடிவமாக கொண்டாடுவது வழக்கம். முருகன், கிருஷ்ணன், ராதா, ராமன்,  அம்பிகை போன்ற வேடங்களை அணிந்து குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும், இந்த விழாவின் ஒன்பதாம் நாள் கல்விக்காக சரஸ்வதி பூஜையும்,  உழைப்புக்குத் துணை நிற்கும் கருவிகளைக் கொண்டாடுவதற்காக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில் செய்யும் பூஜையால் அறம், பொருள், இன்பம், மோட்சம்  ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என ஏழேழ் பரம்பரைக்கு நீண்ட ஆயுளும் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. 

முப்பெரும்தேவியர்

நம் பாரம்பர்யத் திருவிழாவான இந்த நவராத்திரியை விகடனோடு சேர்ந்து கொண்டாடுங்கள். நாளை முதல், ஒவ்வொரு நாளும் நவராத்திரியைக் கொண்டாடுவதற்கான சாஸ்திர ரீதியான வழிமுறைகள், தாத்பர்யங்கள், வழிபாட்டு முறைகள், நைவேத்தியங்கள், கோலங்கள்  என நவராத்திரியை பற்றிய எல்லா அம்சங்களையும் விரிவாகப் பார்க்கலாம். 

தவிர இன்னுமொரு கொண்டாட்டமும் இருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் கொலுவோடு ஒரு செல்பி எடுத்து,  photocontest@vikatan.com என்ற மெயில் ஐடி-க்கு தட்டி விடுங்கள். பல்லாயிரக்கணக்கான விகடன் வாசகர்களின் பார்வைக்கு அவற்றைப் பரிமாறுகிறோம். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close