வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (25/09/2017)

கடைசி தொடர்பு:19:01 (25/09/2017)

குழப்பங்களோடு தொடங்கி குழப்பங்களோடு முடிந்தது காவிரி புஷ்கரம்!

யிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரி புஷ்கரம் நிறைவு பெற்றுவிட்டது. புஷ்கரத்தை ஒட்டி சுமார்  5 லட்சம் பேர் காவிரியில் நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பெரும்பாலான அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று நீராடினார்கள். 

காவிரி  புஷ்கரம்

காவிரி புஷ்கரம் என்பது, குரு பகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ராசிக்கு உரிய நதியில் குருப் பெயர்ச்சியை ஒட்டி நடைபெறும் விழாவாகும். சென்ற வருடம் குருபகவான் கன்னி ராசியில் பிரவேசித்ததை முன்னிட்டு, கன்னி ராசிக்கு உரிய கிருஷ்ணா நதியில் புஷ்கர விழா நடைபெற்றது. இந்த வருடம் குருபகவான் துலாம் ராசியில் பிரவேசித்ததால், துலாம் ராசிக்கு உரிய நதியான காவிரியில், மயிலாடுதுறை துலாக்கட்டத்தில்  செப்டம்பர் 12 முதல் 24-ம் தேதி வரை புஷ்கர விழா நடைபெற்றது. 

திட்டமிட்ட காலத்தில் இருந்தே, சர்ச்சைகள், முணுமுணுப்புகளோடு தொடங்கிய இந்த விழா பல்வேறு குழப்பங்களோடு நிறைவு பெற்றிருக்கிறது. '144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கரம்' என்று அறிவித்து விழாக்குழுவினர் விளம்பரம் செய்தபோதே, 'அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை' என்று எதிர்ப்பு கிளம்பியது. விழாக் கமிட்டியினர் அதை ஒப்புக்கொண்டாலும், விழாவை நடத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை.

மகா புஷ்கர விழாக் கமிட்டி அமைத்து, அதற்குத் தலைவராக சுவாமி ராமானந்தாவை தேர்வுசெய்தார்கள். முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த சுவாமி ராமானந்தா, பிறகு காவிரியின் மகத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ளவும், காவிரியைத் தூய்மைப் படுத்தவும் வேண்டி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறியதுடன், பண வசூல் போன்ற விவகாரங்களில் தலையிடமாட்டேன் என்றும் கூறி, பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்போதும்,  ஆதீனங்களிடம் கலந்து ஆலோசிக்காமலே விழாக்கமிட்டி அமைக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. 

காவிரி புஷ்கரம்

காஞ்சி சங்கர மட வேத பண்டிதர் தினகர் சர்மா,  'செப்டம்பர்  12  முதல்  24 வரை புஷ்கர விழா நடத்தலாம்' என்று தேதி குறித்துக் கொடுக்க, அதை இளைய மடாதிபதி விஜயேந்திரரும் ஏற்றுக்கொண்டார். தருமபுரம் ஆதீனமும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். 

அதற்குப் பிறகுதான் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர், திருப்பனந்தாள் ஆதீனம் கயிலை மாமுனிவர். ' குடகில் காவிரி உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை நீர் நிறைந்திருந்து, ஒவ்வோர் இடமாக புஷ்கர விழா கொண்டாடி, நிறைவாக மயிலாடுதுறையில் நடத்தவேண்டுமே தவிர, போர்வெல் போட்டு புஷ்கரம் கொண்டாடுவதில் தமக்கு சம்மதமில்லை' என்று நிகழ்வில் பங்கேற்க மறுத்துவிட்டார். மற்றவர்கள் சமாதானப் படுத்தியும் விழாவுக்கு வரவே இல்லை.  கடைசியில் கட்டளைத் தம்பிரானை மட்டும் அனுப்பி வைத்தார்.

அடுத்ததாக எதிர்ப்பு வந்தது திருவாவடுதுறை ஆதீனத்திடமிருந்து. அவருடைய எதிர்ப்புக்குக் காரணம், விழா தொடங்கும் நேரம் பற்றிய அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பம். '12-ம் தேதி காலை 6.00 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு புஷ்கரம் தொடங்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாட்டிலுள்ள மாயூரநாத சுவாமிகோயில் சுவாமிகளுக்கு முதல்கால பூஜை 6.00 மணிக்கு செய்த பிறகுதான் சுவாமி புறப்பாடு செய்யமுடியும்.  அங்கிருந்து துலாக்கட்டத்தை அடைய குறைந்தது 2 மணிநேரமாகும். யதார்த்தம் இப்படியிருக்க, யாரைக்கேட்டு 6.00 மணிக்கு நேரம் குறித்தீர்கள்?' என்று திவாவடுதுறை ஆதீனம் கேள்வி கேட்டார்.  உடனடியாக, புஷ்கரம் துவக்க விழா காலை 8.25 மணிக்கு என மாற்றப்பட்டது.  

தொடக்கம் இப்படி என்றால் நிறைவுநாளிலும் பல குளறுபடிகள் நடந்தன.

