திருப்பதியில் செப்-23-ல் தொடங்குகிறது பிரம்மோற்சவம்! தினசரி தரிசனமும் பலன்களும்! | Tirupati Brahmotsavam will be celebrated at Tirumala on September 23 to October 1

வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (21/09/2017)

கடைசி தொடர்பு:13:19 (22/09/2017)

திருப்பதியில் செப்-23-ல் தொடங்குகிறது பிரம்மோற்சவம்! தினசரி தரிசனமும் பலன்களும்!

திருமலை திருப்பதியில்  வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம், 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1 -ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக நான்கு மாட வீதிகளும் பெரிய பெரிய கோலங்களாலும் வண்ண விளக்குகளாலும்  பூலோக சொர்க்கமென திகழும் வண்ணம் அலங்கரிக்கப்பட உள்ளன.திருப்பதி, திருமலையில் ஶ்ரீவெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம்  நாளை  23-ம் தேதி (சனிக்கிழமை)   பகலில் கருடக்கொடி ஏற்றத்துடன்  (த்வஜாரோஹணம்)  தொடங்குகிறது. பிரம்மோற்சவ கருடக்கொடியை ஏற்றியதும், கொடியில் இருக்கும் கருடாழ்வார் அனைத்து உலகத்தவர்களையும், தேவர்களையும் தேவதைகளையும் மலையப்பசுவாமியின் பிரம்மோற்சவத்துக்கு வரும்படி அழைக்கின்றார்.  பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும் வரையிலும் இந்தக் கருடக்கொடி துவஜஸ்தம்பத்திலேயே பறக்கும்.

திருப்பதி

பிரம்மோற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார். அவ்விதம் கம்பீரமாக எழுந்தருளி உலா வரும் சுவாமியை தரிசித்தால், அந்தந்த நாளுக்கு உரிய நற்பலன்கள் கிடைக்கும் என்பது திருமலை பிரம்மோற்சவத்தின்  சிறப்பு.

23 -ம் தேதி இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி வருகிறார். சேஷ வாகனம், தாஸானு தாஸ பக்திக்கு எடுத்துக்காட்டு. இதில் சுவாமி எழுந்தருளி உலா வரும்போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கி சாத்விகமான குணங்கள் ஏற்பட்டு மற்றவர்களுக்குப் பயன்படும் விதமாக நம் வாழ்க்கை அமையும்.

24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகலில் சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி அலங்காரத்துடன் பவனி வருகிறார். இதில் சுவாமி வரும்போது, தரிசனம் செய்பவர்களுக்கு குண்டலினி யோக பலம் கிடைக்கும்.

சூரிய பிரபை வாகனம்

Photo courtesy: Thirumala Tirupathi Devasthanam

24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவில் ஹம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் மலையப்பசுவாமி அலங்காரத்துடன் பவனி வருகிறார். பெருமாளிடம் நம்  மனதைத் தூய்மையாக்கி ஆத்மநிவேதனம் செய்து ஒப்படைப்பவனையே பகவான் ஏற்கிறார் என்பதை விளக்கவே இந்த அன்னப்பறவை வாகனம்.

25 -ம் தேதி (திங்கட்கிழமை) பகலில் சிம்ம வாகனத்தில் சுவாமி பவனி வருகிறார். தர்மத்தைக் காக்க நரசிம்ம வடிவத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். தீயோர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதை அறிவுறுத்தும் வாகனம் சிம்ம வாகனம். சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் சுவாமியை தரிசித்தால், நமக்கு எதிரிகளின் தொல்லை இருக்காது என்பது ஐதீகம்.

25-ம்தேதி (திங்கட்கிழமை) இரவில் முத்துப்பந்தல் வாகனம். நன்முத்துக்கள் குளிர்ச்சிக்கு அடையாளம். சந்திரன் உச்சம் பெறும் தலமான திருவேங்கடத்தில் முத்துப்பந்தல் மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

கற்பக விருட்சம்

Photo courtesy: Thirumala Tirupathi Devasthanam

26-ம் தேதி  (செவ்வாய்க்கிழமை) பகலில்  கற்பக விருட்ச வாகனத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேதராக வெங்கடேசப் பெருமாள் பவனி. கேட்கும் வரங்களை மட்டும் வழங்கும் கற்பக விருட்சம், கேட்காத வரங்களையும் வாரி வழங்கும் கடல் வண்ணனுக்கு வாகனமானது. 26-ம்தேதி இரவு சர்வ பூபால வாகனத்தில் சுவாமி பவனி வருகின்றார். 

27-ம் தேதி (புதன்கிழமை)  பகலில் மோஹினி அவதார பவனி. மனிதர்கள் எல்லோரும் பெண்கள்தான்; தான் மட்டுமே புருஷன் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக பெருமாள் இப்படி மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

மக்கள் வெள்ளம்

Photo courtesy: Thirumala Tirupathi Devasthanam

கருட வாகனம் 

27-ம் தேதி  (புதன்கிழமை) இரவு பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள் கருதப்படுகிறது. அதனால் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் வரை வருவார்களென  எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் விஷ பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

28 - ம் தேதி (வியாழக்கிழமை) பகலில் சிறிய திருவடி ஹனுமந்த வாகனத்தில் வில் அம்புடன் சுவாமி பவனி வருகிறார். வைணவ சம்பிரதாயத்தில் ஆஞ்சநேயரே முதல் பக்தர். 28-ம் தேதி இரவில் கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருகிறார்.

29-ம்தேதி (வெள்ளிக்கிழமை) பகலில் சூரியபிரபை வாகனத்தில் பவனி வருகிறார். சூரியபிரபையின் ஒளிக் கதிர்களுக்கிடையே சூரிய நாராயணனாக வேங்கடவன் எழுந்தருளுகிறார். 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார்.இந்த இரண்டு வாகனங்களில் பகவானை தரிசித்தால், ஆன்ம வலிமையும், மனவளமும் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

 

திருமுழுக்காட்டு நிகழ்வு

Photo courtesy: Thirumala Tirupathi Devasthanam

30-ம் தேதி சனிக்கிழமை பகலில் திருத்தேரில் சுவாமி பவனிவருகிறார். தேர் என்பது நடமாடும் கோயில் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. நம் உடல் என்பது தேர் என்றால், உடலை இயக்கும் சாரதி நம் மனம். நம் உடலை இயக்கும் மனம் தூய்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் நம் செயல்கள் பரிசுத்தமாக, மற்றவர்களுக்குப் பயன்படும்படியாக அமையும். தேரில் வரும் பகவானை தரிசித்தால், அன்று அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்திய பகவான், இன்று நம்மையும் நல்ல வழியில் நடத்திச் செல்வான் என்ற தத்துவத்தை உணர்த்துவதே மலையப்ப சுவாமியின் தேர்பவனி.

30-ம் தேதி சனிக்கிழமை இரவில் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார். துவாபர யுகத்தில் கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை அழித்த கேசவன் கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்க இருப்பதையே உணர்த்துகிறார்.

அக்டோபர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகலில் சகஸ்ர ஸ்நானம் (திருமுழுக்காட்டு நிகழ்வு) நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்ச்சியான இந்த விழா திருமலையில் கோயிலுக்கு அருகே இருக்கும் சுவாமி புஷ்கரணியில் நடக்கிறது.

பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாட்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்