வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (27/09/2017)

கடைசி தொடர்பு:11:49 (27/09/2017)

கோவிந்தா... கோபாலா... திருமலையில் இன்று கருடசேவை!

திருமலையில் இன்று கருடசேவை! ''உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த! உத்திஷ்ட கருடத்வஜ'' - ‘கருடக் கொடியோனே கோவிந்தா... பொழுது புலர்ந்தது எழுந்தருள்வாய்... எழுந்தருள்வாய்!’ என்று பொருள்பட பாடப்படும் சுப்ரபாதம் அன்றாடம் உலகையே எழுப்பிக் கொண்டிருக்கிறது. 

திருப்பதியில் வீற்றிருக்கும்  வைகுண்டனின் கொடியை அலங்கரிக்கும் பேறு பெற்றவர் கருடாழ்வார். இன்று அவர் மேனியில் அமர்ந்து வீதியுலா வருகிறார் வைகுண்டப் பெருமாள். வைகுண்டத்தில் இருந்த எட்டு விமானங்களில் ஒன்றான கிரீடாசலத்தை ஏழுமலையான் உத்தரவுப்படி திருப்பதிக்கு கொண்டு வந்தவர் கருடாழ்வார். இன்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ அனந்த சயன விமானம் அதுவே. 

கருடசேவை

ஆவணியில் பிறந்த கருடபகவானின் திருகைங்கர்யம் ஏற்று வாகனமாக, பேறுபெற்ற மாதம் புரட்டாசி என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பதியில் உள்ள ‘சுவாமி புஷ்கரணி’ என்ற குளத்தை வைகுண்டத்தில் இருந்து, கருடபகவான் கொண்டு வந்ததாக புராணங்கள் வர்ணிக்கின்றன.

திருமலையில் திருமாமணி மண்டபத்தில், கருடன் வேங்கடவனைக் கூப்பிய கரத்துடன் நின்று, சிறகுகள் விரித்த நிலையில், நமக்காக பிரார்த்திப்பதால், இங்கு பகவான் காட்சி தரும் கருடசேவை மிக விசேஷமாகும்.

புரட்டாசி கருடசேவையின் மகிமை

புரட்டாசி மாதம் என்றாலே, உலகமெல்லாம் பெருமாளின் நாமம் எதிரொலிக்கும். எங்கு நோக்கினும், ‘கோவிந்தா, கோபாலா’ என்ற கோஷங்கள் விண்ணை அதிரச்செய்யும். விண்ணில் ஏற்படும், கோஷ மந்திரங்களில் மகிழ்ச்சியடையும் வைகுந்தநாதன் பூலோகத்தில் அனைத்து மக்களையும் காத்து ரட்சிக்கும்பொருட்டு, காட்சி தருவதை அனைத்து வைணவ ஆலயங்களிலும் கண்டு பேரானந்தம் அடைந்து வருகின்றோம். இவ்வாறு காட்சி தந்தருளும் அரங்கன், கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி தரும் சேவையை கருடசேவை எனப் பெருமையுடன் போற்றி வணங்குகின்றோம்.

 

கோவிந்தா

திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் கோயிலின் தங்க துவஜஸ்தம்பத்தின் மேல் கருடக் கொடிக்கு பூஜை செய்து ஏற்றிய பிறகுதான் நிகழ்ச்சிகளே துவங்கும்.  

வழக்கம் போல் இந்த ஆண்டும் கடந்த 23 -ம் தேதி விழா  தொடங்கி நடைபெற்று வருகின்றது.  இன்று 27- ம் தேதி ( புதன்கிழமை)  திருமலையில் கருட சேவை நடைபெறுகிறது. இதில் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 திருமாலின் நித்ய சூரிகளின் தலையாயப் பொறுப்பில் இருக்கும் கருடாழ்வார் எனும் 'பெரிய திருவடி' சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். 

காசிப முனிவரின் இரு மனைவியருள் முதல் மனைவியான விநதைக்குப் பிறந்தவர்கள் இருவர்.  ஒருவர் கருடன், மற்றொருவர் சூரியனின் தேர்ப்பாகன் அருணன். முனிவரின் இரண்டாவது மனைவி கத்ருதேவி. இவளுக்குப் பிள்ளைகள் பலகோடி நாகங்கள். கத்ருதேவி சூழ்ச்சியால் தனது சகோதரி விநதையையும் அவளது பிள்ளைகளையும் அடிமையாக்குகிறாள்.

 

பிரமோத்சவம்

தாயின் கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியாத கருடன், சித்தியிடம் வேண்ட,  'தேவலோகத்தில் இருக்கும் அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், உன் தாயையும் சகோதரரையும் விடுவிப்பேன்' எனக் கூறுகிறாள்.

தாயையும் சகோதரரையும் விடுவிப்பதற்காக  அமிர்தக் கலசம் கொண்டு வர தேவலோகம் சென்று  இந்திரன் முதலான தேவர்களை எதிர்த்து வெற்றி பெற்று அமிர்தகலசத்துடன் வருகிறார். தேவர்கள்  அஞ்சி நடுங்கி திருமாலிடம் ஓடி தஞ்சமடைந்தனர். 

 அமிர்தக் கலசத்தை மீட்க, திருமாலுக்கும் கருடனுக்கும் தொடர்ந்து 21 நாட்கள் போர் நடந்தது. ஒரு கட்டத்தில் கருடனின் தாய்ப்பாசத்தையும் மன உறுதியையும் பாராட்டி, அமிர்தக்கலசத்தைக் கொண்டு செல்ல, திருமால் அனுமதிக்கிறார். அதோடு மன உறுதியுடன் தன்னிடமே போரிட்ட கருடனுக்கு, என்ன வரம் வேண்டுமென  கேட்கிறார். 

கருடனோ , திருமாலையே வெற்றிபெற்றுவிட்டோமென்ற பெருமையில், ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று திருப்பிக் கேட்டார். 

இறைவனும், நீ எனக்கு வாகனமாக இருந்து, சேவை சாதிக்க வேண்டுமென கேட்கிறார். அன்றிலிருந்து கருடன் பெருமாளுக்கு வாகனமானார். 

திருமாலுக்கு அருகிலேயே இருந்து, அனுதினமும் தொண்டு செய்து வருவதைப் பயன்படுத்தி, தன்னை நாடி வரும் பெருமாளின் பக்தர்கள் எப்போதும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், வாழ்வாங்கு வாழ வேண்டி பிரார்த்தனை செய்கிறார் கருடாழ்வார்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க