Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஞானம், சாந்தம், வீரம், செல்வம் யாவும் அருளும் அஷ்ட சரஸ்வதிகள்! #Navratri

விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், பத்ம புராணம், வாமன புராணம், கூர்ம புராணம் மற்றும் வேதங்கள், இதிகாசங்கள், சம்ஹிதைகள், மந்திரங்கள் போன்றவை போற்றிக்கொண்டாடும் நாயகி, தேவி சரஸ்வதி. வாக்தேவீ , நாமகள், கலைவாணி, வாகேஸ்வரி என பலப்பல பெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி, நான்கு கரங்கள் கொண்டவள். சின்முத்திரை, அக்கமாலை, சுவடி, தாமரையை ஏந்தியவள். அழகிய முக்கண்ணி, ஜடாமகுடம் தரித்தவள். வெண்ணிற உடை உடுத்தியவள்.

அஷ்ட சரஸ்வதிகள்

வெண் தாமரை மலரில் குடி இருப்பவள். அன்ன வாகனம் கொண்டிருப்பவள். முனிவர்களால் வணங்கப்படும் ஞான தேவி இவள். அமைதியே வடிவானவள். பாற்கடலில் தோன்றி நான்முகனின் சிருஷ்டிக்கு ஆதாரமாக நின்றவள். வீணையை ஏந்தி ஓங்கார நாதம் எழுப்புபவள். வேத ரூபிணி, நாத சொரூபிணி என்றெல்லாம் போற்றப்படும் ஞான மழை முகிலாக இந்த அன்னை விளங்குகிறாள். பேச்சின் ஆதாரமாக, கலைகளின் வித்தாக இருப்பவளும் இவள்தான். பிரம்மலோகத்தில், ஞான பீடத்தில் அமர்ந்து வேத கோஷங்களை, சங்கீத நாதங்களைக் கேட்டு மகிழ்பவள். சாரதா, த்ரைலோக்ய மோஹனா, காமேஸ்வரி என பலரூபம் கொண்டவள். நகுலி, ருத்ர வாகீஸ்வரி, பரா சரஸ்வதி, பால சரஸ்வதி, தாரண சரஸ்வதி, நித்யா சரஸ்வதி, வாக்வாதினி, வஷினி, மோதினி, விமலா, ஜபினி, சர்துஸ்வரி என்றெல்லாம் சரஸ்வதியை மந்திர சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. 

நவராத்திரி தினங்களில் வரும் மூல நட்சத்திரமே சரஸ்வதியின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் 28-ம் தேதி சரஸ்வதியின் அவதார தினம் என்பதால் அன்று சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். அதற்கு அடுத்த நாள்தான் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜையும் வருகிறது. பாற்கடலில் வெண் தாமரையோடும் வேதச் சுவடிகளோடும் தோன்றிய கலைமகளை பிரம்மனே முதலில் பூஜித்து தனக்கு இணையாக்கிக்கொண்டார் என புராணங்கள் கூறுகின்றன. கல்வி, கலைகளின் நாயகியான சரஸ்வதியின் பெருமைகளை பலவாறு கூறுகிறது சரஸ்வதி மகாத்மியம் என்ற நூல். அஞ்ஞான இருளை நீக்கும் இந்த தேவி, எட்டு வடிவங்கள் கொண்டு அன்பர்களை காக்கிறாள் என்று தாரா பூஜை என்ற சாஸ்திரம் தெரிவிக்கிறது. வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா என்ற சியாமளா, கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, கினிசரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கடசரஸ்வதி என எட்டு சரஸ்வதி வடிவங்கள் எட்டுவித குணங்களை அளிப்பதாக தெரிவிக்கிறது. 

சரஸ்வதி

வாக்கின் தேவதையாக சரஸ்வதி விளங்குவதால் வாகீஸ்வரி என்றானாள். பேச்சு வராத எத்தனையோ பேருக்கு பேசும் வல்லமையை அளித்தவள் இவள். சாலிவாகன அரசர், சித்ரேஸ்வதி தேவியை வணங்கியே சகல கலைகளையும் கற்றார். மஹாகவி காளிதாசன் சரஸ்வதியை சியாமளா வடிவில் வணங்கியே காவியங்கள் இயற்றும் அருளைப்பெற்றார். வித்யா தேவதைகளில் முதன்மை பெற்றவள் தாரா என்றும், நீல சரஸ்வதி என்றும் போற்றப்படுகிறாள். காவ்யாதர்சம் எனும் நூலை எழுதிய தண்டி மகாகவி கடசரஸ்வதியை வணங்கி இலக்கிய வானில் நட்சத்திரமாக ஜொலித்தார். புகழுக்குரிய 64 கலைகளையும் அளிக்கக் கூடியவள் கீர்த்தீஸ்வரி. இவள் விக்கிரமாதித்ய அரசருக்கு அருள் செய்தவள். அந்தரிக்ஷ சரஸ்வதி ப்ரணவத்தில் இருந்து தோன்றி உயிர்களின் படைப்புக்கு ஆதாரமாக நிற்கிறாள். பிரம்ம பத்தினியாக நின்று வேத, வேதாந்தங்களின் ஜீவனாக நிற்பவள் கினிசரஸ்வதி. ஒவ்வொரு செல்வத்துக்கும் ஆதியாக நின்ற எட்டு வடிவ திருமகளைப்போலவே சரஸ்வதி தேவியும் எட்டுவடிவில் அஷ்ட சரஸ்வதியாக நின்று அருள்புரிகிறாள் என்று தாரா பூஜை தெரிவிக்கிறது. 

சரஸ்வதி

முப்பெரும் தேவியரில் சரஸ்வதியே முதன்மையான பூஜைக்கு உரியவள் என்று நவராத்திரியின் பெருமை கூறும் நூல்கள் தெரிவிக்கின்றன. மஹாசரஸ்வதியின் அம்சமே ஆயுதம் தாங்கி அசுர சக்திகளை அழித்தது என்றும் அவை கூறுகின்றன. சத்வ குண லட்சுமியும், தமோ குண பார்வதியும், ரஜோ குண சரஸ்வதியும் இணைந்த வடிவமே மகாசரஸ்வதி என்று தேவி சப்தசதி பிரதானி ரகஸ்ய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலைகளின் தேவியான கலைமகள் அஷ்ட வடிவில் இருந்து அனைவரையும் காக்கிறாள். எந்நாளும் எல்லா மக்களையும் அரவணைத்து ஞானமும் சாந்தமும் அளித்து தேவி சரஸ்வதி காக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement