4,000 பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு வைபவம்... நவராத்திரிக் கோயிலில் கோலாகலம்! | Navarathri celebration with 4000 golu dolls at Chennai's navarathri temple

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (26/09/2017)

கடைசி தொடர்பு:10:17 (27/09/2017)

4,000 பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு வைபவம்... நவராத்திரிக் கோயிலில் கோலாகலம்!

வராத்திரி திருவிழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. நவராத்திரியின் முக்கிய சிறப்பம்சமே கொலு வைப்பதுதான். வீடுகளில் மட்டுமல்லாமல் கோயில்களிலும் கொலு வைத்தல் வைபவம் களைகட்டும். சென்னையில் ஒரு கோயிலில் 4,000 பொம்மைகளுடன் கொலு வைத்திருக்கிறார்கள். 

கிருஷ்ணர்


சென்னை வில்லிவாக்கம் ஜி.கே.எம்.காலணியில் அமைந்திருக்கும் நவராத்திரிக் கோயிலில்தான் மிக பிரமாண்டமான முறையில் கொலு வைக்கப்பட்டிருக்கிறது. தெய்வங்களின் திருவுருவங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு கலைநயம் மிக்க பொம்மைகளும் கொலுவில் இடம் பெற்றிருந்தன. வெளிநாடுகளில் இருந்தும் பொம்மைகள் கொண்டுவரப்பட்டு இடம்பெற்றிருந்தது கொலுவின் சிறப்பம்சம். கோயிலில் முப்பெரும் தேவியரும் அவர்களுடன் வசுதேவர் கிருஷ்ணரைக் கூடையில் வைத்தபடி யமுனையைக் கடக்கும் காட்சி அழகாக இடம் பெற்றிருந்தது.

கைவினைப் பொருட்கள்

கிருஷ்ணரின் பால பருவ லீலைகளைச் சித்திரிக்கும் பல பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. திருப்பதி ஏழுமலையானின் கருவறைபோல் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் நம்மை திருப்பதிக்கே நேரில் அழைத்துச் சென்றதுபோல் இருந்தது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், ஆறுமுகப் பெருமானுடன் கார்த்திகைப் பெண்கள் என்று முருகனின் தெய்விகக் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. இளையவன் முருகனைப்போலவே, வீர கணபதி, சக்தி கணபதி, விஜய கணபதி என்று விநாயகரின் பல்வேறு வடிவங்களும் கொலுவில் இடம் பெற்றிருந்தன.

முறைப்படி ஓரறிவு தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை காட்சிப்படுத்தி, மனிதர்கள் வரிசையில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், பாரதியார், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் போன்றோரின் பொம்மை சிலைகள் இடம் பெற்றிருந்தன. இன்னும் விவசாயம், கிராமியக் கலைகள், பாரம்பர்ய விளையாட்டுகள் என்று நம் தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் பொம்மைகளும், நம் மரபுப்படி நடக்கும் திருமண நடைமுறைகள், வளைகாப்பு போன்ற வைபவங்களும் இடம் பெற்றிருந்தன.

நவராத்திரி கொலு


கொலுவின் ஒருங்கிணைப்பாளர் எல்.கஜேந்திரனிடம் பேசுகையில், எல்.கஜேந்திரன்
”இப்படி ஒரு பிரமாண்டமான முறையில் கொலு வைப்பதற்காகச் சுமார் ஐந்து மாதங்களாக ஏற்பாடுகளை மேற்கொண்டோம். நாங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், பொம்மைகளைத் தேடிப் பிடிக்கவே தனியாக நேரம் ஒதுக்கிவிடுவோம். இந்தக் கொலுவில் இருக்கும் பல கைவினைப் பொருள்கள் இங்கே வைப்பதற்கென்றே பிரத்தியேகமாகச் செய்யப்பட்டவை. மூன்றாவது ஆண்டாக இந்தப் பிரமாண்டக் கொலு நடத்தப்படுகிறது. கொலு கண்காட்சியுடன் இசை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் தேவியர்க்கு ஒவ்வோர் அலங்காரம் செய்து வழிபடுகிறோம். 10 நாள்களில் பத்து விதமான அலங்காரங்களில் அம்பிகை காட்சி தருகிறார். கொலுவைப் பார்த்துவிட்டு, அம்பாளின் அலங்கார வடிவத்தையும் தரிசித்துவிட்டு செல்லும் பக்தர்களின்  மனநிறைவே எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எல்லாம் அம்பிகையின் அருள்தான்'' என்று கூறினார்.