வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (27/09/2017)

கடைசி தொடர்பு:18:36 (27/09/2017)

ஒரு சுமைதாங்கிக் கல் தெய்வமான கதை! #Tradition

சுமைதாங்கி... சில கிராம எல்லைகளில் இன்றைக்கும் இதைப் பார்க்கலாம். உண்மையில், இப்படி சுமைதாங்கிக் கல்லை வைப்பதற்குப் பின்னால் மறைந்திருப்பது நம் பாரம்பர்யத்தின் பெருமை... மனிதர்கள், சக ஜீவராசிகளின் மீதான பெரும் கருணை. அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள், அந்த ஊருக்கு வருபவர்கள் தாங்கள் கொண்டுவரும் சுமையை இறக்கிவைக்கவும், சற்று இளைப்பாறவும் அமைக்கப்பட்டவை. அதுமட்டுமல்ல இவற்றில் சில காலம் கடந்து நிற்கும் சில கதைகளின் அடையாளங்கள், சிலரின் நினைவுச் சின்னங்களும்கூட. அப்படி ஒரு சுமைதாங்கி கருங்கல்பட்டியில் இருக்கிறது.   

 சுமைதாங்கிக் கல்

கரூரிலிருந்து பாளையம் என்கிற ஊருக்குச் சென்றால், அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது கருங்கல்பட்டி. கிராம எல்லையில் ஒரு மர நிழலில் ஒய்யாரமாக நிற்கிறது அந்தச் சுமைதாங்கி. அது ஒரு பெண்ணின் நினைவாக வைக்கப்பட்டது என்பதை உணர்த்துவதுபோல் சுமைதாங்கியின் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட, நெடிதுயர்ந்த கல்லில் `புவனேஷ்வரி’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இதுபோல சுமைதாங்கிகள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், இப்படி பெயர் எழுதிய கல்லைப் பார்க்க முடியாது; அப்படி பெயர் எழுதும் பழக்கமும் பெரும்பாலும் இல்லை. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்காக கிராமத்துக்குள் நுழைந்தோம். 

கல் தெய்வம்

விசாரித்ததில், கருங்கல்பட்டியில் வாழ்ந்த புவனேஷ்வரி என்கிற பெண்ணின் நினைவாக சுமைதாங்கியை வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். வீட்டுச்சூழல் குழந்தைபேற்றுக்கு உகந்ததாக இல்லை. வானம் பொய்த்ததா, உறவுகள் ஏமாற்றியதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தெரியவில்லை. வறுமை, கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் வீட்டையும், அதில் இருந்தவர்களின் உயிரையும் தின்றுகொண்டிருந்தது. ஒருபக்கம் தன் நிலையை எண்ணி மனதில் கழிவிரக்கம்... மற்றொரு பக்கம் பசியால் உடல் பலவீனம். பல வேளைகளில் பசிக்கும்போது ஈரத்துணியை எடுத்து வயிற்றில் போட்டுக்கொள்வாராம். பசிகூட நோயாக மாறும்; உயிரைப் பறிக்கும். அந்த உண்மையைத் தெரிந்துகொள்ளாமலேயே ஒருநாள் காலை மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் அந்தப் பெண். பசி மயக்கம்... உயிரையே கொண்டுபோய்விட்டது.

கருங்கல்பட்டியில் அந்தப் பெண்ணைப் பற்றித் தகவல் சொல்கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்தோம். ‘முத்தம்மா பாட்டிக்குத் தெரியும்’ என்று வழிகாட்டினார் ஒருவர். முத்தம்மாள் பாட்டிக்கு வயது எண்பதிருக்கலாம். `புவனேஷ்வரி...’ என்கிற பெயரைச் சொன்னதுமே பாட்டியின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. “ஒரு நிறைமாச கர்ப்பிணிப் பொண்ணு சாகுறது நல்லதாய்யா... அதுலயும் சோத்துக்கு வழியில்லாம பசியில சாகுறது கொடுமை இல்லியா? இத்தனைக்கும் அது சாகுறப்போ பத்தொம்பது வயசுதான் அந்தப் புள்ளைக்கி. பொண்ணு புவனேஷ்வரி இறந்துபோய் முப்பது வருஷம் ஆகிடுச்சு. அது இறந்தவுடனேயே சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து சுமைதாங்கிக் கல்லைவெக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. அது இறந்துபோய் மூணு மாசம் கழிச்சு, இந்தக் கல்லை ஊன்றினாங்க. 

சுமைதாங்கிக் கல்

அது என்னவோ தெரியலை... இதை வெறும் சுமைதாங்கிக் கல்லா எங்க ஜனங்களுக்குப் பார்க்கத் தெரியலை. இந்தப் பக்கமா வர்றவங்க, போறவங்கனு எல்லாரும் கும்புட ஆரம்பிச்சுட்டாங்க. மாசமா இருக்குற பொண்ணுங்களுக்கு இது ரொம்ப விசேஷம். இந்தக் கல்லுகிட்ட வந்து நின்னு மனசுல வேண்டிக்குவாங்க. வேண்டுதல் நிறைவேறிடுச்சுன்னா, பொங்கல்வெச்சு சாமி கும்பிடுவாங்க. இந்தப் பகுதியில செம்மறி ஆடு, வெள்ளாடு, பசு மாடு, எருமைனு நிறையப் பேர் வளர்க்குறாங்க. அந்த ஆடு, மாடுகளுக்கு நோய் ஏதாவது வந்துடுச்சுன்னா இங்கே வந்து முறையிடுவாங்க. `இத்தனை நாளுக்குள்ள சரியாப் போகணும் தெய்வமே...’னு வேண்டிக்குவாங்க. ஆடு, மாடுகளுக்கு குணமாயிடும். பெறகு இங்கே வந்து தேங்காய், பழம் வெச்சு கும்புட்டுட்டுப் போவாங்க...’’ படபடவென சுமைதாங்கிக் கல் தெய்வமான கதையை விவரித்தார் முத்தம்மாள் பாட்டி. 

பாட்டி சொன்னது மட்டுமல்ல... விறகுக் கட்டைத் தூக்கி வரும் கர்ப்பிணிப் பெண்கள் அந்த பாரத்தை இந்தச் சுமைதாங்கியின் மேல் வைத்து இளைப்பாறுவது வழக்கமான ஒன்றாம். இறந்துபோன புவனேஷ்வரியின் நினைவாக அந்தப் பெண்ணின் உறவினர்களும், ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து வருடத்துக்கு ஒருமுறை சாமி கும்பிடுகிறார்களாம். தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று சேலை, காதோலை கருகமணி, வளையல், மல்லிகைப்பூ, எலுமிச்சைப் பழம் எல்லாம் வைத்து, கிடா அல்லது கோழியை அறுத்து பொங்கல் விழா எடுக்கிறார்கள். இந்தச் சுமைதாங்கிக் கல் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட வடிவம், பெண்ணைக் கடவுளாக மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் மாண்பு நம் மக்களுக்கு இருந்திருக்கிறது என்றும் சொல்லலாம். சுமைதாங்கிக் கல்லை தெய்வமாக வழிபடுவது சரிதானா? அது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை?!


டிரெண்டிங் @ விகடன்