புஷ்கர நாளில் காவிரியில் நீராடினால், இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மேலும், ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் வேறு, அவர்கள் பங்குக்கு. 'காவிரி மகா புஷ்கர நாளில் காவிரியில் நீராடி, நவகிரக தலங்களை தரிசனம் செய்வது அளவற்ற புண்ணியத்தைத் தரும்' என்று பிரசாரம் செய்து கூட்டம் சேர்த்தனர். விழாவின் நிறைவு நாள் ஞாயிற்றுக்கிழமை வேறு. இப்படியான காரணங்களால் எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துவிட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், விழா ஏற்பாட்டாளர்களிடம், 'போர்வெல் நீரை நிறுத்தி விடுங்கள். தண்ணீர் இல்லை என்று தகவல் பரவினால் கூட்டம் குறைந்துவிடும்' என்று கூறினர். ஆனால் அதற்கு, விழா ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர்.  கூட்டம் அதிகரித்ததால், காலை 9 மணிக்கு கொடி இறக்கி, விழாவை நிறைவு செய்வதாகக் கூறிய விழாக் கமிட்டியினர், மதியம் 1 மணிக்கு கொடி இறக்குவதாகக் கூறி, கடைசியில் இரவு 9 மணிக்குத்தான் கொடி இறக்கி புஷ்கர விழாவை நிறைவு செய்தனர். 

புஷ்கர விழாவின் ஒரு நிகழ்ச்சியாக காவிரிக்கும் கடலரசனுக்கும் திருமணம் நடைபெற்றது. இதிலும் ஒரு விசித்திரமாக, ஒரே நாளில் இரண்டு முறை காவிரிக்கும் கடலரசனுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். காவிரியின் வடகரையில் யாகவா தீட்சிதர் தலைமையில் காவிரிக்கும் கடலரசனுக்கும் வைணவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு காவிரியின் தென்கரையில் சிவபுரம் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சைவ முறைப்படி திருமணம் நடந்தது. ஒரே திருக்கல்யாணமாக நடத்தலாம் என்று விழாக் கமிட்டியினர் கூறிய யோசனையை இரு தரப்பினருமே நிராகரித்துவிட்டனர். 

இந்த குளறுபடிகளுக்கெல்லாம் காரணம், காவிரிக் கரையில் உள்ள மூன்று ஆதீனங்களையும் கலந்து ஆலோசித்து விழா ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதுதான் என்கிறார்கள் பக்தர்கள்.

இது பற்றி விழாக் கமிட்டித் தலைவர் சுவாமி ராமானந்தாவிடம் பேசினோம்.

''புஷ்கர விழாவில் பல குழப்பங்கள் நடந்துவிட்டது உண்மைதான்.  மகாமகமாக இருந்தாலும் சரி, புஷ்கரவிழாவாக இருந்தாலும் சரி சுவாமி ராமானந்தாஅதைப்பற்றி முடிவுசெய்ய வேண்டியவர்கள் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று ஆதீனங்கள்தான்.  இவர்கள் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து அதன்படித்தான் புஷ்கரத்தை நடத்தியிருக்க வேண்டும்.  அதற்கு உரிமை படைத்தவர்களும் இந்த மூன்று ஆதீனங்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால், காஞ்சி மடத்தில் தேதி குறிக்கப்பட்டு, புஷ்கர விழா குறித்த முதல் விளம்பர பலகையே காஞ்சி மடத்தில்தான் வைக்கப்பட்டது. அவர்கள் வழிகாட்டுதல்படியே புஷ்கர விழாவும் நடத்தப்பட்டது.  பெயருக்குத்தான் நான் தலைவரே தவிர, நான் கடைசி தொண்டன்தான்.  எல்லா புண்ணிய நதிகளுக்கும் தாயான காவிரி தூய்மைப்படுத்தப்பட வேண்டும், அதை மக்கள் தெய்வமாக வழிபட வேண்டும், அதற்குப் புஷ்கர விழா பயன்பட வேண்டும் இந்த எண்ணத்தில்தான் அதில் நான் பங்கேற்றேன். இந்தக் குளறுபடிகளுக்கு ஆதீனங்களைக் குறை சொல்லமுடியாது. முன்பெல்லாம் ஒரு மடத்தில் நிர்வாகத்தை கவனிக்க 10 கட்டளைத் தம்பிரான்கள் இருப்பார்கள். இப்போதெல்லாம் ஓரிருவர்தான் இருக்கிறார்கள். வேலைப் பளு, நேரமின்மை போன்ற காரணங்களினால் மூவரும் ஒன்று கூடிப் பேசுவதற்கு கால அவகாசம் இல்லாமல் இருந்திருக்கலாம். இந்தக் குறைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்து சமய விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் வழிகாட்டியாக விளங்கக் கூடியவர்கள் ஆதீனங்கள்தான்'' என்றார் அவர். 

மிகப்பெரும் ஆன்மிகத் திருவிழாவான காவிரி புஷ்கரத்தை திட்டமிட்டு, அனைவருடனும் கலந்து ஆலோசித்து ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் வெகு சிறப்பாக நடந்திருக்கும்... தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்... என்பதே மொத்த பக்தர்களின் ஒற்றைக் கருத்தாக இருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்